எந்த ஒரு பிரதி உருவாக்கத்திற்கும் மொழிதான் அடிப்படையாகிறது. இலக்கண விதிகளுக்கு உட்பட்டு எழுத்து உருப்பெறுகிறது. அது பல்வேறு வகையான பிரதிகளில் பலவித மாற்றங்களை அடைகிறது. அம்மாற்றங்களையும் புதுமையாக்கங்களையும் கண்டறிந்து ஒரு குறிப்பிட்ட பிரதியின் மொழிப்பொதுமைகளையும் சிறப்புத்தன்மைகளையும் வகைப்படுத்திக் காட்ட மொழியியல் அணுகுமுறை உதவுகிறது.
எந்தப் பிரதியிலும் மொழி அமைந்திருக்கும் ஒருவித ஒழுங்கான அமைப்பைத்தான் மொழிநடை என்கிறோம்.
ஒரு சொல்லையோ தொடரையோ வாக்கியத்தையோ ஆராயும்போது அது வெளிப்படும் சூழல், பின்னணி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டுதான் ஆராய முடியும். அப்போது அப்பிரதியின் கருப்பொருள் (தீம்) மொழிக்குத் தொடர்பு உடையதாகிறது.
ஒரு பத்திரிகை, தனது மொழியில், சொற்களில் செய்தியை ஒழுங்குபடுத்தி அமைக்கிறது. அதன் வாயிலாகத் தனது பார்வையை முன்வைக்கிறது. வாழ்க்கையைக் குறிப்பிட்ட கோணத்தில் அதன் வாயிலாக எடுத்துக் காட்டுகிறது. வாசகனிடமும் ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துகிறது. இவையாவும் ஆராயப்பட வேண்டியவை. காரணம், செய்தித்தாள்கள் வெற்றிடத்தில் உருப் பெறுவதுமில்லை; பிறகு அதனை மக்கள் படிப்பதுமில்லை. சிறப்பாக, விளம்பரங்கள், குறிப்பிட்ட வகைமாதிரியான நுகர்வோரை மனத்தில்கொண்டு உருவாக்கப்படுகின்றன. விளம்பரங்கள் அளவுக்கு இலக்குப்படுத்தாவிட்டாலும், பதின்வயதினர், நடுத்தரவயது அலுவலகம் செல்வோர், கணிப்பொறியாளர்கள், விவசாயிகள், இல்லத்தரசிகள் எனப் பல்வேறு தேவைகள் கொண்ட குறிப்பிட்ட வாசகர் குழுக்களை மனத்தில் கொண்டே இதழ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒரு பத்திரிகையின் பணி, வாழ்க்கை பற்றிய ஒரு புதிய ஆழ்ந்த உள்ளொளியை அல்லது தரிசனத்தை அளிப்பதல்ல. மேலோட்டமான ஒரு வாழ்க்கைப் பிரதிபலிப்பை அளிப்பதே. வாசகனுக்கு அசலான ஓர் அனுபவத்தை அளித்து அதை மனத்தில் வாழச் செய்வதும் அதன் பணியல்ல. அதாவது பத்திரிகையின் பணி, அக-யதார்த்தத்தைப் படியெடுப்பதல்ல. புற-யதார்த்தத்தை ஓரளவு சரிவர வெளிக்காட்டுவது. அதனால்தான் செய்திகளை எளிதாக மொழி பெயர்க்க முடிகிறது. அதேசமயம், தன் வெளியீட்டினை வாசகன் பகிர்ந்து கொள்ளப் பத்திரிகை தன் சொற்களையும் தொடர் அமைப்புகளையும் கவனத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அவற்றைத் தனது நோக்கத்திற்கு ஏற்றவாறு வளைக்கவும் வேண்டியிருக்கிறது.
இலக்கியக் கருவிகள் பற்றி நிறைய ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பது எளிது. அதுபோலப் பத்திரிகை நடைக்கான கருவிகளை நாம் இனம் கண்டு பயன்படுத்துவதில்லை. எனினும் கவிதையில் கையாளப்படும் கருவிகள்தான் உரைநடையிலும பயன்படுத்தப்படுகின்றன. கவிதைக்கும் பத்திரிகை உரைநடைக்கும் மொழிக்கருவிகளைக் கையாளுவதில் உள்ள வேறுபாடு முழுமையானதல்ல. அதாவது இருவித மொழிகளும் வேறானவை அல்ல. இவற்றிற்கிடையிலுள்ள வேறுபாடு ஒப்பியல் நிலையிலானது. அதாவது இலக்கியங்களில் ஒருவிதமாகவும், பத்திரிகை சார்ந்த உரைநடையில் சற்றே வேறுவிதமாகவும் மொழிக்கருவிகள் கையாளப்படுகின்றன என்பதே பொருள்.
இங்கு இதழ்கள் எவ்விதம் மொழியின் பல்வேறு மூலவளங்களைப் பயன்படுத்தித் தங்கள் வாசகர்களை உருப்படுத்தி, அவர்களை இலக்குப்படுத்தவும் செய்கின்றன என்பதைக் காண்போம். இதற்கு இதழ்கள் விளித்தல் (அட்ரஸ்), சுட்டற்சொற்கள் (டீயிக்சிஸ்), முன்யூகங்கள் (ப்ரிசப்போசிஷன்ஸ்) போன்ற மொழித்தன்மைகளைப் பயன்படுத்துகின்றன. எந்த அளவுக்கு ஒரு பத்திரிகை இவற்றைப் பயன்படுத்தி வெற்றியடைகிறது என்பது பத்திரிகை ஆசிரியர்களைப் பொறுத்திருக்கிறது. உதாரணமாகப் பழங்காலத்தில், பாரதியார், திரு.வி.க., வரதராஜுலு நாயுடு போன்றோர் தங்கள் மொழியைத் தனிச் சிறப்புடன் பயன்படுத்தினார்கள் என்பதும், அவர்களது மொழியை நுணுகி ஆராயும் நிலை தேவைப்படுகிறது என்பதும் அனைவர்க்கும் தெரியும்.
மொழியில் எவ்வித கவனத்தையும் வாசகன் செலுத்தாமல் இருக்கும் அளவிற்கு-அதாவது, மொழி சற்றும் வாசகனுக்கு இடைஞ்சலாக இல்லாமலிருக்கும் வண்ணம்-இன்றைய பத்திரிகைகள் மொழியைப் பயன்படுத்த முயலுகின்றன. அவற்றினுடைய கவனமான மொழித் தேர்ந்தெடுப்பை இது காட்டுகிறது. ஒரு திறந்த ஜன்னலைப்போலப் புறக்காட்சிகள் மிக எளிமையாகத் தெரியும் வண்ணம் அவை ஓர் இலகுவான வாக்கிய அமைப்புமுறையைத் தேர்ந்தெடுக்கின்றன. இம்மாதிரி வாசகர்களின் கவனத்தை ஈர்க்காத மொழி, பூச்சிய நிலை மொழி (zero level language) என்று அழைக்கப்படுகிறது. ஆயினும் பலசமயங்களில் பத்திரிகை மொழி வாசகனது ஆழ்மனப் பிரக்ஞையில் குறுக்கிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. எந்தப் பத்திரிகையும் பூச்சிய நிலை மொழியைப் பயன்படுத்துகிறது என்று மொழியியல்பு அறிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதேசமயம், எல்லாப் பத்திரிகைகளும் மொழியை ஒரே மாதிரியாகக் கையாளுவது இல்லை. சில பத்திரிகைகள் பிறவற்றைவிட அதிகமான தொழில்நுட்பத்தைக் காட்டுகின்றன.
சில இதழ்களில் மொழி பூச்சிய நிலைக்கு நெருக்கமாக, அர்த்தம் பெருமளவு ஊடுருவக்கூடியதாக, கவர்ச்சி காட்டாததாக, அதிகமான உணர்வுப் பொருளையும் பொருள்மயக்கத்தையும் காட்டாததாக அமைகிறது. இவ்வகை மொழி கவிதையைவிடக் காட்சி ஊடகங்களுக்கு நெருக்கமானது. இதன் நோக்கம் உள்ளடக்கத்தில் அதிக கவனத்தைக் குவித்து, சொல்லுகின்ற விஷயத்தைப் பற்றி வாசகனைச் சிந்திக்கச் செய்வதாகும். இங்கு கவனம் நடை மீது செல்வதில்லை. தினமணி இதற்கு ஓரளவு நல்ல உதாரணம். தினமணி கருத்துச் சொற்களையும் அருவச் சொற்களையும் அதிகமாகப் பயன்படுத்துவதால் அதன் வாசகர்கள் அதிக கவனத்தோடு படிக்கவேண்டியதாகிறது. எளிய வாசகர்கள் கருத்து சார்ந்த உரைநடையைப் படிப்பதைச் சிரமமாகக் கருதுவதால் அதன் வாசகர் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது.
இன்னொரு வகையான பத்திரிகைகள், மொழியின் ஊடுருவ இயலாத் தன்மையையும் பொருள் உட்புக முடியாத் தன்மையையும் அறிந்தோ அறியாமலோ பயன்படுத்துகின்றன. அதனால் பொருள்மயக்கங்கள், சிலேடைகள், மையப் பொருளிலிருந்து வெளிச் சுழற்சிகொள்ளும் உணர்வுப் பெருக்கம் ஆகியன அவற்றின் நடையில் உருவாகின்றன. இம்மாதிரிப் பத்திரிகைகள், இலக்கியச் சிறுபத்திரிகைகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் மொழியமைப்புகள் காட்சி ஊடகங்களைவிடக் கவிதைக்கு நெருக்கமானவை.
இவ்விரண்டு நிலைகளுக்கும் இடையில் பிற பத்திரிகைகளின் மொழி அமைகிறது தினமலர், தினத்தந்தி ஆகியவற்றின் மொழி இதற்கு நல்ல உதாரணம்.
வாசகர்களை விளித்தல்
வாசகர்களைச் செய்தியின்பால் ஈர்க்க வேண்டும். இதற்குப் பயன்படும் மொழியமைப்புதான் வாசக விளி எனப்படுகிறது. வாசகர்களை விளிக்கப் பலவேறு வகையான உத்திகள் கையாளப்படுகின்றன. விளம்பரங்கள், நேரடி அழைப்பு முறையையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. விளம்பரங்களில் நீங்கள் என்னும் முன்னிலைச் சொல் மிகுதியாகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இது நேரடியான அழைப்புக்கு ஓர் அறிகுறி.
நம்ப முடியாத விலை! ரூ.7990இல் ஆரோக்கியத்தை உங்கள் வீட்டிற்கு
எடுத்துச் செல்லுங்கள்! (எல்.ஜி. குளிர்சாதனப்பெட்டி விளம்பரம்)
கேள்விகளைப் பயன்படுத்துதல், முன்யூகங்களைப் பயன்படுத்துதல், ஆணைத் தொடர்களைப் பயன்படுத்துதல் (“போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்!”) போன்றவை விளித்து உரைப்பதற்கு உதாரணங்கள்.
செய்தி சொல்வதிலும் விளித்தல் பயன்படுகிறது என்றாலும் சற்றே மறைவான முறையில் அது செயல்படுகிறது. மறைவாக இருப்பதற்குப் பலவித உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, ஒலிக்கோலங்களைப் பயன்படுத்துதல். எதுகை, மோனை, அளபெடை, இயைபு முதலிய தொடைகள் செய்யுளுக்குத் தேவை எனப் பழங்காலத்தினர் கருதினார்கள். இன்று பத்திரிகைகளில் அளபெடை தவிர ஏனைய தொடைகள் அனைத்தும் கையாளப்படுகின்றன. இவற்றுள்ளும் மோனைத் தொடையின் பயன்பாடு மிக அதிகம். எதுகை அதற்கு அடுத்த நிலையிலும, இயைபு குறைவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
எல்லாப் பத்திரிகைகளும் ஓரளவேனும் இவ் ஒலிக்கோலங்களைப் பயன்படுத்தினாலும், சில பத்திரிகைகள் இவற்றைக் கூடுதலாகப் பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, தினமணி, தினத்தந்தி ஆகியவற்றைவிட, தினமலர் ஒலிக்கோலங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறது. பத்திரிகைகளால் மோனை விரும்பிப் பயன்படுத்ததப்படுகிறது என்பதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைத் தர இயலும். உதாரணமாக, தினத்தந்தி பத்திரிகையில், உள்பக்கச் செய்தித் தலைப்பு ஒன்று:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் / சங்கிலித் தொடர் அட்டூழியங்கள்
இங்கு மோனை மட்டுமல்ல, ஒரு செய்யுளடிக்குத் தேவையான இசைக்கோலமும் (சந்தமும்) கூடுதலாகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின்
சங்கிலித் தொடரட் டூழியங்கள்
என்று மும்மூன்று சீர்கள் கொண்ட யாப்பாகவே அமைக்கலாம்.
நேற்று “மந்திரி”; இன்று “எந்திரி”
ஜெ.வின் அரசியல் திருவிளையாடல்
என்னும் செய்தியில், எதுகைக்காகவே கொச்சைச் சொல் கையாளப்படுகிறது.
பேச்சுவழக்கினைக் கைளாளுதலும் கவர்ச்சி நடையும்
பேச்சுவழக்குச் சொற்களைப் பல்வேறு நிலைகளில் பத்திரிகைகள் கையாளுகின்றன.
கோட்டையில் கேக் வழங்கி உற்சாகம்! வேறெதுக்கு? எல்லாம் மந்திரிகள்
மாற்றம்தான்!
இச்செய்தியில் வாசகர் விளிப்புடன், பேச்சுநடையும் பயன்படுத்தப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்களின் நடை, பொதுவாகப் பேச்சு வழக்கு நடை என்று வருணிக்கப்பட்டாலும், அதில் பல்வேறு நிலைகள் உள்ளன. சி.பா. ஆதித்தனாரின் கொள்கையை தினத்தந்தி அப்படியே கடைப்பிடித்தது. “பேச்சு வழக்குச் சொற்களைக் கொச்சை நீக்கி எழுதுக” என்பது ஆதித்தனாரின் கட்டளை. தினமணியின் கொள்கை, தரமான பொதுநடை (ஸ்டாண்டர்டு காமன் ஸ்டைல்) என்பதாக உள்ளது. தினமலரின் கொள்கை முற்றிலும் வித்தியாசமானது. கண்டிப்பாகக் கொச்சைச் சொற்களைப் புதிது புதிதாகக் கையாண்டே தீரவேண்டும் என்பது அதன் கொள்கை. தினமலரின் பிராபல்யத்துக்கு இது ஒரு முக்கியக் காரணம். உதாரணங்கள்-
அரசு டாக்டர் குண்டு போடுகிறார் – எம்.எல்.ஏ. லஞ்சம் கேட்டாராம்
கலெக்டர்கள் மாநாட்டில் ஜெ. ஆவேச சபதம்
கந்து வட்டியை ஒழிக்க அதிரடி
ஆர்.எம்.எஸ். அலுவலகங்களுக்கு வேட்டு
பவுனுக்கு ரூ.100க்கு மேல் எகிறியது! தங்கம் விலை கிடுகிடு உயர்வு!
அன்னிய மண்ணில் மாமூல் சொதப்பல் அபாரதோல்விக்கு இந்தியா அடித்தளம்
66 சதவிகிதம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கொடுத்தாச்சு
சாதாரணப் பேச்சுவழக்கு நடை என்பதற்கு அப்பாலும்போய், கொச்சைக் குறுமொழியை தினமலர் வழங்குவதற்கு மேற்கண்டவை நல்ல உதாரணங்கள். ஓரிரு தசாப்தங்களுக்கு முன்பு தினத்தந்தி மட்டுமே கொச்சைக்குறுமொழியைப் பயன்படுத்திவந்தது. உதாரணமாக, கத்தியால் குத்தினான் என்று அக்காலத்தில் தினத்தந்தி போடாது. சதக் சதக்கென்று குத்தினான் என்றுதான் செய்தி வெளியிடும். இதனை தினத்தந்தியே இன்று தாண்டிவந்துவிட்டபோதும், விடாமல் பயன்படுத்தும் நாளிதழ் தினமலர் ஒன்று மட்டுமே.
இதற்கும் மிஞ்சி, பேச்சுநடையைப் பயன்படுத்துகிறோம் என்னும் சாக்கில் ஆங்கிலச் சொற்களையும் கலந்து கவர்ச்சிகரமாகக் கையாளுவது தினமலரின் பாணி. உதாரணம்,
…… விடுதலை செய்வதுதான் வீரப்பன் ஸ்டைல்
…… ஒரு தேர்ந்த அரசியல்வாதி ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டிருக்கிறான் வீரப்பன்.
நாகப்பா தன் பொறுப்பில் இல்லை என்று சூப்பராக ஒரு அறிக்கையை காசெட்டில் அனுப்பிவிட்டு நாகப்பாவை போட்டுத் தள்ளிவிட்டு இருக்கிறான்.
வேறுவிதமான கவர்ச்சி முறைகளையும் தினமலர் கையாளுகிறது.
வரவேற்பில் தள்ளுமுள்ளு பல்டியடித்தார் எம்.எல்.ஏ.
தள்ளுமுள்ளு என்பது தில்லுமுல்லு என்ற சொல்லை நினைவுகூட்டவேண்டும் என்னும் நோக்கிலேயே புதுக் கொச்சைச் சொல்லாக தினமலரால் ஆக்கப்பட்டது. (இது இப்போது தடியடி என்பதுபோல, எல்லாத் தொலைக்காட்சிச் செய்திகளிலும் பொதுச்சொல்லாக ஏற்கப்பட்டுவிட்டது).
இன்னொரு உதாரணம்:
இதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஜெயலட்சுமியைச் சுற்றிவந்து ஐ லவ் யூ சொல்லிக் காதலித்தாராம் விஜயகுமார்.
இருமுறை எழுவாய் விஜயகுமார் வருவது இருக்கட்டும், இச்செய்தியை, விஜயகுமார் ஜெயலட்சுமியைக் காதலித்தாராம் என்று எளிதாகச் சொல்லிச் செல்லக்கூடாதா? அதிலும் காதலித்தாராம் என்பதிலுள்ள -ஆம் விகுதி அது இன்னொருவரிடமிருந்து பெறப்பட்ட கூற்று என்பதற்கும் மேலாகச், செய்தியின் உறுதியற்ற தன்மையை, வதந்தித்தன்மையைக் காட்டுகிறது.
இம்மாதிரி ஒரு செய்தியை, இம்மாதிரி ஒரு நடையில், ஆங்கிலப் பத்திரிகை எதிலாவது காணமுடியுமா? தமிழ்ப் பத்திரிகைகளின் தரத்தினை எந்த அளவு இந்த நாளிதழ் கீழிறக்கியுள்ளது என்பதற்கு ஓர் உதாரணம் இது.
சுட்டற்சொற்களைப் பயன்படுத்தலும் முன்னறிவும்
காலம், இடம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களையும் இடப்பெயர்களையும் சுட்டற்சொற்கள் (டீயிக்டிக்) என்கிறோம். இவை ஒரு செய்தியை அதன் சூழலோடு தொடர்புபடுத்துபவை. உதாரணமாக, தினத்தந்தி, அப்துல் கலாம் இன்று சென்னை வருகை எனச் செய்தி வெளியிட்டு, பிறகு முதன்மைப் பத்தியில் இன்று (சனிக்கிழமை) என விளக்கம் அளிக்கிறது. இம்மாதிரிச் சொற்கள் நமது முன்றிவைப் பயன்படுத்துவதற்குத் துணையாக அமைகின்றன என்பதற்குமேலாகச் செய்தி வெளியீட்டில் இவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை.
பல சமயங்களில் நாம் செய்திகளைப் படிக்கும்போது முன்பின் தொடர்ச்சி, சூழல், நமது முந்தைய அறிவு ஆகியவற்றை இணைத்தே செய்தியைப் புரிந்துகொள்கிறோம். இதனைப் பத்திரிகைகள் சரிவரக் கையாளவேண்டும். உதாரணமாக, தினத் தந்தியின் தலைப்புச் செய்தி:
பதவி ஏற்றபிறகு முதல்முறையாகச் சென்னை வருகை
அண்ணா பல்கலைக்கழக வெள்ளிவிழாவை
அப்துல் கலாம் தொடங்கிவைத்தார்
இங்கு பதவி ஏற்றபிறகு என்பதற்கு நாம் குடியரசுத்தலைவர் பதவி ஏற்றபிறகு என நமது முன்னறிவைப் பயன்படுத்திப் பொருள்கொள்கிறோம். சிலசமயங்களில் இத்தன்மையைப் பத்திரிகைகள் சரிவரப் பயன்படுத்தாமையால் தவறுகள் நேரிடுவதைக் காணலாம்.
இந்தியாவிலேயே காற்றில் மாசு குறைவாக உள்ள நகரம் சென்னை
அடுத்த தலைப்பு:
கான்பூருக்கு முதலிடம்
இச்செய்தியைப் படித்தபோது, மாசு குறைவாக உள்ள என்ற முந்திய வரித் தொடரை வைத்து, ‘கான்பூர் மாசு குறைவாக இருப்பதில் முதலிடம் வகிக்கிறது’ என்றுதான் செய்தியைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் முதல் தொடருக்கு இது முரண்படுகிறதே, என்ன செய்வது? அதனால், பெருநகரங்களில் சென்னையும் சிறுநகரங்களில் கான்பூரும் மாசு குறைவான இடங்கள் என்று ஒரு சமாதானம் எழுந்தது. ஆனால், உண்மையில் செய்தி, கான்பூரில் மாசு மிக அதிகமாக இருக்கிறது என்பதுதான். முன்னறிவைத் தொடர்புபடுத்தி வாசிக்கும்போது சரிவர செய்தித்தொடர்ச்சி அமையாமையால் ஏற்பட்ட பிழை இது.
மொழியியல் ரீதியாக நடையை ஆராய்தல்
நடைபற்றி ஆராயும் மொழியியல் அணுகுமுறைகளை நான்கு வகையாகப் பார்க்கலாம். மொழிநடையை ஆராய, பத்திரிகைகளில் காணப்படும்
சொற்பயன்பாட்டு நிலை
தொடரமைப்பு நிலை
எடுத்துக்கூறல் நிலை
வருணிப்பு நிலை
ஆகிய நான்கினையும் ஆராய வேண்டும். சொற்களை ஆராயும்போது, அவற்றை
முரண்சொற்கள்,
தேய்ந்துபோன உருவகச் சொற்கள்,
பன்முறை ஆளப்பெறும் சொற்கள்,
கதைப்பொருள் வெளிப்பாட்டுச் சொற்கள்,
கொச்சைச் சொற்கள்,
பிறமொழிச் சொற்கள்,
மரபுமீறிய சொற்கள்
என்றெல்லாம் பிரித்து ஆராயலாம். இதைத்தவிர வேறு பலவித முறைகள் உண்டு.
தொடரமைப்பை ஆராயும்போது, வாக்கியத்திலுள்ள
விலகல்கள், மாற்றங்கள், விடுபடல்கள், செறிவாக்கங்கள்
ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.
எடுத்துக்கூறல் என்னும்போது, செய்தி எந்தெந்தக் கூறுகளுக்கு அழுத்தம் தருகிறது என ஆராய்வதும், நோக்குநிலை ஆய்வும் முக்கியமானவை. மேற்கோள்கள் முதலியன எப்படி அமைந்துள்ளன என்பதும் இதன்பாற்படும். திரும்பத்திரும்ப வரும் கூறுகள் எவை, அவை என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதையும் ஆராய வேண்டும்.
வருணிப்பை ஆராய நாம் பழைய அளவுகோல்களையே சற்று மாற்றிப் பயன் படுத்தலாம். வருணனைக்கூறுகளாக அமையும் உவமை, உருவகம், குறியீடு, தொன்மம், பிற அணிகள் ஆகியவற்றைப் பத்திரிகைகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதை எடுத்துக்காட்டலாம். இவற்றிலும் திரும்பத்திரும்ப வரும் வருணனைக் கூறுகள் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை.
மேற்கண்ட சொற்கள் பயன்பாட்டுநிலை, தொடரமைப்பு நிலை, வருணிப்பு நிலை, எடுத்துரைத்தல் நிலை என்னும் நான்கையும் பின்வரும் ஆய்வுமுறைகளுள் ஒன்றில் அமைத்துப் பார்க்கவேண்டும்.
அ. தொடர்நிலை மற்றும் வாய்பாட்டுநிலைத் தேர்வுகள் பற்றிய ஆய்வு (syntagmatic and paradigmatic choices)
ஆ. மொழியின் தனித்துவக் கூறுகள் பற்றி மட்டும் நோக்குகின்ற ஆய்வு (idiosyncratic features)
இ. இயல்புநிலையிலிருந்து ஏற்படும் விலகல்களை மட்டும் ஆராய்கின்ற ஆய்வு (deviations from the norms)
ஈ. தொடரைவிடப் பெரிய அமைப்புகளாக இயங்கும் சூழல் போன்றவற்றுடன் தொடர்பு கொள்வதான மொழியியல் கூறுகள் பற்றிய ஆய்வு.
இனி இவற்றைத் தனித்தனியே காண்போம். முதல் அணுகுமுறைக்குத் தேவையான அடிப்படைகள் பற்றிச் சற்றே விளக்கலாம். ஒரு வாக்கியத்தில் இருவித அமைப்கள் உள்ளன என்று மொழியியலாளர்கள் கூறுவார்கள்.
வாய்பாட்டுநிலை அமைப்பு (paradigmatic structure)
சொல்தேர்வில் செயல்படும் நிலை இது. ஒருவாக்கியத்தில் அமையக்கூடிய பலவிதமான சொற்கள்-அவற்றிற்குச் சமமாகப் பயன்படுத்தக்கூடிய வேறுசொற்கள்-ஏன் குறித்த சொற்களைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது பற்றியது இது.
தொடரியல் அமைப்பு (syntagmatic structure)
தேர்ந்தெடுத்த சொற்களை எந்த முறையில், வரிசையில், தொடராக அமைக்கப் போகிறோம் என்பது பற்றியது இது.
இவ்விரு அமைப்புமுறைகளையும் செய்திக்கதைகளுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும். ஒரு செய்திக்கதை என்பது ஒரு வாக்கியம் போன்றே, காலத்தொடர்ச் சியில் அமையும் ஓர் எடுத்துரைப்பு. ஆகவே அதன் வருணனை, சூழல் போன்ற அம்சங்கள் யாவும் வாய்பாட்டுநிலை அமைப்பில் வருவன. அதேபோலச் சம்பவங்களும் வாய்பாட்டுநிலை அமைப்பிலே வரும். இவற்றைத் செய்தியாசிரியர்கள் தக்கவிதமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் செய்தி எடுத்துரைப்பு என்பது தொடரியல் அமைப்புப் போன்றது. அதாவது நிகழ்ச்சிகளைக் காலவரிசைப்படி அல்லது வேறு ஏதேனும் முறைப்படி வரிசையாக அமைப்பதுதான் எடுத்துரைப்பு.
இவ்வித ஆய்வுமுறை, ஒரே செய்தியை அல்லது ஒரே விஷயத்தைப் பல்வேறு இதழ்கள் வெவ்வேறு விதமாக எப்படி வெளியிடுகின்றன என்று ஒப்பீட்டு நிலையில் ஆராய்வதற்குப் பெருமளவு உதவும். ஒரு பத்திரிகை செய்கின்ற சொல் தேர்வு, வாக்கியத் தேர்வு போன்றவை எப்படி ஒரு குறித்த அர்த்தச் சாயையை உருவாக்குகின்றன என்பதை இந்த அணுகுமுறையினால் நிர்ணயிக்க முடியும்.
உதாரணமாக, ஒரே செய்தி எப்படி மூன்று நாளிதழ்களில் வெளியாகியிருக்கிறது என்பதை இங்கே காண்போம்.
———————————————–
தினத்தந்தி
106 நாள் பணய கைதியாக இருந்தவரின் பரிதாப முடிவு
வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட
நாகப்பா கொல்லப்பட்டார்
நடுக்காட்டில் உடல் மீட்பு
என நான்கு வரிகளாகத் தலைப்பு அமைந்த பிறகு, முதன்மைப் பத்தி பின்வருமாறு அமைகிறது.
சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்ட கர்நாடக முன்னாள் மந்திரி நாகப்பா கொல்லப்பட்டார். அவரது உடல் நடுக்காட்டில் கண்டெடுக்கப்பட்டது.
————————————————–
தினமலர்
கொன்றது யார்? வீரப்பனா, அதிரடிப்படையா?
நடுக்காட்டில் நாகப்பா பிணம்!
106வது நாளில் எல்லாம் முடிந்தது
ஆயுதங்களுடன் காட்டுக்குள் புகுந்தனர் கொள்ளேகால் மக்கள்
தமிழர்களுக்கு குறி வாகனங்கள்மீது தாக்கு
கிருஷ்ணா ராஜினாமா எதிர்க்கட்சிகள் ஆவேசம்
தினமலர் செய்தி, மூன்று வரிகளாக அமைந்திருக்கிறது. முதலிரு வரிகளுக்குப் பிறகு வரும் நான்கு தொடர்களும் நான்கு கட்டங்களில் மூன்றாவது வரியாக அமைந்துள்ளன.
———————————————–
தினமணி
காட்டில் அழுகிய நிலையில் நாகப்பா உடல்
வீரப்பன் கடத்திய 106வது நாளில் பரிதாபம்
என இரண்டே வரிகளில் தினமணித் தலைப்பு அமைந்திருக்கிறது. பிறகு முதன்மைப் பத்தி பின்வருமாறு அமைந்துள்ளது:
முன்னாள் அமைச்சர் எச். நாகப்பாவின் உடல் 106 நாள்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு வயது 66.
————————————————-
இம்மூன்று செய்திகளையும் பலவேறு விதங்களில் நாம் ஆராயலாம்.
உதாரணமாக, தினமணியும், தினத்தந்தியும் மதிப்புக்குரிய ஒருவருக்குப் பிணம் என்னம் சொல்லைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன. தினமலர் அச்சொல்லைத் தயக்கமின்றிப் பயன்படுத்தியுள்ளது.
தினமலரில் மிகுசொற்பயன்பாடு (வெற்றெனத்தொடுத்தல்) அதிகம். தினமணியில் மிகுசொற்பயன்பாடு இல்லை.
அதேசமயம், தினமலரில் செய்தி வெளிப்பாட்டில் கவர்ச்சி அதிகம். (வெவ்வேறு வண்ணங்களில் மூன்று வரித் தலைப்புகளையும் அமைத்துள்ளதோடு, மூன்றாவது வரியை நான்கு வண்ணங்களில் நான்கு கட்டங்களாகப் பகுத்து நான்கு துணைத் தலைப்புகளையும் வெளியிட்டிருக்கிறது. வெளியிடும் முறை மட்டுமின்றிச் சொல்லும் விதமும் கவர்ச்சியாக அமைந்திருக்கிறது.
இங்கே தினமலர் நடுக்காட்டில் நாகப்பா பிணம் என மோனையைக் கையாளுவதைக் காணலாம்.
தினத்தந்தியும் முதல் தலைப்புக்கும் இரண்டாம் தலைப்புக்கும் தொடர்பு படுத்த இதைக் கையாள்கிறது.
தினமணி அறவே மோனையைக் கையாளவில்லை.
தினமலரில், 106வது நாளில் எல்லாம் முடிந்தது என்பதில் எல்லாம் என்ற சொல்லுக்குத் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுத்து, பலவாறான யூகங்களுக்கு இடம் அளிக்கிறது. இது தேவையற்ற, தவறான அமைப்பு.
அதேபோல, தினமலரில் கடைசி வரியில் கடைசித் தலைப்பு-கிருஷ்ணா ராஜினாமா எதிர்க்கட்சிகள் ஆவேசம்- என்பது தவறான பொருள்கொள்ளும் முறையில் உள்ளது. இதைப்படிப்பவர்கள், கிருஷ்ணா ராஜினாமா செய்துவிட்டதாகவும், எதிர்க்கட்சிகள் அதனால் ஆவேசம் கொண்டதாகவும்தான் பொருள்கொள்வார்கள். இவ்வாறு பொருள் மயக்கம் ஏற்படும் முறையில் செய்தியமைப்பது தவறாகும்.
இந்த முதல்வகை அணுகுமுறையிலுள்ள குறை என்னவென்றால், ஒரு செய்தி ஆசிரியன் கொள்ளக்கூடிய தேர்வுகளின் எண்ணிக்கை எல்லையற்றது. நமக்குக் கிடைக்கக்கூடிய இதழ்களின் எண்ணிக்கையும் மிகுதி. எனவே எல்லாத் தேர்வுகளையும் கண்டறிந்து ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம்.
இரண்டாவது அணுகுமுறை, தனித்துவக் கூறுகளை மட்டும் ஆராய்வது. அர்த்தமும் அதன் விளைவும் சொல் அல்லது தொடரமைப்புத் தேர்வுகளைச் செய்வதன் ஒருங்கிணைப்பில்தான் தனித்துவக்கூறுகள் உருவாகின்றன. இத்தனித்துவக் கூறுகள், விஷயரீதியாகவோ அழகியல்ரீதியாகவோ முக்கியத்துவம் அற்றவையாகவும் இருக்கலாம். எல்லாத் தனித்துவக் கூறுகளும் ஒரு செய்திக் கதையின் முழுமைக்கும் கருப்பொருள் அமைவுக்கும் காரணமாக அமைபவை என்று சொல்லமுடியாது. எனினும் கருத்தியல் ரீதியான பாதிப்பினை உருவாக்குவதில் இவை செயல்படும்.
மூன்றாவது அணுகுமுறை, இயல்பு (நார்மல்) என்று பொதுவாகக் கருதப்படும் நிலையிலிருந்து ஏற்படும் விலகல்கள் பற்றிய ஆய்வு. சாதாரணச் சொற்பயன்பாடு அல்லது தொடரமைப்புமுறை என்னும் பொதுமொழி அளவுகோல்களிலிருந்து ஏற்படும் விலகல்களை இதில் ஆராய்கிறோம். இங்கும், அந்த விலகல்கள் செய்தி விஷயத்தோடும் முழுமையோடும் தொடர்பற்றவையாக இருக்கும் அபாயம் உள்ளது. ஆனால் இவையும் கருத்தியல்ரீதியாகச் செயல்படுபவையே. இம்மாதிரி விலகல்கள், ஒரு நாளிதழின் கோணங்கித்தனமான செயல்களாக இருக்கலாம். உதாரணமாக, ஒரு சமயம், சோ ராமசாமி, தனது துக்ளக் பத்திரிகையில், ஃபீஸ் போன்ற ஆங்கிலச் சொற்களை fஈஸ் என்றாற்போல எழுதிவந்தார். அண்மைக்காலங்களில் இம்மாதிரிக் கோணங்கித் தனங்களை மிகுதியாகச் செய்வது தினமலர் இதழ்தான். உதாரணமாக,
நியூசி. பந்துவீச்சில் இந்தியா காணாபோச்சு
என்பது தினமலரின் ஒரு தலைப்புச் செய்தி. நியூசிலாந்தை நியூசி. என்று எழுதுவது பொதுவாக அனுமதிக்கப்பட்ட குறுக்கம் எனலாம். காணாமல் போச்சு என்று எழுதினால்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். (போச்சு என்று எழுதுவதே தவறு, போயிற்று என்று எழுதவேண்டும் என்பது ஆதித்தனார் கொள்கை.) இதேபோல
எடைகுறை ரேஷன் கடைகள்மீது நடவடிக்கை
என்பது இன்னொரு தலைப்பு.
இம்மாதிரியான சொற்பயன்பாடுகளைத்தான் கோணங்கித்தனம் என்கிறோம். கோணங்கித்தனங்களால் கவர்ச்சி ஏற்படுத்தி விற்பனையை அதிகரிக்க முடியும் என்னும் தவறான மனப்பான்மைதான் இதற்குக் காரணம். இக்கோணங்கித்தனங்களை இதழின் எல்லாப்பகுதிகளிலும் காணலாம்.
விலகல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆராய்வது எல்லாச் சமயங்களிலும் பயன்படாது. விலகல்கள் பற்றிய ஆய்வு ஓரளவுதான் வழிகாட்டுவதாக இருக்கும். எது இயல்பானது அல்லது திட்ட அமைப்பு (நார்ம்) என்னும் அடிப்படையைச் சரிவர நிர்ணயிப்பது கடினம்.
நான்காவது அணுகுமுறை வாக்கியம் அல்லது அதற்கு அப்பாற்பட்ட பெரும் அமைப்புகளை மட்டுமே கணக்கிலெடுக்கக்கூடியது. வாக்கியத்திற்கு அப்பாற்பட்ட விரிவான (பத்தி போன்ற) அமைப்புகளினால் மட்டுமே ஒட்டுமொத்தமான செய்திக் கதை அல்லது பிற இதழியல் பெருங்கூறுகளின் அர்த்தம் என்பதை அறியமுடியும். ஆனால் சில சமயங்களில் ஒரே ஒரு வாக்கியம்கூடக் கருப்பொருள் அமைதிக்குத் துணை செய்வதாக அமையவும் கூடும். சில சமயங்களில் பல வாக்கியங்களில் அல்லது பத்திகளில் கருப்பொருள் பரந்துபட்டுப் பிரிந்திருக்கலாம்.
படைப்புத் திறன்
மொழியினாலாகிய விஷயத்தை ஒரு விளையாட்டுப் பொருளாகக் கருதுவதும், அதனைப் பிரித்துப் பல கூறுகளாக்கி வேறுவேறு விதங்களில் இணைத்துப் பார்த்துப் புதிய சொற்களை உருவாக்குவதும் இலக்கியப் படைப்புகளுக்கான இயல்பு மட்டுமல்ல, பத்திரிகைத் தமிழுக்கும் உரியதுதான். உதாரணமாக, தொலைக்காட்சி புகுந்த ஆரம்ப நாட்களில், தினத்தந்தி அதனைப் படரேடியோ என்றே அறிமுகப்படுத்தி எழுதி வந்தது. பின்னர்தான் தொலைக்காட்சி என்னும் சொல் பரவியது. அதற்குப்பின் அச்சொல்லை தினத்தந்தி விட்டுவிட்டது. மொழியின் விளையாட்டுத் தனமான, படைப்பாக்கமிக்க, திறன்மிக்க சொற்பயன்பாட்டைக் காட்டுவது இது என்றே சொல்லலாம்.
ஒரு சூழலுக்குரிய சொல்லை வேறு சூழலில் படைப்பாக்கத்திறனோடு பயன்படுத்தலாம். உதாரணமாக, தினமலர், நடிகர் பார்த்திபனின் படத்தைப்போட்டு, அவரது கனவு ஒன்றினைக் குறிப்பிட்டு, பார்த்திபன் கனவு எனத் தலைப்பிட்டுள்ளது. இது வேடிக்கையானதாக இருப்பினும், படைப்புரீதியான பயன்பாடுதான். ஆனால் இந்தமாதிரி முறைகளைத் தாறுமாறாகக் கையாள முடியாது. அதில் சூழல் ஏற்புத் தன்மையும், இலக்கண அமைப்பினை மீறாத நுண்ணுணர்வும், மொழியின் அடிப்படைத் தன்மையறிவும், இயலபான உருபன்களை உருவாக்கும் தன்மையும் போன்ற எத்தனையோ தகுதிகள் செயல்படவேண்டும்.
தமிழ் இதழ்களில் பிழைகள்
தமிழ்மொழி நடை பற்றிப் பேசும்போது தமிழ் இதழ்களில் காணப்படும் ஏராளமான பிழைகளைப் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது.
ஆங்கில இதழ்கள் பிழையற்ற ஆங்கிலத்தைக் கையாளுகின்றன. தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை மொழிநடையிலும் சொல்தேர்விலும் காட்டும் அக்கறையினைப் பார்த்தாலே இது புரியும். இவை தவிர Know your English என்பது போன்ற பகுதிகளையும் பிழைதவிர்ப்பதற்கென்றே நடத்திவருகின்றன.
பொதுவாக, தமிழ் இதழாசிரியர்களுக்கும், இதழ்களில் பணிபுரிபவர்களுக்கும் பிழையற்ற முறையில் நல்ல தமிழைக் கையாளவேண்டும் என்ற நினைப்பு கிடையாது. மாறாக, இலக்கணம் தெரிந்திருப்பதையே கேலிசெய்பவர்கள்தான் பத்திரிகைகளில் இருக்கிறார்கள். மேலும் ஓரளவேனும் இலக்கணம் தெரிந்த, பிழையற்ற நடையில் எழுதக்கூடியவர்களைத் தமிழ் இதழ்கள் தேர்ந்தெடுப்பதில்லை. தமிழ் முதுகலை படித் திருப்பதோ, இதழியல் துறையில் பட்டமோ பட்டயமோ வாங்கியிருப்பதோ, தமிழ்ப் பத்திரிகைத் துறையில் நுழையத் தகுதிக் குறைவாகவே எண்ணப்படுகின்றன. ஆங்கிலத் தைப் பிழையற்ற முறையில் பேசவும் எழுதவும் வேண்டும் என்னும் முயற்சியில் நூற்றில் ஒரு பங்கினைக் கூடத் தமிழுக்கு நாம் செய்வதில்லை என்பது நம் அடிமை மோகத்தையே காட்டுகிறது. மேலும் தினத்தந்தி இதழுக்கு ஆதித்தனார் வெளியிட்டது போன்ற நாள்-தாள் கையேட்டை எல்லாப் பத்திரிகைகளும் உருவாக்கிப் பயன்படுத்த வேண்டும்.
தினமலர் திரைமலர் 13-09-2002 தாள் இரண்டாம் பக்கத்தில் ஒரு பத்தி முழுவதும் குழுந்தைகள் என்றே அச்சாகியுள்ளது. எவ்வளவு பொறுப்போடு பத்திரிகை ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. தமிழ் இதழ்கள் (குறிப்பாக தினமலர்) சந்தியைக் கட்டாயம் பயன்படுத்தக்கூடாது என்றே கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. உதாரணமாக, தினமலரின் சில தலைப்புகள்:
இதற்காக தமிழகத்துக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்
வரதட்சணை கொடுமை பட்டதாரி பெண் உயிரோடு எரிப்பு
இன்ஜி. கல்லூரி ஆசிரியருக்கு தனி பயிற்சி கல்லூரி
ஆங்கிலச் சொற்கள் பயன்பாடு
ஏற்ற தமிழ்ச் சொற்கள் இல்லாத நிலையில் அல்லது அவை வெகுவாகப் பரவாத நிலையில் ஆங்கில அல்லது பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஏற்ற தமிழ்ச் சொற்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமல் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது தமிழை அவமதிப்பதாகும். உதாரணமாக தினமலரில் ஒரு செய்தி:
டெலிமெடிசின் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்
இதே செய்தியை தினமணி, தொலைமருத்துவத் திட்டம் என்று அழகாகத் தமிழ்ப் படுத்தி வழங்கியுள்ளது. தினமலரின் இன்னொரு தலைப்புச் செய்தி:
விழாவில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இடையேயான நெட்வொர்க்கை
ஜனாதிபதி அப்துல் கலாம் தொடங்கிவைத்தார்.
இதையும் தினமணி, தமிழ்ப்படுத்தியே (பொறியியல் கல்லூரிகளில்…..வலைப்பின்னல் தொடர்பை) வழங்கியிருக்கிறது.
தன்வயமாக்கல்
தமிழில் எப்படிச் சொற்களைத் தன்வயமாக்க வேண்டும் என்னும் முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தாமை தமிழறிந்தவர்களுக்கு வெறுப்பை அளிக்கிறது. உதாரணமாக, ப்ரச்னை என்பது வடசொல். இதனைப் பிரச்சினை என்று ஒலிப்படுத்த வழங்கவேண்டும். (பலபேர் தவறாக பிரச்சனை என்று எழுதுகின்றனர்.) தினமலர் விடாப்பிடியாகப் பிரச்னை என்ற வடிவத்தையே கையாளுகிறது. தினமணி யும் தினமலரும் எழுதுபவர்களைப் பொறுத்து பிரச்சினை, பிரச்சனை என்று வெளி யிடுகின்றன.
வடமொழிச் சொற்களையும் கிரந்த எழுத்துகளையும் இன்று இதழ்களில் கையாளுவது தவிர்க்க இயலாதது. ஆனால் இதழாளர்களுக்கு இச்சொற்களைக் கையாளத் தெரிவதில்லை. உதாரணமாக, விசேஷம் என்பதை விஷேசம் என்று எழுதுகிறார்கள். லக்ஷ்மி என்பதை அநேகமாக 99 சதவீதத்தினர் லஷ்மி என்றே இப்போது ஆக்கிவிட்டார்கள். ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும் Lakshmi எனக் K போட்டு எழுதத் தவறுவதில்லை. உகர ஊகாரங்கள் கிரந்த எழுத்துகளோடு படும் பாடு சொல்லத் தரமன்று. ஜூன் ஜூலை என்பதை நாள்காட்டிகள் உட்பட எல்லா இடங்களிலும் ஜீன், ஜீலை என்றே காண்கிறோம். ஷ¨-வைத் தவறாமல் ஷீ என்றே எழுதுகிறார்கள்.
அகரத்தில் முடியும் வடசொற்களை -ம் சேர்த்து எழுதுவது தமிழ் முறை. உதாரணமாக யோக-யோகம், இந்துத்துவ-இந்துத்துவம், தத்துவ-தத்துவம் இப்படி. ஆனால் இவற்றையெல்லாம் ஆகாரமாக்கி(!), யோகா, இந்துத்துவா என்றே எழுதப் பழக்கியவர்கள் பத்திரிகைக்காரர்கள்தான்.
பத்திரிகை ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். அது இலட்சக்கணக்கான பேருக்குப் போய்ச் சேருவதன் காரணமாக அதில் பிழைகளின்றி மொழியைக் கையாள வேண்டும். அறிந்தோ அறியாமலோ ஒருவர் செய்யும் பிழைகள், ஏராளமான பேர் காப்பியடிக்கக் காரணமாக அமைந்துவிடுகின்றன. உதாரணமாக, நினைவு கூர்வது என்னும் சொல்லைப் பத்திரிகைக்காரர்கள், தவறாகக் கையாண்டு, நினைவு கூறுவதாக்கிவிட்டார்கள். சந்தியைத் தவிர்க்கும் தினமலர், எவனோ ஒருவன் தவறாகப் பயன்படுத்தியதால் இன்றுவரை அருணாச்சலேஸ்வரர் என்றே எழுதிவருகிறது. பிறகு “சீன வானொலிக் கருத்தரங்கில் பிழையின்றித் தமிழைக் கையாள வலியுறுத்தினார் கள்” என்றும் செய்தி வெளியிடுகிறது!
தேய்ந்த சொற்களைப் பயன்படுத்தல்
பத்திரிகைத் துறையில் பலசமயம் அர்த்தமற்றுத் தேய்ந்துபோன சொற்கள் கையாளப்படுகின்றன. இதற்கு எந்தப் பத்திரிகையும் விதிவிலக்கு அல்ல. உதாரணமாக, தமிழகத்தில் அமைதி நிலவுகிறது என்று இதழ்களில் எழுதமாட்டார்கள். தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது என்றுதான் எழுதுவார்கள். பிற தேய்ந்து போன சொற்பயன்பாடுகளுக்குச் சில உதாரணங்கள்-
அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது
போர்க்கால அடிப்படையில் உதவிகள் செய்யப்படுகின்றன
குண்டர் சட்டம் பாய்ந்தது
எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
லஞ்ச லாவண்யத்தை விரட்டாவிட்டால் வளர்ச்சி என்பது கனவுதான்
அர்த்தம்புரியாமலே இவற்றை எழுதுகிறார்கள். உதாணரமாக, அனுசரித்தல் என்றால் ஒத்துப்போதல், சரிவர ஒழுகுதல் என்பதுதான் பொருள். உதாரணமாக, புதுப் பெண்ணுக்கு மாமியார் வீட்டில் அனுசரித்து நடந்துகொள் என்று அறிவுரைப்பார் கள். இந்தச் செய்தியின்படி, நாம் எய்ட்ஸ் தினத்துக்கு ஒத்து நடந்துகொள்ள வேண்டுமா? அல்லது எல்லாரும் எய்ட்ஸ்தினத்திற்கு ஒத்து நடந்துகொள்கிறார்களா?
இவற்றில் மிகமோசமான சொற்பயன்பாடு லஞ்ச லாவண்யம் என்பது. லாவண்யம் என்றால் அழகு. அதனால்தான் பெண்கள் லாவண்யா என்று பெயர் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் நமது பத்திரிகைகள் அர்த்தமில்லாமல் லஞ்ச லாவண்யம் என்று எழுதுகின்றன. ஒரு பத்திரிகையாளரிடம் பேசும்போது, அவர் லாவண்யம் என்றால் ஊழல் என்றே பொருள் சொன்னார்!
வேடிக்கையான மொழிபெயர்ப்புகள்
செய்திகளைப் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து வெளியிடுகின்றன பத்திரிகைகள். ஆனால் வேடிக்கையாகவும் மொழிபெயர்ப்புகள் அமைந்து விடுகின்றன. உதாரணமாக, தினமலர் தலைப்புச் செய்தி ஒன்று:
சென்னையில் அப்துல் கலாம் சபதம்
அனைவரையும் அறிவாளி ஆக்குவோம்!
அனைவரையும் எழுத்தறிவுள்ளவர் ஆக்குவோம் என்று இந்தச் செய்தி இருக்க வேண்டும். படிக்கவைப்பதால் ஒருவரை எழுத்தறிவுள்ளவர் ஆக்கலாம், அனைவரையும் அறிவாளி எப்படி ஆக்குவது? சொல்லுக்குச் சொல் பலசமயங்களில் மொழி பெயர்க்கிறார்கள். உதாரணமாக சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது என்ற தொடரைப் பாருங்கள். Red carpet welcome என்பதை ஆடம்பரமான வரவேற்பு என்று பெயர்க்கவேண்டும்.
மேலே சுட்டிக்காட்டியவை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு என்ற அளவிலான உதாரணங்களே.
தலைப்புச் சொற்களை இனம் புரியாது பயன்படுத்தல்
செய்தி விளம்பரங்களை அவசரக் கோலத்தில் பெயர்த்தல்
அறிவியல், ஏனைத்துறைக் கலைச்சொற்கள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தாமை
போன்றவை தமிழ் இதழ்களில் மிகுதி. தினமலர் மிகமோசமான ஆங்கிலச் சொற்கலப்பினைச் செய்கிறது, வேண்டுமென்றே கலப்புநடை ஒன்றை உருவாக்கி வருகிறது என்றே சொல்லலாம். சில உதாரணங்களைப் பாருங்கள்:
கர்ப்பிணிப் பெண்களுக்கு அங்கு கிடைக்கும் ட்ரீட்மெண்ட்தான் உலக அளவில் அதிரச் செய்யும்.
கங்குலி கம்பெனி சாதிக்குமா?
யு.இ.எல். பவர் திவெறும்பூர் ஷோரூம் அன்இண்டக்ரேடட் அசோசியேட்ஸ் திறப்புவிழா
பார்லிமெண்டில் அமைச்சர் உறுதி
கரண்ட் வராததற்கு இப்படியும் காரணம்?
பக்கத்துக்குப் பக்கம் இப்படித்தான்.
நிறுத்தற்குறிகளின் தவறான பயன்பாடு
நிறுத்தற்குறிகளை (குறிப்பாக மேற்கோள் குறிகளை)த் தவறான முறையில் பயன்படுத்துவது தமிழ்ப்பத்திரிகைகளில் அதிகமாகக் காணப்படும் ஒன்று. உதாரணம்:
அப்போது அவன் ஜமீலா ஜலாலிடம், “தப்பித்துக்கொண்டதாக நினைக்காதே”
என்றும், “உன்னுடைய காரில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும்” கூறியுள்ளான்.
இதில் மேற்கோள் குறி தவறாகக் கையாளப்பட்டதல்லாமல், வாக்கியப் பிழையும் சேர்ந்துள்ளது.
வெற்றெனத் தொடுத்தல் (வெர்பாசிடி)
தேவைக்கதிகமான சொற்களைப் பயன்படுத்திக் குறைவான செய்தியைத் தருதல் வெற்றெனத் தொடுத்தல் எனப்படும். உதாரணமாக:
அமெரிக்க வெளியுறவுத் துறை மனித உரிமை பற்றி விடுத்துள்ள அறிக்கை:
தீவிரவாதிகளுடன் மோதல் என்ற பெயரில் போலீஸார் ஆட்களைச் சுட்டுக்
கொல்வது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்க் குற்றம் சாட்டப்படாமல்
வைக்கப்பட்ட சந்தேகத்தின்பேரில் பிடிபட்ட நபர்கள் கொலைசெய்யப்படுதல்,
காவல் கைதிகளைத் துன்புறுத்திய, கற்பழித்த போலீஸாரை விசாரித்து
நடவடிக்கைகள் எடுக்காமலிருப்பது, பெண்கள் உரிமை தொடர்பான
சட்டங்களை பாரபட்சமற்ற முறையில் அமல் செய்ய மறுப்பது, வரதட்சிணை,
சாவுகள் அதிகரித்தல், குழந்தைத் தொழிலாளர்களைச் சுரண்டி வேலை
வாங்குதல், வகுப்புவாத வன்முறைகள் கட்டுப்படுத்தாமல் பெருகிவருதல்
முக்கியப் பிரச்சினைகளாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(இச் செய்தியிலுள்ள எழுத்துகள் 350, சொற்கள் 70)
இச்செய்தியை முழுமையாகவே கீழ்க்காணும் முறையில் வெளிப்படுத்தலாம்.
அமெரிக்க அரசு இந்தியாவில் மனித உரிமை மீறப்படுவதைச் சுட்டிக்காட்டி
யுள்ளது. தீவிரவாதிகளுடன் மோதல் என்ற பெயரால் மக்களைச் சுட்டுக்
கொல்வது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் விசாரணையின்றித் தனிச்
சிறையில் அடைப்பது, சந்தேகத்தில் பிடித்த நபர்களைக் கொல்லுதல், பெண்
கைதிகளைத் துன்புறுத்தும், கற்பழிக்கும் போலீஸார்மீது நடவடிக்கை எடுக்
காமலிருத்தல், பெண்ணுரிமைச் சட்டங்களைச் செயல்படுத்தாமை, வரதட்சி
ணைக் கொடுமை, குழந்தைகளை வேலைவாங்குதல், வகுப்புவாத வன்முறை
போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
(எழுத்துகள் 250, சொற்கள் 44)
இதுவரை பார்த்தவற்றால், நாளிதழ்களில் பணிபுரிவோர் கவனமுடன் செய்திகளை அளிக்கவேண்டும் என்பது பெறப்படும். தேவையான மொழிப் பயிற்சி கொடுக்கப்பட்டால் பத்திரிகையாளர்களின் தமிழ்நடை இலக்கணச் சீர்மை கெடாமல், தெளிவாகவும் திரிபின்றியும் அமையும். நாளிதழ்களில் பணிபுரிவோருக்குத் தனியார் நிறுவனங்களோ பல்கலைக்கழகங்களோ ஓரிருவார வகுப்புகளை நடத்திப் பயிற்சி கொடுத்தால் செய்தித்தாள்களின் நடையில் விரும்பத்தக்க மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக நமது மொழியைப் பிழையின்றிக் கையாள வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.
மொழிநடையில், குறிப்பாகச் சொற்களைப் பயன்படுத்துவதில், பத்திரிகைகள் தவறான முன்மாதிரிகளை அளித்துவிடுவதால், காலப்போக்கில் பொதுமக்களின் பெரும்பகுதியினர் அத்தவறுகளை எவ்விதத் தயக்கமும் இன்றிச் செய்கின்றனர். ஏனெனில் நாளிதழ்கள் அன்றாடம் இலட்சக்கணக்கணக்கான மக்களைச் சென்றடைபவை. ஆகவே இதழியல் துறையில் பயிலும் மாணவர்களுக்கும் செய்திகளைத் திருத்தமுற எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் பயிற்சி கொடுப்பது காலம் கருதிச் செய்யும் தொண்டாகும்.
நமது தமிழ் நாளிதழ்கள் மொழியை ஒரு கருவி என்று மட்டுமே கருதுகின்றன. ஆனால் மொழி நமது பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்றுவது மட்டுமன்றி, மனிதனின் சிந்தனையைக் கட்டமைப்பது, அவனைச் சமூகவயமாக்குவது, அவனை நாகரிகத்தில் புகவைப்பது போன்ற பணிகளையும் செய்கிறது. ஆகவே தவறான மொழிப்பயன்பாடு என்பது சமூகத்தைப் பற்றிய தவறான புரிந்துகொள்ளலே ஆகும். இன்று தலித்தியம், பெண்ணியம், பிற்காலனியம் போன்ற கோட்பாடுகள் மொழிக்கு முதன்மை தந்து எப்படி மொழி கருத்துகளை உருவாக்குகிறது என்பதை ஆராய்கின்றன. பத்திரிகைகள் நல்ல முன்னுதாரணங்களாக இருந்து சரியானதொரு மொழிநடையை மக்களுக்கு அளித்து வழிகாட்ட வேண்டும்.
செய்திகளின் தரத்திற்கேற்பவும், வெளியிடும் நோக்கத்திற்கேற்பவும் மொழி நடை அமைகிறது என்பதில் ஐயமில்லை. தரமற்ற சினிமாச் செய்திகளையும் காதல்-கொலை விவகாரங்களையும் தரமற்ற அரசியல் விஷயங்களையும் வெளியிடும் நிலை இருக்கும் வரையில் தமிழ்ப் பத்திரிகைகளின் நடை மாறாது. இவற்றை வெளியிடுவதில்தான் அவைகளின் நோக்கமும் தெரிகிறது. வணிகரீதியாகச் செய்திகளைக் கவர்ச்சிகரமாக வெளியிடவேண்டும் என்று மட்டுமே நினைப்பது அறியாமை. இன்று எல்லாப் பத்திரிகைகளுமே வணிகநோக்கில்தான் நடத்தப்படுகின்றன. வணிக நோக்கின்றி இன்று பத்திரிகை நடத்த முடியாது. ஆனால் வணிகத்தில் அடிப்படை நேர்மை என்பது இருக்கிறது. வாங்குபவனையும் மனிதனாக மதித்து அவனுக்கும் பயன்பட்டுத் தானும் வளர்ச்சியடைவதுதான் நல்ல வணிகம்.
(மயிலாடுதுறை அ,வ,அ, கல்லூரியில், 03-01-2003 அன்று இக்காலத் தமிழ் இதழ்களின் நோக்கும் போக்கும் என்னும் பொதுத்தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை.)
______