தேங்காயின் வளம்

பலகாலத்துக்கு முன்னால், தேங்காய்களை நேசித்த பையன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் பினாவோன். தேங்காயின் ஓட்டிலிருக்கும் மூன்று கண்களை (ஓட்டைகளை)ப் பார்த்ததும் அவனுக்கு இரண்டு கண்கள், ஒரு வாய் கொண்ட ஒரு மனித முகத்தைப் பார்ப்பதுபோல் தோன்றியது. “ஒரு நண்பன்” என்று அவன் முணுமுணுத்தான்.
அன்றுமுதல் தேங்காய்களும் பினாவோனும் ஒன்றாகவே இருந்தனர். அவன் கற்களைப் போட்டு விளையாடுவதற்கு பதிலாகத் தேங்காய்களுடன் விளையாடினான். அவற்றை நீரில் மிதக்கவிட்டான். தன் படுக்கையிலேயே அவற்றை வைத்துக் கொண்டு அவற்றிடம் தன் இரகசியங்களை இரவில் கூறினான்.
காலப்போக்கில் அந்த கிராமத்து மக்களும் தேங்காய்களை உண்ண ஆரம்பித்தார்கள். இளநீரையும் வழுக்கையையும் சாப்பிட்டார்கள். நன்கு முற்றிய பழுப்புநிறத் தேங்காய்களின் உள்ளிருக்கும் பருப்பை அவர்கள் கறுக்கு மொறுக்கென்று தின்றார்கள்.
ஆனால் தேங்காய் மேலும் உதவக்கூடியது என்று பினாவோனுக்குத் தெரியும்.
அவன் தேங்காயைத் துருவினான். அதை வெந்நீரிலிட்டுப் பால் ஆக்கினான். தேங்காய்ப் பாலிலிருந்து இனிப்புகளும் அரிசிமாவு சேர்ந்த ரொட்டிகளும், அதில் கிழங்குகள், வாழைப்பழங்கள் இட்ட சூப்புகளும் தயாரித்தான்.
அவன் தயாரித்த உணவுகளை உண்ட மக்கள் அவற்றை இரசித்தனர், விரும்பினர். ஆனால் பினாவோனுக்கு மேலும் செய்ய ஆசை.
ஒருநாள் தேங்காய்ச் சிறட்டையை வைத்துக் கிண்ணம் செய்தான். அதிலிருந்து சிறு பறைகளைச் செய்தான். அதிலிருந்து மணிகளைச் செய்தான்.
மக்கள் பேசத்தொடங்கினார்கள். “தேங்காய்கள் எவ்வளவு விதங்களில் உதவுமாறு நீ செய்கிறாய்! வியப்பாக இருக்கிறது!” என்றார்கள்.
பினாவோனுக்கு மேலும் செய்யத் தெரியும். ஒரு நாள் நாரை உற்றுப் பார்த்தான். “நல்ல பிரஷ்” என்றான். பிறகு நாரைப் பதமாகப் பின்னினான். “படுத்து உறங்க நல்ல விரிப்பு” என்றான். தேங்காய் நார்களை நன்கு பின்னி படுக்கை மெத்தைகள், கயிறுகள், மீன்பிடி வலைகள் முதலியன தயாரித்தான்.
ஆனால் இப்போதெல்லாம் பினாவோன் நாள் முழுவதும் தேங்காய்களை வைத்துச் செய்வதை கிராம மக்கள் பார்த்துத் தலையை ஆட்டியவாறு, “இவன் ரொம்பத்தான் தேங்காய்களில் ஆர்வம் காட்டுகிறான்” என்று கேலியாகப் பேசினார்கள்.
இதை பினாவோன் கேட்டான். தேங்காய்கள் சிறப்பானவை என்று நான் நினைத்தது தவறு என்று நினைத்தான். “நான் இனிமேல் அவற்றைப் பற்றி நினைக்கப் போவதில்லை” என்றான்.
ஒருநாள் கடுமையான புயல் வீசியது. மரங்களெல்லாம் காற்றினால் மிகவும் வளைந் தாடின. வானிலிருந்து ஜெல்லிமீன்கள் விழுவதைப்போலக் கடுந்தூறல் விழுந்தது. கனமழை பெய்தது. அலைகள் உயர்ந்து பெரிய நகரும் சுவர்களைப் போலத் தரைக்கு வந்தன.
கிராமத்தின் வீடுகள் எல்லாம் தரைமட்டமாயின. தென்னை மரங்கள் மட்டுமே உயர்ந்து நின்றன. “நம் கிராமம் பாழாகிவிட்டது. நாம் வேறு எங்காவது செல்ல வேண்டியதுதான்” என்று கிராம மக்கள் தயாராயினர். “நாம் இங்கே வாழமுடியாது.”
பினாவோன் ஒரு தென்னைமரத்தின்மீது சாய்ந்து நின்றான். அதன் உறுதியான அடி மரம் நல்ல ஆதரவாக இருந்தது. தள்ளும் காற்றில் தென்னைகள் எவ்வளவு உறுதியாக நிற்கின்றன என்பதை யோசித்தான்.
திடீரென அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. “நில்லுங்கள்” என்றான். “தென்னை மரங்களை நாம் வீடு கட்டப் பயன்படுத்தலாம். அதன் அடிமரங்களைச் சுவர்களாகப் பயன்படுத்துங்கள். தென்னை ஓலைகளைக் கீற்றாக்கிக் கூரைக்குப் பயன்படுத்துங்கள்” என்றான்.
கிராமத்தினர் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். “ஒருவேளை அவன் சொல்வது சரியாக இருக்கலாம். முயன்று பார்க்கலாம்” என்றான் ஒருவன். மற்றவர்கள் தலையசைத்தனர்.
இப்போது அவர்கள் தென்னையை வைத்துப் புதிய வீடுகள் கட்டினர். உத்தரங்களுக்கும் மூலைவிட்டங்களுக்கும் தென்னை அடிமரங்களைப் பயன்படுத்தினர். மரங்களைக் குறுக்கில் அரிந்து சுவர்களுக்குத் தடுப்பாக்கினர். ஓலைகளால் கூரைகளை நெய்தனர்.
“இவ்வளவு வலுவான, வசதியான வீடுகளில் நாம் இதுவரை வாழ்ந்ததில்லை” என்றனர் யாவரும்.

-ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நாட்டுப்புறக்கதை,

ஸ்கிப்பிங் ஸ்டோன்ஸ் இதழில் (நவம்பர்-டிசம்பர் 2002, ஆண்டு 14, எண் 5) வெளிவந்தது.

இலக்கியம்