குழந்தைகளை மிகவும் கவர்ந்த நூல்கள் ஆங்கிலத்தில் சில உண்டு. அவற்றில் முதன்மையானது விசித்திர உலகில் ஆலிஸ்- “ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்”. ஆலிஸின் விசித்திர உலகம் குழந்தைகளை மட்டும் அல்ல, அவர்களைவிட அதிகமாகப் பெரியவர்களை இதுவரை கவர்ந்துள்ளது என்பது விசித்திரம்.
புனைகதைகளில் பலவகை உண்டு. நாம் இதுவரை பார்த்த ஆலிவர் ட்விஸ்ட், ராபின்சன் குரூஸோ, டிராகுலா, உலகைச் சுற்றி எண்பது நாட்கள், பிரதாப முதலியார் சரித்திரம், கலிவரின் பயணங்கள், டான் குவிக்ஸோட் இவை யாவுமே புனைகதையின் ஒவ்வொரு வகையை எடுத்துக் காட்டுபவை. அதுபோல லூயி கேரல் 1865இல் வெளியிட்ட இந்தக் கதையும் அர்த்தமறு (நான்சென்ஸ்) இலக்கியம், வெறுங்கற்பனை (ஃபேண்டசி) இலக்கியம் என்பதற்கு ஒரு சான்றாக அமைகிறது.
“சீட்டுக்கட்டு ராணி மாப்பிள்ளை தேடி ஊர்வலம் போனாள் ஒரு நாளில், கண்ணாலே ஜாடை செய்து கையோடு என்னைக் கொண்டு போனாள், தோழி வயது அறுபதுக்கு மேலே” என்று ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல். அது போன்ற பைத்தியக்காரத் தனம்தான் இந்தக் கதை.
ஆலிஸ் வளரிளம் பருவச் சிறுபெண். ஆற்றங்கரையின் பொன்னிற மாலையில் அவள் அக்காவுடன் ஏதோ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது அவளுக்கு அரைத் தூக்கம். கண் மயங்குகிறது. வெயிஸ்ட்கோட் அணிந்த ஒரு வெள்ளை முயல் அவளைத் தாண்டி தன் பாக்கெட் வாட்சைப் பார்த்துக் கொண்டே, நேரமாகி விட்டதே என்று சொல்லிக்கொண்டு ஓடுகிறது. ஒரு குழிக்குள் செல்கிறது. அதைப் பின் தொடரும் ஆலிஸ், தானும் அந்தக் குழிக்குள் விழுந்து, ஒரு பெரிய ஹாலை அடைகிறாள்.
அங்கு அவள் புகமுடியாத ஒரு சிறிய கதவு. அதன் சாவி ஒரு மேஜைமீது உள்ளது. கதவுக்கப்பால் ஓர் அழகிய நந்தவனம் அவளை வா வா என அழைக் கிறது. எதிரில் “என்னைக்குடி” என எழுதப்பட்ட ஒரு பாட்டில். அதிலுள்ளதைக் குடித்தபோது சிறிய கதவுக்குள் செல்லும் அளவுக்குச் சுருங்கிவிடுகிறாள். ஆனால் சாவி இப்போது உயரமான மேஜை மீதல்லவா இருக்கிறது? “என்னைச் சாப்பிடு” என்று எழுதப்பட்ட ஒரு கேக்கைப் பார்க்கிறாள். அதை உண்டவுடன், மிகப் பெரிய உயரத்திற்கு வளர்ந்துவிடுகிறாள். மறுபடியும் கதவுக்குள் போகமுடியாதே என்று அழுது அழுது அவள் கண்ணீரே வெள்ளமாகப் பெருகி ஓர் ஏரியாகி விடுகிறது. அழும்போதே உருவம் மீண்டும் சுருங்கித் தன் கண்ணீர் வெள்ளத்தில் விழுகிறாள். ஒரு எலி அவளுக்கு வழிகாட்டி கரைக்கு அழைத்துச் செல்கிறது.
ஆலிஸ் மறுபடியும் வெள்ளை முயலைக் காண்கிறாள். முயல் அவளைத் தன் வீட்டுக்குச் சென்று சில பொருட்களை எடுத்துவரச் சொல்கிறது. முயல் வீட்டில் அவள் ஒரு பாட்டிலில் இருந்ததைக் குடிக்க, வீட்டின் அளவு வளர்ந்து விடுகிறாள். அவள்மீது காட்டுமிருகங்கள் கற்களை எறிகின்றன. ஆனால் விந்தை, அந்தக் கற்கள் கேக் ஆக மாறுகின்றன! ஒன்றை எடுத்துச் சாப்பிடும் ஆலிஸ், மீண்டும் அளவில் மிகச் சுருங்கிவிடுகிறாள். நந்தவனத்திற்குள் அலைகிறாள். ஒரு காளான் மீது அமர்ந்து ஜாலியாக ஹூக்கா பிடிக்கும் கம்பளிப்புழுவைப் பார்க்கிறாள். அது காளானின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அளவில் வளரச் செய்பவை என்கிறது. காளானின் ஒரு பகுதியிலிருந்து தின்ற ஆலிஸின் கழுத்து மட்டும் நீண்டு மர உயரத்தை அடைகிறது. ஒரு புறா தன் முட்டையைத் தின்னவந்த பாம்பு அவள் என்று எண்ணித் தாக்குகிறது. உடனே காளானின் மற்றொரு புறத்திலிருந்து தின்று ஆலிஸ் இயல்பான உயரத்தை அடைகிறாள்.
மீண்டும் நந்தவனத்தில் ஆலிஸ், ஒரு துரைசானியின் வீட்டை அடைகிறாள். அப்பெண்மணி குழந்தைக்குப் பால் தருகிறாள், செஷயர் பூனை ஒன்றையும் வளர்க்கிறாள். ஆனால் ஆலிஸிடம் கடுமையாகப் பேசுகிறாள். பிறகு ராணியுடன் தான் ‘க்ராக்கெட்’ விளையாட்டை விளையாடப் போவதாகப் புறப்படுகிறாள், போகும்போது ஆலிஸிடம் தன் கைப்பிள்ளையைத் தருகிறாள், அது பன்றிக் குட்டியாகிறது! அதைக் காட்டில் விட்டு, ஆலிஸ் மீண்டும் செஷயர் பூனையைச் சந்திக்கிறாள். அது, அனைவரும், ஆலிஸ் உள்பட, பைத்தியங்கள் என்கிறது. மார்ச்முயலின் வீட்டுக்கு வழி சொல்லிவிட்டு அது வெறும் புன்னகையாகத் தேய்ந்துபோகிறது.
ஆலிஸ் மார்ச்முயலின் வீட்டுக்குச் செல்லும்போது, அதுவும், உயரத்தொப்பி அணிந்த பித்துப்பிடித்த ஒருவனும் (மேட்-ஹேட்டர்), அணில்போன்ற ஒரு பிராணியும் (டார்மவுஸ்) ஒரு தேநீர்விருந்தைச் சுவைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த மூவரும் காலத்துடன் சண்டையிட்டதால் தேநீர்-அருந்து-நேரத்திலேயே இருக்குமாறு சபிக்கப்பட்டுள்ளன என்பதை உணர்கிறாள். அவைகளிடமிருந்து விடுபட்டு காட்டிற்குள் செல்பவள், ஒரு மரத்தில் கதவு இருப்பதைக் கண்டு அதற்குள் புக, பழைய ஹாலுக்கே வந்துவிட்டாள்!
தான் எடுத்துவைத்திருந்த காளானில் கொஞ்சம் தின்று குள்ளமாகி, சாவியை எடுத்து, மறுபடியும் நந்தவனத்திற்குள் வருகிறாள். அங்கு அவள் சீட்டுக்கட்டு இதய ராணியுடன் க்ராக்கெட் விளையாட வேண்டி வருகிறது. அடிக்கும் தடியாக ஃப்ளமிங்கோ பறவைகள், பந்துகள் காட்டுப்பன்றிகள்! இந்தப் பைத்தியக்கார ஆட்டத்திற்குள் செஷையர் பூனை மீண்டும் வருகிறது. ஆலிஸுடன் உரையாடும் போது இடையில் புகும் இதயராஜாவை அது அவமதிப்பதால் அதன் தலையை வெட்டுமாறு ராஜா ஆணையிடுகிறான். ஆனால் இப்போது அந்தப் பூனையே வெறும் தலையாக இருக்கிறது! எனவே வெட்ட முடியவில்லை.
இடையில் துரைசானி ஆலிஸுடன் நட்புப்பாராட்ட வருகிறாள். இதயராணி அவளைத் துரத்திவிட்டு ஆலிஸ் போலி-ஆமையுடன் உரையாட வேண்டும் என்கிறாள். போலி ஆமையைக் காண க்ரிஃபின் என்ற மிருகத்தைத் துணையாக அனுப்புகிறாள். போலி ஆமை, க்ரிஃபின் ஆகியவற்றோடு ஆலிஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே விசாரணை நடக்க இருப்பதாக செய்தி வருவதால், க்ரிஃபின் அவளை க்ராக்கெட் அரங்கிற்குக் கொண்டு செல்கிறது.
அங்கு சீட்டுக்கட்டு ஜேக், ராணியின் உணவைத் திருடிவிட்டான் என்று விசாரணை நடக்கிறது. சாட்சியம் கூறப் பலர் அழைக்கப் படுகின்றனர். இடையில் வெள்ளைமுயல் ஜேக்கின் கடிதம் ஒன்றை ராஜாவிடம் அளிக்கிறது. அதில் கவிதை எழுதப்பட்டிருப்பதாக ராஜா சொல்கிறான். அவன் விளக்கத்தை ஆலிஸ் மறுக்கிறாள். ராணி கோபமடைந்து ஆலிஸ் தலையை வெட்டுமாறு ஆணையிடுகிறாள். ஆனால் ஆலிஸ் மிகப் பேருருவமாக வளர்ந்து, காலால் ராணி, ராஜா, ஜேக் உள்பட (சீட்டுக்கட்டினை) உதைத்துத் தள்ளுகிறாள்.
திடீரென்று பார்த்தால், ஆற்றங்கரையில், மாலைநேரத்தில், அவள் தன் அக்கா மடியில் படுத்திருக்கிறாள்! அவளிடம் தன் கனவைச் சொல்லிவிட்டுத் தேநீர் அருந்தச் செல்கிறாள்.
கதையின் சம்பவங்களின் ஊடாக நமக்கு அர்த்தம் எதுவும் புலப்படாவிட்டாலும், இக்கதை, சிறுபருவ வெள்ளை மனம் தவிர்க்கவியலாமல் ஏதோ ஒரு நிலையில் இல்லாமற் போவதையும், அதனால் ஏற்படும் துயரத்தையும் பேசுவதாக விமரிசகர்கள் சொல்கிறார்கள். மானிட வாழ்க்கையும் இக்கதையின் சம்பவங்கள் போல அர்த்தமற்ற புதிராக இருப்பதையும் இக்கதை எடுத்துக் காட்டுவதாகச் சொல்கிறார்கள்.
பாரதி தமது குயில்பாட்டில், குரங்கு, மாடு இவற்றுடன் காதல் புரியும் குயிலைக் காட்டுகிறார். இறுதியாக, “ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே ஆனாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க, யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?” என்று கேட்கிறார்.
நாமும் பாரதியைப் பின்பற்றி, ஆலிஸ் கதைக்கு “விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ” என்று கேட்கலாம்.