குக்கூ என்றது கோழி அதனெதிர்/ துட்கென்றதென் தூஉ நெஞ்சம்/ தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்/ வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.
இது ஒரு குறுந்தொகைச் செய்யுள். மருதத்திணையில் சேர்க்கப் பட்டுள்ளது. காரணம், சங்கச் செய்யுள்களை வகைப்படுத்தும்போது முதற்பொருளுக்கு முதலிடம் தரவேண்டும் என்ற தொல்காப்பியக் கருத்திற்கேற்ப, வைகறை என்ற சொல்லைப் பார்த்தவுடனே மருதத்திணை எனக் கூறிவிட்டனர். பிறகு அதற்கு வலுச்சேர்க்க, ‘காதலரைப் பிரிக்கப் போகின்ற’ என்ற தொடர் வந்தவுடனே அவன் பரத்தை மாட்டுத்தான் போகப்போகிறான், அதனால் தலைவி வருந்துகிறாள் என்ற யூகத்தையும் சேர்த்து விட்டனர். ஆனால் நாம் விடியலில் தலைவன் பரத்தை இல்லத்திலிருந்து திரும்பிவருவதாகத் தான் கண்டிருக்கிறோமே தவிரப் பிரிந்து போவதைக் கண்ட தில்லை.
ஆகவே, இப்பாடல் இரவுமுழுவதும் கணவனுடன் சேர்ந்திருந்த காதலி, “ஐயோ, வைகறை வந்து பிரிக்கிறதே” என்று கவலைப் படுவதைத்தான் குறிக்கிறது. எனவே இதைக் குறிஞ்சியில் சேர்த்திருக்க வேண்டும். அல்லது பிரிவின் நிமித்தம் என்று கொண்டால் பாலையிலாவது சேர்க்கலாம். மருதம் பற்றிய பிரிவில் வரக்கூடியதன்று.
சங்கக் கவிதைகளையும் நாம் வேறு அர்த்தங்களில் வாசிக்க நிறைய இடமிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான் இந்தச் சான்றினைக் கூறினேன். பொதுவாக, என் மாணவர்களுக்கு, சங்க இலக்கியத்தைப் படிக்கும்போது ஏற்கெனவே அதில் குறிப்பிட்டுள்ள திணை-துறை விளக்கங்களைத் தவிர்த்துவிட்டு, முடியுமானால் எந்த உரையாசிரியர் குறுக்கீடும் இன்றிப் படியுங்கள் என்று சொல்வது என் வழக்கம். நமது மனநிலைக்கும் அறிவுக்கும் ஏற்பப் பொருள்கோள் அமைகிறது.