நம்மைச்சுற்றியுள்ள நிலம், நீர், காற்று, வானம், காடுகள், விலங்கினங்கள், செடிகொடிகள், மரங்கள், மக்கள்கூட்டம் எல்லாம் இடையறாத தொடர்பு கொண்டவை. அமீபா முதலான மிகச்சிறிய உயிரிகளிலிருந்து யானை, திமிங்கிலம் ஆகிய பேருயிர்கள் வரை, மிகச் சிறிய தாவரங்களிலிருந்து பல்லாண்டுகள் வாழக்கூடிய மிகப்பெரிய தாவரங்கள் வரை இன்றியமையாத தொடர்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் தமக்குள் ஒன்றுக்கொன்று அனுசரணையாக வாழும் நிலையை, மனிதர்கள் உள்ளிட்ட எல்லாப் பிராணிகள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தின் நல வாழ்வைக்கொண்ட மாசுபடாத இயற்கை நிலையை, ஒரு நல்ல சுற்றுச்சூழல் என்கிறோம்.
அனைத்து இயற்கைக்கூறுகளும்-அவை அஃறிணை ஆனாலும், உயர் திணை ஆனாலும்- ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் தன்மைதான் சுற்றுச்சூழலின் அடிப்படைத் தன்மையாகும்.
சான்றாக, நிலத்தின் வளத்தைக் காத்து, செடிகொடி மரங்களுக்கு உணவு தயாரித்தல், ஒளிச்சேர்க்கை போன்ற பலசெயல்களுக்கு நீர் உதவுகிறது.
செடி,கொடி, தாவரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன. பிற தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் மனிதனுக்குமான உணவைத் தயாரிக்கின்றன.
நிலம் மக்களுக்கும், விலங்குகளுக்கும், காடுகளுக்கும், தாவரங்களுக்கும், பிற எல்லா உயிரினங்களுக்கும் உணவளிக்கிறது. அதற்கு ஈடாக நிலம் தனது தேவைகளை அவற்றிடமிருந்து பெற்றுக்கொள்கிறது.
இது ஒரு சுழற்சிச்செயல். இதில் ஏதேனும் ஒரு சுழற்சிக் கண்ணியில் மாறுபாடு ஏற்படுமானால் அது இயற்கையைக் கேடுறச் செய்வதுடன்
இயற்கையின் ஒரு பகுதியான (ஆனால் தாங்கள் இயற்கையின் ஒருபகுதி என்பதை மறந்து விட்ட) மக்களையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இயற்கையை வெல்ல இயலுமா?:
நமது வளங்கள், செல்வங்கள் யாவுமே இயற்கையிலிருந்துதான் வருகின்றன. இயற்கையிலிருந்து பல்வேறு வகைகளில் பயன்பெற்று வருகிறோம் நாம். ஆனால், மனிதர்களின் பேராசைக்கு எல்லையே இல்லை. தானாக இயற்கையிலிருந்து கிடைக்கும் நன்மைகளால் திருப்தி அடையாமல், அல்லது தமது சிறிய முயற்சிகளால் கிடைக்கும் பயன்களினால் திருப்தி அடையாமல், இயற்கையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து,அதைச் சுரண்டி, பாழாக்கி, அதனால் மகிழ்கிறார்கள் மனிதர்கள்.
இயற்கையோடு ஒத்துவாழவேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல், இயற்கை தங்களைப் பாதுகாக்கும் பெரும் சாதனம் என்ற எண்ணமும் இல்லாமல். ‘இயற்கையோடு போராடுவது’ ‘இயற்கையை வெல்லுவது’ தான் வாழ்க்கை என்று அலைகிறார்கள். இதனால் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் பெரும் சீர்கேடுகள் பல ஏற்படுத்தக்கூடிய பொருட்களை உருவாக்குகிறார்கள்.
புதிய வளர்ச்சிக் கொள்கை!:
“புதிய வளர்ச்சிக் கொள்கை”யை இன்று உலகநாடுகள் யாவும் பின்பற்றுகின்றன. இதன் அடித்தளம் நவீன அறிவியல் அறிவும், பொருளாதார வளர்ச்சியும், வணிகரீதியாகப் பொருள்குவித்தலும் ஆகும்.
ஆனால் இவற்றிற்காக எவ்வளவு வேகமாகவும் பரந்த அளவிலும் இப் பூவுலகின் பல்வேறுபட்ட வாழ்க்கைத்தன்மையை (Bio Diversity),உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்? பொருளாதார வளர்ச்சி என்பதன் பெயரால் இயற்கையின் பல்வேறுபட்ட தன்மை பலியிடப்பட்டு விட்டது.
பெரும்பாலான நகர்ப்புற மனிதர்கள் இயற்கையிலிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் முற்றிலும் அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். அடித்தள மனிதர்களோ வாழ்க்கைக்கான மூல வளங்களை இழந்து நகர்ப்புறங்களுக்கு அடிமைகளாகக் குடிபெயர்ந்து தங்களை அன்றாடக்கூலிக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
இதன்விளைவாக ஏற்பட்டதே சுற்றுச்சூழல் அபாயம், மனிதனின் பேராசை இயற்கைக்குச் சாவுமணி அடிக்கிறது. பூமித்தாய் வேகமாகச் சுடுகாடுநோக்கிப் பயணம் செய்கிறாள். அவளது காடுகள் செத்துக் கொண்டிருக்கின்றன. அவளது மண் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவளது நீர் வற்றிக்கொண்டிருக்கிறது.
முதல் உலகநாடுகளின் வளர்ச்சிமாதிரி (growth model):
காடு, நிலம், நீர் இவற்றை அழிப்பதன்மூலம் நாம் நமது வாழ்வின் ஆதாரங்களை அழித்துக் கொண்டிருக்கிறோம். முன்னேற்றம், வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்க்கையே காணாமற் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி முறையில் (growth model) இயற்கைமீதான வன்முறை பின்னிப்பிணைந்துள்ளது.
ஐரோப்பாவில் உதித்த இந்த அறிவியல் புரட்சி, இயற்கையைச் சுரண்டுவதற்கான ஒரு உபயோகப்பொருளாக மட்டுமே பார்க்கிறது. அதனால் இயற்கையின் சீர்குலைப்புக்கும் சுரண்டுதலுக்கும் எதிரான தார்மீகக் கட்டுப்பாடுகள் உடைத்தெறியப் பட்டுவிட்டன.
பொருளாதாரத்துறை அடிப்படைத் தேவைகளின் பூர்த்தி, வளங்களின் நிர்வாகம் என்ற அடிப்படையில் பழங்காலத்தில் இருந்தது. தொழிற்புரட்சியும், அதற்குப் பின்வந்த வணிகப் பெருக்கமும் இலாபத்தை அதிகரிக்கக்கூடிய பொருள் உற்பத்திக்கான ஒரு துறையாக அதை மாற்றிவிட்டன. தொழில்மயப்படுத்தல் இயற்கை வளங்கள்மீது அளவற்ற தாகத்தை ஏற்படுத்தி விட்டது. நவீன அறிவியல் இத்தகைய சுரண்டலைச் சாத்தியமானதாக, ஏற்புடையதாக, விரும்பத்தக்கதாக ஆக்கிவிட்டது. மேற்கத்தியச்சார்பில் உருவான இத்தகைய அறிவியல்-பொருளாதாரக் கொள்கை மூன்றாம் உலகநாடுகள் போன்ற பிற கலாச்சாரங்கள் மீதும் திணிக்கப்பட்டுவிட்டது. ஐரோப்பிய, அமெரிக்க முன்னேற்றத்தின் (?)வடிவமே அனைவர்க்கும் பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டு விட்டது.
காலனிய அதிகாரம் உச்சகட்டத்திலிருந்த காலத்தில் அதிகார வளர்ச்சி, தொழில்மயம் ஆகியவை ஏற்பட்டபோது அவற்றை நிறைவுசெய்யும் நாடுகளாகக் காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருந்த நாடுகள் பயன்பட்டன. அறிஞர் ரோசா லக்சம்பர்க் குறிப்பிடுவதுபோல, மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய தொழில் வளர்ச்சி, அடிமைப்பட்டிருந்த நாடுகளின் நிலையான ஆக்கிரமிப்பையும், இயற்கைப் பொருளாதாரத்தின் அழிவையும் இன்றியமையாதது ஆக்கிவிட்டது.
மரங்களும் காடுகளும்-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு:
இதற்கு ஒரு சான்றாக, இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் தொடங்கியபோது எப்படி இயற்கைச் சீர்குலைவு ஏற்பட்டது என்பதை மட்டும் காண்போம்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் முதன்முதலில் ஆக்கிரமித்தது காடுகளைத் தான். காடுகள் இயற்கையில் வகிக்கும் பாத்திரம், நாட்டுநலனில் அது வகிக்கும் பங்கு பற்றி அவர்களுக்குத் துளியும் அக்கறையில்லை. காடுகள் மிகுதியாக இருந்தபோது ஆங்கில ஆதிக்கம் தன் தொழில்மயமாக்கத்திற்கு வேண்டிய தேவையை எளிதில் பெற்றது. அப்படியே எல்லையற்றுத் தொடரும் இந்தச் சுரண்டல் என்று அவர்கள் நம்பியதாகத் தெரிகிறது.
பல இடங்களில் சாலைகள் அமைக்கவும் இரயில்பாதைகள் அமைக்கவும் வேளாண்மைக்கும் காடுகள் இடைஞ்சல் என்று கருதி அழிக்கப்பட்டன. தேக்கு மரங்களுக்கு இராணுவத்தில் பயன்பாடு மிகுதி என்பதால் கிழக்கிந்தியக் கம்பெனி தேக்குமரங்களை ஒட்டுமொத்தமாக அழித்தது.
1807ஆம் ஆண்டுச் சட்டத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட கேப்டன் வாட்சன் என்னும் அதிகாரி தேக்குமரங்களைப் பத்தாயிரக் கணக்கில் கொன்று குவித்தான். ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்காலம் காடுகள் வீணாக்கப்பட்ட பிறகுதான் 1865இல் இந்தியாவில் முதல் வனச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தினால் காடுகளின் “அறிவியல் பூர்வமான நிர்வாகம்”தொடங்கியது. அதாவது மக்களின் உரிமை இழப்பும் காடுகளின் வீழ்ச்சியும் சட்டபூர்வமாகத் தொடங்கியது.
பணமதிப்புமிக்க மரங்கள் மட்டுமே அரசின் கவனத்தை ஈர்த்தன. காட்டின் பல்வேறு சமுதாயங்களுக்கும் (மரங்கள்,விலங்குகள், பூச்சிகள், நீர்நிலைகள், சுருக்கமாகச் சொன்னால் காட்டின் biodiversity என இன்று வழங்கப்படுகின்ற யாவுக்கும்) உள்ள உறவு, நீர், மண் போன்றவற்றிற்கிடையிலுள்ள சிக்கலான சங்கிலித்தொடர்புகள் போன்ற யாவும் புறக்கணிக்கப்பட்டன. இதனால் இந்தியநாடு சுதந்திரம் அடைவதற்குள் அதன் சுற்றுச்சூழல், காடுகள் அமைப்பு சரிசெய்ய முடியாதவாறு அழிந்தது. பழங்குடி மக்களையும் இது நேரடியாகத் தாக்கியது.
தொழில்துறைக் கண்ணோட்டத்தின்படி, வணிகமதிப்பில்லாத தாவரஇனங்கள் களைகள்தான். ஆனால் உண்மையில் இந்தக் “களைகள்”தான் இயற்கையின் நீர் மற்றும் பிற சத்துச் சட்டகங்களின் ஆதாரங்களாக விளங்குபவை. 1878இலும் 1927 இலும் வனச்சட்டங்கள் புகுத்தப்பட்டதை அடுத்து இந்தியாவெங்கும் அநேக சத்தியாக்கிரகங்கள் நடைபெற்றன.
புதிதாகச் சுதந்திரம் பெற்றநாடுகளில் இந்தவகை வளர்ச்சி புதிய காலனிகளைத் தோற்றுவித்தது. வளர்ச்சி என்பது காலனியச் செயல்பாட்டின் தொடர்ச்சி ஆயிற்று. சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில், வளர்ச்சிச் செயல் முறைகளை நீடிப்பதன் மூலமும் அவற்றைப் பரவலாக்குவதன் மூலமும் நாடுகளின் பொருளாதாரநிலை உயரும் என்ற எண்ணம் நேரு போன்ற தலைவர்களுக்கு மேலோங்கியிருந்தது.
ஆனால் ஒருசில பத்தாண்டுகளிலேயே உண்மையான பிரச்சினையே “வளர்ச்சி”தான் என்பது புரியத்தொடங்கியது. பொருளாதார வளர்ச்சி என்பது, எந்த ஏழைமக்களுக்கு வளர்ச்சி மிகத்தேவையோ அவர்களிடமிருந்தே வளங்களை அபகரிக்கும் புதியகாலனிய முறை ஆயிற்று. அதனால் உள்நாட்டு மேட்டுக்குடியினர் நலன், தேசிய நலன், தேசிய மொத்த உற்பத்தி (Gross National Product) போன்றவற்றின் பெயரால் நாட்டின் சுரண்டல் செய்யப்படலாயிற்று. இதனைச் சிறப்பாகச் செய்துமுடிக்க அதிகாரத்தில் உள்ளோர்க்கு மிகவலுவான, தொழில்நுட்பங்கள் கைகொடுத்தன. இதனால் ஏழைகள் இன்னும் ஏழைகளாயினர். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆயினர். தொழிலற்ற விவசாயிகள் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அல்லது கொத்தடிமைகளாக மாறி அவதிக்குள்ளாயினர்.
புதிய வளர்ச்சிமாதிரி என்பது என்ன?:
நவீன அறிவியலின், தொழில் வளர்ச்சியின், வணிக வளர்ச்சியின் கண்ணோட்டப்படி, சுத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் ஓர் ஆறு பயனற்றது. அதை “வளர்ச்சி” யடையச் செய்யவேண்டும்.
வளர்ச்சியடையச் செய்வது என்பதற்கு ஓர் உதாரணம், அணைகட்டி அதன் நீர்வளத்தைப் பயன்படுத்துவது. அணைகட்டி, மின்சாரம் எடுக்கலாம். அது முன்னேற்றம். ஆனால் அங்கு வாழும் மக்கள் இடம்பெயர்ந்து செத்தால் பரவாயில்லை. அதன் அருகிலுள்ள தொழிற்சாலையின் கழிவுப் பொருட்கள் அதில் கலந்து, அதை “முன்னேற்றினால்” தான் ஆறு பயனுள்ளதாக மாறும்.
இவ்வாறே, இயற்கையான காடுகளும் வியாபாரநோக்கில் ஓரினப்பயிர்களாக மாற்றப்படும்வரை பயனற்றவை.
இப்படி ஆதிக்கத்தின் புதியவடிவங்களோடு நவீனமயமாக்கல் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டது. நீர், உணவு, தீவனம், எரிபொருள் இவற்றின் பற்றாக்குறையோடு அதிகரிக்கிறது. சூழலியல் பேரழிவு அதனுடன் சேர்ந்து உலகத்தின் தெற்குநாடுகளில் பெரும் வறுமையை உருவாக்கியுள்ளது.
தேசியப் பொருளாதாரம்:
தேசிய மொத்த உற்பத்தி (GNP-ஜிஎன்பி) உயர்ந்தால் நாட்டின் செல்வச் செழிப்பு அதற்கேற்றாற்போல் உயர்கிறது என்று பழைய பொருளாதார வல்லுநர்கள் கருதினார்கள். இன்று மரபான பொருளாதார வல்லுநர்களுக்குக்கூட அந்தக் கோட்பாடு பயனற்றுவிட்டது என்பது தெரியும். முன்னேற்றத்தின் அளவுகோல் என்ற முறையில் நாணயப் பொருளாதார உற்பத்திப் பொருட்கள், சேவை ஆகியவற்றை மட்டுமே அது கணக்கில் கொள்கிறது. இவை பெரும்பாலான மக்களுக்குப் பயன்படுவதில்லை. பணமும் அதிகாரமும் எங்கு குவிந்துள்ளதோ அங்கேயே இவை போய்ச் சேர்கின்றன.
தேசிய மொத்த உற்பத்தி, சூழலின் பேரழிவால் ஏற்படும் புதிய சுமைகள், அதனால் ஏற்படும் செலவுகள், மக்களின் வாழ்க்கைநிலை வீழ்ச்சி போன்றவற்றைக் கணக்கில் கொள்வதே இல்லை.
“கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச் சிரியாரோ?” என்று பாரதியார் பாடினார். அறிவியல் வணிக தொழில் முன்னேற்றங்கள் அதைத்தான் செய்கின்றன. அதிக வளங்களையும் சக்திகளையும் பயன்படுத்தும் தீவிர உற்பத்திச் செயல்முறைகள், தொடர்ந்து அதிக வளங்களைச் சுரண்டுவதை உறுதிசெய்கின்றன. இத்தகைய வள அழிப்புகள் அடிப்படையான சூழல் செயல்முறைகளைப் பாதித்து, சக்திகளை மீண்டும் புதுப்பிக்க இயலாதவாறு ஆக்கிவிடுகின்றன.
புதுப்பிக்க இயலாமை (entropy):
உதாரணமாக, ஒரு காடு, தன் நிலை சீராக இருக்கும்வரை பல்வேறு வளங்களைக் குறைவில்லாமல் அளித்துவரும் தன்மையுடையது. ஆனால் தொழில் ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் காடுகள் மீண்டும் புத்துயிர்ப்பு பெறக்கூடிய சக்தியையும் மீறி, மரங்கள் கட்டுப்பாடின்றி வெட்டிவீழ்த்தப்படுகின்றன. காடுகள் மீண்டும் புதுப்பிக்க இயலாதவாறு மாறிவிடுகின்றன.
சிலசமயங்களில் ஒரு குறிப்பிட்ட வளத்தின் சுரண்டல், அதனோடு தொடர்புடைய வேறு இயற்கை வளங்களுக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனாலும் இயற்கையின் புத்துயிர்ப்புத் தன்மைக்கு அபாயம் ஏற்படுகிறது. உதாரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மரங்கள் ஏராளமாக வெட்டப்படுதல், காட்டின் சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடு, ஆற்றுநீரின் வளத்தையும் பாதிக்கும். அதிக வளங்களை-அதிக மூலப்பொருட்களைப் பயன்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள், சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடு, நீர், நிலம், காற்று ஆகியவற்றையும் மாசுபடுத்துகின்றன.
ஒரு சிறிய கணக்கு:
உணவு வேளாண்மைக் கழகம் நாளொன்றிற்கு ஒருவருக்கு 3600 கலோரி உணவு தேவை,என்று சொல்லுகிறது. உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒரு வாரத்திற்கு 40 மணிநேரம் (5x8=40) உழைப்புச்சக்தியை அளிக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். மரம், புதைபடிவ எரிபொருள், நீர் மின்சக்தி, பிற எரிபொருள்சக்தி, அணுசக்தி ஆகியவற்றிலிருந்து மனிதனின் உழைப்பால் விடுவிக்கப்படும் உலகளாவிய சக்தி ஒரு நாளுக்கு தற்போது எட்டுலட்சம் கோடி வாட் ஆகும். இது உலகத்தின் உணவுத்தேவையைப்போல் இருபது மடங்கு ஆகும். ஆக இருபது மடங்கு மூலவளம் இன்று வீணாக்கப்படுகிறது.
உணவுத்தேவையேயன்றிப் பிற எரிபொருள்களும் தேவைகளும் இதே 3600 கலோரி அளவுக்கு ஒருமனிதனுக்கு தேவைப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும், பத்துமடங்கு மூலவளம் வீணாக்கப்படுகிறது என்றுதான் பொருள்.
ஆனால் இங்குப் போட்ட கணக்கின்படி எல்லா மக்களுக்கும் கலோரி அளவு சராசரியாகக் கிடைப்பதில்லை. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற ஆதிக்க நாடுகளிலுள்ளவர்கள் ஒருநாளுக்கு ஒருலட்சம் கலோரிக்கு மேலும் வீணாக்கு கிறார்கள். மூன்றாம் உலக நாடுகளிலுள்ள எத்தனையோ ஏழைபாழைகள் 300 கலோரிக்கும் வழியின்றி எலும்புக்கூடுகளாக வாழ்கிறார்கள்.
இப்படிச் சக்தியை வீணாக்குவதற்காகத்தான் நாம் இயற்கையைத் தேவையின்றி அழித்துக்கொண்டிருக்கிறோம். இதைத்தான் வளர்ச்சி என்கிறோம்.
வளர்ச்சி நோக்கும் வறுமை நோக்கும்:
இன்றைய நவீன பொருளாதாரம் இன்னொரு விதத்திலும் தவறானது. இக்கோட்பாட்டின்படி, வறுமை இருவகைப்படுகிறது.
1. இருக்கும் ஆற்றல் போதாது – ஆற்றல் கிடைக்கவில்லை என்பவர் வறுமையில் வாடுபவர்கள்.
2. இருப்பதைப் பயன்படுத்தாமல் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு கலாச்சார ரீதியாகப் “போதுமென்ற மனமே பொன்செய்வது” என்றிருப்போரும் வறுமையில் வாடுபவர்கள் தான்.
இரண்டாவது வகை மனிதர்கள் வறியவர்கள் அல்ல. ஆனால் வளர்ச்சிக் கொள்கையாளர்கள் இவர்களையும் வறியவர்கள் என்கிறார்கள். காரணம், இவர்கள் சுயகட்டுப்பாட்டுடன் தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்ட போதிலும் சந்தைமூலம் விநியோகிக்கப்படும் வணிகப்பொருட்களை நுகராமல், சந்தைப் பொருளாதாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான்.
உதாரணமாக கொக்கோகோலா குடிக்காமல் தங்கள் தோட்டத்தின் இளநீர் அல்லது பதநீரைக் குடிப்பவர்கள் வறியவர்கள். சிமெண்ட் கட்டடங்களில் வசிக்காமல் மண், மூங்கில் கட்டடங்களில் வசிப்பவர்கள் வறியவர்கள். செயற்கை இழைத்துணி அணியாமல் பருத்தியாடை அணிபவர்கள் வறியவர்கள்.
உண்மையான பொருளாதார ரீதியில் சரியான வாழ்க்கை வாழ்பவர்கள் இவர்கள்தான். ஆனால் போதுமென்று கருதுகின்ற இந்த நல்வாழ்க்கையை வறுமையென்று கருதுகின்ற இன்றைய “வளர்ச்சிப் போக்கு” இவர்களை யெல்லாம் வறியவர்கள் பட்டியலில் சேர்த்து வேறுவகையான “வளர்ச்சியை” அடைந்தாக வேண்டுமென நிர்ப்பந்தப்படுத்துகிறது. இந்த நிர்ப்பந்தம்தான் வறுமையை உண்மையில் உருவாக்குகிறது.
வளர்ச்சிநோக்கு உருவாக்கும் வறுமை:
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு, திருப்தியுடன் வாழ்ந்து வந்த மக்களிடமிருந்து நில-நீர் வளங்களைப் பணப்பயிரின் அதிகரிப்பும், பதப்படுத்தப்பட்ட உணவின் பெருக்கமும் கைப்பற்றின.
இயற்கையின் சீற்றங்களைவிட, தொழில்மயமாக்கம், உலகமயமாக்கம், தனியார் மயமாக்கல் போன்றவைதான் அதிகமான மக்களின் பட்டினிக்கும் பசிக்கும் காரணமாகியுள்ளன. ஏற்றுமதிரீதியான உயர் தொழில்நுட்பப் பயிர்கள் ஏன் பட்டினியை விளைவிக்கின்றன என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. கடன், அருகிவரும் நிலம், நீர், தொழில் நுட்பம், ஆகியவை ஏற்றுமதிக்காக ஒதுக்கப்படுகின்றன. பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிக்கமறுத்து ஏழைகளைச் சுரண்டும் நிறுவனங்களின் கையில் இலாபம் குவிகிறது. இதற்கு நல்லதோர் உதாரணம் எதியோப்பியா.
எதியோப்பியாவில் வறுமையை (கலாச்சார நோக்கில், அங்கிருந்த “திருப்தியான எளிய வாழ்க்கையை”) ஒழிக்கத்தோன்றிய “வளர்ச்சி”தான் அங்கு உண்மையான வறுமையை உருவாக்கியது.
எதியோப்பியாவிலுள்ள ஆவாஷ் பள்ளத்தாக்கின் வளமான பாரம்பரியப் புல்வெளிகளை வர்த்தக வேளாண்மைக்கென அந்நிய நிறுவனங்களின் உதவியுடன் மாற்றியமைத்தபோது அங்கு வசித்த ஆப்பிரிக்கப் பழங்குடியினர் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு உள்ளாயினர். அதனால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அவர்களது கால்நடைகளும் பட்டினிகிடக்க நேர்ந்தது.
முதலில், காலனியாதிக்க நோக்கில் இயற்கைவளங்கள் வீணடிக்கப்பட்டாலும் தொழில் உழைப்பு முழுவதுமாகப் பயன்படுத்தப்பட்டது. இயற்கைச்செல்வம் வீணடிக்கப்பட்டாலும் உழைப்பின் வளத்தை அதிகரிப்பது புத்திசாலித்தனமாகத் தோன்றியது. ஆனால் இந்தக் காலனியாதிக்க நோக்கு, அனைத்து நாடுகளுக்கும், அனைத்துச் சூழல்களுக்கும் ஏற்றது என்று நினைப்பதுதான் அநியாயம்.
உதாரணமாக, அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்குக் கிடைக்கும் நிலையிலும்,தொழிலாளர்கள் எண்ணிக்கையைக் குறைக்கத் தொழில்நுட்பங்கள் ஏன் புதிதுபுதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றன?ஏற்கெனவே வளங்கள் குறைவாக உள்ள பகுதிகளில் அதிகமான வளங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு விட்டன. பாரம்பரியச் சமுதாயங்கள், தங்களுக்கு அவசியமற்ற தேவைகளைப் புறக்கணிக்கின்றன என்ற வகையில் “முன்னேறாமல்” இருந்தாலும், அடிப்படைத் தேவைகளைப் பொறுத்தமட்டில் அவைதான் உண்மையான வளமிக்க சமூகங்கள்.
சான்றாக, அமேசானிலுள்ள பூர்விகக் குடிமக்களின் வாழ்க்கைத்தேவைகளை நிறைவேற்ற அங்குள்ள காடுகளே போதுமானவை. அவர்களுக்குப் பாலியெஸ்டர் உடைகளும் கொக்கோகோலாக்களும் தேவையில்லை. அங்குப் புகுத்தப்பட்ட “வளர்ச்சி”தான் வறுமையை உண்டாக்கியது.
இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்திலுள்ள கோண்டு பழங்குடிகளுக்கும், மலேசியாவின் ஷாரவாக் வாசிகளுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டது.
கருத்துப்புகுத்தல்:
உள்ளூர்த் தொழில்நுட்பங்கள் பிற்போக்கானவை, உற்பத்தித்திறன் அற்றவை என்று முத்திரை குத்தப்படுகின்றன. உலகளாவிய சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் சந்தைப்பொருளாதாரத்தின் மூலவளத்தேவைகள், கடும் அரிப்பை ஏற்படுத்துகின்றன என்பதைப் பலரும் அறிவதில்லை. அதனால் வளர்ந்துவரும் நாடுகளின் பத்திரிகைகளும்,திரைப்படங்களும், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் இப்படிப்பட்ட வளர்ச்சியை ஆதரிக்கின்றன,நியாயப்படுத்துகின்றன. சென்செக்ஸ் எண் உயர்வதில் நாடே உயர்ந்துவிட்டது என்று பெருமைப்படும் வித்தகர்கள் இவர்கள்தான்.
சூழலியல் ரீதியான அழிவை ஏற்படுத்தும் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் சமத்துவமின்மை பெருகுகின்றது. இத்தகைய சமத்துவமின்மையை முதலாளித்துவம் நியாயப்படுத்துகிறது. போட்டியில் ஈடுபடாதவர்களும் தோல்வியடைபவர்களும் வாழத் தகுதியற்றவர்கள் என்னும் டார்வின் தத்துவத்தை அது பயன்படுத்துகிறது. இந்தக் கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் “வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?”, “அதிகச் செல்வம் சேர்ப்பது எப்படி?” “அள்ள அள்ளப் பணம்” போன்ற நூல்கள்தான் இப்போது எழுதப்படுகின்றன, அவற்றை வணிக நிறுவனங்கள் வெளியிடுகின்றன. வணிகப் பத்திரிகைகளிலும் இத்தகைய கட்டுரைகள்தான் வெளியிடப்படுகின்றன (அதிக “வரவேற்பையும்” பெறுகின்றன) என்பதும் இன்று நோக்கத்தக்கது.