ஆபுத்திரன் – காப்பியக் கதைகள்

(ஆபுத்திரன் கதை மணிமேகலைக் காப்பியத்தின் ஒரு பகுதியாகும். தமிழின் முதல்சீர்திருத்தக் காப்பியம் மணிமேகலை. ஆனால் இக்காலத்தில் மணிமேகலைக் காப்பியத்தைப் படிப்பவர்கள் மிகக் குறைவு. ஆகவே வாசகர்கள் பயன்பெறும் வகையில் அதன் முக்கியப் பகுதியாகிய ஆபுத்திரன் கதையை இங்கே அளிக்கிறோம். கதையின் பயன்பாட்டை வாசகர்களே உணர்ந்துகொள்ளலாம்.)

siragu-kaappiyakadhaigal1

பண்டைக்காலத்தில் காசியில் அபஞ்சிகன் என்ற பிராமணன் ஒருவன் இருந்தான். இளமையிலேயே வேத வேதாங்கங்களைக் கற்று ஆரண உபாத்தியாயன் என்ற பெயரையும் பெற்றான். பிரமச்சரியம் கழிந்து சாலி என்ற பெண்ணை மணந்து வாழலானான். ஆனால் அவள் கணவனுக்கு விசுவாசமாக நடக்கவில்லை. வேறு யாரோ ஒருவனிடம் கர்ப்பமுற்றாள். ஒழுக்கம் தவறிய அவள் தானாகவே அதற்காக வருந்திக் கன்னியாகுமரிக்குச் சென்று புனிதநீராடித் தன் பாவத்தைக் களைந்து கொள்ளலாம் என்று நினைத்தாள். பல தேசங்களையும இடங்களையும் கடந்து பாண்டிநாட்டை அடைந்தாள். கொற்கையின் அருகில் ஓர் ஆயர்பாடியில் கர்ப்பம் முற்றிய அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். தாய்க்கு இயல்பாகப் பிள்ளைகள் மீதுள்ள பாசம் சிறிதும் அற்ற அவள், குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுக் குமரித்துறையை நாடிச் சென்றாள்.

அக்குழந்தை பசிமிகுதியினால் அழுதபோது அத்தோட்டத்தில் புல்மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு, தானாகவே வந்து அக்குழந்தைக்குப் பால் ஊட்டியது. இவ்வாறே ஏழு நாட்கள் சென்றன.

அப்போது வயனங்கோடு என்னும் ஊரிலிருந்து பூதி என்ற பிராமணன் ஒருவன் தன் மனைவியோடு அவ்வழியாக வந்துகொண்டிருந்தான். அவனுக்குப் பிள்ளையில்லை. குழந்தையை அச்சோலையில் கண்ட அவன், இந்த அழகிய குழந்தை “பசுவின் மகனல்ல, என் மகனே” என்று சொல்லி அக மகிழ்ந்து, கடவுளே தனக்கு அந்தக் குழந்தையை அளித்ததாக நினைத்து, அதை வீட்டுக்குக் கொண்டுசென்றான். பசு வளர்த்ததால் பசுவின் மகன் என்று பொருள்பட ஆ-புத்திரன் என்று அவனுக்குப் பெயரிட்டு வளர்த்தான். இங்ஙனம் ஐந்தாண்டுகள் சென்றன.

மகனுக்கு உபநயனம் செய்யும் முன்னரே, அவனுக்குக் கலைகளையும் நாடகங்களையும் காவியங்களையும் கற்றுத்தந்தான் அப்பார்ப்பனன். ஆபுத்திரன் அவற்றை நன்கு கற்றதோடு மிக நல்ல பண்புடையவனாகவும் வளர்ந்துவந்தான். அச்சமயத்தில் அந்த ஊரிலிருந்த ஒரு பிராமணன் தனது யாகத்தில் பலியிடுவதற்காக ஒரு பசுவைக் கொண்டுவந்து தன் வீட்டில் கட்டி வைத்திருந்தான். அப்பசுவோ கதறியவாறு இருந்தது. இதைப் பார்த்த ஆபுத்திரன், அந்தப் பசுவை மீட்க வேண்டும் என்று நினைத்தான். தங்களை அந்தணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கு ‘அம்-தண்மை’, குளிர்ந்த கருணையோ அன்போ சற்றும் இல்லையே என்று வருந்தினான். இரவில் அதைக் கட்டவிழ்த்து, எங்கேனும் அதைக் கொண்டு விடும் நோக்கத்தில், கையில் பிடித்துக்கொண்டு, பருக்கைக் கற்கள் நிரம்பிய ஒரு காட்டு வழியில் ஊருக்கு வெளியில் சிறிது தொலைவு சென்றவாறு நடந்துகொண்டிருந்தான்.

யாகப் பசுவைக் காணாத பிராமணர்கள் துணுக்குற்று, நாலாபுறத்திலும் தேடலானார்கள். பிறகு அந்தப் பையனைப் பசுவோடு கையும் களவுமாகப் பிடித்தார்கள். “புலையனே! இந்தப் பசுவை எதற்காகக் களவாடிக் கொண்டு வந்தாய்?” என்று பலவாறு இழித்துப்பேசி, அவனைக் கோல்களால் அடிக்கலானார்கள். அதைக் கண்ட பசு, ஆபுத்திரனை அடித்து வருத்திய யாக உபாத்தியாயனைத் தன் கொம்புகளால் குத்தி, குடலைச் சரித்துவிட்டு, காட்டுக்குள் ஓடிப்போய்விட்டது.

இதைப்பார்த்த பிற பிராமணர்கள் அவனை மேலும் அடிக்கலானார்கள். “அடிக்காதீர்கள், நான் சொல்லும் செய்திகளைக் கேளுங்கள்” என்று கூறி, வேத உபநிஷதங்களில் இருந்தே பசுவைக் கொல்லல் ஆகாது என்பதற்கான காரணங்களை எடுத்துக்காட்டி, கடைசியாக, “பசுக்களைக் கொன்று ஆயிரம் வேள்விகள் செய்து அடையும் பயனைக் கொல்லாமை ஆகிய அறத்தைக் கடைப்பிடித்தால் அடையலாமே, இப்படிச் செய்தால் உங்களுக்கு அந்தணர் என்ற பெயரும் ஏற்கும்” என்றான்.

ஆனால்  பிராமணர்கள், அவன் சொன்ன விஷயங்களைச் சற்றும் மனத்தில் ஏற்றுக்கொள்ளாமல், “நீ வேதங்களைக் கற்றிருந்தும் வேத யாகங்களை நிந்தனை செய்யும் பேதையாக இருக்கிறாய். உன்னைப் பசுமகன் என்று சொல்வதற்குப் பொருத்தமாக நடந்துகொண்டாய்” என்று அவனை இழித்துக் கூறினார்கள்.

அதற்கு ஆபுத்திரன், “பசுவின் மகன் அசல முனிவன், மானின் மகன் சிருங்கி முனிவன், நரியின் மகன் கேசகம்பள முனிவன் இவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் குலத்து முன்னோர்கள், முனிசிரேஷ்டர்கள் என்று சிறப்பித்துக் கூறவில்லையா? பசுவின் வயிற்றில் பிறந்தால் என்ன இழிவு? கள்ளியின் வயிற்றிலும் அகில் பிறக்கும் என்ற மூதுரையை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டான். அச்சமயத்தில் அங்குள்ள பிராமணர்களில் ஒருவன், “எனக்கு இவன் வரலாறு தெரியும், நான் குமரி நீராட முன்னொருநாள் சென்றிருந்தபோது, அங்கிருந்த சாலி என்னும் பார்ப்பனியைப் பார்த்தேன். அவள் தன் குழந்தையைக் கைவிட்டுவந்த கதையைக் கூறினாள். அவள் பெற்ற மகனே இவன், சந்தேகமில்லை. சொல்லி என்ன பயன் என்று சொல்லாதிருந்தேன். கற்புத்தவறிய பெண் பெற்ற இவன், அசுத்தன். ஆகவே இவனைத் தீண்டாமல் ஒதுங்கிச் செல்லுங்கள்” என்றான்.

அதைக் கேட்ட ஆபுத்திரன், “முனிவர்களில் சிறந்தவர்களான அகத்தியரும், வசிட்டரும் தேவ கணிகை(வேசி)யான திலோத்தமையின் புத்திரர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவ்வாறிருக்கும்போது என் தாய் சாலிமீது பழி சொல்லத் துணிந்தீர்களே” என்று சிரித்தான். ஆனால் இந்தப் பார்ப்பனர்கள் சொல் கேட்டு அவனை வளர்த்த பூதியும் அவனைக் கைவிட்டுத் துரத்திவிட்டான். தன்னை ஆதரிப்பார் ஒருவரும் இல்லாததால், பிச்சை எடுத்தேனும் இருப்போம் என்று கருதி ஆபுத்திரன் பிச்சை எடுக்க வீடுகள் தோறும் செல்ல, அவன் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர்ப் பார்ப்பனர்கள், “இவன் பசுதிருடிய கள்ளன்” என்று அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் கற்களை எடுத்துப் போட்டார்கள். அதனால் மனம் வெதும்பி, அலைந்து திரிந்து, கடைசியாக மதுரையை அடைந்தான் ஆபுத்திரன். அங்கு சிந்தாதேவி (சரஸ்வதி) கோயிலின் எதிரில் இருந்த அம்பலப் பீடிகை(பொது மன்றம்)யை அடைந்து அங்கேயே தங்கி வாழலானான். கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி, வீடுகள் தோறும் சென்று, பிச்சையெடுத்து, அங்கிருந்த குருடர்கள், முடவர்கள், அகதிகள், நோயாளிகள் எல்லோரையும் “வருக வருக” என்று அழைத்து, அவர்களுக்கு இட்டு, தானும் சிறிது உண்டு வாழ்ந்து வந்தான். இரவில் அந்தப் பிச்சைப்பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கினான்.

இவ்வாறு சில நாட்கள் சென்றன. ஒரு நாள் இரவு. நல்ல மழை பெய்து கொண்டிருந்த நேரம். அப்போது அங்கே சிலர் வந்து, “எங்களுக்கு மிகுந்த பசியாக இருக்கிறது” என்று வருந்திப் பேசியவாறு இருந்தார்கள். ஆபுத்திரன்,  அவர்களுடைய பசியை ஆற்றும் ஆற்றல் தனக்கு இல்லையே என்று வருந்தியவாறு இருந்தான். அச்சமயத்தில் எதிரில் கோயில் கொண்டிருந்த சிந்தாதேவி, அவனுக்கு எழுந்தருளி, தன் கையிலிருந்த பாத்திரம் ஒன்றை அவனுக்குக் கொடுத்து, “வருந்தாதே! இது அட்சய (குறையாத) பாத்திரம். நாடெல்லாம் வறுமை அடைந்து வருந்தினாலும் இப்பாத்திரத்தில் உணவு என்றும் குறையாது. கொடுக்கக் கொடுக்க வளர்ந்துகொண்டே வரும்” என்று அவனிடம் கூறினாள். அவன் அவளைப் பலவாறு போற்றித் துதித்து, பணிவுடன் அந்தப் பாத்திரத்திலிருந்து பக்கத்தில் பசியால் வருந்திக் கொண்டிருந்த அவர்களுக்கு முதலில் சோறிட்டு, பிறகு அன்று முதல் ஏழைகள் பாழைகள் அனைவருக்கும் தன் பாத்திரத்திலிருந்து உணவளித்து வருவான் ஆனான். உண்பதற்காக மனிதர் பலரும் அவனை எக்காலமும் சூழ்ந்தவாறே இருக்க, பறவைகள், விலங்குகளும்கூட அவனை அன்புடன் சூழ்ந்திருந்தன.

அக்காலத்தில் பாண்டிய நாட்டில் மழையின்றிப் பன்னிரண்டாண்டுகள் பஞ்சம் ஏற்பட்டது. அப்போதும் தன்னிடமிருந்த அக்ஷய பாத்திரத்தினால் தன்னால் முடிந்த அளவுக்கு எல்லையற்ற பேருக்கு ஆபுத்திரன் உணவளித்து வந்தான். இவனுக்கு எல்லையற்ற புண்ணியம் இவ்வாறு வந்து சேரவே, அதனை இந்திரன் தனது பாண்டு(வெள்ளைக்) கம்பள நடுக்கத்தினால் அறிந்து கொண்டான். மக்களுக்கு அதிகப் புண்ணியம் சேர்ந்தால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று கருதி நயத்தாலோ பயத்தாலோ அவர்களைத் தடுப்பது இந்திரனின் வழக்கம். ஆகவே இவனுக்கு வரமளித்தேனும் (சாம பேத தான தண்டம் என்னும் நான்கில் தான உபாயம்) இவனைத் தடுக்கலாம் என்ற எண்ணத்துடன் இவன் முன் ஒரு முதியவனாக இந்திரன் தோன்றினான். “நான் இந்திரன், உன் புண்ணியத்தின் பலனை நீ அடைய வேண்டும், உனக்கு என்ன வரம்  வேண்டும், கேள்!” என்று கூறினான். அதைக் கேட்ட ஆபுத்திரன், தன் விலா எலும்பும் ஒடியும்படி நகைத்தான். “கொடுப்பவரும் கொள்பவர்களும் இல்லாததால் கொடைச் செயலினால் வரும் இன்பமும் தவமும் இல்லாத தேவர் நாட்டுத் தலைவனே! வாடிய முகத்தால் வருந்தி வந்தவர்களின் அரும்பசியைத் தீர்த்து, அவர்களுடைய இனிய முகத்தை நான் காணும்படி செய்கின்ற, ஈத்துவக்கும் இன்பம் அளிக்கின்ற, இந்த தெய்வப் பாத்திரம் ஒன்றே எனக்குப் போதுமானது. நான் அறவிலை வணிகன் அல்ல. (தர்மத்தை விற்பவன் அல்ல). வேறொன்றும் எனக்கு வேண்டாம்” என்று இந்திரனிடம் கூறினான்.

தன்னை எதிர்த்துப் பேசிய ஆபுத்திரன்மீது இந்திரன் கோபம் கொண்டான். மனிதர்கள் புண்ணியம் செய்தால் அது அதிகரித்து அதனால் தன் பதவிக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து உடனுக்குடன் அவற்றின் பலனைக் கொடுத்துவிடுவது அவன் வழக்கம். அதனால் பயந்த இந்திரன், ‘இவன் கையிலுள்ள பாத்திரமே உபயோகமற்றுப் போகும்படி செய்கிறேன்’ என்று கறுவியவாறு சென்றான். நாடு முழுவதும் வளத்தால் செழிக்குமாறு மேகங்களை ஏவி மழைபொழியச் செய்தான். அதனால் மாநிலம் முழுவதும் செழிப்பதாயிற்று. பசித்துவந்தவர்கள் தங்கிய அம்பலத்தில் இப்போது உணவு உண்ணும் ஓசை இல்லாமல் போய், தூர்த்தர்கள், வேழம்பர், பிரயாணிகள் முதலியோர் கூடி சூதாடி ஆரவாரிக்கின்ற இடமாகப் போய்விட்டது.

அதனால் ஆபுத்திரன் ஊர் ஊராகச் சென்று “உணவு வேண்டுவோர் யாரேனும் உண்டோ?” என்று கேட்டவாறே செல்லலானான். செல்வத்தினால் இறுமாப்பு உற்ற மக்கள் யாவரும், “இவன் என்ன பைத்தியமா!” என்று கேலிசெய்தனர். கடைசியாக அலைந்துதிரிந்து கொற்கைத் துறைமுகத்துக்கே வந்து சேர்ந்தான். அங்கே, மரக்கலத்திலிருந்து இறங்கி வந்த பயணிகள் சிலர், “சாவக நாட்டில் பெரும் பஞ்சம் நிலவுகிறது, மக்கள் மிக வறுமையுற்று, உயிர்கள் பசியால் வாடி வருந்துகின்றன; அங்கு நீ சென்று உதவி செய்வாயாக” என்று கூறினர். ஆபுத்திரனும் சாவகம் செல்லும் மரக்கலம் ஒன்றில் ஏறினான். அது புறப்பட்டுச் சென்றது. சில காலங்கள் சென்றதும் காற்றினால் கடல் கொந்தளிக்க, அந்த மரக்கலம் பாய் இறக்கி, மணிபல்லவம் என்னும் தீவின் அருகில் ஒரு நாள் தங்கியது.

அத்தீவின் காட்சிகளைக் கண்டுவர எண்ணி ஆபுத்திரன் கப்பலில் இருந்து இறங்கினான். அவன் திரும்பவும் ஏறிவிட்டான் என்று கருதி, கப்பல் தலைவன், இரவில் அக்கப்பலைச் செலுத்திக்கொண்டு போய்விட்டான். ‘நான் நினைத்தவாறு சாவகம் செல்ல முடியவில்லையே என்ன செய்வது’ என்று ஆபுத்திரன் வருந்தினான். ‘ஒரு தெய்வப் பாத்திரத்தைப் பெறுகின்ற அளவுக்குப் புண்ணியத்தை முற்பிறவியில் செய்த நான், மிகுதியாகத் தீவினையையும் செய்தேன் போலும். அதனால்தான் இந்தத் தீவில் தனியாகத் துன்பப்படலானேன்’ என்று நினைத்தான். ‘தனியாக இந்தத் தீவில் இருந்து பயன் என்ன’ என்று துயரம் மிகுந்த அவன், தன் கையிலிருந்த பாத்திரத்தைத் தொழுது, “வருடத்திற்கு ஒரு முறை நீ வெளிப்படுவாயாக” என்று கூறி, பக்கத்திலிருந்த கோமுகி என்னும் பொய்கையில் அதை விட்டான். அப்பாத்திரம் அமிழ்ந்து போயிற்று. அங்கேயே அவன் உண்ணாநோன்பிருந்து உயிர்விடலாம் என்று கருதி விரதம் இருக்கலானான். அச்சமயத்தில் அங்கே வந்த அறவண அடிகள் என்னும் பௌத்தத் துறவியிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டுத், தனக்குப் பாலூட்டிய பசுவை நினைத்தவாறே தனது உயிரை விட்டான்.

இதற்கிடையில், முன்னர் குழந்தை ஆபுத்திரனுக்கு ஏழு நாட்கள் வரை பால் ஊட்டிய பசு, அந்தப் புண்ணியத்தால் பொன்மயமான கொம்புகளையும் குளம்புகளையும் பெற்று மறுபிறவி எடுத்தது. சாவக நாட்டில் தவள மலையில் தவம் செய்துகொண்டிருந்த மண்முக முனிவனிடம் சென்று, கன்று போடும் முன்பே பால் சுரந்து எல்லா உயிர்களுக்கும் ஊட்டியவாறு இருந்தது. அதைப் பார்த்த முக்காலமும் உணர்ந்த அம்முனிவன், இப்பசுவின் வயிற்றில், ஒரு விசேஷ புருஷன் தோன்றுவான். ஆண்பெண் சம்பந்தமின்றி, ஒரு பொன்முட்டை வாயிலாக அவன் பிறப்பான் என்று யோசித்தான்.

அவன் நினைத்ததற்குத் தக்கவாறு ஆபுத்திரன் மறுபிறவி எடுத்து சாவக நாட்டில் இந்தப் பசுவின் வயிற்றில் ஒரு பொன் முட்டையில் வந்து தோன்றினான். அவன் உதித்த காலம், புத்தர் அவதரித்த வைகாசி மாதத்து புத்தபூர்ணிமையாகும். இவன் உதித்த காலத்திலும் பல நல் நிமித்தங்கள் தோன்றின. இந்நன்னிமித்தங்களைக் கண்ட முனிவர்கள் “ஓர் உத்தம புருஷன் இவ்வுலகில் அவதரித்திருக்க வேண்டுமே, அவன் யார் தெரியவில்லையே” என்று தங்களுக்குள் ஆலோசித்தவாறு இருந்தனர்.

இக்குழந்தையைப் பற்றி அந்நாட்டரசன் பூமிசந்திரன் என்பவன் கேள்விப் பட்டான். அவனுக்குக் குழந்தை இல்லை. அவன் மண்முக முனிவரைச் சந்தித்து, அவரிடம் இக்குழந்தையை வாங்கிக் கொண்டுபோய், புண்ணிய ராஜன் என்று இதற்குப் பெயரிட்டு வளர்த்தான். புண்ணிய ராஜனும் வளர்ந்து தன் வளர்ப்புத் தந்தைக்குப் பின் நாட்டை ஆளலானான்.

   (தொடரும்)

இலக்கியம்