மது அருந்துதல் பற்றி

அர்த்தசாஸ்திரம், கௌடில்யரால் எழுதப்பட்டது. ஆனாலும் இன்றுள்ள வடிவத்தை அது சில நுற்றாண்டுகள் பின்னால் எய்தியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. ஏறத்தாழ இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்று வைத்துக்கொள்ளலாம். மது அருந்துதல் பற்றி அது சில விஷயங்களைச் சொல்கிறது. எளிதில் இன்று புலப்படாத மதுவகைகள் சிலவற்றைத் தயாரிப்பது பற்றிய சுருக்கமான தயாரிப்பு முறைகளையும் தருகிறது.

அக்காலத்தில் மதுபான வகைகள் பல இருந்தன. அவற்றுள் சில  வருமாறு: மேதகம் – நெல்லால் வடித்த மது; பிரசன்னா – மாவால் சமைத்து வாசனைச் சரக்கிட்டுச் சுவையூட்டப்பட்ட ஒருவகைக் கள்; (பிரசன்னா என்று பெயர் வைப்போர் கவனிக்கவும்!) ஆசவம் – இது விளாம்பழச் சாற்றில் செய்த மது; மைரேயம் – இது சர்க்கரை, ஆடு தின்னாப்பாளை (மேஷஸ்ருங்கம்)ச் செடியின் பட்டை, மிளகு ஆகியவற்றைக் கொண்டு வடித்த ஒரு பானம்; சஹகார சுரா – மாம்பழ மது.

மதுபானம் அரசாங்க உற்பத்திசாலைகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவற்றின் உற்பத்தியை ஒழுங்குற நடத்துவதற்கும் குடி வகைகளின் விற்பனையையும் நுகர்வையும் கட்டுப்படுத்துவதற்கும் மதுபான மேற்பார்வையாளர் என்னும் அதிகாரி நியமிக்கப்படவேண்டும்.

தனிப்பட்டோரின் தயாரிப்பு நிலையங்களையும் மதுக்கடைகளையும் மிகவும் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். மதுக்கடைகள் வைத்திருப்போர் தங்கள் நிறுவனங்களைப் போதிய இருக்கைகள் போன்றவற்றுடன் வசதியாக வைத்திருக்க வேண்டும். அவர்கள், மது அருந்த வருவோர் அளவு கடந்து குடிப்பதைத் தடுக்கவேண்டும். மது அருந்துவோர் வெறி மயக்கத்தில் ஏதேனும் நஷ்டத்துக்கு ஆளானால், கடைக்காரர்கள் அவர்களுக்கு நஷ்ட ஈடு தருவதோடு மட்டுமன்றி, அபராதமும் கட்ட வேண்டும்.

மதுக்கடைகள் வைத்திருப்போர் தங்கள் கடைகளை ஒன்றுக்கொன்று அண்மையில் கட்டவிடலாகாது. இதனால் மக்கள் ‘மதுக்கடைகளில் ஊர்தல்’ பெரும்பாலும் தடுக்கப்படும். மதுக்கடைக்கு வெளியில் மக்கள் மது அருந்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். (அக்காலத்தில் பள்ளிக்கூடங்கள்,  கோயில்கள் போன்றவற்றின் அருகில் மதுக்கடைகள் கட்டப்படவில்லை போலும்!) மதுக்கடைகளில் குற்றவாளிகள் பெரும்பாலும் கூடுவதுண்டு, எனவே அவற்றை நன்கு கண்காணித்து வருமாறு அரசன் தன்னுடைய ஒற்றர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.

அர்த்த சாஸ்திரம் கூறும் கருத்துகளை நோக்கும்போது, மது அருந்துதல் தீமை என்பதையும்,  அதனை முற்றிலும் விலக்குதல் இயலாது என்பதையும், ஆனால் அதைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதையும் ஒப்புக்கொள்கிறது எனலாம். (ஆதாரம்-A.L. Basham, The Wonder that was India, 2nd edition, p.217.)

தினம்-ஒரு-செய்தி