தமிழ் நூலகம் நாசமானது

தமிழ் ‘இந்து’ நாளிதழில் நேற்று படித்த செய்தி ஒன்று மிகுந்த மன வேதனையை உண்டாக்கியது. பெங்களூரில் மிகுதியாகத் தமிழர் வாழும் பகுதியான அல்சூரில் இருந்த நூலகம் ஒன்றைக் கன்னட வெறியர்கள் தாக்கி நூல்களை எல்லாம் எடுத்துத் தெருவில் எறிந்து அதை நாசப் படுத்தியுள்ளனர். அங்கிருந்த போலீசுக்காரர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறியர்கள் செயலை வேடிக்கை பார்த்தனர்.
ஒரு பெரும்பான்மைக் கலாச்சாரம், சிறுபான்மையினரின் அடையாளங்களை அழிப்பதில் நூலகங்களை நாசப்படுத்துவது மிக முக்கியமான ஒரு செயல். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்ட போதும் இதனைக் கண்டோம்.

நாம் இந்தியாவில் வாழவில்லை, சிலர் தமிழ்நாட்டில் வாழ்கிறோம், சிலர் கன்னடநாட்டில், சிலர் ஆந்திராவில், சிலர் மகாராஷ்டிராவில்…இப்படித்தான். இங்கு மொழிகளும் மாநிலங்களும்தான் இருக்கின்றனவே ஒழிய இந்தியா என்ற கற்பனை நாடு இல்லை. இம்மாதிரி இனவெறியர்தான் நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு, பிரிவினைவாதத்தைத் தூண்டுபவர்கள்.

இந்தச் செய்தியைத் தேர்தல் சூட்டில் ஈடுபட்ட தமிழ் ஊடகங்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆசியாவிலேயே இரண்டாவது சிறப்புப் பெற்ற அண்ணா நூலகத்தையே மூடிய, அறியாமையைப் போற்றுகின்ற ஆளும் கட்சியினர் இதைக் கேள்விகேட்க மாட்டார்கள் என்பது கன்னடர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நூல்கள் தெருவில் எறிந்து நாசப்படுத்தப்பட்டதைப் பார்த்த அங்கிருந்த தமிழர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதாராம். நாமும் அதைத்தான் செய்ய வேண்டி இருக்கிறது. தமிழன் என்ற இன உணர்வு மேம்படாமல் அவனுக்கு வாழ்க்கை இல்லை என்பதைத் தமிழர்களாக இருப்பவர்கள் உணர்ந்தால் போதுமானது.

தினம்-ஒரு-செய்தி