நம் நாடு!

1. மக்கள் பட்டினியாக வாழ்ந்து செத்துப் போவார்கள், ஒருவேளை உணவுக்குக் கொத்தடிமைகளாக இருப்பார்கள். ஆனால் ராணுவத்திற்கும் போலீசுக்கும் அரசாங்க வருமானத்தின் மிகப்பெரும்பகுதி செலவிடப்படும்.
2. அரிசி கிலோ 50 ரூபாய் விற்கும், பருப்பு கிலோ 200 ரூபாய் விற்கும், ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கும்.
3. பீட்சாக் கடைக்கு ஆர்டர்செய்தால் உடனே வீடு தேடிவரும். நேரில் போய்க் கூப்பிட்டாலும், ஆம்புலன்சோ, போலீசோ வரவே வராது.
4. காலணிகள் ஏசி ஷோரூமில் விற்கும், காய்கறிகள் கீரைகளோ நடைபாதையில், புழுதியில் விற்கப்படும்.
5. பெரிய மால்கள், கட்டடங்கள் ஓர் ஆண்டில் கட்டி முடிக்கப்படும், ஆனால் சிறிய பாலங்கள் பழுதுபார்க்கப்பட ஆறேழு ஆண்டுகளாவது ஆகும்.
6. எலுமிச்சைப் பழ ஜூஸ் கேட்டால், செயற்கை வேதிப் பொருளோடுதான் கிடைக்கும். ஆனால் பாத்திரம் கழுவும் சோப்பு, ‘ரியல் லெமன் சேர்ந்தது’ என்று விற்கப்படும்.
7. திரைப்படம் பார்க்க நிறுவனங்கள் லீவு விடும், ஆனால் உடல் நலிவு, காய்ச்சல் என்றாலும் தற்செயல் விடுப்பு விண்ணப்பம் முன்னாலேயே(!) தரவேண்டும், பலசமயம் கேட்டாலும் கிடைக்காது.
8. கார் வாங்கக் கடன் 0%இலும் கிடைக்கும், ஆனால் கல்விக்கடன் 12%இல், கெடுபிடியில்தான் கிடைக்கும்.
9. எந்த ஒரு தர்மஸ்தாபனத்துக்கும், ஏழைகளுக்கும் உதவாத ஒரு பணக்காரன், ஒரு கிரிக்கெட் டீமையே வாங்கிவிட முடியும்.
10. கோடிகோடியாக ஏமாற்றி தேடப்படும் குற்றவாளிகளை ரிசர்வ் வங்கிக்கே கவர்னராகப் போடச் சொல்லுவார்கள்.


காரம் சாப்பிடுங்கள்

பெரும்பாலும் காரத்தைத் தவிர்த்துவிடுங்கள் என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டு உணவில் இடத்துக்கு இடம் காரத்தின் அளவு வேறுபடுகிறது. ஆந்திராக்காரர்கள் காரம் சாப்பிடுவதில் பெயர்பெற்றவர்கள். கன்னட உணவில் இனிப்புச் சேர்ப்பது மிகுதி. மலையாளத்தில் காரத்தை மிதமாக்கிவிடும் தேங்காயை மிகுதியாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். (என்றாலும் நம் விஷயத்தில் என்னவோ யாவருமே சம அளவில் காரமாகத்தான் இருக்கிறார்கள்).

மிளகாய் என்பது ஒரு காய் அல்ல, பழம் (பலவிதைகள் கொண்ட ‘பெரி’ வகைக் கனி). பாரதியார் எழுதிய ‘மிளகாய்ப்பழச் சாமியார்’ கதை உங்கள் நினைவுக்கு வரலாம். அவருடைய தினசரி உணவு மிளகாய்தான்!
காரம் சாப்பிடுங்கள் என்று சொல்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இதோ சில.
1. காரம் சாப்பிடுவது, உடல் முழுதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆகவே நீங்கள் அழகாகவும் இளமையாகவும் இருக்க உதவுகிறது.
2. மிளகாயின் முக்கியப் பொருள் கேப்சாய்சின் என்பது. இது வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடலில் மிகுதியாக இருக்கும் கலோரிகளை எரிக்கும். ஆகவே எடையைக் குறைக்க உதவுகிறது.
3. மிளகில் லு£டீன், சியோசாந்தின் போன்ற பொருள்கள் இருக்கின்றன. இவை விழித் திரையின் ஆரோக்கியத்திற்கு நல்லவை, கண்பிறை வளராமல் தடுப்பவை என்கிறார்கள்.
4. காரமான உணவு, புற்றுநோயைத் தடுக்கிறது, இதயஇரத்தக்குழாய்களை வலுப்படுத்துகிறது, மூச்சுக்குழல் தொடர்பான நோய்களின் வாய்ப்பைக் குறைக்கிறது.
5. காரம், செரோடானின் போன்ற ஹார்மோன்களைச் சுரக்க வைக்கிறது. இதனால் சோர்வு (டிப்ரஷன்), மனத்தளர்ச்சி (ஆங்சைட்டி) போன்றவை குறையும். மன ஆசுவாசம் அதிகரிக்கும்.
6. வலியைக் குறைக்கப் பயன்படுகிறது. மிளகாயிலுள்ள கேப்சாய்சின், வலிநிவாரணிகளில் கூடச் சேர்க்கப்படுகிறதாம்.
7. ஓர் ஆட்டத்தைத் தொடங்குவதற்குமுன் ஒன்றாகச்சேர்ந்து கார உணவை உண்பது குழுஇணக்கத்தை மேம்படுத்த உதவுகிறது என்று ஓர் அறிக்கை சொல்கிறது.
எல்லாம் சரிதான், காரமாக இருக்கிறதே, கண்ணில் நீர்வருகிறதே என்கிறீர்களா? தண்ணீர் குடிப்பது காரத்தைத் தணிப்பதில்லை. மிளகாயிலுள்ள கேப்சாய்சின் நீரில் கரைவதில்லை. ஆனால் பாலில் கரையும். கொஞ்சம் பால் அருந்துங்கள்! காரம் மாயமாகிவிடும்.


இதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்

இன்று வரை நான் மொழி பெயர்த்த நூல்களின் பட்டியல்
நண்பர்களின் பார்வைக்கு

07-07-2016
1. குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்
2. மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. அறிக்கை
3. சிறார் உரிமை பற்றிய ஐ.நா. அறிக்கை
இவை மூன்று நூல்களும் தொடக்கத்தில் (1980களில்) தன்னார்வாக் குழுக்களின் பயன்பாட்டிற்கெனச் செய்யப்பட்டவை.

1. விஷன்ஸ் கையேடு-மனித உரிமைகளும் குடியுரிமையும்
2. விஷன்ஸ் கையேடு-உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள்
இவையும் தன்னார்வக் குழுக்களுக்கெனச் செய்யப்பட்டவையே. இவை இப்போது அடையாளம் பதிப்பகத்தில் கிடைக்கும்.

1. உலகமயமாக்கல்
2. நீட்சே
3. இறையியல்
4. பயங்கரவாதம்
5. சமூகவியல்
6. இசை
இவை யாவும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்த மிகச்சுருக்கமான அறிமுகம் என்ற வகையைச் சேர்ந்தவை. அடையாளம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டவை.)

1. சிறைப்பட்ட கற்பனை (வரவர ராவ்)
2. பொறுப்புமிக்க மனிதர்கள் (மனு ஜோசப்)
3. நள்ளிரவின் குழந்தைகள் (சல்மான் ருஷ்தீயின் மிட்நைட்ஸ் சில்ட்ரன்)
4. காந்தியைக் கொன்றவர்கள் (The men who killed Gandhiநூலின் தமிழாக்கம்)
5. இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு (வெண்டி டோனிகர் எழுதியது)
இவை யாவும் எதிர் பதிப்பகத்தின் வெளியீட்டிற்கெனச் செய்யப்பட்டவை.

1. நொறுங்கிய குடியரசு (அருந்ததி ராயின் The Broken Republic)
2. ஊரடங்கு இரவு (பஷரத் பீர்)
இவையிரண்டும் காலச்சுவடு பதிப்பகத்திற்கெனச் செய்யப்பட்டவை.

1. டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள் (பெண்கள் மருத்துவ நூல்)
2. பேற்றுச்செவிலியர் கையேடு
இவை இரண்டும் முக்கியமான மருத்துவ நூல்கள். டாக்டர் இல்லாத இடத்தில் என்று முதன்முதலாக க்ரியா வெளியிட்ட வரிசையில் வருபவை. ஹெஸ்பீரியன் ஃபவுண்டேஷனின் நூல்கள்.

பிற மருத்துவ நூல்கள்
1. இணை மருத்துவம், மாற்றுமருத்துவம், உங்கள் உடல்நலம்
2. தலைமுடி இழப்பு-மருத்துவம்
3. மூல வியாதி
4. ஐம்பது உடல்நலக் குறிப்புகள்
5. இயற்கை ஞானம்
6. மரபணு மாற்றிய உணவுகள்

பிற நூல்கள்
1. இரண்டாம் சரபோஜி ஆட்சியின்கீழ் தஞ்சாவூர்
2. கீழையியல் தத்துவம்
3. பின்நவீனத்துவம்
4. புவி வெப்பமயமாதல்
5. நிலத்தோற்றமும் கவிதையும் (தனிநாயகம் அடிகளுடைய Landscape and Poetry)
6. மவுலானா அபுல்கலாம் ஆசாத்
7. சமூகவியல் (கிஸ்பரட் சே. ச)
8. கடவுள் சந்தை (மீரா நந்தா) அடையாளம் பதிப்பகத்தின் அச்சிடலில்
இவை தவிர மைசூரு CIIL நிறுவனத்திற்காக பேராசிரியர் லாஸ்கியின் Grammar of Politics நூலை மொழிபெயர்க்க இருக்கிறேன்
மொத்தம் 34 நூல்கள். தத்துவம், வரலாறு முதல் இலக்கியம், மருத்துவம் வரை பல்வேறு வகைகளிலும் இவை உள்ளன என்பதைப் பெருமையுடன் கூறமுடியும்.

செய்திக் குறிப்புகள்

1. ஒருவாரப் பயணமாக சீனாவுக்குச் சென்று திரும்பி வந்தேன். அது பற்றிப் பின்னர் விரிவாக இணையதளத்தில் எழுதுவேன்.

2. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்திற்காக அருட்தந்தை கிஸ்பெர்ட் எழுதிய ‘சமூகவியலின் அடிப்படைகள்’ என்னும் நூலை நான் மொழிபெயர்த் திருந்தேன். அதை மே 25ஆம் நாளன்று மத்திய அரசின் மனிதவளத் துறையின் அமைச்சர் மாண்புமிகு ஸ்மிருதி ஜுபின் ஈரானி ஒரு நிகழ்வின்போது வெளியிட்டார்.

3. வெண்டி டோனிகர் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பான எனது நூல் – ‘இந்துக்கள்: ஒரு மாற்று வரலாறு’ என்பது எதிர் வெளியீட்டின் சிறப்பு வெளியீடாகச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 01-06-16 அன்று வெளியிடப்பட இருக்கிறது.

4. அதே நாளன்று நான் எழுதிய ‘தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்’ என்ற நூல் காவ்யா வெளியீடாக வெளியிடப்பட இருக்கிறது.

 

file:///D:/Documents%20and%20Settings/Poornachandran/My%20Documents/My%20Pictures/GP_Hindus.JPG


அண்ணா நகர் ஆய்வு வட்டம்

அண்ணா நகர் ஆய்வு வட்டம் அழைக்கிறது

நாள்: 08-05-2016 நேரம்: முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 12.30வரை

ஆய்வுப்பொருள்: பேராசிரியர் க. பூரணச்சந்திரன் எழுதிய கதையியல் என்ற நூல். பேராசிரியர் பூரணச்சந்திரனும் விவாதத்தில் பங்கேற்கிறார்.

இடம்: நந்தனம் அரசினர் கலைக்கல்லு£ரித் தமிழ்ப் பேராசிரியர் பசுபதி அவர்களின் வீடு – திருமகள் இல்லம்.
இடமும் வரும் வழியும் பிற தகவல்களும் அறியத் தொடர்புக்கு:
90259 07555.


தமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்?

1916-2016 தமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்?

நடராசன் அவர்களால் கீசக வதம் திரைப்படம் 1916ல் எடுக்கப் பட்டது, தமிழ்ப் புனைவுத் திரைப்படத்தின் தொடக்கம் அது, எனவே இந்த வருடம் தமிழ் சினிமாவின் நூற்றாண்டாகிறது,

கொண்டாடுவது என்பது சில புதிய விதைகளை விதைப்பது என்றே கருதுகிறோம்…

தமிழ்த் திரைப்படத் துறையில்
விதைக்க விரும்பும் மாற்றங்கள்……………

1.தமிழக அமைச்சரவையில் கலை, இலக்கியம் , நாடகம் ,சினிமாவெக்கென்று தனி அமைச்சரவை , பண்பாட்டு அமைச்சர்
என்று ஒருவர் உருவாக்கப் பட வேண்டும்,

2.தமிழக அரசின் கீழ் சினிமாவெக்கென்று சுயேட்சையாக, தன்னாட்சி அதிகாரத்துடன் சினிமா அகாடெமி சினிமா விற்பன்னர்களால் உருவாக்கப்பட வேண்டும்,திரைப்படத் துறைக்கும், அரசுக்கும் இது இணைப்புப் பாலமாக விளங்க வேண்டும்.

3. அரசு விருதுகள், திரைப்பட விழாக்கள், சிறு திரைப்படங்களுக்கான மானியங்கள் இந்த சினிமா அகாடெமியின் கீழ் வர வேண்டும்.குறும்படங்கள், ஆவணப்படங்கள் , விளம்பரப்படங்கெளுக்கு விருதுகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

4.அரசு திரைப்பட விருதுகள் அந்தந்த வருடத்திலேயே வழங்கப் பட வேண்டும், நடுவர்கள் சினிமா அகாடெமியின் திரைப்பட வல்லுநர்களாக இருக்க வேண்டும்.

5. ஒவ்வொரு வருடமும் அரசால் திரைப்பட விழாக்கள் வெவ்வேறு நகரங்களில் நடத்தப்பட வேண்டும்.

6.அனைத்து மாவட்டங்களிலும் பெரிய ஊர்களில் சிறிய திரையரங்குகள் கட்டப்பட வேண்டும்,,,சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடுவதற்கும், திரைப்படச் சங்கச் செயல்பாடுகளுக்கும் இவை பயன் படுத்தப் படவேண்டும்.

7.சிறிய பட்ஜெட் படங்களுக்கான மானியம்,, வெறும் பணத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், , புதிய வடிவம், மாற்றுச் சினிமாக்களுக்கு ஒதுக்கப் பட வேண்டும்.

8. தமிழகத்தில் முதலில் திரைப்படம் திரையிடப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹால் சினிமா அருங்காட்சியமாக மாற்றப் பட வேண்டும்,,

9. அகாடெமியின் கீழ் அரசு திரைப்பட ஆவணக் காப்பகம் உருவாக்கப் பட வேண்டும்,”சாமிக் கண்ணு வின்செண்ட்”ஆவணக் காப்பகத்தின் செயல் பாடுகள் சில…விக்டோரியா பப்ளிக் ஹால் சினிமா அருங்காட்சியகத்தில் உருவாக்கப் பட வேண்டியவை,,,,

அ. ஒரு கலை வடிவமாகவும் அதே நேரத்தில் ஒரு தொழிற்துறையாகவும்இருக்கும் சலனத் திரைப்படத்தின் வரலாறு மற்றும் வளர் நிலைகளைத்தொகுக்கும்.
ஆ. தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய முழுமையான புள்ளிவிவரங்களைவரிசைப்படியும் வகைப்பாட்டின் அடிப்படையிலும் ஆவணப்படுத்தும்.
இ. தமிழ்த் திரைப்பட வரலாற்றின் தடயங்களைத் தேடிக் கண்டடைந்துஒழுங்கமைத்து,பாதுகாக்கும்.
ஈ. தமிழ்த் திரைப்படங்கள் மீதான ஆய்வுகளை ஒழுங்கமைத்து,ஊக்கப்படுத்தும் மற்றும் வழிகாட்டும்.
உ. தமிழ்த் திரைப்படங்களின்,இயக்குநர்கள், மற்றும் தொழிற்நுட்பக்கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒலி-ஒளி ஆவணங்களாக உருவாக்கி பாதுகாக்கும்.
ஊ. புகைப்படங்கள் திரைப்படத்தின் நெகட்டிவ்கள்,பிரிண்டுகள்,பாட்டுப்புத்தகங்கள், படத்தின் முழுக் கதைக்கான திரைக்கதை எழுத்துக்கள்,அழைப்பிதழ்கள்,சுவரொட்டிகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு டிஜிட்டல்முறையில்தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.
எ. சினிமா நூலகம் அமைத்து தமிழ் மற்றும் உலக திரைப்படம் தொடர்பான நூல்கள் அனைத்தும் சேர்க்கப்படும்.
ஏ. ஆராய்ச்சி மாணவர்கள் விரும்பும் படத்தைப் பார்ப்பதற்கு சிறியகாட்சிக்கூடம் கொண்டிருக்கும்.
ஒ.மக்கள் விரும்பும் படங்களைப் பார்ப்பதற்கு சிறிய திரைப்படங்கள் உருவாக்கப் படவேண்டும்.

10.பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்ற தனிப்பட்ட ஆவண சேகரிப்பாளர்களின் சேகரிப்புகள் அவர்கள் பெயரிலேயே காட்சிப் படுத்தப் பட வேண்டும்,

11. திரைப்படக் கலை ,குறிப்பாக உயர் நிலைப்பள்ளிகளிலேயே கட்டாயப் பாடத் திட்டமாக கொண்டு வரப் பட வேண்டும்,

இவை யாவும் செயல் படுத்தப் படும் போதே உண்மையான நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் தொடங்குகிறது எனலாம்.


RR Srinivasan,

OHO PRODUCTIONS
106/2 First floor,Kanaga durga complex,
Gangai Amman koil street,
Vadapalani,
Chennai – 600 026.Tamilnadu India.

PH-094440-65336 , 044-24839293

Mail: rr18srinivasan@yahoo.com
www.poovulagu.org
http://www.facebook.com/r.r.srinivasan


நல்ல செய்தி

அல்சூரில் தாக்கப்பட்ட திருவள்ளுவர் நூலகத்தைத் தமிழ் வளர்ச்சிக்கழகம் செம்மைப்படுத்த உதவப்போவதாக அறிந்து தமிழர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
நூலகம் என்பது அறிவுக் களஞ்சியம். அறிவில் என் அறிவு உன் அறிவு என்றெல்லாம் கிடையாது. எந்த மொழியின் சிறந்த நூல்கள் அழிந்தாலும் அது உலகத்திற்குப் பொதுவான பேரிழப்புதான். இந்த நூற்றாண்டில் நாம் ஆங்கிலத்திலிருந்து, பிரெஞ்சிலிருந்து, ஜெர்மனிலிருநது, சமஸ்கிருதத்திலிருந்து, இந்தியிலிருந்து, ஏன் கன்னனடம் மலையாளம் போன்ற மொழிகளிலிருந்தும் மொழிபெயர்ப்பு வாயிலாக எவ்வளவு அறிவைப் பெற்றுள்ளோம்! இன்றும் தமிழ் தலித் இலக்கியத்திற்கு மூலம் மராட்டியும் கன்னடமும் என்று பெருமைப்படுகிறோம். ஆனால் அங்கிருக்கும் சிலர் இப்படியிருக்கிறார்கள் என்பது வருத்தம் தருகிறது.


தமிழ் நூலகம் நாசமானது

தமிழ் ‘இந்து’ நாளிதழில் நேற்று படித்த செய்தி ஒன்று மிகுந்த மன வேதனையை உண்டாக்கியது. பெங்களூரில் மிகுதியாகத் தமிழர் வாழும் பகுதியான அல்சூரில் இருந்த நூலகம் ஒன்றைக் கன்னட வெறியர்கள் தாக்கி நூல்களை எல்லாம் எடுத்துத் தெருவில் எறிந்து அதை நாசப் படுத்தியுள்ளனர். அங்கிருந்த போலீசுக்காரர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறியர்கள் செயலை வேடிக்கை பார்த்தனர்.
ஒரு பெரும்பான்மைக் கலாச்சாரம், சிறுபான்மையினரின் அடையாளங்களை அழிப்பதில் நூலகங்களை நாசப்படுத்துவது மிக முக்கியமான ஒரு செயல். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்ட போதும் இதனைக் கண்டோம்.

நாம் இந்தியாவில் வாழவில்லை, சிலர் தமிழ்நாட்டில் வாழ்கிறோம், சிலர் கன்னடநாட்டில், சிலர் ஆந்திராவில், சிலர் மகாராஷ்டிராவில்…இப்படித்தான். இங்கு மொழிகளும் மாநிலங்களும்தான் இருக்கின்றனவே ஒழிய இந்தியா என்ற கற்பனை நாடு இல்லை. இம்மாதிரி இனவெறியர்தான் நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு, பிரிவினைவாதத்தைத் தூண்டுபவர்கள்.

இந்தச் செய்தியைத் தேர்தல் சூட்டில் ஈடுபட்ட தமிழ் ஊடகங்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆசியாவிலேயே இரண்டாவது சிறப்புப் பெற்ற அண்ணா நூலகத்தையே மூடிய, அறியாமையைப் போற்றுகின்ற ஆளும் கட்சியினர் இதைக் கேள்விகேட்க மாட்டார்கள் என்பது கன்னடர்களுக்கு நன்றாகத் தெரியும்.

நூல்கள் தெருவில் எறிந்து நாசப்படுத்தப்பட்டதைப் பார்த்த அங்கிருந்த தமிழர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதாராம். நாமும் அதைத்தான் செய்ய வேண்டி இருக்கிறது. தமிழன் என்ற இன உணர்வு மேம்படாமல் அவனுக்கு வாழ்க்கை இல்லை என்பதைத் தமிழர்களாக இருப்பவர்கள் உணர்ந்தால் போதுமானது.


பரிசுகள், விருதுகள்

வாழ்த்துகள், அம்ஷன்!

திருச்சியில் எங்கள் சினி போரம், நாடகச் சங்கம், வாசகர் வட்டம் ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தவரும், டாகுமெண்டரி பட தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் பெருமை பெற்றவரும் ஒருத்தி என்ற கலைப்படத்தை இயக்கியவருமான நண்பர் திரு அம்ஷன் குமார் இப்போது தேசிய விருது பெற்றுள்ளார். அவர் இயக்கிய யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி என்ற படத்துக்காக இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. அவருக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்த்துகள், பாரதிதாசன்!

திருச்சியில் எனது மாணவரும், இப்போது கோவையில் அருளகம் என்னும் புகழ் பெற்ற உயிரினப் பாதுகாப்பு மையத்தை நடத்தி வருபவரும் ஆன திரு பாரதி தாசனுக்கு உலகத்தின் சிறந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பாளர்கள் 15 பேரில் ஒருவர் என்ற விருது கிடைத்துள்ளது. இவ் விருதைப் பெற அவர் விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அவர் மேலும் உயிரினப் பாதுகாப்புக்காக தொண்டு செய்யவும், இந்த விருதிற்காகவும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த இயக்கத்தில் ஒரு உறுப்பினன் என்ற முறையில் மன நிறைவு கொள்கிறேன்.

 


புதிய நூல் – தமிழ்ப் பொழில் ஆய்வு

புதிய நூல்-தமிழ்ப் பொழில் ஆய்வு

பழந்தமிழ் ஆய்வு மாணவர்க்குச் சமர்ப்பணம்

1980களில் தொடக்கத்தில் நான் ‘தமிழ்ப்பொழில்’ என்ற தமிழ் ஆய்விதழை என் முனைவர் பட்ட
ஆராய்ச்சிக்கென ஏற்றேன். அதைப் பற்றிய கட்டுரைகளையோ அந்த ஆய்வேட்டையோ நான் நூலாக
இதுவரை வெளியிடவில்லை. அவற்றை இப்போது வெளியிட முனைகிறேன்.

இதன் முதல் பகுதியான முன்னுரை இந்த என் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து மற்ற இயல்களும் ஒன்றின் பின் ஒன்றாக வெளியிடப் பெறும்.

இது நம் தமிழின் பழைய இலக்கிய இலக்கண ஆய்விதழ்களின் வரலாற்றையும் அவற்றின் பங்களிப்பையும் அக்காலத் தமிழ்ப் போராட்டங்களையும் அறிய விழைபவருக்கு மிகவும் பயன்படும். சென்ற நூற்றாண்டின் தொடக்கப் பகுதியை ஆராய முனையும் ஆய்வாளர்களுக்கும் பயனுடையதாக இருக்கும்.

படிக்க விருப்பமுள்ளவர்கள் 1987ஆம் ஆண்டின் பதிவுகளில் சென்று
படிக்கலாம்.