திருப்பாவையும் திருவெம்பாவையும்

திருப்பாவையும் திருவெம்பாவையும்

தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய சிறப்பு அது கொண்டுள்ள பக்தி இலக்கியத் தொகுதி. தமிழ் பக்தியின் மொழி என்று அடை யாளம் காணப்பட்டுள்ளது. இப்பெயரை அது பெற முதன்மையான காரணம், நாயன்மார்களின் பாடல்களும் ஆழ்வார்களின் பாசுரங் களும். பக்தி இயக்கமே தமிழ்நாட்டில் உருவாகி வடக்குநோக்கிச் சென்ற ஒன்றுதான்.
பாகவத புராணத்தின் மகாத்மியப்பகுதியில் பக்தி, பெண்ணுருக் கொண்டு பேசுகிறாள்: “நான் திரவிடத்தில் (தமிழகத்தில்) பிறந் தேன். கருநாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் வளர்ந்தேன். கூர் ஜரத்தில் (குஜராத்தில்) மூப்படைந்தேன், இன்னலுக்காளேன். பிருந் தாவனத்தில் இழந்த இளமையை மீண்டும் எய்தினேன்” (பாகவத புராணம்,1,47-49). வடநாட்டினரும் பக்தி இயக்கம் தமிழகத்தி லே .பிறந்ததை ஒப்புக்கொண்டமைக்கு இக்கூற்றே சான்றாகும். பாகவதபுராணம் ஆழ்வார்களைப் பற்றிப் பேசும் நூல்.
கி.மு.நான்காம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசுக்கு வந்த கிரேக்கத் தூதுவர் மெகஸ்தனீஸ், வடநாட்டில் “ஹெராக்ளிடஸ் போன்றதொரு கடவுளின் வழிபாடு” இருந்ததாகக் குறிப்பிடுகிறார். இந்த ‘ஹெராக்ளிடஸ்’ கிருஷ்ணன்தான் என்று ழான் ஃபிலியோசா போன்றோர் கருதினாலும் வடநாட்டில் அக்காலத்தில் முருகன் வழிபாடு இருந்ததை இது குறிப்பிடுவதாகவே தோன்றுகிறது.
இன்றைய ‘ஹிந்து’ மதத்தின் இருபெரும்பிரிவுகள் சைவமும் வைணவமும். சைவத்தின் தலைமைக் கடவுளாகச் சிவனும் வைணவத்தின் தலைவனாகக் கிருஷ்ணனும் கருதப்படுகின்றனர். இக்கடவுளரின் வழிபாடும் தமிழகத்திலிருந்து வடக்கிற்குச் சென்ற ஒன்றுதான். சிவன் தென்னாட்டிற்கே உரிய தெய்வமாகக் கருதப் பட்டதைத் “தென்னாடுடைய சிவனே போற்றி” போன்ற பெரியோர் வாக்குகளும், வடக்கில் கிருஷ்ணன் கோயில்களே மிகப் பெரிதும் காணப்படும் நிலையும் விளக்கும். மேலும் சைவசித்தாந்தம் தென் னாட்டின் தனிப் பெரும் இறைத்தத்துவம் என்பதைப் பலரும் கூறியுள்ளனர்.
விஷ்ணுவின் பத்துஅவதாரங்களில் பூரண அவதாரங்கள் இரா மன் கிருஷ்ணன் ஆகிய இருவர் மட்டுமே. கிருஷ்ணன், தமிழக முல்லைநிலத் தெய்வம் மாயோனின் வடநாட்டு வடிவம். (மாயோன் என்றால் மாமைநிறம், கருநிறம் உடையவன் என்று பொருள். கிருஷ்ணன் என்பதன் பொருளும் அதுவே). கிருஷ்ண னின் சகோதரியாகப் பின்னர் சித்திரிக்கப்பட்ட சக்தி/காளி (காளி என்றாலும் ‘கருப்பி’தான்) தமிழகத்தின் பாலைநிலத்திற்குரிய கொற்றவை யின் மறுஆக்கம்.
கிருஷ்ண வழிபாட்டிற்கு ஓர் எல்லை திருப்பாவை என்றால், சிவ வழிபாட்டிற்கு எல்லை திருவெம்பாவை. இவையன்றி சமணத் திருப்பாவை என்ற ஒன்றும் கிடைத்துள்ளது. ஆனால் அதன் பாடல்களின் அமைப்பும், சொற்களின்/வாக்கியங்களின் அமைப்புகளும் அது மிகவும் பிற்பட்டநூல் எனக் காட்டுகின்றன. அதன் தற்காலமொழி போன்றதொரு மொழியைப் பார்க்கும்போது குறைந்தது கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு அளவிலே எழுதப் பட்டதாக இருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு. மேலும் மாணிக்கவாசகரின் தொடர்களையும் பாடலமைப்பையும் பெரும ளவு எடுத்தாண்டு அது சற்றும் தனித்தன்மையற்று மங்கி நிற்கிறது. இதன் ஆசிரியர் அவிரோதிநாதர் என்ற பெயருடையவர். இதிலும் திருவெம்பாவை போல இருபது பாக்களே உள்ளன. (திருப்பாவை முப்பது பாக்கள் கொண்டது.)
பாட்டின் எண்ணிக்கையில் தமிழின் முதன்மையான இரண்டு பாவைப் பாட்டுகளுக்கும் வேறுபாடிருப்பினும், ஒத்த தன்மைகள் சில இருப்பதை ஆய்வாளர்கள் பலரும் சுட்டியுள்ளனர். பாவை நோன்பு இயற்றல் இரண்டிற்கும் அடிப்படை. பாவை நோன்பி னைக் ‘காத்தியாயினி விரதம்’ என்று குறிப்பிடுகிறது, பாகவத புராணம். பிற்காலத்தில் ‘அம்பாவாடல்’ என்று இந்நோன்பு குறிப்பி டப்பட்டதற்கும் இதுவே காரணமாதல் வேண்டும், காத்தியாயினி விரதம் ஹேமந்த ருதுவின் முதல்நாளில் கொண்டாடப் படுவதா கவும் கூறுகிறது. இது மார்கழி மாத முதல் நாளுடன் ஒத்துச் செல்கிறது.
பெண்கள் விடியற்காலையில் எழுந்து பிறபெண்களையும் துயி லெழுப்புதல், அவர்களை நீராட அழைத்தல், அப்போது உலகியல் சார்ந்த நகைச்சுவை உரையாடலைக் கையாளுதல், மழை பொழியுமாறு வேண்டுதல், நல்ல கணவனை வேண்டுதல், தாம் வணங்கும் இறைவனின் பெருமைகளைக் கூறுதல் போன்ற கூறுகள் இரண்டு பாவைப்பாடல்களுக்கும் பொதுவானவை. அறிஞர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், சயாம் நாட்டிலும் (இன்றைய தாய்லாந்து) திரியெம்பாவை, திரிபாவை என்ற பெய ரில் இவை பாடப்படுவதையும், இவற்றின் தலைவனாக அரசன் கருதப்படுவதையும் குறித்துள்ளார்.
இரு பாவைப் பாடல்களுக்கும் நோக்கிலும் போக்கிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. ஆண்டாளின் திருப்பாவை ஒருகோடி என்றால், வாசகரின் திருவெம்பாவை எதிர்க்கோடி. மணிவாச கரின் திருவெம்பாவையில் பெண்கள் நீராடச் செல்கிறார்கள், சிலரைத் துயிலெழுப்புகிறார்கள், பிறகு யாவரும் சென்று நீராடு கிறார்கள், கணவனை வேண்டுகிறார்கள், மழையை வேண்டு கிறார்கள். இறுதியாக இறைவனைப் போற்றுவதுடன் திருவெம் பாவை முடிவடைகிறது.
திருவெம்பாவையில் தன்மைக்கூற்றும் கிடையாது. தன்னை ஈடுபடுத்திக்கொள்ளலும் கிடையாது. (தன்மை ஒருமையிலோ, பன்மையிலோ வரும் கூற்றுகளும், உண்மையில் படர்க்கைக் கூற்றுகளே. காரணம், அவை மூன்றாவது மனிதர் பேசும் அயற்கூற்று போலவே (நேர்க்கூற்றினை இன்னொருவர் எடுத்துக்கூறல் போலவே) தொனிக்கின்றன. (“நாம்சேர்ந்து சிவபெருமானைப் பாடுவோம்” என்று அப்பெண் கூறினாள்” என்பதுபோல. “என்று அப்பெண் கூறினாள்” என்பது கூற்றில் மறைந்திருக்கும்).
ஆனால் திருப்பாவையில் அப்படியில்லை. திருப்பாவையின் “நான்”, உண்மையான “நான்”. அதாவது ஒரு தன்னுணர்ச்சிக் கவிதையின் “நான்”. ஆண்டாள் பிருந்தாவனத்தில் தானும் ஒரு கோபிகையாக இருப்பதாகவே கருதுகிறாள். விழித்தெழுமாறும், நீராடுமாறும் அவள் கூப்பிடுவோர் வெறும் சக தோழிமாரல்லர். அவர்களும் யாவரும் கோபிகைக் கன்னியரே. (“வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைபடுத்த தயிர் அரவம் கேட்டிலை யோ”). எனவே உரையாடல்கள் சம்பிரதாயமான துயிலெழுப்பும் உரையாடல்களாக மட்டுமில்லாமல் உயிரோட்டம் பெறுகின்றன. மணிவாசகர் பாக்கள் மிகச் சிலவற்றில் மட்டும் ஒரு பெண் துயிலெழுப்புவதும், அதற்கு மற்றவள் எதிர்மொழியுரைப்பதும் காணப்படுகிறது. ஆண்டாள் பாக்களிலோ அவ்வுரையாடல் தொடர் கிறது. சான்றாக,
“எல்லே, இளங்கிளியே, இன்னம் உறங்குதியோ?”
“சில்லென்றழையேன்மின் நங்கைமீர், போதருகின்றேன்”.
“வல்லையுன் கட்டுரைகள். பண்டேயுன் வாயறிதும்”
“வல்லீர்கள் நீங்களே! நானேதானாயிடுக”
“ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை”
“எல்லாரும் போந்தாரோ?”
“போந்தார், போந்து எண்ணிக்கொள்”
இப்படித் தொடரும் உரையாடல் அக்காட்சியை ஒரு நாடகமாக்கி விடுகிறது. இந்த நாடகப் பண்பை மணிவாசகர் எம்பாவையில் காணஇயலாது.
மேலும் ஆண்டாளின் பாக்களில் கோபியர்கள் நந்தகோபனு டைய அரண்மனைக் காவலன், வாயில்காப்பான் போன்றோரை யும் விளித்துப் பேசுகின்றார்கள். பிறகு நந்தகோபனை, யசோதை யை எழுப்புகிறார்கள். பிறகு கண்ணனையும் பலதேவனையும் எழுப்புகிறார்கள். கண்ணன் எழுந்திராமற்போகவே (ஒரே பாட்டிற் குள்) நப்பின்னையை எழுப்புகிறார்கள். நப்பின்னையைக் கடிந்து கொள்ளும் பகுதிகள் சுவைமிக்கவை.
மணிவாசகர் பாக்களில் இறுதியில் வரும் போற்றி, திருப் பாவையில் இருபத்துநான்காம் பாட்டிலேயே வந்துவிடுகிறது. (“அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி…”). முப்பதாம் இறுதிப் பாடல், திருப்பாவைப் பாட்டின் பயன் கூறும் பாங்கில் அமை கிறது. இது மணிவாசகரின் எம்பாவையில் கிடையாது.
மணிவாசகரின் எம்பாவையில்,
ஒரு பெண் மற்றொரு பெண்ணை/பெண்களை முன்னிலைப் படுத்தும் முன்னிலைக்கூற்றுகள் 1-8, 10, 12-15, 17, 18, (எழுந்திரு எனல்-9, நீராடு எனல்-1, நாம் நீராடுவோம் எனல்-5. மொத்தம் 15 பாக்கள் இம்முறையில் அமைந்துள்ளன.)
இவற்றில் உரையாடல்களாக அமைந்தவை 3 பாக்கள் மட்டுமே. இறைவனை முன்னிலைப் படுத்தும் கூற்றுகள்-9, 11, 19, 20 (கணவனைக்கொடு-1, எங்களைக் கா-1, உன்பணி செய்ய அருள்-1, போற்றி-1).
மழையை முன்னிலைப்படுத்தும் கூற்று-1 (16 மட்டும்).

ஆண்டாளின் திருப்பாவையில்,
ஒரு பெண் மற்றொரு பெண்ணை/பெண்களை முன்னிலைப்படுத் தும் கூற்றுகள்-1, 3, 5 6-8, 10-15,
கோயில் காப்பான், வாயில்காப்பான்-16,
நந்தகோபன், யசோதை, கண்ணன், பலதேவன் நால்வரையும் விளித்தல்-17,
நப்பின்னையை விளித்துப்பேசல்-18,
மக்களை முன்னிலைப்படுத்தும் பாடல்-2 (“வையத்து வாழ்வீர்காள்”)
கண்ணனை முன்னிலைப்படுத்தல்-4, 21-29
கண்ணன் நப்பின்னை இருவரையும் விளித்துப்பேசுதல்-19, 20
பெண்ணோடு அவள் தாயையும் விளித்துப்பேசுதல் (“மாமீர் அவளை எழுப்பீரோ”)-9,
காண்பார் கூற்று-30
என்று பலவிதமான கூற்றுகள் அமைகின்றன. இவை அற்புதமான நாடகத்தன்மையை உருவாக்குகின்றன.
இவற்றை நோக்கும்போது, மணிவாசகரின் பாக்கள் பாவைப் பாக்களின் பொது மரபிற்கேற்பப் பாடப்பெற்றவை (traditional), புறநிலையின (objective), பக்தர்கள் யாவரின் விருப்பங்களையும் பொதுவாக வெளிப்படுத்துபவை (expressing the wishes of others), எனவே செவ்வியப் பாக்கள் (Classical Poetry); கவர்ச்சி குறைந்தவை.
ஆண்டாளின் பாக்கள், தற்சார்புக் (subjective) கவிதைகள், அவ ளது சொந்த ஆவல்கள், ஆசைகள் போன்றவற்றைச் சொல்லும் ரொமாண்டிக் கவிதைகள். கோபிகையாகத் தன்னையே புனைந்து கொள்ளும் புனைவுக்கவிதைகள். எனவே கவர்ச்சி மிக்கவையாக இலங்குகின்றன.
மணிவாசகரின் எம்பாவை, ஆண்டாளின் திருப்பாவை இரண் டிற்கும் வண்ணப் படிமங்களிலும் வேறுபாடு உண்டு. மணிவாச கரின் பாக்களில், வெண்மை, செம்மை, கருமை ஆகிய மூன்றும் அமைகின்றன. பொழுதுவிடிதற் படிமமும், வாவியின் படிமமும், நீராடுதற் படிமமும் அமைகின்றன. மேலும் ஒலிப்படிமங்கள் மிகச் சிறப்பாகப் பல பாக்களில் அமைந்துள்ளன (சான்றுக்கு-”காதார் குழலாடப் பைம்பூண் கலனாட….” இதில் ஆட என்ற சொல் பன்முறை வந்து ஒலிப்படிமத்தை உருவாக்கும் தன்மையைக் காணலாம்.)
ஆண்டாளின் பாக்களில் பொய்கை வருணனை இல்லை. வண்ணப் படிமங்களில் வெண்மை முதலிடம் பெறுகிறது. இதற்குச் சிறப்பான காரணம், பால் பற்றி அவ்வப்போது வரும் குறிப்புகள். மேலும் வெண்சங்கு, வெள்ளி, வெண்தாமரை போன்ற படிமங்கள் உண்டு. மணிவாசகர்தம் பாவையில், வெண்மைப் படிமத்தினை உருவாக்கப் பசுக்கள் இடம்பெற வில்லை. வெண்ணகை, வெண்சங்கு என்பதுபோலவே இடம்பெறுகின்றன. பிறகு செம்மை, பொன்மை, கருமை என்னும் நிறங்கள் வருகின்றன.
திருப்பாவையில் பெரும்பாலும் கருமைநிறம் மழை மேகத்துட னும், கண்ணன் மேனியுடனும் சார்த்தி நோக்கப்படுகிறது. ஆண்டாள் பாக்களில் மணிவாசகர் பாக்களில் உள்ள அளவு ஒலிப்படிமங்கள் இல்லை. மேலும் ஆண்டாள் பாக்களில் (அவள் தன்னை ஆயர்பாடியில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள் வதால்) பசுக்கள் பற்றிய குறிப்புகளும் மிகுதி. மணிவாசகர் எம்பாவையில் இவையெல்லாம் கிடையாது.
இரண்டு பாவைப் பாக்களையும் நோக்கும்போது நாம் முற் கூறிய வேறுபாட்டை “நாயன்மாரின் பாக்கள் யாவும் செவ்வியப் பண்பினையும், ஆழ்வார் அருளிச்செயல்கள் யாவும் ரொமாண்டிக் தன்மையையும் கொண்டவை” என்று இன்னும் பொதுமைப் படுத்தலாம். செவ்வியப்பண்பு (Classical nature) என்பது மரபுசார்ந்த படைப்புத்தன்மையை வெளிப்படுத்துவது. ரொமாண்டிக் தன்மை என்பது தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன்னுணர்ச்சியாகப் பாட்டு களை வெளிப்படுத்தும் தன்மை. அண்மைக்காலக் கவிஞர்களில் பாரதியிடம் ரொமாண்டிக் தன்மை விஞ்சியிருப்பதைக் காணலாம். இதுபோலவே ஆழ்வார்களின் பாசுரங்களிலும் குறிப்பிடத்தக்க ரொமாண்டிக் தன்மை காணப்படுகிறது.
இதற்குக் காரணங்கள் பல உள்ளன. இரண்டின் தத்துவப் பின்னணியும் ஒரு காரணம். சைவசித்தாந்தம், வைணவசித் தாந்தம் (விசிஷ்டாத்வைதம்) இரண்டுமே தமிழகத்தின் கொடை கள். என்றாலும் எதிரெதிர்த் தன்மைகள் கொண்டவை. சிவன் முழுமுதற்கடவுள் எனவும் அவனது லிங்கரூபம் அருவுருவம் எனவும் சைவசித்தாந்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் வைணவசித்தாந்தத்தில் இறைவன் பல அவதாரங்கள் எடுத்துப் பிறந்து இறந்து மனிதரோடு மனிதராக வாழ்வதை ஏற்றுக்கொள் கின்றனர். எனவே சிவபெருமானின் திருவிளையாடல்கள் அதீத நிலையிலும், மனிதர்களோடு ஒன்றாத் தன்மையிலும் உள்ளன. இவற்றைப் பற்றற்றுப் பாடுவதே இயலும். அவ்வாறு பற்றற்ற நிலையில் பாடும்போது, மரபுசார்ந்த சில கதைகளையும் கருத்து களையும் மட்டுமே வைத்துப் பாடவேண்டிவருவதால் செவ்விய அமைப்பிற்குத் தாமாகவே அவை சென்றுவிடுகின்றன. வைண வத்தில் தன்னை மனிதரோடு ஒப்பவைத்துக் கொண்ட இறைவனைத் தம்மோடு புதுப்புது விதங்களில் சேர்த்துப் பாட ஆழ்வார்களால் இயல்கிறது. சான்றாக, பெரியாழ்வார் தன்னைக் கண்ணனின் தாயாகவே கற்பித்துக்கொண்டு காலின் மேலிட்டு எண்ணெய்க் குளியல் செய்வதைக் காணமுடிகிறது. இப்படிப்பட்ட கற்பனைகளுக்குச் சிவபெருமானை ஆட்படுத்தமுடியாதல்லவா?


புலம்பெயர் இலக்கியம்

pulam peyar ilakkiyam2பழங்காலத்தில் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்கு இடம்பெயர்வதைப் புலம் பெயர்தல் என்று குறித்தார்கள். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் மிகுதியாகக் கிடையாது. பழந்தமிழகத்தில் நாடு என்பது மிகக்குறுகிய இடம்தான். இன்றைய பார்வையில் ஒரு முந்நூறு நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குள் இரண்டு நாடுகள் வந்து விடும். இப்படி நாடுவிட்டு நாடு செல்பவர்களையும் அக்காலத் தமிழர் மதிக்க வில்லை. புலம்பெயர்வது என்ன-ஊரைவிட்டுச் செல்வதுகூட விரும்பப்பட வில்லை என்றே தோன்றுகிறது. பூம்புகார் நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது “பதி எழு அறியாப் பழங்குடி மக்கள்” அங்கு வாழ்ந்ததாக இளங்கோவடிகள் கூறுகிறார். அதாவது அந்த நகரத்தைவிட்டு மக்கள் இடம்பெயரவே மாட்டார்களாம்!

பழங்காலத்தில் சாதுவன் போன்ற வணிகர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்த செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்கிப் புலம்பெயர்ந்து வாழ்ந்ததற்கான குறிப்புகள் இல்லை. ஆனால் பழந்தமிழகத்தில் யவனர் சோனகர் போன்ற பிறநாட்டினர் வந்து வாழ்க்கை நடத்தி வந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட புலம்பெயர் ‘மாக்களைச்’ சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. (கவனிக்கவும்-புலம் பெயர்பவர்கள் ‘மாக்களாம்’–அதாவது மனிதத்தன்மையில் குறைந்தவர்களாம்!) புகார் நகரில் புகார் நகர மக்களோடும் புலம்பெயர் மாக்கள் “கலந்து இனிது உறைந்ததாகத்” தெரிகிறது.

ஆக, தமிழ்ச்சமுதாயம் அண்மைக்காலம்வரை புலம்பெயர்தலை அறியாத ஒரு நிம்மதியான சமுதாயம்தான். ஈழத்தமிழர்கள் அந்தநாட்டுக் குடிமக்களே ஒழிய, தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அல்ல. உண்மையில் இன்றுள்ள சிங்களவர்தான் அசோகச் சக்ரவர்த்தியின் காலத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்ட புலம்பெயர் மாக்கள். ஆனால் இன்று புலம்பெயர்ந்தவர்கள், உண்மைக் குடிகளான தமிழரை அழித்தும் வெளியேற்றியும் இருக்கும் தன்மை ஒண்டவந்த பிடாரி, ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாகத்தான் தோன்றுகிறது.

உண்மையில் தமிழ்நாட்டினருக்குப் புலம்பெயர் இலக்கியம் இல்லை. அண்மைக்காலத்தில் ஈழத்திலிருந்து இடம்பெயர்ந்த தமிழ்மக்களுக்குத்தான் புலம் பெயர் இலக்கியம் உண்டு. அதனால்தானோ என்னவோ தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இந்தத் துறையில் அதிக ஆர்வம் ஏற்படவில்லை.

ஆங்கிலேயர்கள் வந்தபிறகுதான் நகரத்தார் பலர் மலேயா போன்ற நாடுகளுக்குச் சென்றார்கள். கண்காணிகளால் இங்குள்ள ஏழைமக்கள் பலர் இலங்கை மலேசிய போன்ற நாடுகளுக்குத் தேயிலைத் தோட்ட, ரப்பர் தோட்ட உழைப்பாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். இவர்களைத்தான் முதன் முதலாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் எனக் குறிக்கமுடியும். இப்படிப்பட்ட புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி முதன்முதலில் சிறுகதை எழுதியவர் புதுமைப்பித்தன். நாற்பதுகள் ஐம்பதுகளில் சில சிறுகதைகள் வந்துள்ளன. ப. சிங்காரம் என்னும் எழுத்தாளர் தமது இரு நாவல்களில் மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளார். அநேகமாகப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றித் தமிழ்நாட்டில் நாவல் எழுதியவர் அவராகத்தான் இருக்க வேண்டும். அகிலனின் ‘பால்மரக் காட்டினிலே’ போன்ற நாவல்களும் புலம் பெயர்ந்தவர்கள் பற்றியவைதான். புலத்திலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மீண்டும் தாய்நாட்டுக்கு இடம்பெயர்ந்த பர்மாத் தமிழர்களைப் பற்றி மு. வ. ‘பெற்ற மனம்’ என்ற நாவலில் எழுதியுள்ளார். இவையெல்லாம் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றிப் பிறர் எழுதியவை.

pulam peyar ilakkiyam3நாற்பதாண்டுகளாகத்தான் வேலைதேடிப் புலம்பெயர்ந்த தமிழ்நாட்டவர்கள் சிலரைக் கூறமுடியும். அதிகமாகப் புலம்பெயர்ந்தது ஈழத்தமிழர்கள்தான். வேறு வழியில்லாமல் தங்கள் சொந்த நாட்டைவிட்டு அரசியல் காரணங்களுக்காக அந்நிய நாடுகளில் புகலிடம் தேடவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. இன்று இலங்கைத் தமிழர்கள் கனடா முதல் ஆஸ்திரேலியா வரை, ஸ்வீடன் முதல் நைஜீரியா வரை உலகெங்கும் பலநாடுகளுக்கு வீசியெறியப்பட்டிருக்கிறார்கள். குடிபெயர்தலைக் குறிக்க மைக்ரேஷன், டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்னும் இரு சொற்களும் ஆளப்படுகின்றன. மைக்ரேஷன் என்பது ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குப் பெயர்தல். டிஸ்ப்ளேஸ்மெண்ட் என்பது ஒரே நாட்டுக்குள் நிகழும் இடப்பெயர்ச்சி. இடப்பெயர்ச்சியைப் புலம்பெயர்தலாகக் காணக் கூடாது என்பது பன்னாட்டு வரையறை. உலகில் பல சமூகங்கள் புலம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சான்றாக ஆப்பிரிக்க மக்கள் பலநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. அடிமைகளாகவே அவர்கள் அமெரிக்க நாட்டிற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பு புலம்பெயர்க்கப்பட்டார்கள். யூதர்கள்தான் பல காலமாகவே உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்கள். புலம் பெயர்ந்தவர்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான டயஸ்போரா என்பது யூத மக்களில் புலம் பெயர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகத்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் இஸ்லாமியர் வாழ்ந்த நாடுகளிலிருந்து சில பகுதிகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு அவர்களுக்கென ஒரு நாடு ஏற்படுத்தப்பட்டது.

ஸ்டாலின் காலத்து ரஷ்யாவிலிருந்து பல எழுத்தாளர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களில் ரஷ்ய உருவவியல் குழுவைச் சேர்ந்த ரோமன் யாகப்சன் போன்ற பலருண்டு. ரஷ்ய உருவவியல் குழுவினர், செக்கோஸ்லவகியாவில் ப்ராஹா நகரில் முக்கியமான மொழியியல் வட்டத்தைப் பின்னர் உருவாக்கினார்கள். நவஃப்ராய்டியச் சிந்தனைக் குழுவினரும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தனர். ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்த முக்கியமானதோர் எழுத்தாளர் சோல்சினிட்ஸின். இவருடைய கேன்சர் வார்டு என்ற நாவல் புகழ்பெற்றது.

pulam peyar ilakkiyam4இந்தியாவின் வடபகுதியிலிருந்து பலர் ஐரோப்பாவுக்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இவர்களை ஐரோப்பிய இலக்கியங்கள் நாடோடிகள் (ஜிப்சிகள்) எனப் பதிவுசெய்துள்ளன. இவர்கள் நிலம் விட்டு நிலம் பெயர்ந்துகொண்டே இருப்பதால் புதிதுபுதிதான பொருள்களை அறிமுகப்படுத்துபவர்களாகவும், அரிய நோய்களையும் எளிமையான இயற்கை முறைகளால் குணப்படுத்துபவர்களாகவும், மந்திரவாதம் சூனியவாதம் செய்பவர்களாகவும் ஐரோப்பிய இலக்கியங்கள் சித்திரித்துள்ளன. ஆனால் இடம்பெயர்பவர்களுக்கு ஒருபோதும் மதிப்புக்கிடையாது. எனவே இவர்களுக்கு எந்த ஐரோப்பிய நாடும் இடம்தராமல் இன்றுவரை விரட்டிக் கொண்டே இருக்கின்றன. ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலத்தில் இஸ்லாமியரும் புலம்பெயர வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அரசியல் தஞ்சம்கோரி இடம்பெயர்ந்தவர்கள், காலனியாதிக்க விளைவுகளின் பொருட்டுக் குடிபெயர்ந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். குடியேறிய வசதி படைத்தவர்கள், சென்ற நாட்டிலேயே குடியுரிமை பெற்றார்கள். இவர்கள் யாவருமே புலம்பெயர்ந்தவர்கள் என்பதில் அடங்குவர்.

புலம்பெயர்தல் என்ற சொல்லோடு புலம்புதலுக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. என்றாலும் புலம்புதல், புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு முக்கியப் பொருளாக இன்று அமைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த வாழ்க்கை விடைசொல்ல முடியாத பல வினாக்களை எழுப்புகிறது. தாய்நாட்டில்(!) வசிக்கும் நம் போன் றோர் இத்தகைய பிரச்சினைகள் குறித்துச் சிந்திப்பதே இல்லை. நமது தமிழ் இன அடையாளம் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமா? நாம் சுதந்திரமான, நமக்குரிய வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

புலம்பெயர் வாழ்க்கை பலருக்கு நல்வாழ்வைத் தந்தது போன்ற தோற்றம் இருப்பினும் உண்மையில் அதிக அளவுக்கு வலியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. இங்கேதான் நமக்கு வாழ்க்கையா, அங்கேதானா என்ற ஊடாட்டங்கள் அநேகமாக இன்று குறைந்துபோய் அங்கேதான் என்று பலருக்கு முடிவாகி விட்டது. என்றாலும் நம்பிக்கையற்ற நிலையில், புலம்பெயர் இலக்கியம் பெரும்பாலும் விரக்தியையும் சோகத்தையுமே கொண்டிருக்கிறது.

pulam peyar ilakkiyam6புலம்பெயர் இலக்கியம் குறித்து நிறைய விவாதங்கள் மேற்கிலும் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. புலம்பெயர் இலக்கியத்தைப் புகலிட இலக்கியம் என்றும் குறிப்பிடுகின்றனர். புகலிட இலக்கிய முயற்சிகளில் பின்வருவனவும் அடங்கும்:

1. அரசின் ஒடுக்குமுறை, இன அழிப்பு, அதனால் ஏற்படும் சீரழிவுகளை வெளிப்படுத்துவது;

2. புகலிடத்தின் புதிய சூழல்கள் தரும் அனுபவங்களை வெளிப்படுத்துவது;

3. போர் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் பற்றிய எவ்விதத் தொடர்புமற்ற, சாதாரண வாழ்க்கை பற்றிய படைப்புகள்.

என்றாலும் இவற்றை இன்னும் விரிவாகக் காண இடமிருக்கிறது.

ஃ பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே சீர்குலைந்துவரும் குடும்ப உறவுகள் அல்லது உறவு இடைவெளிகள் பற்றிய பிரச்சினை புலம்பெயர்ந்தவர்களுக்கு முக்கியமாகிறது. மண்ணை இழந்து, மக்களை இழந்து நிற்கும் ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சொத்து அவர்களுடைய மக்கள். அவர்களுக்குத் தமிழ் தெரிவதில்லை. புகலிடத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் நேற்றைய வாழ்க்கையை நிலைநாட்ட விரும்புகின்ற பெற்றோர்; இன்றைய வாழ்க்கையை மட்டுமே அறிந்து, நாளைய கனவில் மிதக்கும் இளந்தலைமுறையினர்- என உளவியல் ரீதியாகப் பிரிந்துவிடுகின்றனர்.

ஃ இளந்தலைமுறையினர்க்குத் தமிழ் தெரிவதில்லை என்றால், முன்பு சென்றவர்களுக்கு வாழுகின்ற நாடுகளின் மொழிகளோடும் கலாச்சாரத்தோடும் பரிச்சயம் ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை. அறிதலில் ஆர்வமற்ற போக்கும் நிலவுகிறது. அறிந்துகொண்டாலும் அவற்றைப் பின்பற்ற முடிவதில்லை. பிறருடன் நட்புறவு கொள்ள முடிவதில்லை.

ஃ மொழியறிவில்லாததால் சுரண்டலுக்கு பலியாகி, தொடர்ந்து சில குறிப்பிட்ட பணிகளுக்குள் உழலுகின்ற நிலை பல தமிழர்களுக்கு இருக்கிறது. இதனால் ஏற்படும் மனவியல் ரீதியான பாதிப்பும் மிகுதி.

ஃ உலகில் நமது மொழிதான் உயர்ந்தது, நமது கலாச்சாரம்தான் பழமையானது என்னும் மனப்பான்மை புகலிடத் தமிழர்கள் சிலருக்கு விடாப்பிடியாக இருக்கிறது. புகலிடத்திலும், தென்னிந்தியப் பொழுதுபோக்குச் சாதனங்களிலேயே மயங்கிக் கிடப்பவர்கள் பலர்.

pulam peyar ilakkiyam1புலம்பெயர் இலக்கியம் இப்போது இரு நாடுகளிலிருந்துமே எழுதப்படுகிறது. சொந்த நாட்டில், வாழ்வு மறுக்கப்பட்டவர் தாங்கள் இழந்துவிட்ட நாட்டையும் மக்களையும் உறவுகளையும் பற்றிய பிரிவாற்றாமையை வெளிப்படுத்துவதாகப் புகலிட இலக்கியம் இருக்கிறது. அவை தங்கள் வாழ்க்கை சூறையாடப்பட்டதற்கான காரணிகளைத் தேடுகின்றன. யுத்தத்தினால் விளையும் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்துபவையாகச் சில உள்ளன. புகலிட நாட்டில், அதன் பண்பாடு, அரசியல் தன்மைகளுக்குள் அகப்பட்டு முகமிழந்து தவிக்கும் தவிப்பை உணர்த்துவதாகவும் புகலிட இலக்கியம் உள்ளது. இன்னொரு நாட்டில் அந்நியர்களாகவும், அந்நாட்டு மக்களுக்கு உபத்திரவம் தர வந்தவர்களாகவும் உதவாதவர்களாகவும் பார்க்கப்படும் நிலை இருப்பதால், அம்மக்கள் தங்களை தலித்துகளாகவே உணர்கின்றனர். மேம்போக்காக இன்று நிறவேற்றுமை இல்லை என்று சொல்லப்பட்டாலும், பல நாடுகளில், பலவித வீதங்களில், வெள்ளையர் -வெள்ளையர் அல்லாதவர் பாகுபாடு நிலவவே செய்கிறது.

“அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் என்பது மறதிக்கு எதிராக ஞாபகங்களின் போராட்டம்தான்” என்று செக்கோஸ்லவகிய எழுத்தாளர் மிலன் குண்டேரா குறிப்பிடுகிறார். நினைவுகள் இறக்கும்போது மனிதன் உயிர்ப்பற்ற பிணமாகிவிடுகிறான். நினைவுகள்தான் புலம்பெயரும் மனிதனைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. எனவே புலம்பெயர் எழுத்தாளர்கள் பெரும்பாலும் அதிகாரத்துக்கு எதிராக இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் தாய்நாடு கற்பனையானது என்பதுபோலவே புலம்பெயர்ந்த நாடும் அவர்களுக்குக் கற்பனைகளை எதிர்நோக்கியதாகவே இருக்கிறது. புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் இருத்தல் ஒரு நிலப்பரப்பில் காலூன்றியது அல்ல. ஒரேசமயத்தில் அவர்கள் காலனியாதிக்க இனவெறிக்கும், தமது சொந்த தொலைதூர நாட்டின் மூடநம்பிக்கைகளுக்கும் கொலைகளுக்கும் பெண்அடிமைத் தனத்துக்கும் எதிரானவர்கள். அவர்கள் புகலிட நாட்டிலும் அதிகார அரசியலுக்கு எதிராகவே இருப்பார்கள். தொலைதூரச் சொந்த நாட்டிலும் அவர்கள் அதிகார அரசியலுக்கு விமரிசகர்களாக இருந்தவர்கள்தானே அவர்கள்? ஆனால் வந்த நாட்டிலும் விடமுடியாத பழைய நம்பிக்கைகளும், அடிமைத்தனச் செயல்பாடுகளும் வந்தநாட்டின் வக்கிரங்களும் அவர்களை பாதித்து முரண்களை ஏற்படுத்துகின்றன. இந்த முரண்களுக்குள் வாழ்வதாகவே அவர்களது எழுத்துக்கள் அமைகின்றன.

இன்று உலகஅளவில் புலம்பெயர்ந்த இலக்கியத்தின் பாதிப்பும் வீச்சும் மிகுதி. இங்கிலாந்தில் வசிக்கும் சல்மான் ருஷ்தியின் நாவல்கள் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தடைசெய்யப்பட்டுள்ளன. ஈரான் நாடு அவருக்குக் கொலைத் தண்டனை விதித்துள்ளது.

இந்திய வம்சாவளியினரில் இன்னொருவர் வித்யாதர் சூரஜ் பிரசாத் நைபால். டிரிடினாடில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்பவர். (அவருடைய ‘பெண்ட் இன் தி ரிவர்’ ஆப்பிரிக்கச் சர்வாதிகார ஆட்சியின்கீழ் வாழ்வதிலுள்ள பிரச்சினைகளை விளக்கும் நாவல்.)

ஜோசப் பிராட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர். ஸ்டாலின் காலத்தில் புலம்பெயர்ந்தவர். அமெரிக்காவில் இறந்தார். சுஜாதா பட், குஜராத்தில் பிறந்து பிரிட்டனில் வாழ்பவர். (மங்கீ ஷேடோஸ், ஸ்டிங்கிங் ரோசஸ் போன்ற நூல்களை எழுதியவர்). தஸ்லிமா நஸ்ரீன் பற்றி அறியாதவர் குறைவு. வங்காளதேசத்தில் பிறந்து அகதியாகச் சுற்றிவருபவர். (இவரது முக்கிய நாவல் லஜ்ஜா. )

சியாம் செல்வதுரை, இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்பவர். இவருடைய முக்கியமான நாவல் ஃபன்னி பாய். ஏ. சிவானந்தன், இலங்கையிலிருந்து இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்தவர். ரேஸ் அண் கிளாஸ் என்ற இதழை நடத்திவரும் இவரது மிக முக்கியமான நாவல் ‘வென் மெமரி டைஸ்’. கம்யூனி டீஸ் இன் ரெசிஸ்டன்ஸ் என்னும் முக்கியமான நூலையும் எழுதியுள்ளார். ஜீன் அரசநாயகம், இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்த தமிழ்ப்பெண்கவிஞர்.

உலகில், புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமாக, பென் ஆக்ரி, செர்கே பேகஸ், ஏரியல் டாப்மேன், ழான் ஜோர்டன், இல்மஸ் குனே, மிலன் குண்டேரா, வோலே சோயிங்கா, தர்வேஷ் மஹமூத் எனப் பலர் உள்ளனர்.

புலம்பெயர் இலக்கியத்தின் அறிமுகமாகச் சில சான்றுகளை இங்கே காணலாம். சிறுகதைகள், நாவல்கள் பட்டியலையோ, எழுத்தாளர்கள் பெயர்களையோ சொல்வது பெயருதிர்த்தலாகவே அமையும். பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சுவடுகள் என்னும் கவிதைத்தொகுதி இங்கு நினைவுக்கு வருகிறது. நார்வேக்குப் புலம்பெயர்ந்த தம்பா என்பவரின் கவிதை இது. நார்வேயின் நீண்ட இரவு கவிஞரின் அகதி வாழ்க்கைக்கு உவமையாக அமைகிறது.

       நாழிகையாகியும் படுக்கைக்குச் செல்லாத சூரியனும்

       குளிர்ந்தும் இருள்போர்வை போர்த்தாத துருவதேசமும் கண்டுவியந்தேன்

       எனது தேசத்தின் துயர்தோய்ந்த இரவினின்றும் மீண்ட எனக்கு

       இங்கு ஒளித்திரளாய்ப் பகல் மிக நீண்டே தெரிகிறது. . . .

மக்பை என்னும் பறவை இடம்பெயராமல் தன் நாட்டிலேயே வசிக்கக்கூடியது. இது வ. ஐ. ச. ஜெயபாலனுக்கு ஆதரவின்மை, தனிமை இவற்றிற்கான குறியீடு ஆகிறது.

       உலகெங்கும்

       வாழ்வை இழந்து வசதி பொறுக்குகின்ற

       மனிதச் சருகுகளாய்ப் புரள்கின்றோம்

       என் நம் தாய்நாடு

       ஓயாமல் இலை உதிர்க்கும்

       உயிர்ப்பிழந்த முதுமரமா?

இப்படிப்பட்ட கவிதைகளில் அந்தந்த நாட்டுப் புதிய சொற்களும் சொற்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன. அந்நியப்பட்ட உணர்வு புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் அதிகமாக இடம்பெறுவதில் ஆச்சரியமில்லை. ஈழக் கவிஞரும் திறனாய் வாளருமான சிவசேகரத்தின் ஒரு கவிதை (நையாண்டி) இது.

நாராய் நாராய் செங்கால் நாராய் / பழம்படு பனையின் கிழங்கு பிளந்து / பயன் மிக அறிந்த பனைசெறி நாட்டார் / வழிபல சென்றே பலதிசை பரந்தார் / வருகுவதெந்நாள் அறிவையோ நாராய். . . . .

அகதியின் வாழ்வின் இழிநிலை தாங்கி / அந்நிய மண்ணில் அண்டிக்கிடந்து / மிகநலி மாதர் தம்நகர் மீளும் / வகையென ஒன்றை மொழிவையோ நாராய். . . .

நாராய் நினக்கோ யாதும் ஊரே / நாராய் நின் இனம் யாவரும் கேளிர் / பாராய் எங்கள் மனிதரின் நிலையை / நாராய் நமக்கோர் நல்வழி கூறாய். . . .

மைத்ரேயி என்னும் கவிஞர் எழுதும் சுற்றுச்சூழல் கரிசனை மிக்க கவிதை இது:

       புற்றரையும் பசுங்காடும் / சலசலத்து நகர்ந்த சிற்றாறும் / கீச்சிட்டுச் சிற

       கடித்த புள்ளினமும் / ஊர்வனவும் விலங்கினமும் / காளானென

முளைக்கும் / தொடர்மாடிக் கட்டடங்களில் / காணாமற் போயின.

       நிலவும், கறுப்புப் பட்டில் / வெள்ளிக் கோலமிட்ட / நட்சத்திரங்களும்

       நகரத்துத் தெருவிளக்கில் / வாங்கு வாங்கு என / விளம்பரிக்கும்

       நியோன் விளக்கில் / மறைந்துபோயின.

       தொழிற்சாலைக் கழிவில் / வாகனப் புகையில் / விமான செய்திப்

       போக்குவரவில் / பஞ்சபூதங்களில் நாலுடன் / தொலைந்தது சூழல்.

       நேரடிச் சந்திப்புத் தொலைபேசியிலும் / தொலைபேசித் தொடர்பு இலத்

       திரனியற் கடிதத்திலும் / ஓய்வுநேரம் தொலைக்காட்சியிலுமாய்த் /

       தொலைந்தது உறவும் நட்பும்.

       தொடர்புசாதனம் கக்கும் குப்பையில் / மூளை சலவைபெற ரசனை

       கரைய / எண்ணியப் படுத்தப்பட்ட / கலை இலக்கியத்தில் / கணினி

       வரையும் ஓவியத்தில் / இயந்திர மனிதன் செதுக்கும் சிற்பத்தில் /

       அழகியல் தொலைய / உலகளாவிய இணையவலையூடு / கணினித்

       திரையில் மினுங்கும் மாய யதார்த்தத்தில் / நிஜ யதார்த்தம் தொலைய /

       எஞ்சுமா / மனிதநேயமும் / மானிட இருப்பும்?

இன்றைய பிரச்சினைகளை மிக எளிமையாக விளக்கி அழகாக நமது கவலையைக் கேள்வியாக முன்நிறுத்தும் கவிதை இது. புலம்பெயர்ந்த பிறநாட்டுக் கவிதைகளும் இவை போன்று ஒருவகையில் மனஅமைதி இழக்கவே உள்ளன. சான்று ஒன்று.

எங்கேயோ பிறந்தோம் / நான்கு திசைக் காற்றிலும் பரவினோம் / நூறு குழந்தைகள் / நூறு நாவுகளோடு பேசுகின்றன / நாளை நம் நாட்டுக்கு மீளவும் திரும்புவோமாயின் / கண்ணீரின் பொதுமொழியில் பேசுவோமென / நம்பிக்கை கொள்வோம்.

இது வியென் சின் என்ற வியட்நாமியக் கவிஞரின் கவிதை.

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் சிலருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். அமுதன், பார்த்திபன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. பார்த்திபனுடைய ஒரே ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். இக்கதையில் ஜெர்மனி செல்ல விசாவோடு வீட்டில் காத்திருக்கும் ஒரு தமிழ்க்குடும்பம் முதலில் காட்டப்படுகிறது. அந்த ஊரில் ஒரு சிங்களப் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவனுக்குக் கடன் தொல்லை. கடனை அடைத்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழ்க் குடும்பத்தின் தலைவனைக் கைதுசெய்து சிறையில் மிரட்டி, வெளி நாட்டிலிருந்து பணம் வாங்கிக் கொடுத்தால் விட்டுவிடுவதாகச் சொல்கிறான்.

அடுத்த காட்சியில் இலங்கையிலிருந்து லாவோஸுக்குத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள். லாவோஸிலிருந்து அவர்கள் ஜெர்மனி செல்லவேண்டும். வேலையும் வாழ்வும் கிடைக்கும் கனவுகளில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

மூன்றாவது காட்சியில் ஜெர்மனியில் இம்மாதிரி மனித ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இரு தமிழர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். லாவோஸிலிருந்து ஜெர்மனிக்குப் புறப்பட்டுவந்த தமிழர்கள் ஏற்றிய கப்பல் ஒன்று மூழ்கிப்போய்விட்டது. பிணங்கள் கடலில் மிதக்கின்றன. முழுகி இறந்தவர்களப் பற்றி ஒருவன் (சிவா) கவலை தெரிவிக்கிறான். அதைப் பற்றிக் கவலைப்படாமல், அடுத்த கப்பலைப் பற்றி-வியாபாரத்தைப் பற்றிக் கவலைப்படுமாறு அவனுடைய நண்பன் அறிவுரை சொல்கிறான்.

pulam peyar ilakkiyam8சிவாவுக்கு திடீரென்று ஒரு போன் வருகிறது. மாஸ்கோவில் நட்டநடுவீதியில் தெரிந்த ஒரு தமிழ்ப்பெண் இறந்து கிடக்கிறாள். அவனது நண்பன் ஒருவன் அதைத் தெரிவிக்கிறான். கைவிடப்பட்ட பெண்கள் நடுவீதியில் அநாதைப் பிணமாகக் கிடக்கக் கேள்வியுறும்போது மனம் கனக்கிறது.

தங்களுக்குத் தெரிந்த பெண். அவளது சாவை நண்பர்கள்மூலம் ஊரிலுள்ள அவளது பெற்றோர்களுக்குத் தெரிவிக்கலாமே என்று சிவா சொல்கிறான். அதை அவன் நண்பன் ஒப்புக்கொள்ளாமல் வேலையைப் பார்க்கச் சொல்கிறான்.

“வியாபாரம் நிற்கவில்லை. மனிதர்கள் மிருகங்கள் பழைய கப்பல்கள் நகர்ந்தபடியே இருக்கின்றன. அடுத்துவந்த நாட்களில் லாவோசிலிருந்து புறப்பட்ட ஆதிகால உக்ரெய்ன் கப்பல் ஒன்றில் பிள்ளை குட்டிகளுடன் இருந்த முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வண்ணக் கனவு கண்டுகொண்டிருந்தனர். கொழும்பிலிருந்து பலர் லாவோசுக்குக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். “

என்று இக்கதை முடிகிறது. கதையின் தலைப்பு இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். ஈழத் தமிழர்கள் அயல்நாடுகளுக்குச் செல்லும்போது தொடக்கம் முதல் முடிவு வரை எத்தகைய அவதிக்கு ஆளாகிறார்கள் என்பதை இக்கதை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறது. தாய்நாட்டைப் பிரிந்த சோகத்தையும் புலம்பெயர் நாடுகளில் அவர்கள் தேடிச் செல்லும்-கருணைக்கு ஏங்கும்-பிரபஞ்ச மனிதர்கள் குறித்த அவஸ்தையையும் இதில் காணலாம்.

அயல்நாடுகளிலிருந்து நிறையச் சிறுபத்திரிகைகள் தமிழில் வந்தன. நின்று போயின. மறுபடியும் சில வருகின்றன. நம் தமிழின் புலம்பெயர் இலக்கியம் இன்று ஈழத்தமிழ் இலக்கியமாகவே இருக்கிறது. ஈழக்கவிதைகளை நோக்கும் போது, முதல் கட்டம், பழங்கால முதல் மகாகவி ஊடாக நீலவாணன் வரை எனலாம். இரண்டாவது கட்டக் கவிதைகள் சேரன் போன்றோருடைய போர்க் காலகட்டக் கவிதைகளாக அமைந்துவிட்டன. இன்று மூன்றாம் கட்டத்தில் இருக்கிறோம். புலம்பெயர் கவிதைக் காலம். இதன் பொருள்விரிவை நோக்கி, எஸ். பொ. அடுத்த நூற்றாண்டுத் தமிழர் இலக்கியம் புகலிடத்தில் மையம் கொள்வதாகக் கூறுகிறார்.

புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை நம் தமிழ்ச் சமூகத்திலும் சில புதிய நிலைமைகளைத் தோற்றுவித்திருக்கிறது. முன்பு நமக்கு ஆங்கிலத்தோடும் ஆங்கில வாயிலாகவும் மட்டுமே தொடர்பு. இன்று நமது இலக்கியமும் மொழியும் பல்வேறு வித்தியாசமான கலாச்சாரங்களோடும், மொழிகளோடும், இலக்கியப் பாரம்பரியங்களோடும் தொடர்புறுகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் புதிய உணர்வுகளையும், அனுபவங்களையும் தமிழ் இலக்கியத்தில் வரைகிறார்கள். மேற் கத்தியச் சமுதாயத்தின் முன்னேற்றம், விநோதம், அபிவிருத்தி, தனிமனித சுதந்திரம், பாலியல் விடுதலை போன்றவற்றால் ஏற்படும் ஈர்ப்பு, நிறவாதம், இன பயங்கரவாதம், புரியாத பண்பாடு, பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம், அந்நிய நாட்டில் ஏற்படும் பயம், அங்கலாய்ப்பு, அந்நிய மாதல், சாதி வேற்றுமையை எதிர்கொள்ளல் என்று பொருள்விரிவு நிகழ்கிறது.

இன்று பல்வேறு மொழிகளும் பண்பாடுகளும் மோதுவது சர்வதேச அரங்கில் ஒரு நியதியாகிவிட்டது. இனங்களுக்கிடையில் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகின்றன. மொழிகளும் கலாச்சாரங்களும் கலப்படைவது தவிர்க்க முடியாதிருக்கிறது. உலக இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சில படைப்புகளையேனும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அளித்திருக்கிறார்கள் என்பது நமக்குப் பெருமையே.


சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

பாரதிதாசனை அறியாத இலக்கிய ஆர்வலர்கள் இருக்கமுடியாது.
“பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துகள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம்  என்ற பாரதிதாசன் என்று சொல்லவேண்டும்” என்று சொல்கிறார் புதுமைப்பித்தன்.
பாரதிதாசன், முதன்முதலில் படைத்த தொடர்நிலைச் செய்யுள் (சிறிய காவியம்) ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’. அவருடைய மிகச் சிறந்த காவியப் படைப்பும் இதுதான் என்பது என் கருத்து. இது பஃறொடை வெண்பாவினால் அமைந்தது. பல சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்லும் பாங்கில் ஒரு கதையைச் சொல்வதாக அமைந்தது.
ஓர் அழகிய சூழலில் கதை நிகழ்கிறது. அந்த இயற்கைச்சூழல் ஒரு மலைச்சாரல். சஞ்சீவி பர்வதம் என்பது அம்மலையின் பெயர்.
குப்பன் என்ற இளைஞன், தன் காதலி வஞ்சி என்பவள் வரவுக்காகக் காத்திருக்கி றான். அவளும் வருகிறாள். மனமகிழ்ந்து அவளை முத்தமிடச் செல்கையில் மறுக்கிறாள் அவள். காரணம் கேட்கிறான் குப்பன். முன்நாள் சொன்னபடி குப்பன் அந்த மலையிலிருக்கும் இரண்டு மூலிகைகளைப் பறித்துத் தரவேண்டும் என்கிறாள் வஞ்சி. “இல்லையென்றால் என் உயிர் இருக்காது” என்று மிரட்டுகிறாள். “நீ கல்லில் நடந்தால் கால்கடுக்கும், மற்றும் கொடிய விலங்குகளால் ஆபத்து ஏற்படும்” என்கிறான் குப்பன். “வாழ்வில் எங்கும் உள்ளது தான், வாருங்கள்” என்கிறாள் வஞ்சி.
இம்மூலிகைகள் அசாதாரணமானவை. ஒன்றைத் தின்றால், உலகின் மாந்தர்கள் அனைவரும் பேசும் பேச்சையெல்லாம் கேட்கலாம். மற்றொன்றைத் தின்றால், இவ்வுலகில் நடக்கும் நிகழ்ச் சிகளையெல்லாம் பார்க்கலாம். “ஆதலால் மூலிகையின் ஆசையை விடு” என்கிறான் குப்பன். கேட்கும் வஞ்சிக்கோ இன்னும் அதிகமாக ஆசை மூள்கிறது.
கோபமுற்ற குப்பன், “என்னடி பெண்ணே, இது தகுமோ பெண்களுக்கு?” என்கிறான். வஞ்சி, “பெண்ணை அடிமையாக நினைத்தீரோ?” என்கிறாள். “நான் தனியாகவே பர்வதம் செல்வேன். இல்லையென்றால் உயிரைவிடுவேன்” என்று மீண்டும் மிரட்டுகிறாள். அவள் கோபத்திற்கு பயந்த குப்பன் அவளைத் தூக்கிக்கொண்டு மலைமீது செல்கிறான். மூலிகைகளைக் கண்டு பறித்துத் தருகிறான்.
இருவரும் முதலில் ‘கேட்கும் மூலிகை’யைத் தின்கின்றனர். ஃபிரெஞ்சு நாட்டில் எங்கோ ஒரு உணவுவிடுதியில் நிகழும் ஓர் உரையாடல் அவர்களுக்குக் கேட்கிறது. ஓர் இத்தாலி நாட்டவனுக்கும் ஃபிரெஞ்சுக்காரனுக்கும் இடையில் நிகழ்வது அது. உரையாடல் சூழலிலிருந்து அந்த இத்தாலிக்காரன் தன் எதிரில் ஒரு கருப்பன் உட்கார்ந்திருப்பதைச் சகிக்கவில்லை என்று தெரிகிறது. அவனுக்கு புத்திசொல்லும் ஃபிரெஞ்சுக்காரன், “எங்கள் பிராஞ்சியர்கள் இப் பேதம் பாராட்டித் தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்; பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ,போ,போ! பேதம் கொண்டோர்க்குப் பிராஞ்சில் இடம் இல்லை” என்கிறான். குப்பனும் வஞ்சியும் பிரெஞ்சுக்காரருக்கு வாழ்த்துரைக்கின்றனர்.
பிறகு நல்ல அமெரிக்கன், பொல்லா அமெரிக்கன் என்று அமெரிக்கர்களை இருவகையாகப் பாகுபடுத்தி ஒரு அமெரிக்கன் பேசுவதைக்கேட்கிறார்கள். அவனையும் வாழ்த்தி, பிறகு இங்கிலாந்து தேசத்திலிருந்து எவனோ பேசுவதைக் கேட்கின்றனர்.
“இந்தியாவில் முப்பதுகோடிப் பேர் வாழ்கிறார்கள் என்றால், அவர்களிடையே உள்ள பேதங்களும் அவ்வளவு இருக்கும்; அவற்றை வளர்க்க, புராணங்கள், இதிகாசங்கள் வேறு இருக்கின் றன; சாதிப்பாகுபாடுகள் வேறு. எனவே அங்குள்ள மாந்தர் கல்லாய்க் கிடக்கிறார்கள். கொள் கைப் பிடிப்பு கொள்வோரையும் வேரறுக்க சாக்குருவி வேதாந்தம் வேறு இருக்கவே இருக்கி றது; எனவே நாவலந்தீவு நம்மைவிட்டுப் போகாது” என்கிறான் ஆங்கிலேயன். இருவரும் தம் சொந்த நாட்டு நிலைக்குத் துயருறுகின்றனர்.
“சொந்த நாட்டில் நடக்கின்ற பேச்சில் என் கவனம் செல்கிறது” என்கிறான் குப்பன். சொந்த நாட்டுக்குரல் ஒன்று காதில் விழுகிறது. “சஞ்சீவி பர்வதத்தை ஒருநொடியில் கொண்டுவர வேண்டுமா ஐயாவே?” என்ற குரல். அதைக் கேட்டுக் குப்பன் அஞ்சுகிறான். “சஞ்சீவி மலையைப் பெயர்க்கின்ற ஆட்கள் யாரும் பிறக்கவில்லை இன்னும்” என்று அவனைத் தேற்றுகிறாள் வஞ்சி.
மேலும் உரையாடல் காதில் விழுகிறது: “உங்களுக்குத்தான் வானம்வரை வளரும் உடல் உண்டே; உடனே சஞ்சீவி மலையை எடுத்துவருக” என்கிறது அக்குரல். இதைக்கேட்டுக் குப்பன் இன்னும் அஞ்சுகிறான். ‘அந்த மனிதன் வந்து மலையைத் தூக்குவதற்குள் நாம் இறங்கிச் சாரல் சென்று விடுவோம் வா” என்கிறான். “மலையைத் து£க்கும் ஆற்றலிருந்தால் நாம் ஏன் அடிமையாய் மிடிமையில் வாழ்கிறோம்?” என்று வஞ்சி தன் பதிலை முடிப்பதற்குள், “அந்த மலையை இதோ தூக்கிவந்து உம் எதிரில் வைக்கிறேன் ஐயா” என்ற குரல் கேட்கிறது.
இதைக்கேட்ட குப்பனின் நிலை இரங்கத்தக்கதாகிவிடுகிறது. “ஐயோ வஞ்சி, சாவு வந்ததே! மூலிகையைக் கொணர வம்பு புரிந்தாயே! முத்தம் கொடுத்தே முழுநேரமும் தொலைத்தாயே! என் உயிரையும் தொலைத்தாய், உன் உயிரையும் இழக்கப்போகிறாய்” என்று புலம்புகிறான்.
வஞ்சி நகைக்கிறாள். அவளுக்கு இது எவனோ ஒரு பாகவதன் சொல்லும் கதை என்பது புரிந்துவிட்டது. ஆனால் குப்பனோ உண்மையான உரையாடல் என்றே இதைக் கருதுகிறான். “மலையைத் தூக்கும் மாமனிதன் எவனும் இல்லை, காதல் நிசம்; இக்கனிமுத்தம் மிக்க உண்மை” என்றெல்லாம் தேற்றும் வஞ்சியின் சொல்லையும் ஏற்கமறுக்கிறான்.
“இந்நேரம் போயிருப்பார்; இதோ சத்தம் கேட்கிறது; வானத்தில் பாய்கிறார்” என்றெல்லாம் மீண்டும் குரல்கள் கேட்கின்றன. குப்பன் இப்போது பேசும் ஆற்றலையும் இழந்துவிட்டான். “ஐயோ” என்று மட்டுமே அவனால் சொல்லமுடிகிறது. “இனிமேல் காதில் விழுவதையும் கேளுங்கள்” என்கிறாள் வஞ்சி. “இப்படியாக அநுமார் எழும்பிப்போய் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து இலங்கையில் வைத்தார். அதன் சக்தியால் இராமனும் இலட்சுமணனும் எழுந் தார்கள்”  என்கிறது குரல். “இலங்கையில் வைத்துவிட்டானே, நாம் தப்பப்போவதில்லை” என்கி றான் குப்பன். “அநுமார் மீண்டும் சஞ்சீவி பர்வதத்தைக் கொண்டுசென்று இருந்த இடத்திலே யே வைத்துவிட்டார்” என்கிறது குரல்.
குப்பன் இப்போது நகைக்கிறான். “நான் அப்போதே ஆபத்து இருக்காதென்று நினைத்தேன். நான் நினைத்தபடியே நடந்தது பார், அதுதான் ஆச்சரியம்” என்கிறான். வஞ்சி அவனிடம் “நடந்த செய்தி என்ன, அதைக் கூறுங்கள்” என்கிறாள். “நாம் இங்கே வந்தோம், நாம் இங்கே இருக்கும்போதே அநுமார் இந்த மலையைத் தூக்கிச் சென்று இலங்கையில் வைத்தது, பிறகு இராமன் எழுந்ததும் இங்கேயே மலையைக் கொண்டுவந்து வைத்துவிட்டது. மலையைச் சற்றேனும் குலுங்காமல் கொண்டுசென்றதும் வைத்ததும் ஆச்சரியம்” என்கிறான்.
“இங்கே கதையை இன்று நிறுத்துகிறேன். இந்தக் கதையைக் கேட்டவர்கள் எல்லாரும் இம்மை மறுமைப் பயன்களை அடைவார்கள்” என்று நாமபஜனை செய்து கதையை முடிக்கும் பாகவதன் குரல் மீண்டும் காதில் விழுகிறது. இதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை குப்பனால். வஞ்சி, காட்சிமூலிகையை அவனிடம் கொடுத்து “ஐயா, இதை விழுங்கி அங்கே பாருங்கள்” என்கிறாள். ஒரு பாகவதன் உட்கார்ந்து தனக்குக் கிடைத்த காசுகளைத் தட்டிப்பார்ப்பது தெரிகிறது. சிரிக்கிறார்கள் இருவரும். மூடப்பழக்கவழக்கங்கள் பற்றி நீண்டதொரு உரையாற்றுகிறாள் வஞ்சி. “செம்மை முத்தம் கொள்ளவில்லை, சேர்த்து முத்தம் கொள்வீரே” என்று முடிக் கிறாள்.
“இன்றுதான் இத்தகைய நலிவுதரும் கதைகளெல்லாம் நாட்டிலிருப்பதைத் தெரிந்துகொண் டேன். மூடப்பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம் ஒழிவதென்றோ?” என்று அறிவுபெற்ற குப்பன் உரைக்கிறான்.
உடல்சிலிர்த்த வஞ்சி, “காதலுக்குத் தக்க இடம் சாரல்தான், அங்குச் செல்வோம் வாருங்கள்” என்று குப்பனை அழைக்க, காதலர்கள் சாரல் செல்கிறார்கள். சாரலின் இயற்கையழகு, கவிதையின் தொடக்க அடிகளில் சொல்லப்பட்டவாறே மீண்டும் வருகிறது, வஞ்சியின் வார்த்தைகளில்.  “இன்பமும் நாமும் இனி” என்று வஞ்சி சொல்வதுடன் கவிதை முடிகிறது.
இக்கவிதைப் பிரதி, பல அறிஞர்களாலும் பாராட்டப்பட்ட ஒன்று. அவர்களது கருத்துகள் சிலவற்றைக் காண்பது நல்லது.
“இப்பாடல் அகநிலைச் செய்யுள் வகையைச் சார்ந்ததாகும். குப்பன் வஞ்சி ஆகியோர் காதல் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அக்காதல் வாழ்க்கையில் சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்வதுதான் இப்பாடலின் சிறப்பாகும். அகஇலக்கணத்தின்படி முதல், கரு, உரிப் பொருள்களில் அமைந்துள்ளது” என்கிறார் சி.கே. சீனிவாசன்.
“சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்பது பாரதியின் குயில் பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களில் அழகாக இருக்கிறது” என்கிறார் சிறுகதையாசிரியர் கு.ப. ராஜகோபாலன். குயில் பாட்டுப்பாணி என்பதில் இது ஒரு அதீதநவிற்சிக் கதை என இனம்காணப்படுகிறது.
கு,ப. ரா.வின் கருத்தினை ஒத்த ஒன்றினை நாவலாசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசனும் வெளியிட்டுள்ளார்.
“சஞ்சீவிபர்வதத்தின் சாரல் கவிஞரின் கவிதைகளுள் முதல் ஸ்தானத்தை எளிதில் பிடித்துக் கொண்டிருக்கிறது. இது பாரதியாரின் குயில்பாட்டின் சாயல் கொண்டுள்ளது. ஆனால் குயில் பாட்டின் உட்கரு ‘காதல்போயின் சாதல்’ என்பதல்லவா? பாரதிதாசனின் உட்கருவோ முழுக்க முழுக்க ஆரியதிராவிட வேறுபாடாகும்” என்பது அவர் கூற்று.
சஞ்சீவிபர்வதத்தின் சாரல் கவிதையின் கருப்பொருள் வெவ்வேறு நிலைகளில் கணிக் கப்பட்டுள்ளது. பெண்ணுரிமை, சமதர்மம், ஆரியதிராவிட வேறுபாடு என்பன சுட்டிக்காட்டப் பட்ட கருப்பொருள்களில் சில.
“பாரதிதாசனின் சிறப்புவாய்ந்த அங்கதப் பாடலே சஞ்சீவிபர்வதத்தின் சாரல். மற்றொன்று இருண்டவீடு” என்று இதை அங்கதப் பாட்டாகக் கண்டுள்ளார் ஓர் அறிஞர்.
இது ஒரு அதீதப் புனைவா, அங்கதமா என்பதுபோன்று விவாதங்கள் இருந்தாலும், கருப் பொருள்கள் வெவ்வேறாகச் சொல்லப்பட்டாலும், பாரதிதாசனின் கவிதைகளில் முதன்மை பெறுவது சஞ்சீவிபர்வதத்தின் சாரல் என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடில்லை.


தமிழில் உலா இலக்கியங்கள்

தமிழில் உலா இலக்கியங்கள்

வரலாற்றுச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இலக்கிய அமைப்பு மாறுபடுகிறது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் தொடர்ச்சியாக இலக்கியம் இருந்துவருகின்ற தமிழிலும் காலந்தோறும் இலக்கிய வகைகளும் இலக்கிய அமைப்பும் மாறி வந்திருக்கின்றன. பேரரசர்கள் ஆண்ட காலத்தில் பெரிய காவியங்கள் தோன்றியிருக்கின்றன. பேரரசர்களின் ஆட்சிக்காலம் மாறி, சிற்றரசர்கள் ஆட்சி செலுத்தியபோது தோன்றியவை சிற்றிலக்கியங்கள். சிற்றிலக்கியங்கள் என்பது இலக்கியத்தின் அளவையும் பொருளையும் குறிக்கும் சொல்லாக அமைகிறது. மேலும், பேரிலக்கியங்களான காவியங்களின் ஒவ்வொரு கூறினை மட்டும் எடுத்து விரித்துரைப்பனவாகத் தோன்றியவை சிற்றிலக்கியங்கள் எனலாம்.

உதாரணமாக, பெரும் காவியங்களில் தலைவனுக்குத் தலைவி தூதுவிடுவதாகப் பகுதிகள் அமைந்திருப்பதைக் காணலாம். அதைத் தனிப்பகுதியாக விரித்துப் பாடும்போது தூது என்னும் இலக்கியமாகிறது. அதே போலத் தலைவன் உலா வருவது பெருங்காவியத்தின் ஒரு சிறுபகுதியாக அமையும். அதை மட்டுமே தனிப்பகுதியாக எடுத்துப் பாடுகின்றபோது அது உலா என்னும் சிற்றிலக்கியமாகிறது.

சிற்றிலக்கியங்களை பிரபந்தங்கள் என்று கூறுவதும் உண்டு. பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப்பாட்டியல், சிதம்பரப்பாட்டியல், இலக்கணவிளக்கப் பாட்டியல் போன்ற பாட்டியல் நூல்கள், சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றன. தமிழில் 96 வகைப் பிரபந்தங்கள் இருக்கின்றன எனக் கூறும் மரபு எப்படியோ உருவாகிவிட்டது. ஆனால் பேராசிரியர் ந.வீ. செயராமன், 330க்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்களைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். சிற்றிலக்கியங்களில் கலம்பகம், உலா, பிள்ளைத் தமிழ் போன்றவை முக்கியமானவை.

சிற்றிலக்கியங்களின் அமைப்பு, அவற்றின் தோற்றத்தைப் பலவிதமாகக் காண வழிவகுக்கிறது. இலக்கண அடிப்படையிலான சிற்றிலக்கியங்கள் உள்ளன. தொல்காப்பிய நூற்பாக்களின் அடிப்படையில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் உள்ளன. மக்கள் வழக்கு அடிப்படையில் தோன்றிய சிற்றிலக்கியங்கள் உள்ளன. கதைத்தொடர்ச்சி நிலையிலும் சிற்றிலக்கியங்கள் அமைகின்றன.

உதாரணமாக, மகளிர் பலர் கூடியிருந்து ஒரு தலைவன் புகழைப்பாடுகின்றனர். அப்போது அவர்கள் பலவகை விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஊசல், அம்மானை, கும்மி, ஒயில் கும்மி, குரவை, வள்ளை போன்ற இந்த விளையாட்டுகள், தனி இலக்கிய வகைகளாக மாறுகின்றன.

இப்படிப் பலவகையான விளையாட்டுகளிலும் பலவகை வயதுடைய மகளிரும் ஈடுபட்டிருக் கும்போது தலைவனின் வீதியுலா நிகழ்கிறது. அவனைப்பார்த்துப் பலர் காதல்கொள்கின்றனர். இது உலா என்னும் இலக்கியத்தின் தோற்றத்திற்கு வித்தாகிறது. அவ்வாறு வீதியில் உலா வருவது சிறு பிள்ளை ஆயின் குழமகன் என்று அந்த இலக்கியம் பெயர்பெறுகிறது.

உலாவந்த தலைவனின் உருவத்தில் மையல் கொண்ட பெண் ஒருத்தி புலம்புவது பவனிக் காதல் என்னும் இலக்கியமாகிறது. அவள் தன் ஆற்றாமையைத் தெரிவிக்கத் தூதுவிடுக்கும் செய்தி, தூது என்னும் இலக்கியமாகிறது. அவள் ஆற்றாமையில் வாடும்போது அவளுக்கு ஆறுதல்கூறக் குறத்தி வந்து சேர்கிறாள். தலைவனை அவள் விரைவில் அடைவாள் என்று அவள் கூறுவது குறவஞ்சி என்னும் இலக்கிய வகை ஆகிறது. இப்படி ஒரே நிகழ்வின் பலவேறு கூறுகள் பலவிதமான சிற்றிலக்கிய வகைகளாகியிருக்கின்றன.

எனினும் இவை அனைத்தும் சங்க இலக்கிய நோக்கில் பார்த்தால் பாடாண் திணை என்னும் ஒரே திணையின் பலவேறு கூறுகளாக அமைபவை என்பது வெளிப்படும். தமிழகத்தில், சோழ-பாண்டியப் பேரரசுகளுக்குப் பிறகு (கி.பி. பதினான்காம் நூற்றாண்டு முதலாக) தமிழ்ப்பேரரசர்கள் ஆட்சிசெய்த நிலை மாறி, அயல்நாட்டு அரசர்கள் ஆட்சிசெய்யலாயினர். அவர்களுக்குக் கீழ் தமிழர்கள் பாளையக்காரராகவோ சிற்றரசர்களாகவோ ஜமீன்தார்களாகவோ வாழவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பெரிய காப்பியங்கள் தோன்றுவது எப்படி இயலும்? சிறுசிறு இலக்கியங்களை அந்தச் சிறுசிறு மன்னர்கள்மீது பாடிப் பரிசில் பெறுவதற்குப் புலவர்கள் முயன்றனர். மன்னனைப் பாட விருப்பமில்லை என்றால் இதே விஷயங்களைக் கடவுள்மீது ஏற்றிப்பாடினர். எனவே சிற்றிலக்கிய காலத்தினைப் பாடாண் திணைக் காலம் என்றே கூறலாம்.

கடவுளர்மீதும், அரசர்மீதும், அடியார் மீதும், ஞானாசிரியர் மீதும் வள்ளல்கள்மீதும் உலாப் பாடுவது மரபு என்பர். இதனைத்தான் சிற்றிலக்கிய வரலாறும் காட்டுகிறது. இப்படிப் பாடியவை அனைத்தும் பாடாண் திணையில் (ஒரு கடவுளை, அல்லது தலைவனைப் புகழ்ந்து பாடுதல்) அமைந்ததில் வியப்பில்லை. அதிலும் ஒருவனைப் பார்த்து, “உன்னைக் கண்டவர்கள் எல்லாம் காதலிக்கிறார்கள், அவ்வளவு பேரழகன் நீ” என்றால் அவன் உடனே அகமகிழ்ந்து போய் அதிகமாகப் பரிசளிப்பான் அல்லவா?

பாடாண்திணைப் பாட்டுகள், சிற்றிலக்கியங்கள், அரசர்களும் நாயக்கர்களும் ஆட்சிசெய்த காலத்தில் அதற்கு ஒத்ததாகத் தோன்றியவை. அதாவது அரசர்கள், ஜமீன்தார்கள் ஆட்சி செய்த ஒரு விவசாயச் சமூக, நிலவுடைமை மரபிற்கேற்பத் தோன்றியவை. அதனால் இக்கால ஜனநாயக மரபிற்கு அவை ஏற்றவை அல்ல. பாடாண் திணை என்ற பெயரே,
யாரை யார் பாடுகிறார்கள்?
பாடுவது எதற்காக அல்லது ஏன்?
பாடப்படும் விஷயம் என்ன?
பாடப்படும் முறை யாது?
போன்ற பல கேள்விகளை எழுப்புகிறது.

ஒரு மனிதனை இன்னொரு மனிதன் புகழ்ந்து பாடுவது வயிற்றுக்கொடுமை. அல்லது வஞ்சித்துப் பொருள்சேர்க்கும் தேவை. ஏற்றத்தாழ்வே நிலவும் சமூகத்தில், அல்லது ஏற்றத் தாழ்வு மாறாதது, இயல்பானது என்று ஏற்கப்பட்ட சமூகத்தில் இது சகஜம்.

ஏற்றத்தாழ்வு நிலவினாலும், மக்கள் அனைவரும் சமம் எனக் கருதும் மக்களாட்சிக் காலத்திற்கு இந்தத் திணை ஒவ்வாதது என்பது முதலில் கவனிக்கப்பட வேண்டியது.

அப்படியானால், இந்த இலக்கியங்களைப் புறக்கணித்துவிடலாமா? இவை தேவையில்லையா? என்னும் கேள்விகள் எழுகின்றன. அப்படியில்லை. நீண்ட பாரம்பரியத்தை உடைய ஒரு மொழியில் உள்ள இலக்கியங்களில் அந்தந்தக் காலச்சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.

நம் காலத்திற்கு ஒவ்வாத காலச்சுவடுகளை விலக்கி, அதன் இலக்கியச் சுவைக்கென மட்டும் படிப்பது என்பது ஒரு முறை. இதை விளக்க நாம் இரண்டாயிரம் ஆண்டுப் பழமைக்குக் கூடச் செல்லத் தேவையில்லை. அண்மைக்கால-ஒரு நூற்றாண்டு பிந்திய பாரதியாரையே எடுத்துக்கொள்வோம். அவர் சுதந்திரம் வேண்டிப் பாடிய பாக்கள் இன்று பொருந்துமா? அவர்கால நிலையை அறிந்துகொள்ள அவற்றைப் பயிலலாம் என்று சொல்வது ஒரு விடை. இலக்கியச் சுவைக்கெனப் பயிலலலாம் என்பது இன்னொன்று. மூன்றாவது, இலக்கியங்கள் காலந்தோறும் புதிதுபுதிதாகப் பொருள்கொள்கின்றன, எனவே அதற்காகப் பயிலலாம் என்று கூறலாம். இப்படிப் பலநிலைகளில் பழைய இலக்கியங்களைப் பயிலுவதற்கான காரணங்களைக் கூறிச் செல்லலாம்.

இனி, உலா இலக்கியத்திற்கு வருவோம்.
தலைவர்கள் உலா வரும் செய்தியைக் காப்பியங்களில் பாடுவது மரபு. பெருங்கதையில் நகர் வலம் கொண்டது பகுதியிலும், சீவகசிந்தாமணியில் கோவிந்தையார் இலம்பகம், இலக்கணையார் இலம்பகம் ஆகியவற்றிலும், கம்பராமாயணத்தில் உலாவியற் படலத்திலும் உலாக்காட்சிகள் உள்ளன. ஏறத்தாழக் காப்பிய காலத்தில் தோன்றிய முத்தொள்ளாயிரத்திலும் உலாக்காட்சிகள் அமைந்துள்ளன. சான்றாக,
திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர்
இறந்துபடின் பெரிதாம் ஏதம் – உறந்தையர்கோன்
தண்ணார மார்பின் தமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு.
என்பது ஒரு முத்தொள்ளாயிரப் பாடல். சோழ அரசன் உலாவருவதைப் பெண்ஒருத்தி காண முனைகிறாள். காணக்கூடாது என்று தடுக்க முனைகிறாள் தாய். “அவள் பார்த்தால் பார்த்து விட்டுப் போகட்டும், கதவைத் திறவுங்கள், பின்னால் நிகழக்கூடியதைப் பின்னாலே பார்த்துக் கொள்ளலாம், இப்போது அவள் இறந்துபோய்விடக்கூடாது” என்பது இப்பாடல் கருத்து. தலைவன் பவனி வருதல், அதனைக் கண்டு பெண்கள் காதல் கொள்ளுதல் என்னும் வித்துகள் முத்தொள்ளாயிரத்திலேயே நன்கு அமைந்துவிட்டன.
சுந்தரமூர்த்தி நாயனார் திருமணத்தின்போது உலாவந்த காட்சியைப், பெரியபுராணம் விவரிக்கிறது.
தமிழில் முதன் முதலில் தோன்றிய உலா, சேரமான் பெருமாள் நாயனார் என்னும் சேர அரசர் இயற்றிய திருக்கயிலாய ஞானவுலா எனப்படுகிறது. முதலில் தோன்றியதனால் இதனை ஆதியுலா என்பர். இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரின் காலத்தில் வாழ்ந்தவர், கி.பி. எட்டாம் நூற்றாண்டினர் என்பர். இருவரும் நண்பர்கள் என்றும், ஒன்றாகச் சிவலோகம் எய்தினர் என்றும் கூறுவர். பூமியிலிருந்து புறப்பட்டுச் சிவலோகம் செல்லும் வழியில் இது பாடப்பட்டது, இதனைக் கேட்ட சிவபெருமான், சேரமான் பெருமாளைச் சிவகணங்களுக்குத் தலைவராக்கினார் என்றும் உரைப்பர்.

சேரர்காவலர் பரிவுடன் கேட்பித்த திருவுலாப் புறம்கொண்டு
நாரிபாகரும் நலமிகு திருவருள் நயப்புடன் அருள்செய்வார்
ஊரனாகிய ஆலால சுந்தரனுடன் அமர்ந்து இருவீரும்
சாரும் நங்கண நாதர் தம் தலைமையில தங்கும் என்று அருள் செய்தார்
என்று சேக்கிழாரின் பெரிய புராணம் இந்தச் செய்தியைக் கூறுகிறது.

எவ்வாறாயினும், சேரமான் இயற்றிய இந்த உலா, பின்வரும் உலா நூல்களுக்கு ஒரு நிகரற்ற முன்மாதிரியாக அமைந்துவிட்டது. சிவபுரத்தில் சிவபெருமான் வீற்றிருத்தல்-தேவர்கள் எங்க ளுக்குக் காட்சி அருள் என அவரை வேண்டுதல்-இறைவன் உலாப் புறப்படுதற் பொருட்டு இறைவி ஒப்பனை செய்தல்-தேவர்கள் பலரும் வாழ்த்துகள் உரைத்தல்-பின்தொடர்ந்து வருதல்-எழுபருவ மகளிரும் கண்டு வியத்தலும் காமுறுதலும் என இதன் அமைப்பு உள்ளது.

இதன்பின் தமிழில் தோன்றிய உலா நூல்கள் அநேகம். சிவபெருமான் முதலாக இன்றைய அரசியல் தலைவர்கள் வரை இவ்வாறு உலா வந்தவர்கள் பலர். உலா இலக்கியங்களும் ஏறத்தாழ எழுபதுக்கும் மேல் உள்ளன.

ஒட்டக்கூத்தர், மூன்று சோழ அரசர்களுக்கு ஆசிரியராக இருந்தவர். ஒவ்வொருவர் மீதும்-விக்கிரமசோழன், குலோத்துங்கசோழன், இராசராசசோழன் ஆகியவர்கள் மீது-உலாப்பாடினார். இந்த மூன்று நூல்களும் சேர்ந்து மூவர்உலா எனப்படுகிறது. Ôகோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுவிட்டார்.

ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை, ஞானவிநோதன் உலா (தத்துவராயர்), சிவஞான பாலைய தேசிகர் உலா (சிவப்பிரகாசர்), சிவந்தெழுந்த பல்லவராயன் உலா எனப் பலவகை உலாக்கள் உள்ளன. ஒட்டக்கூத்தர் காலத்திற்குப் பிறகு பெரும்பாலும் இறைவன்மீது மட்டுமே
-குறிப்பாகச் சிவபெருமான்மீது மட்டுமே-உலாக்கள் மிகுதியாகப் பாடப்பட்டுள்ளன. ஆதி உலா சைவச்சார்பானதாக அமைந்ததாலோ என்னவோ, பிறகும் சிவபெருமான்மீதே உலாக்கள் பல அமைந்தன. திருமால் மீது உலாக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில முக்கியமான நூல்கள்-
திருப்பூவணநாதர் உலா கந்தசாமிப்புலவர் இயற்றியது
மதுரைச் சொக்கநாதர் உலா திருமலைநாதர் இயற்றியது
திருவானைக்காவுலாவின் ஆசிரியர் காளமேகப் புலவர்
ஏகாம்பரநாதர் உலாவை இயற்றியவர்கள் இரட்டையர்
திருக்காளத்திநாதர் உலா சேறைக் கவிராஜபிள்ளை இயற்றியது
திருவாரூர் உலா, திருக்கழுக்குன்றத்து உலா அந்தகக் கவி வீரராகவர் இயற்றியது

உலா இலக்கியம், உலாப்புறம் என்றும், உலாமாலை என்றும், பவனி என்றும், பவனியுலா என்றும் வழங்கிவந்திருக்கிறது. உலாப்புறம் என்ற சொல், இந்த இலக்கியத்தைப் புறத்திணை (பாடாண்) இலக்கியமாகவே பழங்காலத்திலும் கணித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

உலா இலக்கியத்தின் மரபு அல்லது இலக்கணம் விசித்திரமானது. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல்கொள்ளும் வண்ணம் தலைவன் ஒருவன் வீதியில் உலா வந்தான் என்று கலிவெண்பாவால் இந்த இலக்கியம் பாடப்பெறுதல் வேண்டும் என்பது பாட்டியல் நூல்கள் யாவும் கூறும் இலக்கணம். அதாவது, தலைவன் ஒருவன் பவனி வருகிறான்; தெருவில் அவனைப் பார்க்கும் பெண்கள் அனைவரும் காதல் கொள்கின்றனர் என்பது இந்த இலக்கியத்தின் விஷயம்.

தெருவில் ஒரு ஆண்மகனைப் பார்க்கும் பெண்கள் அனைவரும் எப்படிக் காதல் கொள்வார்கள்? இதனைப் பழங்காலத்தில் பெண்களின் கற்புப் பிரச்சினை ஆக்கிவிட்டார்கள். முதல் உலாநூல் தோன்றியது கி.பி. எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் என்றால், இந்த விவாதம் பெருங்கதை என்னும் காப்பியம் தோன்றிய கி.பி. பத்தாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டது.

உத்தம மகளிர் ஒழிய மற்றைக்
கன்னியர் எல்லாம் காமன் துரந்த
கணையுளம் கழியக் கவினழி வெய்தி….வருந்தினர்

என்று பெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர் கூறுகின்றார். அப்படியானால் நமக்கு முதலில் எழுகின்ற வினா: ஒவ்வொரு ஊரிலும் உத்தம மகளிரைத் தவிர ஏனைமகளிர் (வேசியர்கள்) பழங்காலத்தில் அவ்வளவு மிகுதியாக இருந்தார்களா?

தொல்காப்பியப் புறத்திணையியலில், “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” (31) என்னும் சூத்திரம் வருகிறது. “கடவுள் உள்ளிட்ட தலைமக்கள் ஊரினுள் யாவர் முன்னும் தோன்றுவது உரியது” என்பது இதற்குப் பொருள். இதில் தலைவனைப் பார்த்துப் பல பெண்கள் காதல் கொள்ளுகின்ற செய்தி எதுவும் இல்லை. ஆனால் உரையாசிரியர்கள், தோற்றம் என்பதற்குக் காமத்தோற்றம் என்று பொருள் கூறியுள்ளனர். அதாவது, “ஊரில் காமப்பகுதி நிகழ்வதும் உரியது” என்று சொல்கின்றனர். நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர், இதன் உரையில், “அது பின்னுள்ளோர் எழுபருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம்” என்று கூறினார். மேலும் அடுத்த சூத்திர உரையில் “ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றி குலமகளிர்க்குக் கூறப்படாது” எனவும் கூறியுள்ளார். அதாவது காதல் கொண்ட எழுபருவப் பெண்களும் பரத்தையரே அன்றிக் கற்புடைய குலமகளிர் அல்ல என்கிறார். இதையொட்டியே இன்னும் சில ஆசிரியர்களும்,

“கணவனை மணந்து வாழும் காரிகையர் எவரும் உலாப்போதரும் தலைமகனைக் கண்டு காதல்கொண்டு மயங்குவதாக உலா நூல்கள் யாண்டும் பாடுவதில்லை. எனவே மகளிர் கற்பொழுக்கத்திற்கு மாசு கற்பிப்பதாக உலா நூல்களைப் பழித்தல் ஒரு சிறிதும் அமையாது”

என்று கூறியுள்ளனர். மேலும்

“மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்ப தொன்றே யன்றோ? இங்ஙனம் உள்ளத்துணர்ச்சிகளை ஒரோவழி உள்ளபடி எடுத்துப்பாடுதல் ஒருபெருங் குற்றமாகாது”

என்றும் கூறியுள்ளனர்.
ஏழு பருவப் பெண்கள் ஓர் ஆடவனைக் கண்டு காமுறுதலை “உள்ளபடி எடுத்துப்பாடுதல்” என்கிறார் முருகவேள் என்னும் புலவர், சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள் என்னும் நூலில். நாம் இதனை அதீத கற்பனை அல்லது மிகையான புனைவு என்கிறோம்.

உலாநூல் இயற்றப்பட்டமைக்கு வேறு விதத்திலும் அறிஞர்கள் காரணம் கூறியுள்ளனர்.

“வீரத்தில் விழுப்பம் பெறக் காதலை மறந்து கடமையிற் கருத்துச் சிறந்து ஓயாது போர்மேற் செல்லும் விருப்பமிக்க மன்னவனுக்கு, அவன் இளமையின் எழில் தோன்ற, உலாப்போந்த காலத்து அவன் எழில்கண்டு காதல் கொண்டனர் மாதர் பலர் என்று கூறினால் மன்னனுக்குப் போர்மேற் சென்ற கருத்துமாறித் தன் கற்புடைய தலைவிமேற் காதல் சிறந்து இன்பம் துய்ப்பான், மறம் குறையும் அறம் பெருகும், இன்பம் நிலவும்” என்கிறார் செ. வேங்கடராமச் செட்டியார். அதாவது அரசனைப் போரிலிருந்து திருப்பிக் காதல் வாழ்க்கை யில் ஈடுபடுத்த அவன்மீது உலாப்பாடுவது ஒன்றுதான் வழியாம்!

உலா இலக்கியத்தை வேறு வகையிலும் சிலர் நோக்கியுள்ளனர். சான்றாக, திருக்கயிலாய ஞானவுலாவில், பேதை என்பது சேரமான் பெருமாளைக் குறிக்கும் (கடவுட்காதலின் ஆரம்பப் பருவத்தில் உள்ளவர்) என்றும், பேரிளம்பெண் என்பது சுந்தரமூர்த்தி நாயனாரைக் குறிக்கும் (முற்றிய பக்தியில் ஊன்றியவர்) என்றும் உருவகப் பொருள் சொல்வார்கள். இதேபோல, எழுபருவமாதர் என்பது எழுவகையாக வேறுபட்ட-அதாவது பக்குவநிலையில் சிறிது சிறிது வேறுபாடு உடைய பக்தர்களையே என்றும், அவர்கள் காதலித்ததாகக் கூறியது இறைவன்பால் அவர்கள் அன்புகொண்டதையே என்றும் உரைப்பார்கள். ஆனால், கடவுளர் மீதும், அரசர்மீதும், அடியார் மீதும், ஞானாசிரியர் மீதும் வள்ளல்கள்மீதும் உலாப்பாடுவது மரபாக இருந்துள்ளது. மேற்கண்ட உருவக விளக்கத்தை இறைவன்மீதான உலாவுக்குப் பயன் படுத்தினாலும், பிறர்மீது பாடிய உலாக்களுக்கு எப்படிப் பொருத்திப் பார்க்க இயலும்?

மகளிரைப் பருவ வகையால் பிரித்து நோக்கும் வழக்கம் சங்ககாலத்திலேயே தோன்றிவிட்டது என்று கூறுவார்கள்.
பேதையல்லை மேதையங் குறுமகள்
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து (அகம்.7)
என்ற அகநானூற்று அடியால் இம்மாதிரிப் பருவப் பகுப்பு இருந்தது என்பதை உணரலாம். ஆனால் எழு பருவப் பெண்களும் காதல் கொண்டனர் என்பதை நாம் (குழந்தைகளையும் மூதாட்டிகளையும் தவிர) அனைத்துப் பெண்களும் காதல் கொண்டனர் என்பதாகவே கொள்ளவேண்டும்.
5-7 வயதுள்ளவள் பேதை, 8-11 வயதுள்ளவள் பெதும்பை, 12-13 வயது மங்கை,
14-29 ஆண்டுகள் மடந்தை, 20-25 ஆண்டுகள் அரிவை, 26-32 தெரிவை, 33-40 பேரிளம்பெண் என்பது தமிழிலக்கியங்கள் காட்டும் பெண்களின் பருவப் பகுப்பு. முதல் இரண்டு வகையினரை (பேதை, பெதும்பை) விட்டுவிட்டால் பெண்கள் பருவமடைந்த காலம் முதல் பூப்புநிற்கும் காலம்வரை உள்ள பகுதி என்று கூறிவிடலாம். இப்படி அனைத்துப் பெண்களும் ஒரு ஆண்மகனைப் பார்த்துக் காதல் கொள்வதாகப் பாடுவதைவிடப் பெண்களை அவமானப்படுத்தும் அல்லது அசிங்கப்படுத்தும் முறை வேறு எதுவும் இருக்க இயலாது என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

ஒவ்வொரு பருவ வருணிப்பும் பெண்களை போகப்பொருளாகவே பழங்காலத்தில் நோக்கியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. அவர்களை வாழ்க்கைத் துணைவர்களாகவோ, அறிவுள்ள மனித ஜீவிகளாகவோ புலவர்கள் எண்ணவில்லை.

மேலும் உலா இலக்கியத்தின் அமைப்பினை நோக்குவோம்.
தசாங்கம் எனப்படுவன, பாட்டுடைத் தலைவனது மலை ஆறு நாடு நகர் யானை குதிரை மாலை முரசு கொடி செங்கோல் என்னும் பத்து உறுப்புகள். இவற்றைப் புகழ்ந்துபாடுதல் உலா இலக்கிய மரபு. திருவானைக்கா உலாவில் தலைவனின் தசாங்கம் கூறப்படவில்லை.

பாட்டுடைத் தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் பகுதிகள் உலாநூலின் முதற்பகுதியில் இடம்பெறும். இவை முன்னிலை எனப்படும்.

எழுபருவ மாதரும் குழுமி நின்றும், தனித்தனியாக நின்றும், காதல் வயப்பட்டுக் கூறுவன பின்னிலை எனப்படும்.

சிற்றில், பாவை, கழங்கு, அம்மானை, ஊசல், கிளி, யாழ், புனலாட்டு, பொழில் விளையாட்டு முதலியன ஏழுவகைப் பருவமகளிர்க்கும் உரிய விளையாட்டுகளாகப் பன்னிருபடலத்தில் (137) கூறப்பட்டுள்ளன. உலாக்காண வருங்கால், இன்னின்னார் இன்னின்ன விளையாட்டை மேற் கொண்டிருந்தனர் என்று அவரவர் பருவத்திற்கேற்றவாறு அமைத்துப்பாடுதல் வேண்டும்.

உலகியல் ஒன்றும் அறியாத பேதைப்பருவத்தையும், அறிவறிந்த மங்கை முதலிய பருவங் களையும் பாடுதல் எளிது. அறிவும் அறியாமையும் கலந்த பெதும்பைப் பருவத்தின் இயல்புகளைப் பாடுதல் அரிது. பேசும் உலாவில் பெதும்பை புலி என்று பெதும்பைப் பருவத்தாள் செயல்களைப் பாடுவதன் அருமையைக் குறிப்பிடுவார்கள்.

கடவுளர் எழுந்தருளிவரும் நாளில், ஏழுபருவ மாதரும் முறையே கண்டு காமுற்றதாகக் கூறுதலே எல்லா உலாக்களிலும் காணப்படும் செய்தி. மாறாக, மதுரைச் சொக்கநாதர் உலாவில் மட்டும், மதுரையில் ஏழுநாள் விழா நடைபெற்றது என்றும், அந்த ஏழு நாளிலும் அழகியசொக்கநாதர் வெவ்வேறு ஊர்திகளில் ஏறி உலாப்போந்தார் என்றும், ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பருவப்பெண் மட்டும் காதல்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலா நூல்களில் இறைவனது பெருமை மிகச் சிறப்பானமுறையில் சொல்லப்படும். சான்றாக, திருக்கயிலாய ஞான உலாவில்,

பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான்
துறவாதே யாக்கை துறந்தான் – முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான்
ஊழால் உயராதே ஓங்கினான் (சிவபிரான்)

என்று வருணிப்பது சிறப்பாக அமைகிறது.

மேலும் உலா நூல்களில் பலவித வரலாற்றுச செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. சான்றாகத்
திருக்காளத்திநாதர் உலாவில்,

மதிவிக்ரமச் சோழன் வண் குலோத்துங்கன்
துதிபெற்ற ராசேந்த்ர சோழன் – கதிபெற்ற
செம்மையர்களாகத் திருப்பணிகளாற் பணியும்
மும்முடிச் சோழபுர மூர்த்தியான்

என்னும் பகுதியில், விக்கிரமசோழன், குலோத்துங்கசோழன், ராசேந்திரசோழன் ஆகியவர்கள்
மும்முடிச்சோழபுரக் கோயிலுக்குத் திருப்பணி செய்தனர் என்னும் செய்தி வருகிறது. திருப் பூவணநாதர் உலாவில் (இறைவன்)

மன்போசன் முத்துவடுக நாதேந்த்ரன் அருள்
பொன்போலும் ஆடை புனைந்தருளி

என வரும்பகுதியால், முத்துவடுகநாதன் இறைவனுக்கு விலையுயர்ந்த ஆடை அளித்த செய்தி தெரிகிறது.

புராணக்கதைகள் இறைவனைப் பற்றிய நூல்களில் இடம்பெறுவதில் வியப்பில்லை. திருவானைக்கா வுலாவில், சிவபெருமான் சித்தராக எழுந்தருளி, திருநீற்றையே கூலியாகக் கொடுத்தார் என்ற செய்தி கூறப்படுகிறது. திருவானைக்கா கோவிலின் வெளிமதில் திருநீற்று மதில் என்று அழைக்கப்படுகிறது.

எல்லா உலாநூல்களிலும் பெரும்பகுதியாக இடம்பெறுவது ஏழு பருவப் பெண்களின் வருணனை. அதிலும் பெண்களின் கண்ணையும், மார்பையும் வைத்தே அவர்களை வருணிக்கும் போக்கு மிகுதியாகக் காணப்படுகிறது. தங்கள் தங்கள் கற்பனைத் திறனுக்கேற்பப் புலவர்கள் ஏழு பருவப் பெண்களின் வருணிப்பிலும், அவர்கள்தம் விளையாட்டு வருணிப்பிலும் கவனத்தைச் செலுத்தியுள்ளனர். சான்றாகச் சிலபகுதிகளைக் காணலாம்.

பேதைப் பருவத்தாள் தெருவிற் சென்று சிற்றில் இழைத்துச் சிறுசோறு ஆக்கி விளையாடும் சிறுமி. இவள் “பொய்வாழ்வு அடைந்தோர் புலன்கள்போல் ஒன்றோடொன்று ஒவ்வாது அலைகின்ற ஓதியாள்” என்றும், “உலக மயக்கம் ஒழிந்தோர் மனம்போல் கலகம் சிறிதறியாக் கண்ணாள்” என்றும் மதுரைச்சொக்கநாதர் உலா வருணிக்கிறது. இதே பேதைப் பெண்ணைத், “தாயிற் சிறந்தபிரான் அல்லாத தெய்வங்கள் போலே இறந்து பிறக்கும் எயிற்றாள்” என்று திருவானைக்கா உலா வருணிப்பதும் ரசமாக உள்ளது.

பெதும்பையினை, “வேட்டவர்தம் புந்திகவர் வஞ்சனையும் பொய்யும் கொலையும் இடம் வந்துவந்து பார்க்கும் மதர்விழியாள்” என ஏகாம்பரநாதர் உலா வருணிப்பதும் சுவையானது.
மங்கைப் பருவத்தாளை, “வாட்கைக் குமரருக்கு மையற்பிணி கொடுத்து மீட்கத் தெரியும் விழியினாள்” என்று திருப்பூவண நாதர் உலா வருணிப்பது, பிணியும் அதற்கு மருந்தும் ஆயிழையே (பிணிக்கு மருந்து பிறமன் ஆயிழைத் தன்நோய்க்குத் தானே மருந்து) என்று திருக்குறள் கூறுவனை நினைவுபடுத்துகிறது.

மடந்தை “செங்கோல் ஒழித்தெவர்க்கும் தீங்குபுரிவேந்தர் வெங்கோலினும் கொடிய வேற்கண் ணாள்” என்கிறது மதுரைச்சொக்கநாதர் உலா.

அரிவை-தெரிவைப் பருவப் பெண்களைக், காமப்பயிற்சி மிக்குள்ளவர்களாக வருணிப்பதும் மரபு. திருப்பூவண நாதர் உலாவில், பேதை, தன்னகத்தில் சிற்றில் இழைத்துச் சிறுசோறு அட்டு அயர்கிறாள் என்றும், பெதும்பைப் பருவத்தாள் தான் வளர்த்த முல்லைக்கொடி அரும்பு எடுக்கக் கண்டு அதற்காகப் போதவிழ் புதுவிழா கொண்டாடுவதாகவும் வருகிறது. மங்கைப் பருவத்தாள் சித்திரமண்டபத்தில், சேடியரோடு அம்மானை ஆடிக்கொண்டிருந்ததாக வும், மடந்தை நிலாமுற்றத்தில் இருந்து விறலி பாடிய திருத்தலப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அரிவை, ஓங்கிய செய்குன்றிலிருந்து தோழியைத் தூது அனுப்ப விரும்பியிருந்ததாகவும், தெரிவை, மணமிக்க பூஞ்சோலையிலிருந்து ஓவியப் புலவன் வரைந்த பொன்னனையாளின் படங்களைக் கண்டு விரகவேதனை கொண்டதாகவும், பேரிளம்பெண் ஓங்குமணிமாடத்துள் ஒப்பற்ற அரியணையிலிருந்து முதற்பருவப் பெண்டிர்க்கு மோகநூலைக் கற்பிப்பதாகவும் கூறுகிறது திருப்பூவணநாதர் உலா. இத்தகைய காட்சிகளைக் காணும் நமக்கு மனத்தில் எழும் கேள்வி-பரத்தையர் குலப்பெண்கள் என்றாலும் இவர்களுக்கு வேறு வேலையே இல்லையோ?

உலா நூல்களின் பிற இயல்புகளாக நாம் கூறத்தக்கவை, அவற்றின் மிதமிஞ்சிய கற்பனை, அதன் விளைவாக எழும் பல்வேறு அணிகளும் வருணனைகளும். உலா இலக்கியத்தின் முன்னிலை, பின்னிலைக் கூறுகள் யாவற்றிற்கும் பொதுவாயினும், அந்த அந்த உலாப்பிரபந்தத்தின் நூலாசிரியரின் புலமைத்திறனுக்கு ஏற்றபடி கருத்துகளும் நடையும் கற்பனைகளும் காலப்போக்கில் உண்டான மாறுபாடுகளும் காணப்படும். அதனால் எவ்வளவு உலாக்கள் படித்தாலும் சலிப்புண்டாவதில்லை என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

காளமேகப் புலவரை ஒரு நகைச்சுவைத் தனிப்பாடற் புலவராகப் பலரும் அறிவர். அவர் திருவானைக்கா உலா பாடியுள்ளார். மங்கையின் கூந்தலை வருணிக்க வந்தவர், காவிரியாற்றின் அறல்போலும் ஓதியாள் என்கிறார். மாதவி, சண்பகம், பாலை, புன்னை, எழிற்பாடலி, கொண்மா, மகிழம், மரா, அசோகு, குரா என்னும் பத்து மரங்களும் மலராவிடில் இளம்பெண்கள் பண்பாடல், நிழல்படல், நட்டல், ஆடல் முதலியவற்றைச் செய்தால் மலரும் என்பர். ஆனால் அரிவைப் பெண் செஞ்சொல் பேசினாலே பட்டமரமும், மலையும் சித்திரமும் உயிர்பெற்றெழும் என்கிறார் காளமேகம்.

அம்மானை ஆடுதலைக் குறிக்கும்போது, அது எவ்வாறு வரும் எனத் தயங்கவேண்டாம், தானாகவே வரும் என்பதைப் புராணக்கதைகளினால் விளக்குகிறார்.
காவை அரனார்க்கு அன்று
நீர்விழுந்த ஆரம்போல் நேருங்காண், நாவலர்
அன்று ஆற்றில் இட்டபொருள் ஆரூர்க் குளத்துவர
என்றார்க்கு இதுவும் எளிது என்ன

இங்கு விருத்தாசலத்தில் பெற்ற பொன்னைத் திருமணிமுத்தா நதியில் இட்டு திருவாரூர் கமலாலயக் குளத்தில் சுந்தரர் அதனைப் பெற்ற செய்தி சொல்லப்படுகிறது. இம்மாதிரிப் புராணச் செய்திகளைப் பெய்து பாடப் பெரும் அறிவும் வேண்டுமன்றோ?

சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகள் திருவானைக்கா உலாவில் உள்ளன என்று நாம் கூற முடியும். ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு தலவிருட்சம்-மரம் உண்டென்றும் அதன்கீழ் இறைவன் உறைகிறான் என்றும் கூறுவது மரபு. மக்கள் இக்காலத்திற்போல அக்காலத்தில் மரங்களை வெட்டவில்லை, வழிபட்டனர். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு ஈசனுக்கு அடையாளம் அல்லவா?

நீணிலத்து,
ஐந்து நிலமும் அமைந்து கிளர்காவின்
வந்து வளர் தேமாவை மாமகிழை-முந்தியகல்
லாலை வடத்தை அருச்சுனத்தை ஆத்திதனைப்
பாலையை வேயைப் பலாத் தன்னை-நீலியை
புன்னையைக் கூவிளையைப் புன்கைப் புனக்கடம்பை
வன்னியைக் கொன்றையை மாதளையைத்-தன்னைச்
சினைதரு பாதிரியைத் தில்லையைக் காயாப்
பனையை இலந்தையைப் பராரையைப்-புனைகுருந்தை
நெல்லியை நோக்கினாள் நித்தருறை நீழலெனச்
சொல்லி யவற்றைத் தொழுதிட்டாள்

என்று ஒரு தலைவியின் செயல் கூறப்படுகிறது. இவ்வாறே கடம்பர்கோயில் உலாவிலும் சொக்கநாதர் உலாவிலும் மரங்களின் சிறப்பும் வழிபாடும் சொல்லப்பட்டுள்ளன. இன்று மக்கள் இவ்வாறு மரங்களை வழிபட்டால் போதுமே? சுற்றுச்சூழல் மாசுபாடும் வெப்பமும் பசுமைஇல்ல விளைவும் ஓசோன் ஓட்டையும் இருக்குமா? எவ்வித நூலிலும் நாம் காணக்கூடிய நற்கருத்துகள் பல இருக்கவே செய்யும்.

இறைவனை வழிபடும் பெண்ணொருத்தி சொல்கிறாள்-”யானும் நெடுமாலுடனே வந்தேன் மலைவேளைப் பெற்றேன்” என்று. “இறைவனாகிய உன் மனைவி மீனாட்சிதான் திருமாலுடன் பிறந்தவள், செவ்வேளாகிய முருகனைப் பெற்றவள் என்பது அல்ல, நானும் நெடுமாலுடனே வந்தேன் (நீண்ட மயக்கத்துடனே வந்தேன்), மலைவேளைப் பெற்றேன் (என்னோடு மலைக்கின்ற மன்மதனைப் பெற்றேன்)” என்று சிலேடையாகக் கூறுகிறாள். இத்தகைய சொற்சுவை எல்லா உலா இலக்கியங்களிலும் விரவிப் பரவிக் கிடக்கிறது.

தலசம்பந்தமான உலாக்களில் தலசம்பந்தமான செய்திகளும் தலப்பெருமையும் புராணக் கதைகளும் வரலாற்றுக் குறிப்புகளும் காணப்படுகின்றன. தெய்வத்தின்மீது இயற்றப்படும் உலாக்களில் பக்திச் சுவையும் ததும்பிநிற்கிறது. கவிஞர்கள் தத்தம் கல்வியறிவின் ஆழத்திற் கேற்ப யமகம், திரிபு, சிலேடை, மடக்கு, முரண், எண்ணணி முதலியவைகளை அமைத்துச் சொற்சுவையும் பொருட்சுவையும் ததும்பப் பாடியுள்ளனர் ஆதலின் அமைப்பு முறை ஒன்றாயினும் ஒவ்வொரு உலாவும் ஒவ்வொரு வகையிற் சிறந்து இன்பம் பயப்பதாகும் என்பது உலா இலக்கியம் பற்றிப் பழங்கால அறிஞர் கருத்து.

ஆயினும் காலத்துக்கு ஒவ்வாக் கற்பனையைக் கொண்டிருப்பதாலும் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கு உள்ளடங்கியிருப்பதனாலும் உலா இலக்கியங்களைக் கற்பார் எண்ணிக்கை இருபதாம் நூற்றாண்டிலேயே குறைந்துபோயிற்று. பிள்ளைத் தமிழ், தூது, கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்கள் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டபோதும் உலாவுக்கு அச்சிறப்பும் கிடைக்கவில்லை. சைவசமயம் தழைத்தோங்கி இருந்த ஒரு காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட இம்மாதிரி நூல்கள், இன்று பழங்கால இலக்கியங்களைக் கற்கவேண்டும் என்று எண்ணும் சிலருடைய வாசிப்புக்கு உட்பட்டவை ஆகிவிட்டன. நாடுகளுக்கும், ஏன், கோயில்களுக்கும் கூடக் காலத்தின்பாற்பட்ட எழுச்சியும் தாழ்ச்சியும் வருவதைக் காண்கிறோம். அவ்வாறிருக்கும்போது இலக்கியங்களுக்கும் அவ்வக் காலத்திற்கேற்ற உயர்வும் தாழ்வும் இருக்கத்தானே செய்யும்?


தூது இலக்கியம்

தூது இலக்கியம்

வானொலியில் பழைய பாட்டுகளை ஒலிபரப்புகிறார்கள். “அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ, தேன்அமுதான கவிபாடிச் சேதி சொல்லாயோ” என்ற பல்லவி ஒலிக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் பின்னால் வந்தால் “கைக்குட்டை காதல் கடிதம்” ஆகிறது. இப்படி இந்நாளிலும் காதலர்களுக்குள் ஏதேதோ பொருட்கள் தூது செல்கின்றன. அதேசமயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திலும், காதலர் களுக்கிடையே தூது நிகழ்ந்த செய்தி தெரிகிறது. இப்படிப் பழங்கால முதல் இன்றுவரை இலக்கிய கௌரவம் பெற்ற ஒன்றுதான் தூது என்பது. இலக்கிய வகைகள் மாறினாலும், இலக்கியப் பொருள் காலந்தோறும் மாறினாலும், இவ்வளவு தொடர்ந்த வீச்சு பிற இலக்கிய உத்திகள் எதற்கேனும் இருக்கிறதா?

தொல்காப்பியர் காலத்தில் காதல் தூதினைக் குறிக்க வாயில் என்ற சொல் பயன்பட்டிருக்கிறது. மேலும், அஃறிணைப் பொருள்களைத் தூதுவிடும் ‘ரொமாண்டிக்’ மரபும் அவர் காலத்தில் இல்லை போலத் தோன்றுகிறது.
தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப.
இப்படிப் பன்னிரண்டு பேரைமட்டும் தூது செல்வதற்கு உரியவர்களாகத் தொல்காப்பியர் சொல்கிறார். தூது என்பது தொல்காப்பியர் காலத்தில் அரசியல் அல்லது போர் சார்ந்த விஷயத்திற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது. தலைவன் தலைவி பிரிவு என்பது ஓதல் தூது போன்றவை காரணமாக ஏற்படலாம் என்று தொல்காப்பியமே சொல்கிறது.

“மலர், குயில், தென்றல், நிலவு, மேகம் முதலியவற்றை யெல் லாம் ஆண்டவன் எதற்காகப் படைத்திருக்கிறான் தெரியுமா? காதலர்களுக்கிடையே தூதுபோவதற்காகத்தான்” என்று கிண்டலடித் திருக்கிறார் புகழ்பெற்ற ஃபிரெஞ்சு நாவலாசிரியரான விக்டர் ஹியூகோ.

தூது என்பது சமஸ்கிருதச்சொல்தான். திருக்குறளில் தூது என ஒரு அதிகாரமே இருக்கிறது. தூது என்றால் செய்தி என்று பொருள். செய்தியைச் சொல்பவன் தூதன். பெண்பாலாயின் தூதி. சந்தேசம் என்ற சமஸ்கிருதச் சொல்லின் அர்த்தமும் இதுவே. காளிதாஸன் எழுதிய மேகசந்தேசம் பற்றித் தெரியாதவர் உண்டோ? காதலியைப் பிரிந்த காதலன், மேகத்தைத் தூது விடுவதாக அமைந்த சிறுகாப்பியம் இது. வேதாந்த தேசிகர் என்பவர் ஹம்ச சந்தேசம் (அன்னம்விடுதூது) எழுதியிருக்கிறார். தொடர்ந்து சமஸ்கிருதத்தில் மயூர சந்தேசம், சுக சந்தேசம், மனஸ் சந்தேசம், பவன தூதம் போன்ற பல தூது நூல்கள் தோன்றியிருக்கின்றன.

தமிழ்போலவே மலையாளத்திலும் தூது நூல்கள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் உண்ணு நீலி சந்தேசம் என்பது புகழ்பெற்றது. மயூர சந்தேசம் போன்று இன்னும் பிறகு தோன்றிய தூது நூல் களும் இருக்கின்றன. சிங்களமொழியில்கூட சேவல் சந்தேசம், சேலாலிஹினி சந்தேசம் போன்ற சந்தேச (அதாவது, தூது) நூல்கள் இருக்கின்றன. ஆனால் தெலுங்கிலும் கன்னடத்திலும் இந்த இலக்கிய வகை அவ்வளவாகப் புகழ்பெறவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

தொல்காப்பியர் அஃறிணைப் பொருள்களை வாயில்களாகக் குறிக் காவிட்டாலும், விடுவார்களா கற்பனைவளம் நிரம்பிய சங்கப் புலவர்கள்? அகநானூற்றில் தலைவி நண்டைத் தூதுவிட்ட செய்தி 170ஆம் பாட்டில் வருகிறது. ஐங்குறுநூறு 317ஆம் பாடலில் நெஞ்சைத் தூதுவிடுதலைப் பார்க்கிறோம். நற்றிணை 70ஆம் பாடல் சிறுவெள்ளாங்குருகினைத் தூது விடுகிறது. பரிபாடலில் இடம்பெறுகின்ற “தூதேய வண்டின் தொழுதி” என்ற தொடரால் வண்டினைத் தூதுவிடும் மரபும் அக்காலத்திலே வந்துவிட்டதைக் காண்கிறோம்.

இம்மாதிரி அகத்திணையில் காணும் தூதினைத் தொல்காப்பியர், ‘காமமிக்க கழிபடர் கிளவி’ என்ற தலைப்பில் அடக்குவார்.
சொல்லாமரபின் அவற்றொடு கெழீஇச்
செய்யாமரபின் தொழிற்படுத்து அடக்கியும்
என்பது பொருளியல் நூற்பா.

அகத்தில் மட்டுமின்றிப் புறத்திலும் தூது பயன்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞர் பெருமாட்டியான ஒளவையார், அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற செய்தியைப் புறநானூற்றில் காணலாம். வாழ்நாள் முழுதும் கோப்பெருஞ் சோழனைக் காணாத அவனுடைய உயிர்நண்பர் பிசிராந்தையார் அவனிடம் தூது விட்டதை ‘அன்னச் சேவல்’ என்னும் 67ஆம் புறநானூற்றுப்பாட்டில் காண்கிறோம்.

தூது அதிகாரத்தில் தூதனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாப் பண்புகளைப் பட்டியலிட்டிருக்கிறார் வள்ளுவர். குறிப்பாகக், கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை
என்ற குறள் கவனிக்கத்தக்கது. அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல் வன்மை, பண்பு, அழகிய தோற்றம் போன்ற பண்புகள் பலவும் தூதனிடம் இருக்க வேண்டும். இவை மட்டும் போதாது. தான் ஏற்றுக்கொண்ட கடமையை நன்றாக உணர்ந்து, தகுந்த காலத்தையும், வாய்ப்பான இடத்தையும் தேர்ந்தெடுத்துத் தெளிவாக எண்ணிச் சொல்ல வேண்டும். இந்தக் குறளைப் படிக்கும்போது அக்பர் பாதுஷாவிடம் தூது சென்ற தெனாலி ராமனின் சாதுரியமான செயல் நினைவுக்கு வருகிறது.

பரிமேலழகர் “தான் வகுத்துக் கூறுவான், கூறியது கூறுவான்” எனத் தூதர் இருவகைப் படுவர் என்கிறார். முதலாமவன் அமைச்ச னுக்கு ஒப்பானவன் என்று பாராட்டுகிறார். வள்ளுவரே தூதினை அமைச்சு என்ற இயலில் அல்லவா வைத்திருக்கிறார்?

தமிழில் திருக்குறளுக்குப் பின் வந்தவை காப்பியங்கள். இவற்றில் தூது நிகழ்வுகள் இல்லாமல் இருக்குமா? தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்திலே, கோவலனைப் பிரிந்த மாதவி, முத லில் வயந்தமாலையைத் தூது விடுகிறாள். அவன் அதை மறுத்துவிட்டுக் கண்ணகியோடு மதுரைக்குச் சென்றுவிடுகிறான். இரண்டாவது முறையாக மாதவி கோசிகமாணி என்பவனை தூது விடுக்கிறாள்.

சீவக சிந்தாமணியில், குணமாலை சீவகனுக்குக் கிளியைத் தூதாக விடுக்கும் செய்தியைப் பார்க்கிறோம். பக்திப்பாடல்களில் தூதுக்குப் பஞ்சமேயில்லை. நாயன்மார்களும் ஆழ்வார்களும் போட்டிபோட் டுக் கொண்டு தங்களை நாயகிகளாகப் பாவித்து, தங்கள் நாயகர் களான சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் எல்லாவித அஃறி ணைப் பொருள்களையும் தூது விட்டிருக்கிறார்கள்.

தமிழில் பக்திக்காலத்திற்குப் பின் புராண காலம் வருகிறது. புராணங்களில் பல தூதுச் செய்திகள் இடம்பெறுவதை நோக்குகி றோம். இராமாயணத்தில் அனுமன் தூது, அங்கதன் தூது ஆகியவை இடம் பெறுகின்றன. மகாபாரதத்தில் உலூகன் தூது, சஞ்சயன் தூது, கிருட்டினன் தூது போன்றவை இடம்பெறுகின்றன. அதேபோலக் கந்தபுராணத்தில் வீரபாகுதேவர் தூது அமைகிறது. இவை யாவும் போர்த் தூதுகள். போருக்கு முன்னர் சண்டையா, சமாதானமா என்று வினவும் பாங்கில் அமைந்தவை. பெரிய புராணத்தில் ஆரூரர் (சுந்தரமூர்த்தி நாயனார்) பொருட்டு, ஐயோ பாவம், சிவபெருமானே தூதுவராக அலைந்த செய்தியைக் காணலாம்.

தனிப்பாடல்களிலும் தூதுப்பாக்கள் காணப்படுகின்றன. மதுரையில் சத்திமுற்றப் புலவர் பசியும் குளிரும் வாட்டும் வேளையிலும், “நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்” என்று தன் மனைவிக்குத் தூது விட்ட நிகழ்ச்சியினை நாம் அறிவோம்.

புராண காலத்திற்குப் பிறகு வருவது சிற்றிலக்கியக் காலம். சிற்றிலக்கியங்களில் கோவை என்பது பழமையானது. கோவை நூல்களில் மணமகனின் திருமணப் பொருட்டாகத் தூது விடுதல் என்ற நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். சிற்றிலக்கிய வகைகள் கலம்பகம், உலா என்றெல்லாம் பெருகியபிறகு தூது என்பதும் ஒரு சிற்றிலக்கிய வகை ஆகிறது. இவற்றில் எல்லாம் அஃறி ணைப் பொருட்களே தூதாகச் சிறப்புப் பெறுகின்றன.

அண்மைக் காலத்திலும் தூது நூல்கள் தோன்றியுள்ளன. உதாரண மாக, சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் தமது அமைச்சரவை பதவி ஏற்றபோது இந்தியைக் கட்டாய பாடம் ஆக்கினார். அதனை எதிர்த்து இந்திப் போராட்டம் தொடங்கியது. 1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கக்கூடாது என்று வற்புறுத்தும் ஒரு தூது நூல், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் வெள்ளை வாரணரால் ‘வெண்கோழி விடுதூது’ என்ற பெயரில் இயற்றப்பட்டது. இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இடையறாது தூதுசார்ந்த தனிப்பாட்டுகளும் நூல்களும் இடம் பெற்று வந்துள்ளன.

ஒருவகையில் தமிழில் தூது இலக்கியம் என்பது, கலம்பகம், உலா என்ற இரண்டின் கலப்பினால் தோன்றிய இலக்கிய வகை என்று சொல்லலாம். கலம்பகம் என்ற சிற்றிலக்கியத்தில், தூது என்பது ஓர் உறுப்பாக மட்டும் வருகிறது. நந்திவர்மனாகிய தலைவன் தன்னைக் கவனிக்காமல் இருப்பதைப் பற்றிக் கவலை கொள்ளும் தலைவி,
நந்தி மல்லையங்கானல் முதல்வனுக்குப் பழுதுகண்டாய் இதைப் போய்ப் பகர்வாய் நிறைப் பைங்குருகே
என்று குருகினைத் தூதுவிடுவதாகவும் வருகிறது. இதற்கு மாறாக, கிளவித் தலைவன் தனது காதலிக்குத் தூது விடுவதா கவும் கலம்பகங்களில் வருகிறது.
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறுங்
கூடுவருகுதென்று கூறுங்கோள் – நாடியே
நந்திச் சீராமனுடை நல்நகரில் நன்னுதலைச்
சந்திச் சீராமாகில் தான்.

இந்தக் கலம்பக உறுப்பாகிய தூது என்பதே அளவில் பெருகித் தூது என்னும் தனி இலக்கிய வகையாயிற்று என்று கூறலாம். அதே சமயம், கலிவிருத்தம், வெண்பா போன்ற பா வகைகளில் பாடினால் ஓட்டம் இருக்காதென்று தமிழ்க் கவிஞர் நன்கு அறிவர். தமிழ்க் கவிகளில் ஆசிரியப்பாவும், கலிவெண்பாவுமே ஓட்டத்திற்கு (விரைந்து எண்ணியதைப் பாடிச் செல்வதற்கு) ஏற்றதென்று கற்றோர்க்குத் தெரியும்.

இவற்றுள்ளும் கலிவெண்பா ஓட்டம் மிக்கது. ஆசிரியப்பாவைவிட எளிமையாக இயற்றக்கூடியது. தனிச்சொல்லும், ஈரடிகளின் ஏழு சீர்களும் சேர்ந்து நின்று, ஓர் இடைவெளியை உண்டாக்கிப் பிறகு மீண்டும் செல்லக்கூடியது. எனவே குதிரைப் பாய்ச்சலைப் போல ஒரு தாவுதல், ஒரு நிறுத்தம், மீண்டும் ஒரு தாவல், ஒரு நிறுத்தம் என அழகாகச் செல்வதற்கு இப்பாவகையைக் கவிஞர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். ஏற்கெனவே உலா என்ற இலக்கிய வகை கலிவெண்பா யாப்பில் பாடப்பட்டிருந்தது. எனவே தூது என்ற இலக்கிய வகையும் கலிவெண்பாவால் இயற்றப்படுவது வழக்கமாயிற்று. பிறகு இது 96 வகைப் பிரபந்தம் என்ற பட்டியலிலும் அடக்கப்பட்டுவிட்டது.
பயில்தரும் கலிவெண்பாவினாலே
உயர்திணைப் பொருளையும் அஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூது எனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெரிந்தே.
என்று இலக்கண விளக்கப் பாட்டியல் என்ற நூல் கூறுகின்றது.
தூது நூலில் முதலில் கடவுள் வணக்கம் அமையும். அது நூலிற்கு ஏற்பவோ, கவிஞரின் சார்பிற்கு ஏற்பவோ அமையலாம்.

தூது என்ற இலக்கிய வகையே ஒரு தலைவனின் பெருமைகளை எடுத்துரைப்பதாக அமைந்ததுதான். அந்தத் தலைவன் ஒரு அரசனாக, சிற்றரசனாக, ஜமீன்தாராகக்கூட இருக்கலாம், இறைவனாகவும் இருக்கலாம். பாட்டுடைத் தலைவனின் பெருமைகள் வெளிப்படையாகவே நூலில் பேசப்படும். பெரும்பாலும் பாட்டுடைத் தலைவன்மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலன் சிறப்புகளை எல்லாம் கூறி, அப்படிப்பட்டவனின் “பிரிவால் நான் வருந்துகிறேன், என் துயர்தீர்க்க அவனது மாலை வாங்கிவா” என்று தூதாகச் செல்லும் பொருளிடம் வேண்டுவதாக இந்த இலக்கிய வகை அமையும். எனவே இதனைக் கைக்கிளை என்ற திணையில் அடக்கலாம். இறைவன்மீது பாடப்படுவதாக இருந்தால் இதனைக் ‘கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம்’ என்று சொல்லுவார்கள். காதல்கொண்ட பெண்ணின் பெயர் கூறப்படுவதில்லை.
“அகலக் கவியில் பயின்று வரும் கலிவெண்பாவினாலே பாணன் முதலாகப் பாங்கன் ஈறாக விடுக்கும் உயர்திணைப் பொருளையும், கேளா மரபினவற்றைக் கேட்பனவாகக் கூறிவிடுக்கும் அன்னமும் கிளியும் வண்டும் மயிலும் குயிலும் முதலாயின அஃறிணைப் பொருளையும் இளையகலாம் முதியகலாம் இவற்றின் துனிநீங்கற்கு வாயிலாக விடுத்தல் முன்னர் உடன்படுத்தும் தூது எனப் பாட்டிலக்கணத்தை உணர்ந்த புலவர்கள்ஆராய்ந்து கூறினார்” என்று இலக்கணவிளக்கப் பாட்டியல் உரை சொல்லு கிறது. இளைய கலாம் என்பது அம்பல். முதியகலாம் என்பது அலர். துனி என்பது தொல்லை, துன்பம் என்று பொருள்படும்.

தூது சென்றுவரும் பொருட்கள் பற்றி இரத்தினச் சுருக்கம் என்னும் நூல் சொல்கிறது.
இயம்புகின்ற காலத்து எகினம் மயில் கிள்ளை
பயம்பெறு மேகம் பூவை பாங்கி – நயந்த குயில்
பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்தும்
தூதுரைத்து வாங்கும் தொடை.
எகினம் என்றால் அன்னம். கிள்ளை என்பது கிளி. பூவை என்பது நாகணவாய்ப்புள் (மைனா). பாங்கி என்றால் தோழி. பிரமரம் என்பது வண்டு. தூதுரைத்து வாங்கும் தொடை என்றால் தலைவனிடம் சென்று தலைவியின் செய்தியைக் கூறி அவன் மாலையை வாங்கிவரும் என்று பொருள். மேற்கண்ட அன்னம், மயில், கிளி, மேகம், நாகணவாய்ப்புள், தோழி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு ஆகிய பத்துப் பொருட்களே தூதுவிடற்கு உரியவை என்று அக்காலத்தார் கருதினர் போலும்.

ஆனால் கவிஞர்களின் கற்பனை இந்தப் பத்துப் பொருட்களோடு நிற்குமா? பிற்காலத்தில் அநேகமாகத் தூதுவிடப்படாத பொருளே இல்லை. வனசவிடுதூது, நெல்விடுதூது, கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது, மதுரைச்சொக்கநாதர் தமிழ்விடுதூது, ஸ்ரீபத்மகிரி நாதர் தென்றல்விடுதூது, மான்விடுதூது, அழகர் கிள்ளைவிடுதூது, புகையிலை விடுதூது, சிவஞான பாலைய சுவாமிகள் மீது சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய நெஞ்சுவிடு தூது என்றெல்லாம் தூது நூல்கள் பல எழுந்துள்ளன. பணம், தந்தி, செருப்பு, கழுதை போன்றவையும் தூதுவிடப்பட்டுள்ளன. இவற்றுள், செருப்பு, கழுதை போன்றவற்றைத் தூது விடுவதை வசைத்தூது என்பார்கள். பணம், கிளி, நெஞ்சு போன்ற பொருள்கள்மீது ஒன்றிற்கு மேற்பட்ட தூது நூல்கள் உள்ளன.

அநேகமாக தூது நூல்கள் யாவுமே பதினேழாம் நூற்றாண்டுமுதல் பாடப்பட்டவை. அதற்கு முன் தனித் தூதுநூல்கள் கிடையாது.
தமிழில் காணப்படும் தூது நூல்களை இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒருவகையைப் புனைவுத்தூதுகள் என்றும், இன்னொரு வகையை யதார்த்தத் தூதுகள் என்றும் சொல்லலாம்.

புனைவுத் தூதுகள் என்பவை ரொமாண்டிக் தன்மை உடையவை. அதாவது வழக்கமான காதல், வீரம் என்பனவற்றை மிகைப் படுத்திச் சொல்பவை. இவற்றில் தலைவனை நினைத்து ஏங்கும் தலைவி, ஏதேனும் ஒரு பொருளைத் தூதாக அவனிடம் செல்லுமாறு வேண்டுவாள். அவனுடைய மாலை வாங்கி வா என்பாள். இம்மாதிரித் தூது நூல்கள்தான் தமிழில் அதிகம். உதாரணத்திற்கு ஒன்றைப் பார்க்கலாம். ஸ்ரீபத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்று ஒரு நூல். இதனை இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதப் பிள்ளை என்பவர்.

பத்மகிரி என்பது திண்டுக்கல்லைக் குறிக்கும். அங்குள்ள இறைவன் மீது தென்றலைத் தூது விடுகிறாள் ஒரு தலைவி. “நந்துமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே”
என இவள் தென்றலை விளிப்பது சுவையானது. தலைவனின் சிறப்புகளையும் அவனது தசாங்கங்களையும் கூறித் “தாங்குபுயத்தான் தனக்கென் துயர் சொல்லி/ வாங்குகொன்றை மாலைகொண்டு வா” என்று ஆணையிடுகிறாள் அவள். இதுதான் தூது நூலின் வழக்கமான கதையமைப்பு.

தசாங்கங்கள் என்பவை பத்துப் பொருட்கள். தலைவனுடைய மலை, ஆறு, நாடு, நகர், தார் (மாலை), கரி (யானை), பரி (குதிரை), கொடி, முரசம், ஆணை ஆகிய பத்தினையும் பாடுவது தசாங்கம்.

இன்னொரு வகைத் தூது நூல்கள் யதார்த்தத் தன்மை கொண்டவை.. தலைவி தலைவனுக்குத் தூது விடுவதாக இவை அமைவதில்லை. மாறாக, மனைவியைப் பிரிந்து சென்ற கணவன், தன் மனைவியோடு சேர்த்து வை என்று தூதுப் பொருளை அனுப்புவதாக இவை அமைகின்றன. இவை அக்கால நிலையையும் வழக்கங்களையும் நன்கு எடுத்துக்காட்டுகின்ற வரலாற்றுச் சிறப்பு உள்ளனவாக அமைந்துள்ளன. விறலிவிடுதூது, பணவிடுதூது, தந்திவிடு தூது போன்றவை இப்படிப்பட்ட நூல்கள். இவற்றின் முடிவுகள், தூதுப் பொருளினால் “நான் வளமான வாழ்வு பெற்றேன்” என்று கதைத்தலைவன் சொல்வதாக முடியும்.

தந்திவிடுதூது ஏறத்தாழ 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எழுதப்பட்டதாகலாம். இது நகரத்தார் பற்றிய பாராட்டுரையாக அமைந்துள்ளது. தன் கதையமைப்பில் வழக்கமான தூதுகளைப் போல் அல்லாமல் முற்றிலும் வேறுபட்டுள்ளது. இதன் ஆசிரியர் ஏகாட்டூர் சிவசண்முகம் பிள்ளை.
சைவஅந்தணர் குலத்தில் தோன்றிய காங்கேயன் என்ற அந்தணன் ஒரு சோடச அவதானி. அதாவது பதினாறு செயல்களை ஒன்றாக நிகழ்த்தக்கூடியவன். அவன் சென்னை நகரைச் சுற்றிப்பார்க்க வருகிறான். அங்கே தனது கலைச் சிறப்பால் புகழ்பெறுகிறான். திருமணமும் நடக்கிறது.
ஒருநாள் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு வீட்டில் நாடக ஒத்திகை நடக்கும்வீட்டில் நுழைகிறான். தனது அறிவினால் அந்த நாடகக் குழுவுக்கு ஆசிரியராகிறான். நாடகம் யதார்த்தமாக இருக்கவேண் டுமென்பதால் பெண்வேடத்திற்கு வழக்கம்போல ஆண்களை நடிக்க வைக்காமல், ஒரு நடிகையைத் தேடுகிறான். மோகன சிகாமணி என்ற தாசியைக் கண்டுபிடிக்கிறான். அவள்மீது மோகம் கொள்கிறான். மனைவி சண்டையிட்டதால் சென்னையைவிட்டுப் பல ஊர்களில் நாடகம் நடத்திக்கொண்டே சுற்றுகிறான். நாடகத் தால் நஷ்டம் அடைந்த அவன், செல்வம் சேர்க்க தெய்வங்களின் உதவியை நாடுகிறான். பழனியிலுள்ள முருகப் பெருமான் அவதானியைச் செட்டிநாட்டுக்குச் சென்று பணம்பெறச் சொல்லு கிறான். அவ்வாறே பணக்காரனான காங்கேயன், தன் மனைவியுடன் சேர்ந்து வாழத் தந்தி கொடுக்கிறான்-அதாவது “தந்தியைத் தூதாக அனுப்புகிறான்”. இவ்வாறு ஒரு காத்திரமான கதையைக் கொண் டுள்ளது தந்திவிடுதூது என்ற நூல்.

தூதுநூல்களில் தூதாகச் செல்லும் பொருட்களைப் பாராட்டுவது மிகச் சிறப்பாக அமைகின்ற பகுதி. தந்திவிடுதூதிலும்,
மைக்கடல்சூழ்-பார்மன்னர்
வெவ்வேறு பாஷையால் ஆள்வர்-அதை
ஓர் பாஷையால் ஆளும் உத்தமனே
என்று விளிப்பது போன்ற பகுதிகள் சுவையானவை.

புனைவுத் தூதுகள் போலன்றித், தந்திவிடு தூது முடியும் வகை வேறு.
மனையாளைக் கண்டு என் வரலாறு அனைத்தும்-நினைவாய் உரைத்து அவள்தன் நெஞ்சின் சினமாற்றி-என்வருகை கூறில் நினையான் மறவேன் – ஆதலால் மன்னவனே தூதுபோய்வா என்று முடிகிறது.

“தந்திவிடுதூது கவிதாசக்தியிலும், கற்பனைத் திறத்திலும், சொல்லாட்சியிலும், உயர்ந்த இலக்கியத் தரத்தை எட்டிப்பிடிக்கும் வலு இல்லாத நூல்தான். என்றாலும் சென்ற தடத்திலேயே சென்று சிலம்பவித்தை காட்டாமல் விஞ்ஞான சாதனமான ஒரு கருவியைத் தூதுப் பொருளாகக் கொள்ளவும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை நகரில் மேலோங்கிநின்ற மேடைநாடக இயக்கத்தை ஒட்டி எதார்த்த நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தமது கதையம்சத்தை அமைத்துக் கொள்ளவும் அவர் முன்வந்து முயன்ற செய்கையே நமது பாராட்டுக்கும் கவனத்துக்கும் உரியதாகும்” என்று இந்நூலைப் பாராட்டி யிருக்கிறார் தொ.மு.சி. ரகுநாதன். யதார்த்த இலக்கிய உலகில் நிச்சயமாக ஓரிடம் தந்திவிடு தூது நூலுக்கு உண்டு என்பது அவர் கருத்து.

ஒரு திரைப்படப் பாடலில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பணத்தை விளித்து “எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்” என்று பாடுவார். அதில் பணம் எவ்வெவ்வாறு எங்கெங்கு முடங்கிக் கிடக்கிறது என்று இரசமாகச் சொல்வார். இதுபோலப் பணத்தை விளித்து தூது செல்லச் சொல்லும் நூலும் உண்டு. அதன் பெயர் பணவிடுதூது.

ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நூல் இது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. “பணத்தைத் தமது தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுத்ததிலேயே ஒரு விசேட முக்கியத்துவ மும் அழுத்தம் பாய்ந்த எதார்த்தத் தன்மையும் அடங்கியுள்ளன” என்று இந் நூலைப் பாராட்டுகிறார் ரகுநாதன்.

இந்த நூலிலும் கதைத்தலைவன் ஒரு அந்தணன்தான். திருவேங்கடநாதையன் என்பது அவன் பெயர். இவனும் ஒரு அவதானிதான். பாட்டுடைத்தலைவர் வேங்கடேசன் திருநெல்வேலியின் இராசப்பிரதிநிதி. அவரது பவனியைக் கண்டு, பின் அவரது கொலுவிருக்கைக்குச் சென்று திருவேங்கடத்தையன் தான் பாடிய வண்ணத்தை அரங்கேற்றுகிறான். வேங்கடேசன் மகிழ்ந்து பொருள் தருகிறார். நெல்லைக் கோயிலில் பூங்கோதை என்ற தேவரடியாளின்மேல் அவதானியின் கவனம் சென்றுவிடுகிறது. எனவே அவளைக் கூட்டி வைக்குமாறு பணத்தைத் தூது விடுகிறான். அவ்வளவுதான் கதை. கதையம்சம் என்று பிரதான மாக எதுவுமில்லை.
வேங்கடேசனைப் பாராட்டும்போது
போடுகின்ற வீட்டுவரி எப்பொழுதும் வேண்டாம் என நிறுத்தி, காட்டு வழிச் செல்வாரைக் காப்பாற்றி..
என வரும்பகுதி இராசப் பிரதிநிதியின் ஆட்சிச்சிறப்பைச் சொல்கிறது. பவனியைக் கண்டு அரசன் இருப்பிடத்திற்குச் செல்வது, ஒரு உலா இலக்கியம்போல இருக்கிறது.
இதன் முக்கியமான விஷயம், ஏறத்தாழ முன்னூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே பணத்தின் மகிமையை உணர்ந்து பாடியிருப்பது தான். பணத்தின் சிறப்புகள் பலவற்றையும் சொல்லி,
வல்லமைகள் சொல்வதென்ன? மானிடரெல்லாம் உன்னை அல்லது தேடும் பொருள் எது ஆண்டவனே?
என்று பணத்தையே ஆண்டவனாக்குவது வேடிக்கை. பணத்தின் மகிமையைப் பற்றி இத்துணை விரிவாகவும் ஆணித்தரமாகவும் வாழ்க்கை அனுபவத்தையட்டி வருணித்த வேறு எந்த ஒரு நூலையும் தமிழ்இலக்கியத்தில் காண்பதற்கில்லை என்றே சொல்லலாம். இதனால் இந்த நூலுக்குத் தமிழுலகில் தனியிடம் கிடைக்கிறது.

பிற்காலத்தில் எழுதப்பட்ட தூது நூல்கள் அனைத்தும் அஃறிணைப் பொருள்களையே தூது விடுவதாக அமைந்தன. இவற்றில் வேறுபட்ட அமைப்புடையவை விறலிவிடுதூது என்னும் நூல்கள். இரண்டு விறலிவிடுதூதுகள் கிடைக்கின்றன. சிதம்பரேசுவரர் விறலிவிடு தூது ஒன்று, கூளப்ப நாயக்கன் காதல் என்பது மற்றொன்று. முதலாவது நூல் மாரிமுத்துப் பிள்ளை என்பார் இயற்றியது. மனைவியைவிட்டு தாசியிடம் அலைந்த ஒருவன், பிறகு மனம்திருந்தித் தன் மனைவியிடம் திரும்பி வரமுயற்சி செய்வது இந்த நூலின் கதை. கோபித்துக் கொண்ட மனைவியிடம் ஒரு விறலியைத் தூதாக அனுப்பி அவள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு செய்வது நூலின்இறுதிப்பகுதியாக அமைகிறது. கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது நூலும் ஏறத்தாழ இதே பாணியில் அமைந்ததுதான்.

ஒரு கற்பனை தாசியை உருவாக்கி, அவளுடைய ஜாலங்களை யும் அவள் தாய்க்கிழவியின் சாகசங்களையும் வரிசைப்படுத்திக் காட்டி ஆசிரியர் தாசிவலையில் விழவேண்டாம் என்று எச்சரிக்கி றார் ஆசிரியர். ஒவ்வொரு ஆணும் தன் நிறையைப் பேணிக் கொண்டு தன் கற்புமிக்க மனைவியுடன் இல்லறம் நடத்தி வருவானானால், வேசியர் இருக்கமாட்டார்கள், ஏமாற்ற மாட்டார் கள் என்னும் கருத்தை வலியுறுத்த இந்நூல்கள் எழுதப்பட்டிருக் கலாம். ஆனால் இந்நூல்களைப் பயிலுவோர்க்கு எல்லாக் கோயில் தாசிகளுமே மிகமிகப் பொல்லாத ஈவிரக்கமற்ற பிசாசுகள் என்னும் எண்ணம் ஏற்படுமாறு அமைந்துள்ளன. ஒருவகையில் அக்கால நிலையைக் காட்டுவதாகவும் இந்த நூல்கள் அமைந்துள்ளன.
என்பாலில் கூட்டிவைத்த யாழ்விறலிக்கு ஆடைநிதி
அன்பாய்க் கொடுத்து ஊர்க்கு அனுப்பியே- துன்பம் தீர்ந்து
அன்று முதலாய் அளகேசனைப்போல
நன்றிபெற வாழ்ந்திருந்தேன் நான்
என்பது இந்த நூலின் முடிவுப் பகுதி.

புனைவுத்தூதுகளின் அமைப்புக்கு எடுத்துக்காட்டாக பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய அழகர் கிள்ளைவிடு தூது என்ற நூலையும் பார்க்கலாம். தூதுசெல்லும் கிளியின் மாண்பு, பாட்டு டைத் தலைவன்(கள்ளழகர்) பண்பு, தலைவனின் கோடைத் திருவிழாச் சிறப்பு, தலைவி தன்னிலையைக் கிளிக்கு உணர்த்துதல், தூதுக்குத் தகுதியுடையவள் நீயே எனல். தூது செல்வதற்குரிய இடம் சமயம் எடுத்துரைத்தல், பிறகு தலைவனின் மாலை வாங்கி வா என்றல் என இதன் பகுதிகள் அமைகின்றன. இறுதியாக
அருமாலை நீக்கும் அழகன் புயத்து-
மருமாலை நீ வாங்கி வா
என முடிகிறது இந்நூல்.

முற்றிலும் புனைவுத்தூதாகவும் இல்லாமல், யதார்த்தத் தூதாக வும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் தூதுநூல்கள் இரண்டு உள்ளன. ஒன்று தமிழ்விடுதூது. இன்னொன்று புகையிலை விடுதூது.

சீனிச் சர்க்கரைப் புலவர் என்பார் பாடியது புகையிலைவிடு தூது. இதன் காலம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. இந்த நூலின் பாட்டு டைத் தலைவர் பழனிமலை முருகக்கடவுள். சிறிய நூல்தான். இந்நூலின் 59 கண்ணிகளில் 53 கண்ணிகளில் புகையிலையின் பெருமை பேசப்படுகிறது.
புகையிலைக்கு பிரம்ம பத்ரம் என்று ஒரு பெயருண்டு. பிரம்ம பத்ரம், புகையிலை என்ற பெயர்கள் வந்ததற்குக் காரணங்கள் சொல்லப்படுவது சுவையானது. சிவன், திருமால், பிரமன் ஆகிய மூவரிடமும் மூன்று இலைகள் பார்த்துக்கொள்வதற்காகத் தரப்பட்டன. முதல் இருவரும் தங்கள் இலைகளைக் கெட்டுப் போக்கிவிட்டனர். ஆனால், “நமது பத்ரம் போகையிலை” என்றானாம் பிரமன். போகயிலை என்பது புகையிலை என்று திரிந்தது. பிரமன் வைத்துக் காப்பாற்றியதால் பிரம்மபத்ரம் என்ற பெயர் வந்தது. இப்படிப் புகையிலை பற்றிப் பலபடப் பேசும் இந்தநூலின் கடைசி 6 கண்ணிகளில்தான் முருகப்பெருமானுக்குச் செய்தி சொல்லப் படுகிறது. “நண்ணிய மாதவத்தோர் நாடோறும் தேடுகின்ற புண்ணியமான புகையிலை” என்றும், “வர்த்தகர்க்கு லாபமும் நம்பு விடர்க்குச் சல்லாபமும் காட்டும் நயக்காரன்” என்றும் புகையிலையைப் பாராட்டும் பகுதிகள் நயமானவை. புகையிலை விளையும் பகுதிகள்-அதன் பெருமைகள் ஆகியவை நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. “மோகப் பயிர் – பூராய மான பொருளை வெளிப்படுத்தும் சாராயந்தான் உனக்குத் தம்பியோ” என்று புகையிலையைச் சொல்வது ரசமானது.

தமிழ்விடுதூதும் இதுபோன்றதுதான். கதையமைப்பில் புனைவுத் தூது வகையைச் சேர்ந்தது இது. ஆனால் தூதுக்குத் தேர்ந்தெடுக்கும் பொருள், தலைவி மாலைவாங்கிவா என்று சொல்லும் கதைப்பகுதியைவிட முக்கியத்துவம் பெற்றுவிடுவதால் இது புனைவுத் தூது வகைக்கும், யதார்த்தத் தூது வகைக்கும் இடையில் நிற்பதாகிறது.

தமிழ்விடுதூதில், மதுரைச் சொக்கநாதரிடம் காதல் கொண்ட தலைவி தன் காதலைத் தெரிவித்து அவர் இசைவறிந்து வருமாறு தமிழைத் தூதனுப்பி வைப்பதாகப் பாடப் பெற்றுள்ளது. 268 கண்ணிகள் இதில் உள்ளன. ஆனால் தலைவியின் காதலைச் சொல்வதோ, மதுரைச் சொக்கநாதரின் பெருமையைச் சொல்வதோ முக்கியமல்ல. தமிழ்தான் இந்த நூலின் தலைமைப் பொருள். “துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க மறவாதே தூது சொல்லி வா” என்று வழக்கமாகத் தலைவி தூது விடும் பாங்கில் அமைந்தாலும், தமிழே நம் கவனத்தை யெல்லாம் ஈர்த்துக் கொள்கிறது.

“அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே” என்று கேட்கும் புலவர்,

“இருந்தமிழே உன்னால் இருந் தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

என்று தமிழால் மட்டுமே தாம் இருப்பதாகச் சொல்லும் பகுதி போற்றத்தக்கது, சுவையானது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

ஒவ்வொரு சிற்றிலக்கியத்திலும் ஒரு சுவையான பகுதி, தலைமையான பகுதி உண்டு. உதாரணமாக, பிள்ளைத் தமிழ் என்றால் அம்புலிப் பருவத்தில் சாமபேத தானதண்டம் என்னும் நான்கு வகை உபாயங்களையும் பயன்படுத்திக் குழந்தையோடு விளை யாட வருமாறு நிலவை அழைக்கும் பகுதி அமையும். அது போலவே தூதுவிடத் தேர்ந்தெடுத்த பொருள் தவிரப் பிற உயிர்களோ, பொருட்களோ தூது செல்லத் தகுதியற்றவை என விலக்கும் பகுதி எல்லா தூது நூல்களிலும் மிகச் சிறப்பான பகுதி. தமிழ் விடுதூதில் இது எப்படி அமைகிறது என்று காண்போம். தலைவி சிந்திக்கிறாள்.

அன்னத்தைத் தூதாக அனுப்பலாம்.
அன்னந்தனை விடுப்பேன் அன்னந்தான் அங்கவரை
இன்னந்தான் கண்டறியாது என்பரே.

இங்கே மேற்சுட்டாக வருவது சிவபெருமானின் அடிமுடிகாணாக் கதை. ஒரு காலத்தில் ஈசன் அனற்பிழம்பாக நின்ற பொழுது, பிரமன் அன்னம் உருவெடுத்து இறைவனின் திருமுடியைத் தேடியும் காணவில்லை என்ற கதையை மனத்தில் வைத்துப் படிக்கும்போது இதன் சுவை புலப்படுகிறது.

சரி, அன்னம் வேண்டாம். வண்டைத் தூது அனுப்பினால் என்ன?
அப்பால் ஓர் வண்டை அனுப்பின் அவர் காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே.
வண்டைத் தூதாக அனுப்பினால், தலைவராகிய சிவபெருமான் “காமம் செப்பாதே (காதலைச் சொல்லாதே) என்றால் திகைத்துத் திரும்பிவிடுமே, என்ன செய்வது” என்கிறாள் தலைவி. இங்கு் மேற்சுட்டாக வருவது திருவிளையாடற்புராணக் கதை. தருமிக்குக் “கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ” என ஈசன் பாடல் வழங்கிய புராணம் இங்கு நினைவுகூரப்படுகிறது.

வண்டும் வேண்டாம், மானைத் தூது அனுப்பினால் என்ன?
தப்பாது, மானைப் போய்த் தூது சொல்லிவா என்பேன் வல்லியப்பூந் தானைப் பரமர்பால் சாராதே.
மானைத் தூதாக அனுப்பினால் அது இறைவன் இருக்கும் பக்கமே போகாதே. காரணம், இறைவன் புலித்தோல் ஆடை அணிந்தவர். அதைக் கண்டு பயந்து அது ஓடிப்போய்விடும்.

சரி, மானும் வேண்டாம். கிளியைத் தூதனுப்பினால் என்ன?
ஏனைப்பூங் கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கையினம் ஆகி வலியானுக்கு அஞ்சுமே.
இறைவன் வலியான் என்னும் கரிக்குருவியைத் தன்னருகில் வைத்தார் என்பது திருவிளையாடற் புராணக்கதை. கிளி காக்கை யினம் ஆனதால் வலியானுக்கு அஞ்சி இறைவன் அருகில் போகாது.

என்ன செய்வது? மனத்தையே தூது விடுத்தால் என்ன?
இந்த மனத்தைத் தூதாய் ஏகு என்பேன் இம்மனமும்
அந்த மனோதீதர் பால் அண்டாதே.
இறைவன் மனத்தினால் எட்டமுடியாதவர். ஆகையினால் மனத்தைத் தூதாக அனுப்பியும் பயனில்லை.

ஆகவே நீ ஒருவனே இறைவனிடம் தூது செல்ல ஏற்றவன் என்று தமிழைப் பாராட்டி, ஒரு தொடை(மாலை) வாங்கி உதவாயோ என்று வேண்டுகிறாள் தலைவி.

இப்படித் தான் கொண்ட தூதுப் பொருளைத் தவிர வேறு எதுவும் செல்லாது என்பதற்குப் புனைந்து கூறப்படும் காரணங்களால் இப்பகுதி சிறப்படைகிறது. மேலும் ஒவ்வொரு விலக்கலிலும் கூறப்படும் மேற்சுட்டுக்கதைகள் சுவைபயக்கின்றன.

இறுதியாக, தூதுநூல்களின் இலக்கியத் தகுதி என்ன?
புனைவுத் தூது நூல்கள் வெறும் கனவு இலக்கியம், தப்பிப்பு இலக்கியம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. தென்றல் விடுதூது, மான்விடு தூது, கிள்ளைவிடுதூது போன்ற யாவும் இப்படிப்பட் டவைதான். இவை படிப்பதற்கு ரசமாக உள்ளன. ஆனால் வாழ்க் கைக்குப் பெரும்பயன் தருபவையா என்பது கேள்விக்குரியது. மேலும் ஒரு நூலைப் போலவே இன்னொரு நூலும் அமை யும்போது படிப்பவர்க்குச் சோர்வு ஏற்படுகிறது.
மாறாக, யதார்த்தத் தூது இலக்கியங்கள், வரலாற்றின் ஒரு பகுதியை நமக்கு விளக்கும் விதமாக அமைகின்றன. அறிவுரை சொல்கின்றன. அந்த வகையில் புனைவுத் தூது இலக்கிய வகைகளை விட இவை மேம்பட்டவைதான்.

ஆனால் இலக்கியம் என்பது வெறும் அறிவுரைக்காக அல்லவே? படைப்பாற்றல்-Creativity-என்பது இலக்கியத்தின் முக்கியப் பகுதி. தலைவன் தலைவி போன்றோர் தங்கள் ஆற்றாமையைத் தங்கள் தோழன் தோழியரிடம் கூறினார்கள். அவர்கள் அகப்படாத பொழுது? அவற்றையெல்லாம் குயிலோடும் மயிலோடும் நிலவோடும் தென்றலோடும் சொல்லிப் பார்த்தார்கள். இவ்வாறு இயற்கையையே சொந்தம் கொண்டாடுபவர்களாக ஆனார்கள் மனிதர்கள். இயற்கையோடு மனிதன் கொண்ட இடையறா உறவை, பிரிக்கமுடியாத அத்வைதத் தன்மையைத் தூது நூல்கள் உணர்த்துகின்றன என்று கொள்வோமே? தொல்காப்பியப் பொருளியலில்,
ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுவலிய நெறியால்
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர்
என்றும் தெரியாமலா கூறினார் தொல்காப்பியர்? மானிட இயல்பை நன்கறிந்தவர் அல்லவா அவர்?

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றதுபோல, அறிவியல், தத்துவ உண்மைகளுக்கெல்லாம் அப்பால், உலகின் சேதன அசேதனப் பொருட்களையெல்லாம் தன் உறவாகக் கொள்ளும் இந்த அத்வைதத் தன்மையல்லவா கவிதையுண்மை, வாழ்க்கையுண்மை என்று சொல்லப்படுகிறது? அந்த வகையில் கவிதையுண்மையின் சிறுபொறிகள் என்ற அளவில் தூது இலக்கியங்களும் நல்லிலக்கியமாகவே அமைகின் றன என்று சமாதானப்படுத்திக் கொள்வோமே!

——


பழந்தமிழும் இலக்கியத் திறனாய்வும்

பழந்தமிழும் இலக்கியத் திறனாய்வும்

1
தமிழ்த் திறனாய்வு வரலாற்றுத் துறையில் புகுபவர்களுக்கு எதிரில் முன்நிற்கும் முக்கியமான கேள்வி ஒன்று உண்டு. பழந்தமிழில் திறனாய்வு இருந்ததா இல்லையா என்ற கேள்விதான் அது.
இக்கேள்விக்கு உண்டு என்று விடை சொல்பவர்களும், இல்லை என்று சொல் பவர்களும் உண்டு. பெரும்பாலும் கல்வியியலாளர்கள் உண்டு என்பர். புதிய நோக்குடைய திறனாய் வாளர்கள் இல்லை என்பர்.
எந்த ஒரு மொழியிலும் வளமான படைப்புகள் இருக்கவேண்டு மானால் திறனாய்வு இருந்தே தீரவேண்டும். அது உள்ளார்ந்த தாகவோ, வெளிப்படையாகவோ இருக்கலாம் என்ற ஒரு வாதம் உண்டு. தமிழில் உள்ளார்ந்த திறனாய்வு இருந்ததென்று கூறிப் பல சான்றுகளையும் காட்டுவர். பழந்தமிழில் கவிதை இலக்கியம் மட்டுமே இருந்ததால், திறனாய்வுக்கருத்துகள் விதிகளாகச் சொல்லப்பட்டன என்பர்.
சான்றாக,
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல் (குறள்-644)
என்பது ஒரு குறள். இது இலக்கியம் படைப்பதற்கான விதியாகக் கொள்ளப்படலாம் என்பர். விமரிசம் என்ற சொல்லைப் பரிமேலழகர் 356ஆம் குறள் உரையில் பயன்படுத்துகிறார்.
நன்னூலில்,
பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல
சொல்லாற் பொருட்கு இடனாக உணர்வினில்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்
என வரும் கருத்தையும் சான்று காட்டுவர். மிக முக்கியமாக, கம்பர், தமது இராமாவதாரத்தில், நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும், மோசமான கவிதை எப்படிஇருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதாகப் பின்வரும் சான்றுகளைக் காட்டுவர்.
புவியினுக்கணியாய்
ஆன்ற பொருள் தந்து
புலத்திற்றாகி
அவியகத் துறைகள் தாங்கி
ஐந்திணை நெறியளாவிச்
சவியுறத் தெளிந்து
தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.
கோதாவரியாறு, சான்றோர் கவிபோன்று காட்சியளித்ததாம். நல்ல கவிதை தெளிந்த ஆற்றுநீர் போன்றிருக்கவேண்டும் என்கிறார்.
அதேசமயம், கீழான கவிதை,
பொன்விலை மகளிர் மனம்எனக் கீழ்ப்போய்ப்
புன்கவியெனத் தெளிவு இன்றி
அகழி நீர்போலக் கிடந்தது
என்கிறார். ஆனால் தெளிவு என்ற ஒன்றை மட்டுமே இன்றைக்கு இலக்கியத்தின் அளவுகோலாகப் பயன்படுத்தமுடியமா?
இம்மாதிரி எடுத்துக்காட்டுகளை நோக்கினால், ஓரளவு பழந் தமிழில் திறனாய்வு மனப்பான்மை இருந்ததாகக் கொள்ளலாம். ஆனால் அதைப் பழந்தமிழர்கள் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பதும் எந்த நூலையும் திறனாய்வு நோக்குடன் அணுகவில்லை என்பதும் உண்மை. அதன் கோட்பாட்டு அம்சங்களில் சற்றேனும் கவனம் செலுத்தவில்லை என்பதும் உண்மை.
இம்மாதிரி தெளிக்கப்பட்டுள்ள கருத்துகளைவிட, தமிழின் முதல்நூலான தொல்காப்பியத்தில் அக்கறை காட்டவேண்டிய பகுதிகள் மிகுதி. தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் ஒரு கவிதையியல் நூல்.
தமிழிலக்கியப் பரப்பு மிகுதி. ஆனால் இதில் திறனாய்வு செய்யப்படாத துறைகள் மிகுதியாக உள்ளன. சங்க இலக்கியமும், காப்பிய இலக்கியமும் தற்கால இலக்கியமும் திறனாய்வுக்கு உட்படுத்தப்பட்ட அளவு, பிற இலக்கியங்கள் திறனாய்வு செய்யப் பட்டதில்லை. சான்றாக, பக்தி இலக்கியத்துறையில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. 1900 முதலாகவே திறனாய்வுத்துறை யில் இடைவிடாது எழுதிவந்தவர்கள் எண்ணற்றோர். ஆனால் இவர்களின் எழுத்தில் போற்றி மனப்பான்மையுடன் மட்டுமே பக்தி இலக்கியங்கள் அணுகப்படுகின்றன. நூல் என்றால் குற்றம் குறைகளும் இருக்கக்கூடும். ஆனால் பக்தி இலக்கியங்களில் குறை காண்பவர்கள் யார்? அத்தகைய தைரியம் யாருக்கு இருக்கக்கூடும்? அதனால் பக்தி இலக்கிய ஆய்வுகள் வளர்ந்த அளவு அதைப்பற்றிய திறனாய்வு வளரவில்லை. பக்தி இலக்கியத் திறனாய்வு என்பது ஏறத்தாழ 1990 அளவில்தான் புதிய மார்க்சிய வாதிகள், பின்நவீனத்துவவாதிகள், பெண்ணியவாதிகள், தலித்திய வாதிகள் ஆகியோரால் ஓரளவு செய்யப்படலாயிற்று.
பயத்தினால், திராவிட இயக்கத்தினரும் பக்தி இலக்கியங்க ளைத் தொடவில்லை. புராணங்களைக் குறை கூறினார்களே அன்றி, பக்தி இலக்கியத்தில் அவர்கள் ஆய்வு செய்யவே இல்லை. எனவே பெரியபுராணம் தவிர ஏனைப் பதினொரு திருமுறை நூல்கள், நாலாயிரப் பிரபந்தம், பிற (முஸ்லிம், கிறித்துவ) பக்தி இலக்கியங்கள் ஆகியவை எவ்விதத் திறனாய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை.
தமிழ் இலக்கியத் திறனாய்வில் இது ஒரு முக்கியக் குறை பாடு. பக்தி இலக்கியங்கள் மிகுதியாக உள்ள மொழிகளில் திற னாய்வுகள் வளர்வதில்லை, பாராட்டு நூல்கள் மட்டுமே வளரும் என்பதற்கு சமஸ்கிருதமும் ஒரு சான்று. சமஸ்கிருதத்தில் தமிழை விட மிகுதியாகவே கொள்கை நூல்கள் உள்ளன. ஆனால் அவற்றைப் பழைய பக்தி இலக்கியங்களுக்குப் பொருத்திப் பார்க்கும் செயல்முறைத் திறனாய்வுகள் இல்லை. பக்தி வரும் இடத்தில் ஆய்வும் மதிப்பிடலும் அழிந்துவிடுகிறது. வெறும் நம்பிக்கையும் விசுவாசமுமே எஞ்சுகின்றன.
திறனாய்வு என்பது முதலில் மதிப்பிடுதல், பிறகு அந்த மதிப்பீட்டிற்கான காரணங்களைப் பிறர் மனங்கொள்ளுமாறு விளக்குதல். ஆங்கிலத்தில், டி.எஸ். எலியட்டின் வார்த்தைகளில் சொன்னால் Evaluation and Elucidation. பழந்தமிழில் நூல்களைப் பாராட்டும் முறை இருந்தது. மதிப்பீடு இல்லை. வெறும் உரைகள் மட்டுமே இருந்தன, உரைகள், தாங்கள் கொண்ட மூல நூலா சிரியனை விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட தெய்வபுருஷனாக மதித்தன. விமரிசனம் இல்லை.
பழந்தமிழில் நூலின் தன்மையை ஆராய்ந்து மதிப்பிடுதல் இல்லாததால் திரிகடுகம், இன்னாநாற்பது, இனியவைநாற்பது போன்ற நீதிநூல்களும் இலக்கியமாக மதிக்கப்பட்டன. சைவ சாத்திரங்களும் இலக்கியத்தில் சேர்க்கப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுபோல எத்தனையோ குறைபாடுகளைக் காணலாம். தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் காணப்படும் நூற்பட்டியலைப் பார்த்தாலே போதும். இப்படிப்பட்ட தேர்ந்தெடுப்பு முறையே இங்கிருந்தது.
2
தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒரு கவிதையியல் நூல் என்பதில் ஐயமில்லை. அது இருபகுதிகளாகத் தெளிவாகவே அமைந்துள்ளது. அகத்திணையியல், புறத்திணையியல், களவி யல், கற்பியல், பொருளியல் ஆகிய முதல் ஐந்து இயல்களும் ஒருவகை-இலக்கியத்தின் பொருளைக் கூறும் பகுதி என்று கூறலாம். அடுத்த நான்கு இயல்கள்-மெய்ப்பாட்டியல், உவம வியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கும் இலக்கியவடிவத் தின் ஆக்கப்பகுதியைச் சொல்லுபவை என்பது வெளிப்படை. ஆகவே பொருளதிகாரமே கவிதையின் வடிவம்-உள்ளடக்கம் பற்றிய நூல்தானே தவிர, பலர் கருதுவது போல, வாழ்ககையைப் பற்றியதன்று.
தொல்காப்பியம் விளக்கும் திணைக்கோட்பாடு என்பது ஒரு எடுத்துரைப்பியல் அல்லது கதைசொல்லலியல் (Narratology). திணை எதுவாயினும் யார் கூற்று நிகழ்த்த வேண்டும், எந்த எந்தச் சூழல்களில் நிகழ்த்தவேண்டும் என வரையறுக்கின்ற ஒரு முயற்சி தொல்காப்பியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப் பாகக் களவியல், கற்பியல், பொருளியல் ஆகியவற்றின் உள்ளடக் கம் இதுவாகவே உள்ளது. ஆனால் இவ்வாறு தொல்காப்பியர் வரையறுத்த இந்த எடுத்துரைப்பியலைச் சங்க இலக்கியங் களைப் பிற்காலத்துத் தொகுப்புகளாக உருவாக்கித் திணை துறை வகுத்தோர் முழுதுமாகப் பின்பற்றவில்லை. அகநூல்களில் ஓரளவு பின்பற்றுகின்றனர், புறநூல்களில் பெரும்பாலும் பின்பற்ற வில்லை என்பது இன்னும் சற்றே துல்லியமான கூற்றாக அமையும்.
திணை, தமிழ்மொழிக்கேயுரிய தனிக்கோட்பாடு. உயர் திணை, அல் திணை என்ற அமைப்பும் அவ்விரண்டின் சார்பாகவே பால் பகுக்கப்படுவதும் தமிழுக்கே/திராவிட மொழிகளுக்கேஉரிய தனிஅமைப்புகள். உயர்திணை-அல்திணை என்பதி லுள்ள அதே திணைபற்றிய கருத்துதான் அகத்திணை, புறத்திணை என்பதிலும் அடிப் படையாக உள்ளது. இதனை நோக்கியே திணை என்பதற்கு ஒழுக்கம் என்றும் பொருள் சொல்லப்பட்டது.
திணை-துறை அமைப்புகள் யாவும் அக்காலத்தில் எவ்வாறு கவிதைஎழுதுவது என்பதற்கான விதிகளாக உருவானவை. மொழியின் எழுத்து-சொல்-தொடர்அமைப் புகளை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் பேசுவதுபோலவே, மொழியினால் விளையும் கவிதையை எந்த அடிப்படைகளில் படைப்பது எனச் சொல்வது பொருளதிகாரம்.
தொல்காப்பியத்தில் என்ப, என்மனார் புலவர் என்பதுபோல வரும் எண்ணற்ற தொடர்கள், தம் காலத்துக்கு முன்பு வரையறுக் கப்பட்ட விதிகளையே தொல்காப்பியர் கூறுகின்றார் என்பதைத் தெரிவிக்கும்.
தொல்காப்பியரின் பொருளதிகாரம், அரிஸ்டாடில் துன்பியல் நாடகங்களின் தன்மை பற்றி எழுதியுள்ள போயடிக்ஸ் என்ற நூலோடும், உயர்ந்த கவிதைகளின் கூறுகள் பற்றி கோலரிட்ஜ் எழுதியுள்ள பயோகிராபிய லிடரேரியா என்ற நீண்ட கட்டுரைத் தொடரோடும் ஒப்பவெண்ணக்கூடியதாகும் என்று பேராசிரியர் மருதநாயகம் ஒப்பிடுகின்றார். மேலும் அவர் உரையாசிரியர்களும் திறனாய்வாளர்களின் பணியையே ஆற்றியுள்ளனர் என்று அறுதியிடுகின்றார்.
திணைக்கோட்பாடு தமிழர்க்கே உரியது, தமிழர்களே உருவாக் கிய ஒன்று. இதனை வேறு இந்திய மொழிகளில் காணமுடியாது. எனவே இதெல்லாம் சமஸ்கிரு தத்திலிருந்து கடன் பெற்றதல்ல. இதனை இக்காலத் திறனாய்வுக்குப் பயன்படுத்தமுடியும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். நோக்கு, கூற்றெச்சம், குறிப் பெச்சம், உள்ளுறை, இறைச்சி போன்ற சிற்சில கருத்தாக்கங்க ளைத் திறனாய்வுக்குப் பயன்படுத்தலாம் என்று எடுத்துக்காட்டியி ருக்கிறார்கள். மலையாளக் கவிஞர் ஐயப்பப் பணிக்கர் போன்ற ஒர சிலர் தொல்காப்பியத்திலுள்ள திணைக்கோட்பாட்டினை இக்கால இலக்கிய ஆய்வுக்கு-குறிப்பாக நாவல்களுக்குப் பயன் படுத்தலாம் என்று அபிப்பிராயப் படுகின்றனர்.
சங்க இலக்கியம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அதைப் பின்னர்வந்தோர் தொகுத்துவைத்தனர். உதிரிப் பாக்களாகவே பெருமளவு எழுதப் பட்டதால் அதனைத் தொகுத்தோர் தம் சமகாலத்தினர்க்கும் பின்வந்தோர்க்கும் வழங்கிய குறிப்புகளே (notes) சங்கப் பாக்களுக் குரிய திணை துறைக் குறிப்புகள். அவற்றின் ஒரே சிறப்பு -சரி யாக இருப்பினும் தவறாக இருப்பினும் அகப்பாக்களுக்கு ஓரளவேனும்-முழுதுமாக அல்ல-சங்ககால/தொல்காப்பிய மரபைப் பின்பற்றுகின்றன என்பதே. (புறப்பாடல்களுக்குச் சங்ககால அல்லது தொல்காப்பிய மரபு பின்பற்றப்படவில்லை என்பது தெளிவு). இம்மாதிரித் திணை-துறைக் கோட்பாட்டை ஒரு கட்டமைப்பு (Semiotic Sturucture) என்று நோக்கமுடியும். குறியியல் கட்டமைப்பு என்பதன் உட்பொருள், இது பழங்காலத்தில் உருவாக் கப்பட்டு, தொடர்ந்து ஒருமரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதுதான். அதாவது சங்க இலக்கியம் பழங்கால முதல் தொடர்ந்து வரும் ஒரு இலக்கியக் கோட்பாட்டு மரபிற்குக் கட்டுப்பட்டு இயற்றப்பட்டது என்பதே இதன் வெளிப்படையான பொருள்.
3
தமிழில் திறனாய்வு பற்றிய கட்டுக்கதைகள் சில வழங்கி வருகின்றன.
காட்சி ஒன்று
உலகப் பொதுமறை என்று நாம் போற்றும் திருக்குறளைக் கையிலேந்தி அவையிலே அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறார் வள்ளுவர். (அவரது சாதி காரண மாக அவர் அரங்கேற்றம் செய்ய விடப்படவில்லை என்று நாம் நன்றாகவே யூகிக்க இயலும். திருவள்ளுவர் காலத்திலும் சாதியில்லை என்று வாதிப்பதானால், புலமைக் காழ்ப்புதான் காரணமாக இருக்கவேண்டும்.)
ஒளவையார் உதவிபுரிய வருகிறார். (ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவருக்கு-ஒடுக்கப்பட்டவரான பெண்தானே உதவிசெய்ய வேண்டும்?) தமது நூலினை சங்கப் பலகைமீது வைக்கிறார். (சங்கப்பலகையும் ஒடுக்கப்பட்ட கைவிஞனர்கள் செய்த படைப்பு தான். ‘கீர் கீர்’ என்று சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்த நக்கீரனா என்னிடம் வாதம் புரிவது என்று கேட்டவரல்லவா சிவபெரு மான்?) சங்கப்பலகை திருக்குறளை ஏற்றுக் கொள்கிறது. இடம் தருகிறது. அவ்வளவுதான். உலகப்புகழ்பெற்ற படைப்பாளராகத் திருவள்ளுவர் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டார். (மேற்சாதியினர் அற்புதச் செயல்களை மட்டுமே ஏற்றுக்கொள்பவர்கள்).
காட்சி இரண்டு
தருமி என்ற புலவன் கவிதை கொண்டுசெல்கிறான் பாண்டி மன்னன் அவைக்கு. அது அவன் எழுதிய கவிதை அல்ல. ‘இறைவனே’ எழுதிக்கொடுத்தது. (இறைவன் ஆதிக்க சாதிக்கு ஆதரவு.) அதில் பொருட்குற்றம் இருப்பதாக வாதிடுகிறார் நக்கீரர். (நக்கீரர் சங்கறுக்கும் தாழ்ந்தசாதி. உயர்சாதியினர் சொல்லும் ‘பொருள்’ ஒடுக்கப்பட்டவர்க்கு எப்படி உவப்பானதாகும்?) தருமியின் சார்பாக இறைவனே வாதாட வருகின்றான். நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்கிறார் நக்கீரர். (ஆதிக்கசாதியினர் தங்கள் கீழ்ப்பட்டவரின் வாழ்க்கையை அழித்து விடுவதாக மிரட்டும் மிரட்டலுக்கு அவர்கள் அஞ்சுவதில்லை.)
காட்சி மூன்று
அகப்பொருளுக்கு உரைசெய்கிறார் புலவர் ஒருவர். (அது இறைவனே செய்ததல்லவா?) அவரது உரையின் மதிப்பினைக் கண்டறிய முடியவில்லை. அப்போது உருத்திரசன்மன் என்னும் ஊமைப்பிள்ளை இருக்கிறான் பாண்டிநாட்டில். (இறைவனின் பெருமையை ஊமைகளே அறிவர். கண்டவர் விண்டிலர் அல்லவா?) அவன்முன் உரை படிக்கப்படுகிறது. ஊமையின் கண்ணில் நீர் வழிந்தோடுகிறது. மயிர்க் கூச்செறிகிறது. (இப்படிப் பட்ட மெய்ப்பாடுகளை ஏற்படுத்தினால்தான் அது உயர்ந்த கவிதை என்று டி.கே.சி. போன்றவர்கள் வலியுறுத்தினர்.) உடனே அவ்வுரை மிகச் சிறந்ததென்று அறிவிக்கப்படுகிறது.
குறுக்கீடு
பழங்காலத்தில் அரங்கேற்றங்கள் இருந்தனவே, அவற்றில் நல்ல நூல்களைச் சான்றோர் சிரக்கம்பம், கரக்கம்பம் செய்து (தலையை அசைத்தும், கைகளைத் தட்டியும்) பாராட்டினார்களே, அது திறனாய்வுக்கு அறிகுறியல்லவா என்று சிலர் கேட்கலாம். ஆனால் யாருக்கு அரங்கேற்றம் நடந்தது? ஆனானப்பட்ட திருவள் ளுவரும், கம்பருமே அரங்கேற்றம் என்ற பெயரால் அலைக்கழிக் கப் பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எந்த மூலைக்கு? சிறப்பாக நடந்த அரங்கேற்றம், ஒன்றே ஒன்று தான். அது சேக்கிழாரின் நூலுக்கு நிகழ்ந்தது. காரணம், இறைவனே வந்து அவருக்கு அடியெடுத்துக் கொடுத்தாராம். மெய்யான காரணம், அவர் சோழ மன்னனுக்கு அமைச்சராக இருந்தார் என்பதுதான்.
இவையெல்லாம் தான்தோன்றித்தனமான முடிவுகளாகவோ தெய்வக் குறுக்கீடுகளாகவோ காட்சியளித்தாலும், இவற்றில் ஒடுக்கப்பட்டவர் சார்பான பார்வையை நாம் காணமுடிகிறது என்பதற்குத்தான் இக்கதைகள். இவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய அளவைகள் இவைதான்.
‘நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே’ என்று இலக்கியத்தை ஆராய்ந்தவர்கள், சுவையான உரையைக் கேட்டு உருகி உருகிக் கண்ணீர் பெருக்கியவர்கள், இன்னா நாற்பதையும் இனியவை நாற்பதையும் இலக்கியமாக ஏற்பார்களா? ஆசாரக்கோ வையை இலக்கியப் பட்டியலில் சேர்ப்பார்களா?
குறுக்கீடு
சங்க இலக்கியங்களில் காண்கிறோம்: சங்கப் புலவர்கள் யாரிடம் பரிசில் வாங்கச் சென்றாலும் வரிசை வரிசை என்று கூறுகிறார்கள். வரிசையறிந்து (தரம் அறிந்து)தான் பரிசில் வாங்கு வர். இல்லையென்றால் மறுத்துவிடுவார்கள். வரிசை யறிந்து பரிசில் கொடுத்தால் குன்றியும் கொள்வேன்; வரிசையறியாது தந்தால் குன்றளவானாலும் மறுத்துவிடுவேன் என்று முழங்கு கிறார் வறுமைக்கே உதாரணமான புலவர் ஒருவர். எப்படி இந்த ‘வரிசை’யை அக்காலத்தில் அரசர்களோ அன்றிப் புலவர்களோ கண்டறிந்தார்கள்?
திருக்குறள் தோன்றிய காலத்திற்குப் பிறகு சில நூற்றாண்டு கள் கழித்து எழுதப்பட்ட பாக்களைக் கொண்ட திருவள்ளுவ மாலை என்றொரு நூல் இருக்கிறது. திருக்குறளின் பொருட்சிறப் பினை எடுத்துப் பாராட்டுகின்ற அருமையான சில கவிகள் அதில் இருக்கின்றன. சிலகவிகள் வெறும் சாற்றுக்கவி மரபிலும் இருக்கின்றன. (வழக்கம்போல் அதிலும் பிரமன், சரஸ்வதி ஆகிய கடவுளர்களெல்லாம் வந்து பாராட்டியதாகப் பாக்கள் இருக் கின்றன.)
காட்சி நான்கு
சான்றோர் அவையில் தண்டி கூறுகிறார்: “நூல்களின் பயன் அறம் பொருள் இன்பம் வீடு என்பனவற்றை உரைத்தல். இவை நான்கையும் கூறுவனவற்றைப் பெருங்காப்பியம் என்றும், ஒன்றோ இரண்டோ மூன்றோ மட்டும் கூறுவனவற்றைச் சிறுகாப்பியங்கள் என்றும் கூறலாம்.”
அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதுகிறார்: “தண்டியலங்கார விதிப்படி நோக்கும்போது சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தனித்தனியாகப் பெருங்காப்பியங்கள் அல்ல; இரண்டும் ஒன்றாகச் சேரும்போதுதான் பெருங்காப்பியம் ஆகின்றன”
நெடுநல்வாடையில் ஒரு காட்சி.
ஓர் அரசன் (இவன் யாரென்று தெரியாது, பாண்டிய மன்னன் என்பதைத் தவிர இவனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வேறுகுறிப்புகள் இல்லை). இரவில் தன் பாசறையைச் சுற்றி வருகிறான். அவனுடன் சில வீரர்களும் செல்கிறார்கள். ஒரு வீரனின் வேலில் வேப்பமாலை சுற்றப்பட்டிருக்கிறது. (வேப்ப மாலை அக்காலத்தில் பாண்டிய மன்னனுக்குரிய சின்னம்.)
நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்: “‘வேம்பு தலை யாத்த நோன்காழ் எஃகம்’ என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது வேப்பமாலையை உச்சியில் சுற்றிய வேல். வேலில் ஏன் வேப்பமாலையைச் சுற்றவேண்டும்? அது பாண்டிய மன்ன னுக்கு உரியது என்பதனால். எனவே பாசறையைச் சுற்றிவரும் அரசன் பாண்டியன். அக்காலத்தில் புகழ்பெற்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஒருவன்தான். எனவே அவன்தான் இங்கே சொல்லப்படுபவன். எனவே பாட்டுடைத் தலைவன் பெயரைச் சொல்லியாயிற்று.” (சொன்னது யார்? கவிஞரா, உரை எழுது பவரா?)
“எனவே இது சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர் (அகப் பாடலில் தலைமக்கள் பெயரைச் சொல்லமாட்டார்கள்) என்ற மரபை மீறிவிட்டது. ஆகவே நெடுநல்வாடை அகப்பாடல் அன்று. புறப்பாடல்தான்.”
இந்த ‘லாஜிக்’ கும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் (இங்கே தொடக்கூட இல்லை) கதைதான்.
4
தொல்காப்பியம், நன்னூல் பாயிரம் போன்ற இலக்கணங்க ளைப் படிப்பவர்கள், தமிழிலக்கிய மரபிலே இலக்கணம்தான் ஓரளவுக்கு இலக்கிய விமரிசனம் செய்ய வேண்டிய காரியத்தை யும் செய்யமுற்பட்டு வந்திருக்கிறது என்பதை ஒப்புவார்கள். ஆனால் அப்போதும் பழந்தமிழ் நூல்கள் ஏதும் திறனாய்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நூல்களுக்கு விளக்க வுரை சொல்வதற்குத்தான் இவை துணையாக இருந்துள்ளன.
உரையாசிரியர்கள் பழந்தமிழில் திறனாய்வாளர்களின் பணியை ஆற்றிவந்தனர் என்று முன்பகுதியில் மேற்கோள்காட்டிய மருதநாயகம் உட்படப் பற்பலக் கல்வியாளர்கள் கூறிச் சாதித்தி ருக்கிறார்கள். உரையாசிரியர்கள் என்ன செய்தார்கள்?
ஃ உரையாசிரியர்கள் பெரும்பாலும் உள்ளடக்க அடிப்படையி லேயே மதிப்பிட்டனரே அன்றி, உருவ அடிப்படையில் மதிப்பிட வில்லை.
ஃ தாம் உரை எழுத எடுத்துக்கொண்ட நூலாசிரியர் தவறு செய்ய மாட்டார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களிடம் இருந்தது.
ஃ மூல ஆசிரியனுக்குத் தாம் ஒவ்வொருவரும் எழுதும் உரையே முற்றிலும் சரியானது என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. அந்த அடிப்படையிலேயே அவர்கள் தங்களுக்குள் மறுப்புகளையும் விடுத்தனர்.
மேலும், பழந்தமிழில் திறனாய்வு இருந்தது என்பதற்குச் சான்றாகக் காட்டும் எடுத்துக்காட்டுகள் யாவும், விளக்கப்பகுதி யைச் (Interpretation) சார்ந்தவை. மதிப்பிடுதல் இல்லை. பழந்தமிழ் ஆசிரியர் எவரேனும் திருவாசக ஆசிரியரையோ, திவ்யப்பிரபந்தப் பெரியாழ்வாரையோ குறையுடையவர்கள் என்று மதிப்பிடுவார் களா? அவ்வளவு வேண்டாம், தமிழ்விடு தூது எழுதியவரையோ, குற்றாலக்குறவஞ்சி எழுதியவரையோ குறைகண்டிருக்கிறார்களா? “அரிய கற்று ஆசற்றார் கண்ணும் இன்மை அரிதே வெளிறு” என்பது திருக்குறள் கருத்தல்லவா? இதை எவரேனும் உணர்ந்து பழந்தமிழ் நூல்களை நோக்கியுள்ளார்களா? நூல் எழுதிய எவரை யும் போற்றுதல் என்பது பழந் தமிழ்க் கொள்கையாக இருந்திருக் கிறது என்பதற்குச் சான்றுகள் நமது இலக்கியங்களில் ஏராளமாக உள்ளன.
பழங்கால முதலாகவே ஓர் இலக்கியப் புனிதத்தொகுதியை (Canon) உருவாக்கும் முயற்சிகள் இருந்துவந்துள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாது. ஒரு புனிதத் தொகுதியை, மதிப்பீடு இன்றியும், அதற்கு அடிப்படையான கருத்தியல் இன்றியும் உருவாக்க முடியாது. சங்ககாலத் தொகைநூல்கள் முதலாகவே இது நடந்து வந்திருக்கிறது. இந்தப் புனிதநூல் தொகுதியில், மதஅடிப்படையில், கருத்தியல் அடிப்படையில் சில நூல்கள் சில காலங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன, சில இடம் மறுக்கப்பட்டி ருக்கின்றன, பிறகு காலப்போக்கில் ஏற்கப்பட்டுள்ளன. சிலகாலம் மறைந்து ஒளிந்து வெளிப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்ந்தெடுப்பு கள் எவ்வாறு நிகழ்ந் தன என்பது விரிவாக ஆராயப்படவேண்டிய ஒன்று. ஏனெனில் இலக்கியக் கோட்பாடுகள் அற்ற நிலையில், எந்த வகையில் இவை தேர்ந்தெடுக்கப்பட்டன?
பல வகைகளில் இந்தப் புனிதத்தொகுதி எழுந்திருக்கலாம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பழங்காலத்தில் எண்ணிக்கை வாயிலாக நல்ல நூல்களைத் தொகுத்துக் காப்பாற்றும் முயற்சி இருந்திருக்கலாம். பிறகு வந்த காப்பியங்களை அணிகலன்களாகப் பார்த்து-சிலம்பு, மேகலை, சிந்தாமணி, வளை, குண்டலம் எனக் கண்டு காப்பாற்றியுள்ளனர். பக்திக்காலம் வந்தபிறகு அந்தந்த சமயங்கள் அந்த வேலையைப் பார்த்துக்கொண்டன. இப்படிப் பலவிதமான வழிகளில் பலவிதமான இலக்கியங்கள் காப்பாற்றப் பட்டன. என்றாலும் அதற்கு பார்ப்பனர் சூழ்ச்சி தடையாக இருந்ததும் தெரிகிறது. சிதம்பரம்கோயிலில் திருமுறைகளை மறைத்துவைத்து ‘கடவுளே வந்தால்தான் தருவோம்’ என்று ஏமாற்றியுள்ளனர். ஆக பல இலக்கியங்கள் அழிந்தும் போயிருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.
நமது இலக்கிய மரபை கவனிக்கும்போது இலக்கியம் பழைய மரபுகளைத தழுவி யிருக்கவேண்டும், வலியுறுத்தவேண்டும், இனிமையாக இருக்கவேண்டும், தெளிவாக இருக்கவேண்டும், அறிவுபூர்வமான அமைவதைவிட உணர்வுபூர்வமாக அமைய வேண்டும் என்பவற்றோடு, “இலக்கியம் ஒரு தொழில் சார்ந்த விஷயம்” என்னும் கருத்தும் நிலவியிருந்ததை அறியலாம். ஒளவையார் “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்” என்று கலைகளைப் பயிற்சியாகவே குறிப்பிட்டுச் செல்வது கவனிக்கத் தக்கது. அதனால் கவிஞர்களிடம் சென்று செய்யுள் இயற்றப் பயின்றிருக்கிறார்கள் நமது முன்னோர். (இதே மரபைத் தான் பின்வந்த ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவரும் பின்பற் றினார்). எதிர்மறையில் இந்த மரபின் தாக்கத்தைக் “காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகைகொட்டிப் பிழைப்பதுமேல்” என்ற பழமொழியிலும் காணலாம். நன்னூலாரும் இதே கருத்திலேயே நூல், பனுவல் என்னும் சொற்களை எடுத்தாளு கின்றார். காளமேகப் புலவரும், இத்திறன் பயிற்சியால் வந்த கவிதைத்திறன் என்பதை வலியுறுத்தும் போக்கிலே, “அம்மென் றால் அறுநூறும், இம்மென்றால் எழுநூறும் செய்யுள் இயற்ற முடியும்” என்று கூறியிருக்கிறார். இப்பயிற்சியினாலேயே மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை போன்றவர்களால் ஒரு நாளில் முன்னூறும் நானூறுமாகக் கவிபாட முடிந்திருக்கிறது.
தொல்காப்பியம் முதற்கொண்டு எவற்றை எழுதவேண்டும், எவற்றை யார் பேச வேண்டும் என்றெல்லாம் விதித்திருக் கின்றன. இம்மாதிரி விதிகளைப்படைத்து இலக்கியம் உருவாக்கு என்று சொல்வது “தணிக்கை முறைக்கேற்ப எழுது” என்பது போலத்தான். உரையாசிரியரின் உரைமரபுகள் எவ்வாறெல்லாம் அர்த்தம்காண முடியும் என்பதன் சாத்தியங்களை வெளிப்படுத் தின. ஆனால், வேறுவகை அர்த்தம் காணல் நிகழ்ந்தபோது எதிர்த்தன.
கவிமணி சொன்ன “உள்ளத்து உள்ளது கவிதை, இன்பம் உருவெடுப்பது கவிதை” என்பதெல்லாம் மேனாட்டுப் பயிற்சியால் ஏற்றுக்கொண்ட விஷயம். ஆனால் முற்றிலும் உணர்ச்சிக் கொள்கை மேனாட்டு வரவு என்று சொல்லமுடியாது. பக்தி இலக்கியக் காலத்தில் உணர்ச்சிக் கொள்கைதான் பேரளவில் கடைப்பிடிக்கப்பட்டது. வறண்ட கருத்துகளைச் சொல்வது இலக்கியம் அல்ல என்றும், ஊனோடு உயிர் கலந்து உணர்வோடு படைக்கப்படுவதுதான் இலக்கியம் என்ற எண்ணத்தை உருவாக் கியவர்கள் பக்திப்பாக்கள் பாடிய நாயன்மாரும், ஆழ்வார்களும்.
பக்தி இயக்கத்திலும் குறைபாடுகள் இருந்தன. அக்குறைபாடு கள் நாளடைவில் மலிந்து இறுகின. அதனால் எந்த சமஸ்கிருதக் கலாச்சாரத்திற்கு எதிராகத் தமிழ் என்னும் உணர்வோடு பக்தி இயக்கம் தோன்றியதோ அதையே பிறகு இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது. எனவே இதற்கு எதிராக ஓர் இயக்கம் தேவைப் பட்டது. அது தான் சித்தர்கள் வாயிலாக வள்ளலார் வரை தமிழில் ஏற்பட்ட இயக்கம். சடங்குகள் ஆசாரங்கள் போன்றவற்றை எதிர்த்ததோடு சமணர்-பௌத்தர் போலவே ஒழுக்கங்களையும் சித்தர்கள் வலியுறுத்தினர். மேலும் பெரும் லோகாயதவாதிகளாக வும் அவர்கள் இருந்தனர்.
தமிழில் இப்படி இருவகையான இழைகளும் மாறிமாறியே வருவதைக் காணலாம். ஓர் இயக்கம் தேய்ந்து பெறுமானம் இழக்கும்நிலையில், இன்னொரு இயக்கம். இப்படியே மாறிமாறித்தான் மொழிகளும் சமூகமும் கலாச்சாரமும் இயங்கு கின்றன. இதுதான் இயங்கியல் முறை. இதை இங்கு சொல்லக் காரணம், இவற்றிலிருந்து நமக்கென ஒரு திறனாய்வு நெறி முறையை, கோட்பாட்டைப் பெறமுடியுமா என்று நோக்குவதற் காகத்தான். பழந்தமிழ் நூல்களில் திறனாய்வு உண்டா இல்லையா என்று ஆராய்பவர்கள் முற்கூறியதுபோன்ற உதாரணங்களை ஆராய்ந்து நிதானமான முடிவுக்கு வரட்டும்.
5
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஓலைச்சுவடி கள் யாவும் அச்சேற்றப்படலாயின. முதன்முதலில் திருக்குறள் பதிப்பிக்கப்பட்டது. பின்னர், தொல்காப்பியம் போன்ற நூல்கள் (மழவை மகாலிங்கையர்) பதிப்பிக்கப்படலாயின. அதன்பின் சி. வை. தாமோதரம் பிள்ளையும், உ. வே. சாமிநாதையரும் மூல பாடத் திறனாய்வில் செம்மையாக ஈடுபட்டு, பல நூல்களைப் பதிப்பித்தனர். சி. வை. தாமோதரம் பிள்ளை காலம் முதல், ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை காலம் வரை-1875 முதல் 1950வரை) மூலபாட ஆய்வின் (Textual Criticism) என்று கூறலாம்.
முதல்நூல்கள் பதிப்பிக்கப்பட்டவுடன் அவை பற்றிய கால ஆராய்ச்சி தொடங்கியது. பேராசிரியர் சுந்தரம்பிள்ளை இதைத் தொடங்கிவைத்தவர். திருஞானசம்பந்தர் வரலாறும் காலமும் பற்றிய நூலான Some Milestones in the History of Tamil Literature வாயிலாக இதனைச் செய்தார். கே. சீனிவாசபிள்ளை எழுதிய தமிழ் வரலாறு, மு. சி. பூரணலிங்கம் பிள்ளை எழுதிய Tamil Literature, கா. சுப்பிரமணிய பிள்ளை எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, கே.என். சிவராஜபிள்ளை எழுதிய The Chronology of the Early Tamils போன்ற நூல்கள் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைப்பதற்கு உதவியவை. ஏறத்தாழ வையா புரிப் பிள்ளை காலம் வரை இந்தக் கால ஆராய்ச்சி தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து வடமொழிச் சார்பானவர்கள் தமிழ் நூல்கள் பலவற்றிற்கும் முதல் நூல்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன என்று கூற, தமிழ் சார்பானவர்கள் அக்கூற்றுகளை மறுக்க, ஒரு பயனற்ற விவாதம் ஏற்பட்டது. ஆனால் இது ஓரளவு ஒப்பியல் பார்வை தோன்ற உதவியது என்று சொல்லலாம்.
6
மனிதன் எத்தனையோ வகையான பொருள்களைப் படைத்தி ருக்கிறான். அவன் படைத்துக்கொண்ட அறிவும் ஒரு பொருள் தான். பிற உயிரிகளுக்கு இல்லாத பொருள். மனிதன் படைத்த பொருள்களில் கலை, இலக்கியம் ஆகியவை சில. அவற்றின் விமரிசனம் என்பதும் ஒரு மனிதத் துறையே.
மனிதன் படைத்த பொருள்கள் எல்லாம் அவனுக்குப் பயன்பட வேண்டும். அவை அவனுக்குச் சேவை செய்யவேண்டுமே அல்லாமல், அவன் அவற்றுக்குச் சேவை செய்யக்கூடாது. மனிதன் ஒன்றிற்குச் சேவை செய்கிறான் என்றால் அதற்கு அவன் அடிமையாகிவிட்டான் என்று அர்த்தம். இன்று பலர் கண்கூடாகப் பணத்துக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் சேவை செய்கிறார்கள். இம்மாதிரிச் சேவையிலிருந்து மனிதனுக்கு விடுதலை அவசியத்தேவை. தன்னைத் தளைப்படுத்துகின்ற எதுவும் மனிதனுக்குத் தேவையில்லை. கலை இலக்கியம் விமரிசனம் இவைகூட ஏதோஒரு வகையில் மனிதனைச் சிறைப்படுத்திவிடும் என்றால் அவை தேவையில்லை என்றுதான் கூறவேண்டும். மனிதவிடுதலைக்கு அவை துணைபுரியும் என்றால் அவை கண்டிப்பாகத் தேவையே.
கலை இலக்கியத்தைவிடவும் மேம்பட்டது விமரிசனம். ஏனென்றால் பகுத்தறிவே அதுதான். மனித வாழ்க்கையின் ஒரு கூறாக விமரிசனம் இருக்கிறது; அவன் விடுதலை பெற அது துணை புரிகிறது. மனிதன் எதை விமரிசனம் செய்யவில்லை? மனித வாழ்க்கையின் எல்லாக் கூறுகளின்மீதும் விமரிசனம் செயல்படுகிறது. “இந்த உணவு விடுதியில் உணவு நன்றாக இருக்காது, இன்னொரு விடுதியில்தான் நன்றாக இருக்கும்” என்றால் அங்கே மதிப்பீடு இல்லையா? “இந்த வாத்தியார் நன்றாகப் பாடம் சொல்லித் தர மாட்டார். இவர்தான் நல்ல வாத்தியார்” என்ற கூற்றில் விமரிசனம் இல்லையா? இது அன்றாட வாழ்க்கையில் காணும் எளிய மதிப்பீடு. மாறாக, கலைகளைப் பயின்று, அல்லது நூல்களைப் பயின்று, வாழ்க்கையின் அனுபவத்தோடு அவற்றைப் பொருத்திப் பார்த்து, மனித விடுதலைக்கு அவை உதவி புரிகின்றனவா இல்லையா என்று சோதித்து, இது ஏற்கத்தக்கது, ஏற்க இயலாதது என்று சொல்லும்போது அது திறனாய்வு அல்லது கலைஇலக்கிய விமரிசனம் ஆகிறது.
எளிய விஷயங்களில் விமரிசனம் செய்யத் தயங்காத நாம், சற்றே சிக்கலான விஷயங்களைத் திறனாய்வு செய்ய அஞ்சுகிறோம். ஒரு சிறு துறையிலிருக்கும் அதிகாரமானாலும் சரி, பெரும் அரசியல் ஆதிக்கமானாலும் சரி, நாம் விமரிசனம் செய்வதில்லை. சற்று தீவிரமாகச் சென்றால் எங்கே நம் பொரு ளாதார வாழ்க்கை அல்லது உலகவாழ்க்கை-இவை பாதிப்புக்குள் ளாகிவிடுமோ என்று பயப்படுகிறோம். ஒரு பத்திரிகையையோ, திரைப்படத்தையோ விமரிசனம் செய்யத் தயங்காத ஒருவன், தன் முதலாளியையோ, நிறுவன இயக்குநரையோ விமரிசனம் செய்ய அஞ்சுகிறான். அது அவன் பொருளாதார வாழ்க்கையோடு சம்பந் தப்படுகிறது. அதுபோலவே, வகுப்புகளில் மிக நன்றாகத் திற னாய்வு செய்து எழுத்தாளர்களை இனம் காட்டுகின்ற ஒரு பேராசிரியர், அக்கருத்துகளை எழுத்தில் பதிவுசெய்ய முன்வருவ தில்லை. ஏனெனில் அவருக்குக் கிடைக்கக்கூடிய பதவி உயர்வு, பல நிறுவனங்களில் கிடைக்கும் புகழ்மிக்க இடங்கள் முதலியன இதனால் காணாமற்போகலாம். ஆக இவர்களெல்லாம் அன்றாட வாழ்க்கையின் வசதிக்காகத் தங்கள் சுதந்திரத்தை இழப்பவர்கள் தான்.
உண்மையான சுதந்திரத்தை நோக்கமாகக் கொண்டதுதான் எந்த விமரிசனமும். இலக்கிய விமரிசனத்தின் நோக்கமும் அதுதான்.
இலக்கிய விமரிசனம் ஒருபுறம் இருக்கட்டும். இலக்கியம் என்றால் என்ன?
என் பார்வையில் நாம் இலக்கியமெனக் கொள்வது ஒரு குறிப்பிட்ட பிரதி அமைவையே (textual formation)ஆகும். இந்தப் பிரதிஅமைவு சில குறிப்பிட்ட ஒழுங்குகளுக்கேற்பச் சொற்களை, தொடர்களை அடுக்கிச்செல்லும்போது தோன்றுவதாகும். அவ் வாறு பிரதியை-அதன் சொல்லாடல்களை அமைப்பதினாலேயே அந்தச் சொற்கோவை ஒரு இலக்கியப்பிரதியாக மாறுகின்றது. அவ்வாறு அமைந்தபின்னர் இது தனித்துவமான வாழ்க்கையைப் பெறுகின்றது.
ஒரு பிரதியைப் புரிந்துகொள்ளுதல் என்பது அதன் அமைவைப் புரிந்துகொள்ளலேயாகும். அவ்வாறு புரிந்து கொள்வதற்கு அது எவ்வாறு கட்டப்பெற்றுள்ளது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? திறனாய்வு அதைத்தான் செய்கிறது. சிலர் கட்டடத்தைச் சுற்றிவருகிறார்கள், அதன் புற அழகைக் கண்டு பாராட்டுகிறார்கள். சிலர் அதன் பயன் என்னவாக இருக்கும் என்று காண்கிறார்கள். சிலர், கட்டடத்தின் அமைப்பின் படத்தை மனத்தில் வரைந்து பார்க்கிறார்கள். சிலர், பிரதியின் அமைவு ஒழுங்கைச் சற்றே கலைத்து, உடைத்து, சிதைத்துப் பார்க்கின்ற பொழுதுதான், அது எவ்வாறு கட்டப்பெற்றுள்ளது என்பது தெரியவருகிறது என்கிறார்கள்.
இலக்கிய ஒழுங்கமைவில் படைப்பாளியின் பங்கு வரையறுக் கப்பட்டது. படைப்பாளி கட்டடத்தைக் கட்டிய தொழிலாளி போன் றவன். கட்டடத்தைக் கட்டிமுடித்த பிறகு கட்டியவனுக்கு என்ன வேலை? அதற்குமேல் அங்கு வாழ்பவர்களின் பிரச்சினைதான். பிரதியைத் தோற்றுவிப்பதில் படைப்பாளிக்கு முக்கியத்துவம் உண்டு. அதன் தொடர்ச்சியான வாழ்க்கையில் அவனுக்குப் பங்கில்லை. பிரதியின் தொடர்ச்சியான வாழ்வில் படைப்பாளிக்கு அப்பாலான சக்திகள் பல செயல்படுகின்றன.
இப்போது இலக்கிய விமரிசனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு வருவோம்.
மேற்கூறிய இலக்கிய அமைவு அல்லது பிரதி அமைவு எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பதை அறிவதே விமரிசனத்தின் நோக்கு. அந்தக் கட்டமைவைத் தகர்த்து நோக்கும் பொழுது-அதாவது நமது மனத்திற்கேற்ற மறுஅமைப்புக்கு நாம் அதை உட்படுத் தும்போது அது புலனாகிறது.
“இலக்கியப்பிரதியின் அமைப்புமுறை அதற்கு இலக்கியத் தன்மையை வழங்குகிறது. இதனை விளங்கிக்கொள்பவர் வாசகரே. இலக்கியத்தின் புரிவுநிலையில் அல்லது விளக்க நிலையிலேயே அதன் இலக்கியத்தன்மை புலப்படும். எனவே இந்தப் புரிவுமுறையில் வாசகர் முக்கியமாகிறார். பொருள்கொள் ளுதல் என்னும் நடைமுறையில் அவருக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. அவருடைய அனுபவம், வாசிப்புப் பின்புலம் என்பவை முக்கியமானவை. அவர் மட்டத்திலேயே இலக்கியம் இலக்கிய மாக வாழ்கிறது. எனவே இலக்கியத்தைப் புரிந்துகொள்வதில் நாம் வாசகரின் எதிர்வினைக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும்” என்பது கா. சிவத்தம்பியின் கருத்து.
எத்தனையோ ஆண்டுகளாகப் பாடநூல்களிலும் பிற நூல்களி லும் திறனாய்வு (விமரிசனம்) என்ற சொல்லின் விளக்கம், வரையறை, அர்த்தம் முதலியவை பேசப்பட்டிருக்கின்றன. திறனாய்வுக்கும்-மதிப்புரைக்கும், திறனாய்வுக்கும்-ஆராய்ச்சிக்கும் (ஆய்வுக்கும்) உள்ள வித்தியாசங்களும் கூறப்பட்டிருக்கின்றன. மீண்டும் அவற்றை இங்கே கூறத்தேவையில்லை.
திறனாய்வு வகைகளையும் அவரவர் மனப்பாங்கிற்கும், அவர்கள் காண்பதாகக் கருதும் பிரதியின் இயல்புக்கும் ஏற்ப, பலபேர் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இவை முக்கிய மல்ல. ஏறத்தாழ 1973 வாக்கில் எழுதிய கட்டுரையன்றில் க. கைலாசபதி, தமிழிலக்கியத் திறனாய்வு நான்கு வகைகளாக- இரசனை முறைத் திறனாய்வு, பகுப்புமுறைத் திறனாய்வு, பண்டித முறைத் திறனாய்வு, சமூக நோக்குத் திறனாய்வு என வளர்ந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.
கா. சிவத்தம்பி, கூறுவது இது:
எழுபதுகளில் ஏற்பட்ட இலக்கியக் கொள்கைகளைத் தெளிவுபட எடுத்துக்கூற முனைவோர் இலக்கியவிமரிசனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாகத் தற்பொழுது நான்குமுக்கிய இலக்கியச்செல்நெறிகள் மேற்கிளம்பியுள்ளன. அவையாவன-
“1. பாடத்தை (text) அடிப்படையாகக் கொண்ட விமரிசன முறைமை
2. வாசகரை மையமாகக் கொண்ட விமரிசனக்கொள்கை
3. பாடத்தை மாத்திரமல்லாது படைப்பின் சூழமைவினையும் முக்கியப்படுத்தும் மார்க்சிய முறைமை
4. பெண்நிலைவாத விமரிசனமுறைமை
இவ்வாறு கூறிவிட்டு,
இந்நான்கும் மேனாடுகளிற் காணப்படுவதுபோன்று தமிழிலும் பயில்நிலையில் உண் டென்று கருதுவது பொருத்தமானதன்று. உதாரணமாக, இன்னும்தான் நம்மிடையே பெண்நிலைவாதக் கொள்கைகள் கண்ணோட்டங்கள் இலக்கியத்தில் முக்கியப்படுத்தப்
படவில்லை. பெண்நிலை எழுத்துக்கள்கூட இன்னும் பரந்துபட எழுதப்படவில்லை.
இந்தநிலையில் பெண் நிலைவாத விமரிசனம் என்பது இன்னும் இங்கு தொழிற்படாத ஒன்றாகவே எடுக்கப்படல் வேண்டும்”
என்று எச்சரிக்கை செய்கிறார்.
சில ஆசிரியர்கள் திறனாய்வு எட்டுவகை, பத்துவகை, பதினாலு வகை என் றெல்லாம் பட்டியலிட்டுக் குழப்பியும் பயமுறுத்தியும் இருக்கிறார்கள். இவையெல்லாம் உண்மையாகத் திறனாய்வுத் துறையில் ஈடுபடாமல், பாடப்புத்தகம் எழுதுவதால் வரும் குறைகள். பகுப்புமுறைத் திறனாய்வு, விதிமுறைத் திறனாய்வு, மதிப்பீட்டு முறைத் திறனாய்வு, வரலாற்றுமுறைத் திறனாய்வு, ஒப்பியல்முறைத் திறனாய்வு, பாராட்டு முறைத் திறனாய்வு, விளக்கமுறைத் திறனாய்வு, மனப்பதிவுமுறைத் திறனாய்வு என்றெல்லாம் பட்டியலிடுகிறார்கள்.
இம்மாதிரிப் பகுப்புகளில் பல சற்றும் பொருத்தமற்றவை. விளக்கம் என்பது அற்ற திறனாய்வு எதையேனும் பார்க்க முடியுமா? விளக்கம் தேவையான அளவு இல்லாவிட்டால் அது அபிப்பிராயமாக அல்லவா முடிந்துவிடும்? அப்புறம் என்ன விளக்கமுறைத் திறனாய்வு? தேவையான இடங்களில் தக்க விதிகளைப் (அது தொல்காப்பியமோ, மிஷல் ஃபூக்கோவோ) பயன்படுத்தாத திறனாய்வைக் காணமுடியுமா? அப்புறம் என்ன விதிமுறைத் திறனாய்வு என்றொரு பகுப்பு? ஓரளவேனும் மனப் பதிவு என்பது இல்லாத திறனாய்வு எதையேனும் காணமுடியுமா? அப்படி ஏதேனும் முற்றிலும் அறிவியல்பூர்வமான- அறிவியலைப் போன்ற திறனாய்வு எதுவும் உண்டா? பிறகு என்ன மனப்பதிவுத் திறனாய்வு?
இவையெல்லாம் பாடப்புத்தகத்திற்காக-விற்பனைக்காக, நாலு காசு பார்ப்பதற்காகச் செய்யப்படும் சாகசங்கள்.
அப்படியானால், திறனாய்வின் அடிப்படைப் பண்பு என்ன?
“விமரிசித்தல் என்பது மேலோட்டமான அபிப்பிராயம் சொல்வ தல்ல. அது நுண்ணிதான மதிப்பீடு ஆகும். அபிப்பிராயமாக அமையாது ஒரு தீர்ப்பாக அமைய வேண் டும். தீர்ப்பு என்பது எல்லா அமிசங்களையும் சீர்தூக்கிப் பார்த்து செய்யப்படும் ஒரு நடைமுறையாகும்” என்கிறார் கா. சிவத்தம்பி. மதிப்பீடு இல்லாவிட்டால் திறனாய்வு என்பது இல்லை.
வையாபுரிப்பிள்ளை இலக்கியத்திறனாய்வை இலக்கிய மதிப்புத்துறை என்றே குறிப்பிட்டுள்ளமை காணத்தக்கது.
திறனாய்வினை, அகவயத் திறனாய்வு, புறவயத் திறனாய்வு என்ற இரண்டிற்குள் அடக்கிவிடலாம் என்கிறார் ஒருவர். அல்லது இலக்கியத்தன்மைகளை ஆராயும், இலக்கியப் படைப்புமுறையை விளக்கும் திறனாய்வு என இரண்டிற்குள் அடக்கிவிடலாம் என்று கூறுகிறார். அகவயம்-புறவயம் இரண்டும் ஏதோ ஒரு விகிதத்தில் சேர்ந்திருப்பதுதான் திறனாய்வு. மதிப்பீடு என்பது அகவயம் இல்லாமல் புறவயமா? முற்றிலும் புறவயமாக மட்டுமே ஒரு நூலின் தகுதியை நிறுவமுடியுமா? அகவயமாக மதிப்பீடு செய்கிறோம். பிறகு புறவயமாக அதற்கான சான்றுகளைக் காட்டிப் பிறருக்கும் அந்தக் கருத்தினைத் தொற்ற வைக்க முயற்சி செய்கிறோம். திறனாய்வு என்பது ஒரு கருத்தேற்றம் தான்.
ஆனால் கருத்தேற்றம் என்பது எங்கே இல்லை? முன்பு சொன்ன உணவுவிடுதி உதாரணத்தில்கூட நமது கருத்தை இன்னொருவருக்கு ஏற்றுவதுதானே நிகழ்கிறது? இன்னொருவர் நம் கருத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்வரை அது கருத்தேற்றமாக எண்ணப்படுவதில்லை. அவர் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்றால் கருத்தேற்றம் (இலக்கிய உலகில் ‘பிரச்சாரம்’) என்ற ‘கெட்டபெயரை’ இட்டு விடுகிறார்.
ஆகவே “ஐயோ, கருத்தேற்றமா, வேண்டாம் அந்தத் தொல்லை” என பயப்பட வேண்டாம். நம் குழந்தையை எந்தப் பள்ளியில் படிக்கவைக்க வேண்டும் என்று தீர்மானிக்கும்போது கூட நமது கருத்தேற்றம் அந்தக் குழந்தைமீது நிகழத்தான் செய்கிறது. அதற்கு அக்குழந்தை ஒருவேளை பின்னாளில் வருத்தப்படலாம். ஆனாலும் அதற்காகப் படிக்கவைக்காமல் இருந்துவிடுகிறோமா? எந்த நூலும் ஒரு குறித்த கருத்தமைவின் அடிப்படையில்தான் எழுதப்படுகின்றது என்பது வெளிப்படை.
விமரிசனம் அல்லது திறனாய்வு என்பது இயல்பான ஒரு மானிடச் செயல்பாடு; அதைச் செய்யாத மனிதன் எவனும் கிடையாது; கலை இலக்கியத் துறையில் அது செய்யப்படும்போது மானிட விடுதலைக்கு அது உதவுவதாக அமைய வேண்டும்.
இன்று பல விஷயங்களில் கருத்துமாறுபாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு, பெண்ணியம், தலித்தியம் போன்றவற்றைப் பற்றிச் சிந்தனைவேறுபாடுகள் உள்ளன.
பெண்கள் எழுதுவது என்பது மட்டும் பெண்ணியமாகாது. பெண்ணியம் என்பது பெண்களை ஆண்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களாகக் கருதுவதில்லை. பால்நிலை வேறுபாடுகளை யும், பால்நிலை வேறுபாடுகள் காரணமாகக் கற்பிக்கப்படும் சமமின்மைகள் யாவற்றையும் கண்டிப்பது பெண்ணியம் ஆகும்.
சிலர் பெண்ணிய எழுத்துகள் என்றால் பெண்கள்தான் எழுத வேண்டும், தலித்திய எழுத்தென்றால் தலித்துகள்தான் எழுத வேண்டும், ஏனெனில் அவர்களுக்குத் தான் அந்த வாழ்வனுபவம் இருக்கும் என்கிறார்கள். இது தவறான பார்வை. அப்படியானால், குழந்தையைப் பற்றிக் குழந்தைதான் எழுதவேண்டும்; நூறு வயதுக் கிழவனைப்பற்றி அவன்தான் எழுதவேண்டும்; முதலாளி யைப் பற்றி முதலாளிதான் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்ல வேண்டிவரும். இது சரியாகுமா? ஓர் எழுத்தாளன்- கலைஞன்-பிறர் அனுபவத்தில் தான் தோய்ந்து எழுதமுடியும். இதனை ஒத்துணர்வு-empathy என்கிறார்கள். இதை ஒப்புக்கொண்டு தான் இலக்கிய ஆய்வில் இறங்கவேண்டும்.
இன்று கருத்தியல் பற்றி மிகுதியாகப் பேசப்படுகிறது. கருத்தியல் என்றால் என்ன? சமூகத்தினுள் ஏற்படும் உறவுப் பரிமாறல்கள் வளரத் தொடங்கும்போது, அந்தச் சமூகத்தில் வாழும் மனிதர்கள் உலகம் பற்றியும், தங்களது சொந்தச் சமூக வாழ்க்கை பற்றியும், தெய்வம், சொத்து, அறம், நீதி ஆதியன பற்றியும், எண்ணங்களையும் நோக்குகளையும் மக்கள் உருவாக்கிக் கொள்கின்றனர். இவற்றினடியாகச் சமூகம் பற்றியும், அரசியல், சட்டம், கலை, இலக்கியம், தத்துவநோக்கு பற்றியும் கருத்தின் உருவமான பொதுவான எண்ண அமைப்பு ஒவ்வொரு வருக்கும் வளரத் தொடங்குகின்றது. அந்த எண்ண அமைப்புதான் கருத்தியல் என்பது. கருத்தியல்கள் மனிதர்கள்தம் அகத்திலும் புறத்திலும் இருக்கும் சூழலோடு கொள்ளும் உறவுகளா லேயே ஏற்படுகின்றன.
குறிப்பிட்ட சமூக, பொருளாதாரச் சூழல்கள் எத்தகைய கருத்தியல்களை ஏற்படுத்துகின்றன என்பதும், மனித இடர்ப் பாடுகள், சிக்கல்கள் தோன்றுவதற்கும், தொடர்வதற்கும் எவ்வாறு இடமளிக்கின்றன, எத்தகைய சமூக மாற்றங்களால் இவை மாறும் என்பதும் கருத்தியல்சார்ந்த விமரிசனத்துக்குள் வரும்.
எல்லாவற்றிற்கும் ஒரு புதிய வாசிப்புத் தருவதும் விமரிசனம் தான். காலத்தின் தேவை, அல்ல, கட்டாயம் அது. புதுமைப் பித்தன் இராமாயணக் கதையை மறுவாசிப்பு செய்தமாதிரி. ஆனால்: அதற்கான ஆயத்தங்கள் மிகுதியாகத் தேவை.
(விமரிசனம் என்ற சொல்லையும் திறனாய்வு என்ற சொல்லையும் சரிசமமாக இங்கே பயன் படுத்தப்படுகின்றன. ஒரே செய்கையைக் குறித்த இருவேறு மொழிச் சொற்கள் இவை என்றே நினைக்கிறேன். பத்திரிகைத் துறையில் ஈடுபட்டவர்கள் விமரிசனம் என்ற சொல்லையும், கல்வித்துறையில் ஈடுபட்டவர் கள் திறனாய்வு என்ற சொல்லையும் பயன்படுத்திவருகின்றனர்.)
நாம் மதிப்பீடு செய்ய முற்படும்போது முற்றிலும் புறவயமான மதிப்பீடு எதிலுமே சாத்தியமில்லை. நாம் ஒரு பங்கேற்பு ஆய்வாளராக மட்டுமே இருக்கமுடியும். நமது விருப்பு வெறுப்பு கள் பார்வைகள், கருத்தியல்கள், ஆகியவற்றின் அடிப்படையில்நம் மில் சிலருக்கு முக்கியமாகப் படக்கூடிய நிகழ்வுகள் வேறு சிலருக்கு முக்கியமற்றதாகத் தோன்றலாம் என்பதுபோன்ற சிக்கல்களை நாம் மறந்துவிடலாகாது. பல நூற்றாண்டுகள் முற்பட்ட கம்பனையே அண்ணாதுரை பார்த்த பார்வை வேறு, ஜீவா பார்த்த பார்வை வேறுதான்.
இன்னொன்று: பழைய முறையிலான வாசிப்பு முறைகளை வாசகர்கள் நன்கு அறிந்த பின்பே புதிய வாசிப்பு முறைகளுக்குச் செல்லவேண்டும் என்பது எனது கருத்து. இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.
மேற்கத்திய நாடுகளில், அமைப்பியம், பின்அமைப்பியம் தோன்றுவதற்கு முன் னரே இலக்கியத் திறனாய்வுத்துறை, புதுத்திறனாய்வு அல்லது அழகியல் திறனாய்வு நல்ல வளர்ச்சி பெற்றிருந்தது. அதற்கு முன்னாலே புனைவியச் சார்பான படைப்பு களும் விமரிசனங்களும் இருந்தன. அவற்றிற்கு அடிப்படையான வாழ்நிலை அனுப வங்களும், தத்துவப் பின்புலமும் இலக்கியவளமும் அவர்களுக்கு இருந்தன. சுருங்கச் சொன்னால் ஒவ்வொரு பார்வையும், ஒவ்வொரு தத்துவமும் தோன்றுவதற் கான களம் அவர்களுக்கு இருந்தது.
எந்த ஒரு வாழ்க்கை அடிப்படையும் இல்லாமல், தத்துவப் பின்னணியும் இல்லாமல், புதிதாக மேற்கில் தோன்றிவிட்டதே, தவிர்க்க இயலாதே என்ற காரணத் திற்காக ஒன்றை அறிந்துகொள்ளலாம்: ஏற்றுக்கொள்வது வேறு. அறுபது சதவீத மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாட்டில், விவசாயிகளும் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில், பழங்குடிமக்கள் திட்டமிட்டுக் கொலை செய் யப்படும் நாட்டில், மார்க்சியம் தோன்றுவது இயல்பு, தவிர்க்க வியலாதது. ஆனால் பின்நவீனத்துவம் தோன்றுவது?
பின்நவீனத்துவம் இங்கு தோன்றுவது, பெரும்பாலோர் வாழ்க் கையை அடிப்படையாக வைத்து அல்ல, மேற்கத்திய பின்நவீனத் துவ, வணிகமயமாதலுக்குப் பிந்திய Late Capitalist சமுதாயத்தை இங்கே முற்றுமுழுதாகக் காணமுடியாது. உலகமயமாக்கலுக்குப் பின்பு உலகமுழுவதுமே ஒரேமாதிரியான மாற்றங்களுக்கு ஆட் பட்டுவிட்டன, ஆகவே இங்கும் அத்தகைய கலாச்சாரம் வந்து விட்டது என்று சிலர் கூறலாம். ஆனால் அப்போதும் நம் நாட்டின் தன்மை வேறு, அமெரிக்காவின் தன்மை வேறு.
எரிக் ஆப்ஸ்வாம் என்பவர், இருபதாம் நூற்றாண்டை Age of Extremes என்றார். அப்படிப்பார்த்தால், இந்தியாவை Land of Extremes எனலாம். இதில் முற்றிலும் மின்சாரத்தை அறியாத பழங்குடி மக்களும் உண்டு, விவசாயக் கூலி அடிமைகளாக, கொத்தடிமை களாக வாழ்பவர்களும் உண்டு. நகரங்களின் நடைபாதைகளில் வசதியென்பதையே அறியாமல் உறங்குபவர்களும் உண்டு, பெரிய மாடமாளிகைகளில் கோடிக்கணக்கான பணத்தில் புரள்பவர்களும் உண்டு. இடையில் ஒரு பன்றித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு மேல்தட்டு மக்களைப் பார்த்து இது இல்லையே அது இல்லையே என்று ஏங்குபவர்களும் உண்டு.
இந்த நிலைமைக்கேற்ற கொள்கையைத்தான் நாம் கடைப் பிடிக்கவேண்டுமே தவிர, ஒரு சில உயர்மத்தியதர வாழ்க்கையி னர், பணக்காரர்களுடைய வாழ்நிலைகளை வைத்து அல்ல. இதற்கும் சிலர் கலை என்பதே மத்தியதர, உயர்மத்தியதர வர்க்கங்களின் செயல்பாடுதானே என்பார்கள்! இன்னும்கேட்டால், அது ஒரு சிறிய உள்வட்டத்தின் வேலை என்று சொல்லிவிடு வார்கள். கலை என்பது மக்களின் செயல்பாடு-அவர்கள் எந்த நிலையினராக இருந்தாலும்.
சிறுபான்மையினர் கருத்தியலைப் பெரும்பான்மையினர்மீது ஏற்றுவது காலங்காலமாக இந்தியாவில் நிகழ்ந்து வருகிறது. நிலவுடைமைச் சமூகத்தில் ஒருசில மேல் சாதியினர் அவ்வாறு இதுவரை செய்துவந்தனர். இப்போது மேற்கல்வி பெறும் வாய்ப் புள்ளவர்கள், வசதி பெற்றவர்கள் இவ்வாறு செய்துவருகின்றனர்.
தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றின் பின்னாலிருக்கும் தர்க்க நியாயங்களை ஏற்கத்தான் வேண்டும். ஆனால் அவற்றி லும் ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பின வாதத்தையும், மேற்கத்திய வெள்ளைப் பெண்ணியத்தையும் முன்னோடிச் சிந்தனைகளாகப் பயன்படுத்துவதில் உடன்பாடிருக்கமுடியாது. நமக்கென்றொரு சிந் தனை-நமது மண்ணுக்கேற்ற சிந்தனை இல்லாமல் போய்விட் டதா?
7
அமெரிக்காவிலிருந்து வந்தது புதுத்திறனாய்வு. சி.சு. செல் லப்பா அதைப் பரிந்துரை செய்தார். அது நமக்கு அந்நியமானதா? புதுத்திறனாய்வின் அடிப்படை ஆழ்ந்த வாசிப்பு. பழந்தமிழ் நோக்கில்கூறினால் எழுத்தெண்ணிப் படித்தல். இது நமக்கு ஏற்கெனவே வாய்த்திருந்த நோக்குதான். சிவஞானமுனிவரைவிட எழுத்தெண்ணி நூல்களைக் கற்ற ஒருவரைக் காட்ட முடியுமா?
ஆனால் இரண்டு வேறுபாடுகள்: புதுத்திறனாய்வு முறையில் சமூகப்பின்னணி ஆராயப்படுவதில்லை. அதனால்தான் அது நாவல் என்ற இலக்கிய வடிவத்தை ஆராய இயலாமலே போயிற்று. இலக்கியத்தின் சமூக அடிப்படையைப் புறக்கணித்த தாலும், அமெரிக்காவில் தோன்றியதாலும், நமது மார்க்சிய விமரிசகர்கள் அதை மார்க்சியத்திற்கு முரணானது என்று கருதிவிட்டார்கள். ஆனால் ‘தமிழ் நாவல் இலக்கியம்’ எழுதிய மார்க்சிய விமரிசகர் கைலாசபதிதான், புதுத்திறனாய்வின் கொள் கைகளை விளக்கும் ‘கவிதை நயம்’ என்ற நூலையும் எழுதியிருக்கிறார். இலக்கியத்தை அழகியல் அடிப்படையில் ஆராய்வது எப்போதுமே முதல்தேவை. ஆனால், தேவையான அளவு எந்தத் திறனாய்விலும் சமூகப்பின்னணி நிச்சயமாக இடம்பெற வேண்டும், நன்கு ஆராயப்படவேண்டும்.
மார்க்சியத் திறனாய்வுகள் பலவற்றில் போதிய அளவு அழகியலுக்கு இடம்தரப் படுவதில்லை. இது முக்கியமான குறை. முதலில் நூல்களை அழகியலின் அடிப்படையில் ஆராய்ந்தபிறகு தான் அவற்றைத் தத்துவப்பின்னணியில் மதிப்பிடவேண்டும். ஆனால் இலக்கியத்தின் ஒரு குறிப்பிட்ட வடிவமே அதன் உள்ளடக்கத்தை-அதன் அடிப்படைக் கருத்தைப் பொதிந்து வைத்திருக்கக்கூடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காலத்தினூடாக, நமது இன்றைய சிந்தனைக்கும் தத்துவப் பின்புலத்திற்கும் தொடர்பற்ற, அல்லது அதற்கு முரண்பட்ட இலக்கியங்களும் ஏராளமாக நிலைபேறு கொண்டுள்ளன. கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர்கள், கிரேக்க இலக்கியம் போன்ற பழங்கால, இன்றைக்குத் தேவையான மதிப்புகள் அற்ற இலக்கியங்களையும் போற்றி னர். இதனை உணராமல், பழைய இலக்கியங்களைத் தூக்கில்போடவேண்டும், நமக் குத் தேவையான சிந்தனை அடிப்படையிலேயே இலக்கியத்தை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தவறானது. இதனால் வளமான நமது மரபை இழந்து விடுவோம். புதிதாகவரும் இலக்கியங்களும் வாழ்க்கை அடிப்படையில் உருவாகமாட்டாது.
1983இல் 1900 முதல் 1980வரை தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற நூலை நான் எழுதியபோது அதில் முன்னுரையில் கூறப்பட்ட ஒரு கருத்து இது:
“தமிழில் திறன் மிகுந்த திறனாய்வாளர்கள் மிகுதியாகக் கிடைக்கவில்லை. வரன்முறையாக வந்த பாராட்டுமுறைத் திறனாய்வுகள், இரசனை நெறிப்பட்ட மனப்பதிவுகள், உள்ளடக்க ரீதியான ஆய்வுகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் இவை எந்தவகையிலும் படைப்புத்திறனும் தரமும்உயர உதவமாட்டா. ஆகவே இவ்வகை நூல்களைச் சிறந்த திறனாய்வு நூல்களாக ஏற்க மனம் ஒப்பவில்லை.” (ப.3)
இந்தக் கருத்தைக் கூறி முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு யோசிக்கும்போது இன்றைக்கும் நிலைமை ஒன்றும் பெரிதாக மாறிவிட்டதாகத் தோன்றவில்லை. இதற்கு முக்கியக் காரணமாக, இலக்கிய அரசியல் உள்ளது. பாராட்டு நெறியும், நிலவுடைமை வாழ்க்கைமுறையும் மாறாமல் இருக்கும்போது திறனாய்வு மட்டும் மாறிவிடுவதில்லை.
மேலும் அதே நூலில் கூறிய இன்னொரு கருத்தையும்- அதுவும் இன்றும் பொருந்தும் என்பதால்-இங்கே முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.
திறனாய்வு எது என்று விளக்குவதைக் காட்டிலும் எது திறனாய்வு இல்லை என்று சொல்லுவது எளிது என்று ஜான்குரோ ரேன்சம் என்ற அமெரிக்கப் புதுத்திறனாய்வாளர் எதிர் முகமாகத் திறனாய்வின் தன்மைகளை விளக்குகிறார். பின்வரும் வகைகள் யாவும் திறனாய்வு என்று ஏற்கப்படமாட்டா என்கின்றார் அவர்.
1. ஒரு நூலைப் படித்ததும், படிப்பவர்க்கு ஏற்பட்ட தனிப்பட்ட மனவெழுச்சிகள், உணர்வுகள், பதிவுகள் முதலியன;
2. ஒரு படைப்பின் விரிவுரை, விளக்கவுரை, சுருக்கம் முதலியன;
3. வரலாற்றாய்வுகள்; (இவற்றில் ஆசிரியரின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆய்வுகளும் அடங்கும்)
4. மொழியியல் ஆய்வுகள்; (இவற்றில் மறைக்குறிப்புகள், இணைக்குறிப்புகள் போன்றவற்றின் விளக்கமும் அடங்கும்)
5. அறக்கருத்துகள் பற்றிய ஆய்வுகள்;
6. இலக்கியத்தின் பொருளை அடிப்படையாகக் கொண்ட பிற ஆய்வுகள். ஆனால் இவை அனைத்தையுமே ஒரு திறனாய்வாளன் தனக்கேற்ற வகையில் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்கிறார்.
இது ஒரு புதுத்திறனாய்வாளரின் கருத்து. இக்கருத்து கூறப் பட்டு அறுபதாண்டுகளுக்கும் மேல் ஆனாலும், இடையில் அமைப் பியம், பின்னமைப்பியம், பின்நவீனத்துவம் போன்ற பல இயக்கங் கள் தோன்றி விமரிசகர்களின் பார்வையையும், விமரிச கர்கள் பற்றிய பார்வையையும் மாற்றியிருந்தாலும், இக்கருத்து மிக அடிப்படையானது. நாம் திறனாய்வுக்கான பிரதிகளைத் தேர்ந் தெடுப்பதற்கும் இப்படிப்பட்ட ஒரு வழி காட்டி தேவை. ஆனால் இதனை முழுவதும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் இலக்கியத் திறனாய்வின் பெரும்பகுதியும் “ஒரு நூலைப் படித்ததும், படிப்பவர்க்கு ஏற்பட்ட தனிப்பட்ட மனவெழுச்சிகள், உணர்வுகள், பதிவுகள் முதலியன” என்ற முதல் வகையைச் சேர்ந்ததாகவே அமைந்திருக்கிறது.
8
இலக்கிய வளர்ச்சியும் திறனாய்வு வளர்ச்சியும் ஒன்றை யொன்று சார்ந்தவை. திறனாய்வு செம்மையாக அமைவது நல்லிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பது பழங்காலத்திலிருந்து நிலவிவரும் நோக்கு. கலைகளில் எதைத் தேர்ந் தெடுப்பது, குறிப்பாக, இலக்கிய நூல்களில் எவற்றைத் தேர்ந்தெடுப்பது என்று வழிகாட்டுவது திறனாய்வாளன் பணி என்றும் கருதப்பட்டுள்ளது.
இன்றைய நோக்கு, திறனாய்வும் ஓர் இன்றியமையாத இலக்கிய எழுத்துமுறை என்பதுதான். இலக்கியங்கள் சரிவர வளராத சில காலப்பகுதிகளில், கட்டுரைகளும் திறனாய்வுமே இலக்கியங்களாக அமைவதையும் உலகமொழிகள் பலவற்றில் காண்கி றோம். ஆனால் திறனாய்வும் இலக்கியம்தான் என்பதை ஏற்கும் கண்ணோட்டம் இன்னும் தமிழில்தான் தோன்றவில்லை.
அரிஸ்டாடில் முதலாகவே அறிஞர்கள் பலரும் திறனாய்வாளர் களாகவும் படைப்பாளிகளாகவும் ஒருங்குவைத்தே எண்ணப்பட் டுள்ளனர். ஆனால் தமிழில் பெரும்பாலும் படைப்பிலக்கியம் என்று பேசுபவர்கள் எவரும் திறனாய்வினை இலக்கியத்தின் ஒரு பகுதியாக ஏற்காமலேயே பேசுகின்றனர். இது இனிது, அது நல்லது என்று மட்டுமே கூறும் இனியவை நாற்பதையும், இது இன்னா, அது இன்னா என்று பட்டியலிடும் இனியவை நாற்பதையும் இலக்கியமாக ஏற்றுக்கொண்ட தமிழ் உள்ளம் திறனாய்வு மட்டும் இலக்கியமல்ல என்று கண்டுபிடித்துவிட்ட தாம்! சைவ சமய சாத்திரங்களையெல்லாம் இலக்கியமாக ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களுக்கு, திறனாய்வு, இலக்கியப்படைப்பாகத் தோன்றாமல் போய் விட்டது ஆச்சரியம்தான்.
இந்த நோக்கு தவறு என்பதை மிகச் சாதாரணமான ஆங்கில இலக்கிய அறிவு இருந்தாலே புரிந்துகொள்ளமுடியும். ஆங்கில இலக்கியப் படிப்பு சாதாரணமாகவே சர் ஃபிலிப் சிட்னி, டிரைடன், ஜான்சன் போன்றவர்களின் திறனாய்வுகள், கட்டுரை கள் போன்றவற்றிலிருந்துதான் தொடங்குகிறது. மேற்குறிப்பிட்டவர் களில் டிரைடன் அன்றிப் பிற இருவரும் இன்றைய நோக்கில் படைப்பிலக்கிய அறிஞர்களாக அறியப்பட்டவர்கள் அல்ல. இவர்களைப் படிக்கும்போதே அடியோட்டமாக பிளேட்டோ, அரிஸ்டாடில் முதற்கொண்டு லாஞ்ஜைனஸ் வழியாக இலக் கியத்துக்குத் தேவையான தத்துவஞானிகளின் கருத்துகளும் பேசப்படுகின்றன. விமரிசனம் அல்லது திறனாய்வு இலக்கியப் படைப்பு அல்ல என்றால், ஆங்கில இலக்கியத்தைப் பாடமாக வைத்த எல்லாக் கல்வியாளர்களையும் எதில் சேர்ப்பது?
சரியான விமர்சனம் இல்லாத தனிமனிதனும் சரி, ஒரு சமூகமும் சரி, தானாகவே அழிந்துபோவர். தமிழிலக்கியம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் சரியான திறனாய்வு வளர வேண்டும். திறனாய்வு இல்லாத இடத்தில் இலக்கியமும் தன் இருப் பை இழந்துவிடுகிறது. இது வரலாறு. இது ஒருபுறம் இருக்க, அமைப்பியம், பின் அமைப்பியம் சார்ந்த அறிஞர்கள் திறனாய்வும் முதன்மையான ஓர் இலக்கியப் பிரிவுதான் என்பதை நன்கு நிலை நாட்டியும் உள்ளனர்.
ஒருவன் தன்னைத் திறனாய்வாளனாக ஆக்கிக் கொள்வது என்பது இலக்கிய அல்லது கலைமதிப்புகளைக் கணித்துத் தீர்ப்புக்கூறும் நீதிபதியாகத் தன்னை உருவாக் கிக்கொள்ளும் செயலாகும். ஏற்கெனவே இதைத்தான் கருத்தேற்றம் செய்வது என்று முன்னரே கூறினோம்.
இவன் என்ன தீர்ப்புக் கூறுவது, மதிப்பிடுவது என்ற அகம்பாவம் தமிழ் இலக்கியத் துறையில் மலிந்துகிடப்பதால் இலக்கியத்திறனாய்வுக்கு கௌரவம் அளிகக மறுக்கின்றனர். (விமரிசனம் எதிர்ப்புகளையும் ஏச்சுகளையுமே அதிகம் பெற்றுத் தரக் கூடிய விவகாரம். எதையும் தாங்கிக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களே விமரிசனத்துறையில் திறமையாகச் செயல்படமுடியும்.)
இரண்டாவதாக, மதிப்பிட்டால் வெளிப்படையாக நமது சார்பைக் காட்டிக்கொள்ள வேண்டுமே, அதனால் கிடைக்கக்கூடிய லோகாயத ஊதியங்களை இழந்து விடுவோமே என்று நினைக்கின்ற சிலர் மதிப்பிடுவதை-அதாவது திறனாய்வில் ஈடு படுவதை விரும்புவதில்லை. தங்களைக் காத்துக்கொள்ள அவர்கள் திறனாய்வுச் செயல்பாட்டின் மீது புழுதிவாரி வீசுகின்றனர்.
மூன்றாவதாக, இன்றைய தமிழ்த்திறனாய்வில் போதிய கலைச் சொற்கள் இல்லா மையால், அது சரிவரச் செயல்படவில்லை. மனம்போன போக்கில் ஆங்கிலச் சொற்க ளைத் தமிழில் மொழிபெயர்த்து மூஞ்சியில் வாரி வீசுகின்றனர். சமூக ஏற்பு நிலை யிலுள்ள, மரியாதையும் புகழும் பெற்றுவிட்ட சிலர் அவ்வாறு செய்யும்போது அவை நிலையாக ஏற்கப்பட்டும் விடுகின்றன. கடைசியில் வேறுவழியின்றி அவற்றை வழு வமைதி என்று ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
ஆனால் இந்த நிலை புதிய சிந்தனை உருவாக்கத்திற்கும், புதிய கலைச் சொற் கள் உருவாக்கத்திற்கும் ஏற்றதன்று. திறனாய்வாளன் தன்கால இலக்கிய மதிப்பீட்டை மட்டும் கவனிக்கலாகாது. எதிர்காலச் சிந்தனை வளர்ச்சியையும் கவனிக்க வேண்டும். காரணம், இன்று திறனாய்வு, சிந்தனை வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது.
மேலும் கலைச்சொற்கள் பற்றிய சமனின்மையும் பொருந்தாப் பயன்படுத்தலும் குழப்பத்தை விளைவிக்கிறது. உதாரணமாக, Deconstruction என்ற ஒரு சொல்லுக்குக் கட்டவிழ்ப்பு, கட்டுடைத் தல், தகர்ப்பமைப்பு, சிதைவாக்கம், ஒழுங்கவிழ்ப்பு என்று எத்தனை சொற்கள்? இவை வாசகர்களுக்குக் குழப்பத்தை உண்டாக்கக்கூடியவை. டி-கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கருத்தாக்கத்தை /கருத்தின்மையாக்கத்தை உருவாக்கியவர் டெரிடா. அவருடைய ஆழமான நோக்கில் இச்சொல்லைப் பயன்படுத்தாமல், எந்த எதிர்ப்புக்கருத்தையும் இன்று கட்டுடைத்தல் என்று குறிப்பிடும் வழக்கம் வந்து விட்டது. இவ்வாறு திறனாய்வுக் கருத்துகள் ஆழமான சிந்தனையின்றிப் பயன்படுத்தப்பட்டு நீர்த்துப்போகும் நிலை தமிழில் உருவாகியுள்ளது. இருபதாண்டுகளுக்கு முன் இதுபோலத்தான்-நனவோடை என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஒரு மோஸ்தராக (fashion)இருந்தது.
இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம், “குறித்த கருதுகோள் பற்றி விமர்சகர்களிடையே நிலவும் சமனற்ற அறிவுமட்டங்கள் தான்” என்ற சிவத்தம்பியின் கருத்தை நாம் ஓரளவுதான் ஏற்றுக்கொள்ளமுடியும். திறனாய்வுத்துறை, முற்றிலும் கருத்து ரைக்கும் மானிடத் துறையுமன்று, அறிவியல் போன்றதொரு அறிவுத்துறையும்தான். இதனைப் புறக்கணித்து, அகவயமான கருத்துகளையும் தீர்ப்புகளையும் மதிப்பீடு களையும் செய்வது போலவே அகவயமான சொல்லாக்கங்களும் இங்கு நிறைந்துள் ளன. ஆனால் கூடியவரை இந்நிலையை மாற்றவேண்டும்.
இலக்கியத் திறனாய்வு பற்றி அறிஞர் கா. சிவத்தம்பி கூறுகின்றார்:
“விமரிசித்தல் என்பதுமேலைநாட்டு மரபுவழிவந்த ஒரு நோக்குமுறைமை; நயத்தல் என்பது ஏற்கெனவே நமது மரபிலி ருநத ஒரு நடைமுறையே. இது ஆங்கிலத்திற் கூறப்படும் Appreciation என்பதோடு இணைந்து நிற்பது. ஆனால் ஒரேயரு வித்தியாசம் உண்டு. மேலைநாட்டு மரபில் அப்பிரிசியேஷன் என்பது உரைப்பகுதிகளையும் உள்ளடக்கும். தமிழில் நயத்தல் என் பது கவிதைககு மாத்திரம் உரிய ஒரு செயற்பாடாகவே கொள்ளப்படும் ஒரு வழக்கு நம்மிடையே உண்டு. மற்றது, நமது மரபிலுளள கதாகாலட்சேப மரபாகும். இதில் ஒரு இலக்கிய சிலாகிப்பு முறைமை உள்ளே நிற்கிறது. படியாதவர்களுக்கு உயர் இலக்கிய மரபில் உள்ளன பற்றி அறிமுகம் செய்தலும், அவை யாவும் மிகுந்த ரசனைக்குரியன என்று கூறுதலும் இதன் பண்பாகும.
நயத்தலுக்கான பயிற்சியிலுள்ள முக்கியம் என்னவென்றால், இந்த அமிசங்கள் இல்லை யென்றால் அது நல்ல இலக்கியப் பகுதி ஆகாது என்பதை மறைமுகமாக உணர்த்துவது ஆகும். நயத்த லுக்கான பயிற்சியினூடாக மதிப்பீட்டுக்கான ஒரு பயிற்சியும் வழங்கப் படுகிறது. விமரிசனம் என்பது பிரதானமாக மதிப்பீடு தான். நயத்தல் விமரிசித்தலுக்கு இட்டுச் செல்லவேண்டும். விமரிசித்தல் என்பது மேலோட்டமான அபிப்பிராயம் சொல்வ தல்ல. அது நுண்ணிதான மதிபபீடு ஆகும். அபிப்பிராயமாக அமையாது ஒரு தீர்ப்பாக அமையவேண்டும். தீர்ப்பு என்பது எல்லா அமிசங்களையும் சீர்தூக்கிப்பார்த்து செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். நல்லவற்றை ரசிப்பது என்பது அடுத்து உடனே வந்துவிடுவதல்ல. அதற்கு நல்ல பழக்கம்வேண்டும். ரசிப்புக்குத் தரப்படுவன எல்லாம் நல்ல ரசனையுடையவை அல்ல”. (கா. சிவத்தம்பி, தமிழ் கற்பித்தல், ப.125)
மேற்கண்ட கூற்று திறனாய்வுக்கும், ஏன் அதற்கு அடிப்படையான ரசனைக்கும்கூடப் பயிற்சிவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட பயிற்சி மிகக்குறைவு.
கடைசியாக ஒன்று: தமிழில் போதிய அளவு திறனாய்வு இல்லை, வளரவில்லை. திறனாய்வின்மை என்பது மொழி வறுமையை உண்டாக்கும். மொழிவறுமை என்பது ஓர் இனத்துக்கும் ஒரு நாட்டுக்கும் விளையும் வறுமையாகும்.
விமரிசனம் என்பது மொழியின், இலக்கியத்தின், சற்றே விரிவாக நோக்கினால், கலையின்- எல்லைக்குள் நின்று ஆராய்ந்து தீர்ப்புக்கூறும் செயல்முறை மட்டுமல்ல. முன்பு கூறியதுபோல, மனிதனின் ஆதாரச் செயல்பாடே திறனாய்வுதான். திறனாய்வு இன்றி ஜனநாயகம் இல்லை. வாக்களித்தல்கூட இல்லை. தனித்தியங்குதல் என்பதும் இல்லை. விடுதலை அறவே இல்லை.
இந்தியாவில் திறனாய்வு அற்றுப்போய் எல்லாரும் கோஷம்போடும் நிலை இருப்பதனால்தான் ஜனநாயகம் என்பதை நாம் அடைய முடியவில்லை. எதையும் பகுத்தாராய்ந்து திறனாய்வு செய்யும் மனநிலை இருந்தால் மனிதன் இவ்வளவு மோசமான நிலையில் வாழமாட்டான். ஏனென்றால் திறனாய்வு, ஒருதுறையில் செயல்படும் செயல்முறை மட்டுமல்ல, வாழ்க்கை யின் அனைத்துப்பகுதிகளிலும் செயல்படுவது. எனவே கட்சியா யினும், அரசியலாயினும், பொருளாதாரம் ஆயினும், அறிவியல் ஆயி னும் எத்துறையிலும் அது செயல்படும். திறனாய்வு வேறு பகுத்தறிவு வேறு அல்ல.
தங்களுக்கு ஆதாயம் இல்லாமல் போய்விடுமே என்பதற்காகப் பகுத்தறிவே வேண்டாம், (மூட)நம்பிக்கைகளே, விசுவாசமே போதும் என்று சில கும்பல்கள்-பெரு முதலாளிகள், உயர்சாதிகள், மதவாதிகள், அரசியல்வாதிகள் போன்றோர்களும் அவர் களின் அடிவருடிகளும் கூக்குரலிடலாம். அதற்காகத் திரைப்படம், தொலைக்காட்சி முதலிய ஊடகங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் பகுத்தாராய்ந்து, திறனாய்வு செய்யும் மனம்கொண்ட ஒரு சமூகம் மட்டும்தான் தனக்கு நன்மையானதைத் தேர்ந்தெடுக்க முடியும். எனவே திறனாய்வுக்கல்வி மனிதனுக்கு மிகஅடிப்படையானது மட்டுமல்ல, குழந்தைப்பருவத்திலிருந்தே வளர்க்கப்பட வேண்டிய ஒன்று.
விசுவாசமும் பக்தியும் நம்பிக்கையும் அரசியல் கட்சிக்காரர் களுக்கும் ஆதிக்க வாதிகளுக்கும், அவர்கள் நம்பியுள்ள அதிகாரி களுக்கும், முதலாளிகளுக்கும் தேவை யானவை. அவர்களுக்குத் திறனாய்வு ஆபத்தானது. எனவே நம் நாட்டில் மூடத்தனங்களும் புராணக்கதைகளும் இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் போற்றி வளர்க்கப்படுகின்றன. முதலில், இராமாயணம், மகாபாரதம் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள். அவையும்போய் அம்மன், அனுமான் முதற்கொண்டு ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றிய மூடத்தனமான புராணக்கதைகள் இவற்றில் வெளியிடப்படு கின்றன. திரைப்படங்களும் அவ்வாறே. மூடத்தனமான புராணக் கதைகளை வெளியிட முடி யாத கிறித்துவம் போன்ற மதங்களில் விசுவாசம், நோயிலிருந்து மீண்டெழுதல் அடிப்படையிலான கட்டுக்கதைகளை நிறுவும் சொற்பொழிவுகள் தொலைக்காட்சி களில் வெளியிடப்படுகின்றன. விசுவாசமும் அற்புதச் செயல்க ளும் தான் வாழ்க்கை என்றால் சுனாமிகள் ஏன் தோன்றுகின்றன?
அதனால்தான் “தமிழ் இலக்கியத் திறனாய்வு, குறைந்த பட்சமான பொதுப் பண்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் எழுத்தாளருக்கு மட்டுமின்றி, சமுதாயம் முழுவதற்குமே பயன்தரும் ஓர் ஆய்வறிவுத் துறையாக அமையும்” என்கிறார் கைலாசபதி. திறனாய்வு ஓர் ஆய்வறிவுத் துறையாக அமைவது இரண்டாம் பட்சமானது. முதலில் அது ஒரு மனப்பான்மை. அந்த மனப்பான்மை இன்றி நல்ல சமூகம் அமைய இயலாது. அறிவியல் என்ற துறையினால் விளைந்த பயன்களை நாம் எல்லா ரும் பயன்படுத்துகிறோம். ஆனால் அறிவியல் மனப்பான்மை என்பது எத்தனை விழுக்காடு பேருக்கு இருக்கும்? அந்த விழுக்காட்டை மேம்படுத்துவதுதான் நமது நோக்கம். அறிவியல் மனப்பான்மை வேறு, திறனாய்வு மனப்பான்மை வேறு அல்ல. மீண்டும், மானிடவிடுதலையே திறனாய்வின் நோக்கம் என்பதை வலியுறுத்திவிடலாம். இளம் தலைமுறை யினருக்கு இதனைச் சொல்லலாம்:
ஒரு தலைமுறைக்குமுன் எதிர்த்துப் போராடவேண்டிய கொடுஞ் சக்திகளாக உலக அளவில் பெருமுதலாளித்துவமும் இந்தியாவில் சாதியமும்தான் இருந்தன. இப்போது சமூகநோக்கம் கொண்டவர்களுக்குப் பொறுப்பு அதிகமாகியுள்ளது. (ஆனால் சமூக நோக்கற்றவர்களை, சிந்தனையற்ற கும்பல் மக்களை உருவாக்கு வதே நமது கல்விமுறையின் முக்கிய நோக்கமாகவும், தொலைக் காட்சி, திரைப்படம் போன்ற பெரும் ஊடகங்களின் செயல்பாடா கவும், அரசியல்வாதிகளின் நோக்கமாகவும் உள்ளது!) உலகளா விய பன்னாட்டு முதலாளித்துவமும், பெருங்கலாச்சாரச் சீரழிவும், இவை யாவற்றிற்கும் மேலாக இன்னும் எத்தனை காலத்திற்கு மனித இனம் உயிர் தரித்திருக்க முடியும் என ஏங்கவைக்கும் சுற்றுச்சூழல் பேரழிவும் நம்மை எதிர் கொள்கின்ற காலம் இது. இன்றைய படைப்புகளும் விமரிசனமும் இவற்றை எதிர்க்கப் பயன்படட்டும்!

—–


பெண்ணியமும் பெண்களின் எழுத்தும்

penniyamum pengalin ezhuththum1நமது கலாச்சாரச் செயல்பாடுகள் அனைத்திலும் பெண் இரண்டாந்தர இடம் பெற்றிருக்கிறாள், ஆணுக்கு அடிமையாக இருக்கிறாள் என்பது பெண்ணியக் கொள்கையின் அடிப்படையான கருத்து. பெண்களின் ஒடுக்குமுறையை இல்லாமல் ஆக்குவதும் ஆண்களின் பார்வையில் கட்டப்பட்டுள்ள இன்றைய கலாச்சாரத்தைஅதாவது ஆணாதிக்கத்தை, தந்தையாதிக்க முறையை, இவற்றின் அடிப்படையிலான கருத்துகளை இல்லாமல் போக்கி, பெண்களின் விழைவுகள், நோக்கங்கள் ஆகியவற்றை முழுமையாக ஏற்கும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவது பெண்ணியத்தின் நோக்கம். பெண்ணியத்திற்குள் எத்தனையோ பிரிவுகள் இருப்பினும் மேற்கண்ட இலக்கு எல்லாவற்றிற்கும் பொதுவானது. புதிதாக உருவாகும் அப்படிப்பட்ட ஒரு சமூகம் எப்படியிருக்கும் என்பதன் கற்பனையிலும், அதனை உரு வாக்கக்கையாள வேண்டிய நடைமுறைச் செயல்பாடுகள் யாவை என நிர்ணயிப்பதிலும்தான் பல்வேறு பெண்ணியக் கொள்கைகளும் வேறுபடுகின்றன.

முதன்முதல் பெண்ணியச் சிந்தனைக்கான சான்றாக நமக்குக் கிடைப்பது 1792இல் மேரி உல்ஸ்டன்கிராஃப்ட் எழுதிய ‘தி விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் விமன்’ என்ற நூல். ஓர் அரசியல் செயல்பாட்டு முறையை அதில் அவர் முன்வைக்கிறார். மேற்கத்தியப் பெண்ணியத்தின் மையமாக அவர் சிந்தனை ஏற்கப்பட்டுள்ளது.

உலகமுழுவதுமே பெண்ணடிமைத்தனம் நிலவுகிறது. அதிலும் சாதியமைப்புடைய இந்தியச் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் மிகமிக அதிகமாகவே இருந்தது, இருக்கிறது. தொடக்கத்தில் ஆண்களுக்கு நிகரான பொருளாதார, அரசியல் சமத்துவத்தைப் பெறுவதாகவே பெண்களின் இயக்கங்கள் அமைந்தன. பாலியல் சமமின்மை பற்றி 19ஆம் நூற்றாண்டில் வெளியான சில நூல்களால் பெண்ணியத்தின் வேகம் அதிகமாகியது. சான்றுக்கு ஜே.எஸ். மில், ஹாரியட் டெய்லர் மில் இணைந்து எழுதிய தி சப்ஜெக்ஷன் ஆஃப் விமன் என்ற நூலைச் சொல்லலாம். பெண்கள் குழுக்கள் பலவும் சமத்துவப் போராட்டத்தில் இறங்கினர். இருபதாம் நூற்றாண்டில் சிவில் உரிமைக் குழுக்களால் பெண்களுக்கு வாக்குரிமை, பொருளாதார சமத்துவம் போன்றவை ஓரளவேனும் கிடைத்துள்ளன. மேலும் சமமான கல்வி, தாய்சேய்நலம், சம ஊதியம் போன்ற நிலைகளும் ஏற்பட்டன. பெண்களின் மேம்பாட்டுக்குச் சமமான கல்வி, பொருளாதார நிலை, அரசியல் சமத்துவம் ஆகியவை அடிப்படை என்பது எங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை. இவற்றிற்காகப் போராடுவதையும் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் எனக் கருதுபவர்கள் பலர் உண்டு. பெண்ணியத்தின் முதல் நிலை இது.

penniyamum pengalin ezhuththum2பெண்ணியத்தின் இரண்டாம் நிலையாக, பெண்ணாக இருக்கும் (ஒடுக்கப்படும்) நிலை என்பது இயற்கையான ஒன்றல்ல என்ற விஷயத்தை ஏற்றுக்கொள்வதும் புரிய வைப்பதும் அமைந்தன. உலகில் எந்த ஒன்றின் மேலாண்மையும் இயல்பானதல்ல. ஆணாதிக்கமும் இயல்பான ஒன்றல்ல. எனவே அதை மாற்ற முடியும், மாற்ற வேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது. பாலியல் அடையாளங்களும் அவற்றிற்கான கலாச்சாரச் செயல்பாடுகளும் மொழி, கலாச்சார அமைப்புகளால் உருவானவை. சான்றாக, பெண் பூப்படைவது ஒரு பாலியல் அடையாளம். அதற்கான கலாச்சாரச் செயல்பாடுகளாக நீராட்டு விழா எடுத்தல், தனியே அமரச் செய்தல், மாமன்மார் சீர் செய்தல் போன்றவை நமது கலாச்சார அமைப்பினால் உருவான விஷயங்கள். இது உலகப் பொதுவானதல்ல. சான்றாக, ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய நிலை கிடையாது.

ஆண்மை, பெண்மை என்பவற்றிற்கான அடையாளங்கள், இப்படி நடந்து கொள்ளவேண்டும், பழக வேண்டும் என்பன போன்ற கட்டளைகள் கலாச்சாரத்தினால்தான் அளிக்கப்படுகின்றன. இப்புனைவுகள் ஆதிக்கம் சார்ந்த உத்தியாக மாறும் போது தகர்ப்பமைப்பும், எதிர்ப்புனைவுகளும் தேவைப்படுகின்றன. ஆணாதிக்கம் மட்டுமல்ல, எந்த வகை ஆதிக்கமாயினும், படைப்பிற்கும் புனைவுக்கும் கற்பனைக்கும் எதிரானவை. உயிர்ப்புள்ள கவிதை, கலைப்படைப்புகள் எவ்வித அதிகாரத்தையும் மையமாகக் கொள்வதில்லை.

இந்தியாவில் பெண்ணியம்:

penniyamum pengalin ezhuththum31030-களிலேயே பெண்களின் மேம்பாடு என்ற சொல்லாடல் பிறந்துவிட்டது. என்றாலும் அது பெண்ணியச் சிந்தனை குறித்ததல்ல. ஆயினும் எந்த ஒரு கருத்தமைவும் ஒரு நாட்டிற்கே உரியதல்ல என்பதால், மேற்கத்திய நாடுகளின் பெண்ணியக் கருத்துகள் விரைவில் இங்குப் பரவலாயின. இந்தியாவில் முதலில் சீர்திருத்த இயக்கங்கள் தான் தோன்றின. உதாரணமாக, சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கத்தைக் கைவிட வேண்டி இராஜாராம் மோகன்ராய் போராடி அதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தார். பலதார மண எதிர்ப்பு, பெண் கல்வி, பெண்களுக்குச் சொத்துரிமை ஆகியவை குறித்தும் அவர் போராடியிருக்கிறார்.

மக்களின் உரிமைகள் பற்றியும், மக்களில் சரிபாதித் தொகையினரான பெண்களின் உரிமையற்ற நிலை பற்றியும் விழிப்புணர்ச்சி தோன்றியபோது, பெண்ணியமும் எளிய வடிவில் தோன்றிவிட்டது. தேசியப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் பெண்கள் சார்ந்த விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டது. விதவை மறுமணம், பலதார மணத் தடை, சரி ஒழிப்பு, குழந்தை மண எதிர்ப்பு, முகத்திரை ஒழிப்பு, பெண் கல்வி, சட்ட ரீதியான சமத்துவம் போன்றவை நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் பற்றிப் பெரிதும் அக்காலத்தில் பேசப்பட்டது. விதவை மறுமணத்திற்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர் ஈசுவர சந்திர வித்தியாசாகர். குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடியவர்களில் முக்கியமானவர் கேசவ சந்திரசேன். இப்படிப் பெண்களுக்கான போராட்டங்களில் முதன்முதலில் ஆண்களே ஈடுபட வேண்டியதாயிற்று.

penniyamum pengalin ezhuththum4சுதந்திரப் போராட்ட காலத்தில் பெண்கள் ஏராளமாக அதில் பங்கேற்றனர். மராட்டியத்தில் ஜோதிராவ் பூலே பிராமண எதிர்ப்பையும் பெண் விடுதலையையும் ஒன்றிணைத்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் ஈ.வே.ரா. 1920 முதலாகவே பெண்கள் அடிமைத்தனத்தை நீக்கவேண்டுமென்று குரலெழுப்பிப் போராடிவந்தார். பாரதியாரும் பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்திருப்பதை அனைவரும் அறிவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பின் ஆங்காங்கு பெண்கள் அமைப்புகள்- மஹிளா மண்டலிகள்- தோன்றின. 1960களின் நடுப்பகுதிவரை இந்த அமைப்புகள் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஆந்திரம், பிஹார், மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் பண்ணையார்களை எதிர்த்துப் போராட்டங்கள் உருவாகியபோது பெண்கள் அவற்றில் இணைந்தனர். 1980க்குப் பின் தோன்றிய மகளிர் அமைப்புகளைப் பின்வருமாறு பகுக்கலாம்.

1. தன்னுரிமை அமைப்புகள்

2. வெகுஜன அமைப்புகள்

3. பெண்களுக்கு உதவி புரிய என ஏற்பட்ட அமைப்புகள்

4. தொழில் முறைச் சங்கங்கள்

5. அரசியல் கட்சிகளின் மகளிர் பிரிவுகள்

6. பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்கின்ற குழுக்கள்

புதிய மார்க்சிய இயக்கங்கள் உருவாக்கிய பெண் குழுக்கள் பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகப் போராடி வருகின்றன. பெண்களின் முற்போக்கு அமைப்பு, சமத்துவத்திற்கான பெண் போராளிகள் குழு போன்றவை இப்படிப்பட்டவை. சில சமயங்களில் தொழிலாளர்கள், பழங்குடி மக்கள், சாதி எதிர்ப்பு அமைப்புகள் இவற்றோடும் பெண்கள் இணைந்து போராடியுள்ளனர். பெண்கள்மீது நடத்தப்படும் கொடுமைக்கு எதிரான இயக்கங்களாக, தஹேஜ் விரோதி சேத்னா மஞ்ச், சிப்கோ இயக்கம், ஷகாதா இயக்கம் போன்றவற்றைக் கூறலாம். 1984இல் தமிழகத்தில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டது. உலக மகளிர் தசாப்தத்தின் இறுதியில் 1985இல் மும்பையில் நடந்த கருத்தரங்கு மகளிர் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதாக அமைந்தது. மேற்கண்டது போன்ற அமைப்புகள் பல இருப்பினும், தன்னுரிமை அமைப்புகளே சிறப்பாகச் செயல்படுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

சோஷலிச ஆட்சி அமையும்போது சாதிப் பிரிவினைகள் மறைந்துபோகும் என்று மார்க்சியவாதிகள் கருதினார்கள். அதுபோலவே பெண்கள் உரிமைகளும் தானாகக் கிடைத்துவிடும் என்று நினைத்தார்கள். இந்திய மார்க்சியவாதிகளின் குறைபாடு இது. வர்க்கப் போராட்டம் ஒன்றைத் தவிர பிற சமூக வேறுபாடுகள் குறித்து அவர்கள் அதிகம் கவனம் செலுத்தியதில்லை. சாதியத்தைப் போலவே, இந்தியாவில் பெண்கள் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் வேறுபட்டவை. இங்குப் பெரும்பாலான பெண்களுக்குப் படிப்பறிவு இல்லை என்பது முதல் குறை. ஆனால் படித்த பெண்களும், வேலை கிடைத்துப் பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற பெண்களும் கூட ஆணாதிக்கத்துக்கு உட்பட்டே இயங்குகிறார்கள். போராடுவதில் விருப்ப மற்றவர்களாக உள்ளனர்.

penniyamum pengalin ezhuththum5பிற எந்த இயக்கத்தினை விடவும், பெண்ணியம் சார்ந்து போராட்டங்களை நடத்துவது கடினம். காரணம், பெண்கள் குடும்பத்தின் இன்றியமையா அங்கமாக உள்ளனர். தந்தை, கணவன், மாமனார், மாமியார், பிற உறவினர்கள், மகன் போன்றோருக்குக் கட்டுப்பட்ட நிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டில் அறிவியல் சிந்தனை இல்லாததால், குழந்தை பிறக்கவில்லை என்றாலும் பெண்தான் குற்றம் சாட்டப்படுகிறாள்.

மேலும், இந்தியப் பெண்கள், பணியிடத்திலும், வீட்டிலும் என இரண்டு இடங்களிலும் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. எனவே அவர்களுக்கு ஓய்வு என்பதும் இல்லை. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, இந்தியாவில் பெண்கள் விழிப்புணர்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மிகுதி என்பதாகவே மதிப்பிடலாம்.

இந்திய நூல்களில் பெண்கள் நிலை:

penniyamum pengalin ezhuththum6இந்திய அளவில் மகாபாரதம் பெண்கள் நோக்கில் ஆய்வு செய்யப்பட வேண்டிய சிறப்பான நூல் என்று இராஜம் கிருஷ்ணன் கருதுகிறார். வியாசபாரதத்தில் பாஞ்சாலி, சூதாட்டம் நடக்கும்போது எதிர்க்குரல் கொடுக்கிறாள். தருமன் தன்னை வைத்து இழந்தபின், அவளை வைத்துச் சூதாட என்ன உரிமை என்ற கேள்வி எழுப்புகிறாள். ஆனால் வில்லிபாரதத்தில் இச்சம்பவம் சொல்லப்படவில்லை. கம்பராமாயணத்திலோ சீதை இராவணனிடம் சிறையிருந்ததற்கு இராமனால் பழி கூறப்படுகிறாள். இராமன் அகலிகையிடம் கடைப்பிடிக்கும் நியாயம் வேறு, சீதையிடம் கடைப்பிடிக்கும் நியாயம் வேறு. புதுமைப்பித்தன் இதைச் சாபவிமோசனம் என்னும் கதையில் சிறப்பாகக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். பாகவதம் போன்ற நூல்கள், பெண்கள் கேளிக்கைக்குரிய போகப்பொருள்கள் என்னும் எண்ணத்தையே மிகுதியாக விதைக்கின்றன. மனுநீதி போன்ற நூல்களோ, பெண்கள் இளமையில் தந்தைக்கும், நடுவயதில் கணவனுக்கும், முதுமையில் மகனுக்கும் அடிமை என்று பேசுகின்றன. இதன் தொடர்ச்சியாகவே பெண்களால் பயனில்லை, ஆண் குழந்தைகள் மட்டுமே பெற்றோரைப் புத் என்னும் நரகத்திலிருந்து காக்கமுடியும் என்னும் கருத்துகள் உருவாகியுள்ளன. மேலும் பெண்கள் சூத்திரர்களை ஒத்தவர்கள், அவர்களுக்கு வேதம் படிப்பிக்கக் கூடாது என்றும் பிராமணர் கருதிவந்துள்ளனர்.

பெண்களை வரதட்சிணை முதலியன கொடுத்துத் திருமணம் செய்வதற்குச் செலவு பிடிக்கிறது போன்ற எண்ணங்களால் பெண்சிசுக் கொலை என்பது இந்தியாவில் சகஜமாக இருக்கிறது. எல்லா உழைப்புக்கும் நாம் ஊதியம் தருவதாக வைத்துக் கொண்டால், உண்மையில் வாழ்க்கை முழுவதும் உழைப்பவர்கள் என்ற அடிப்படையில், பெண்கள் ஈட்டும் ஊதியப் பொருளே மிகுதியாக இருக்கும்.

தமிழ் இலக்கியங்களில் பெண்கள்:

உலகிலுள்ள பிற எல்லா இலக்கியங்களையும் போலவே தமிழ் இலக்கியங்களும் பெண்ணை அடிமைப்படுத்தியே நோக்கியுள்ளன. சங்ககாலத்திலும் பெண்ணடிமைத் தனம் வேரூன்றியிருந்ததை “வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்” போன்ற பாக்கள் தெளிவுறுத்துகின்றன. ஆனால் பிறமொழி இலக்கியங்களோடும், தமிழின் பிற்கால இலக்கியங்களோடும் ஒப்பீட்டு நிலையில் பார்க்கும்போது, சங்ககாலத்தில் பெண்கள் மிகுதியாகவே கல்வி கற்றிருந்தனர், புலவர்களாகவும் பாடினிகளாகவும் விறலியராகவும் விளங்கினர் என்பதை அறியமுடிகிறது. சங்கக் கவிதையில் பெண்குரலின் பதிவுகள் ஆழமாக இருக்கின்றன. ஒளவை என்ற ஓர் மகா ஆளுமையை அதில் நாம் காண்கிறோம். இன்னும்-ஆதிமந்தி, வெள்ளிவீதி, இப்படிப்-பலபேர் ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

திருக்குறளிலும், “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய் பெயனப் பெய்யும் மழை” என்பன போன்ற பெண்ணடிமைத்தனக் கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பெண்வழிச் சேறல் (செல்லுதல்) கூடாது என்று தனியாக ஓர் அதிகாரமே அமைந்துள்ளது.

தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டில் மட்டுமே பெண்களை ஓரளவு மதித்துப் போற்றும் போக்கு காணப்படுகிறது. சிலப்பதிகாரம் பெண்ணை மேம்படுத்தி நோக்கினாலும், கற்பு என்னும் கூண்டிற்குள் அடைத்து அவளை தெய்வமாக்கிவிடுகிறது. மணிமேகலையில் மட்டும்தான் மிகக் கீழ்நிலைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆசிரியர் உயர்த்திக் காட்டியிருக்கிறார். பிற எல்லா நூல்களும் பெண்களை நுகர்பொருள் என்னும் அளவிற்கு மேல் நோக்கவில்லை. இதனால்தான் பாதாதிகேச வருணனை போன்ற வருணனை மரபுகள் எழுந்தன.

சங்கக் கவிதையை விட்டால், பெண்குரல் பதிவுகள் ஆழமாக இடம்பெறுவது ஆண்டாள் வழியாகவே. ஆண்டாளுக்கு முன்னதாகவே காரைக்காலம்மையார் வாழ்ந்திருக்கிறார் என்றாலும் அவரது குரல் பெண்ணின் தனித்த குரலாகப் பதிவாக வில்லை. சிவபெருமானோடு அவரது உறவு தந்தை-மகள் உறவாகவும், தாய்-மகன் உறவாகவும் இருக்கிறது. ஆனால் அதன் பதிவு ஆண்டாள் போல் ஆழமாக இல்லை. காரைக்காலம்மை வாயிலாக ஒலிப்பது காலங்காலமாகப் பின்னர் பக்திக்காலத்தில் நாம் கேட்கப்போகும் ஆண் குரல்களே. ஆண்டாளுக்குப் பின் நீண்ட மௌனம்.

தமிழில் ஒளவையார் பெண் கவிஞர்களில் மிகச் சிறந்தவர். ஆனால் குறைந்தது ஆறு ஒளவையார்களேனும் வரலாற்றில் இருந்திருக்க வேண்டும் என்பர் அறிஞர். ஓர் ஒளவையின் நோக்கிற்கும் மற்றொரு ஒளவையின் நோக்கிற்கும் வேறுபாட்டை நாம் நன்றாகக் காணமுடியும். பாரியின் பெண்களோடு தொடர்பு கொண்டிருந்த ஒளவைக்கும், பெண் சற்றே ஏறுமாறாக நடந்தாலும் கூறாமல் சந்நியாசம் கொள் என்று போதிக்கும் ஒளவைக்கும்தான் எவ்வளவு வேறுபாடு?

பக்தி இலக்கியங்களும் பிற இலக்கியங்களும் பெண் இறுதிநிலையில் வெறுத்து ஒதுக்கப்படவேண்டியவள் என்றும், அப்போதுதான் முக்தியடைய இயலும் என்றும் போதிக்கின்றன. இந்த நோக்குதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை கோலோச்சியிருந்தது. பெண்கள் உடல்களாகவே நோக்கப்பட்டனர். பெண் உடலின் சமூக அடையாளம் என்பது மறு உற்பத்தியில் அவள் ஈடுபடக்கூடியவள் (ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே), குடும்ப அடையாளம் ஆகியவற்றைச் சார்ந்து அமைந்திருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டு இறுதியில் பெண்கள் எழுத்து:

penniyamum pengalin ezhuththum7இக்காலப் பெண்கவிஞர் ஒருவர் உடல் உறுப்புகளைக் கவிதையில் சொன்னதற்காக ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு நேர்முக, எதிர்மறை இரு வித விளைவுகளும் இருந்தன. (நேர்முக விளைவுக்கு உதாரணமாக ‘ஷி ரைட்’ என்ற பெயரில் மாண்டீரோ, ஜெய்சங்கர் இருவரும் இணைந்து எடுத்த டாகுமெண்டரிப் படம் போன்றவற்றைச் சொல்லலாம்.) இன்னொரு முனையில் கற்புடைய ஆண்கவிகள் கூட்டம்போட்டு இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று பெண்கவிகளை எழுத்துக்கடத்தினார்கள். இதுபோன்ற செயல்களும் தமிழகத்தில் மிகைநவிற்சிச் செயல்களாகவே அமைந்திருந்தன. தமிழில உடல் சம்பந்தமான எந்த நிகழ்ச்சியும் மிகைப்படுத்தப்படுவதே வழக்கம். ஆனால் ஆண்கள்தான் உடலைப் பற்றிப் பேசவேண்டுமா என்ன? பெண்கள் பேசக்கூடாதா? காலங்காலமாக ஆண்கள், சிற்றிடை, பெரிய மார்பு, அல்குல் என்று வருணித்துவந்தால், பெண்கள் வருணிப்பதிலும் எந்தத் தவறும் இல்லை.

பெண்கள் தங்கள் உடலில் உணர்வுகளையும் காதலையும் வெளிப்படுத்துவது ஒன்றும் புதியதும் அல்ல. பழங்காலத்தில் தொல்காப்பியர், “தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை” என்கிறார். ஆனால் சங்க காலத்திலும், “காமம் பெரிதே களைஞரோ இலரே” என்றும் “நும்மும் பெறேஎம் இறீஇயர் என் உயிரே” என்று பாடிய பெண்கவிஞர்கள் இல்லையா?

எப்போது திரைப்படம் என்ற ஊடகம் வந்ததோ அப்போதே காதல் பாடல்களாகிய இருவர்ப்பாட்டுகளும் (டூயட்டுகளும்) உருவாகிவிட்டன. டூயட்டுகளில் ஆண்களுக்கு எதிராகப் பெண்கள் தங்கள் உண்ர்வுகளை வெளிப்படுத்திப் பாடுவதும் (தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்) உருவாகிவிட்டது. ஒருவேளை இதற்குமுன் நமது நாடகப் பாரம்பரியத்தில் (தெருக்கூத்தில்), ஆண்களும் பெண்களும் தங்கள் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படையாகச் சொல்லும் டூயட்டுகள் இருந்தனவா என்று தெரியவில்லை. தன் கணவன்/காதலன் முன் பெண் தன் காதலுணர்வை வெளிப்படையாகப் பேசக்கூடாது என்ற நமது மரபை இந்த டூயட் பாட்டு அமைப்பு முற்றிலும் தகர்த்துவிட்டது. இவை வெளிப்படையான நிலையில் பெண்களின் உடல்சார்ந்த உணர்ச்சிகளைத்தான் பேசுகின்றன. எனவே ஏதோ இன்றைய பெண்கவிஞர்கள்-குறிப்பாகக் குட்டி ரேவதி போன்றோர் வந்துதான் பெண்களின் உடல்சார்ந்த உணர்வுகளைச் சமூகக் களத்தில் பேசத் தொடங்கினார்கள் என்பது சரியல்ல.

பிரதாப முதலியார் சரித்திரத்தில் ஞானாம்பாளை மிகுந்த அறிவோடு படைக்கும் வேதநாயகரும், இறுதியில் ஆண்களுக்குப் பெண்கள் அடங்கிநடப்பதே விவேகம் என அறிவுரைக்கிறார். பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்கள்தான் முதன் முதலாகப் பெண்கள் நிலையை எடுத்துக்காட்டுவதிலும், சீர்திருத்தக் கருத்துகளை முன் வைப்பதிலும் ஈடுபட்டன.

இருபதாம் நூற்றாண்டில் நாவல்களில் பெரும்பாலும் பெண் பாதுகாக்கப்படுபவள், சுகத்தைத் தருபவள், தீர்மானங்களைக் கேட்டுக் கொள்பவள், அடக்கமானவள், அழகு சாதனங்களுக்கானவள், வீட்டைப் பேணுபவள், தெய்வம் போன்றவள் என்றுதான் படைக்கப்பட்டிருக்கிறாள். இதில் பாரதிதாசனும் வேறுபடவில்லை. அவரது கருத்துகளும் பெண்ணடிமைத்தனத்திற்கு ஒத்துச் செல்வனவாகவே அமைந்துள்ளன. குடும்ப விளக்கு, இருண்ட வீடு போன்ற அவரது கவிதைகள் இதை உணர்த்துகின்றன. ஒருசிலரே இந்த நோக்கிற்கு மாறான புனைவுகளைப் படைத்தவர்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அம்பை என்னும் எழுத்தாளர், மிகத் தீவிரமான பெண்ணியநிலைப்பாடு கொண்டு சிறுகதைகளை எழுதியுள்ளார். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, கருப்புக் குதிரைச் சதுக்கம் போன்ற அவரது சிறுகதைகள், பெண்ணின் விடுதலைக்கான வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. பெண்கள் சார்பாக எழுதுபவர்கள் என நோக்கும்போது, ப.சிவகாமி, பாமா போன்ற ஓரிருவரே நினைவுக்கு வருகின்றனர். இராஜம் கிருஷ்ணன், திலகவதி, சூடா மணி போன்ற சிலர் இருவித நோக்குகளிலும் எழுதியுள்ளனர். பிற பெண் எழுத்தாளர்கள் யாவரும் ஆண்நோக்கிலிருந்தே எழுதிவந்துள்ளனர். இதற்கு மிகச் சரியான உதாரணமாக, 1930களிலேயே எழுதவந்த வை.மு. கோதைநாயகி அம்மாளைக் கூறலாம். இந்தப் பாரம்பரியத்தை இன்றுவரை பெண் எழுத்தாளர்கள் காப்பாற்றி வருகின்றனர்.

இருப்பினும் 1920-30களில் ஒரு சில பெண் எழுத்தாளர்களேனும் பிரக்ஞை பூர்வமாகப் பெண்கள் நோக்கில் எழுதியுள்ளனர். உதாரணமாக, இராமாமிர்தத்தம்மாள் அக்காலத்து தாசிகளின் வாழ்க்கை முறை பற்றி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழப் பதினைந்தாண்டுகள் முன்பு வெளிவந்த கவலை என்னும் நாவலும் ஒருதலைச் சார்பான நோக்கில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு பெண் குடும்பத்தில் எவ்வளவு பாடுபடவேண்டிவருகிறது என்பதை விவரிக்கும் போக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.

தொண்ணூறுகளில் மிகுதியாகப் பெண் கவிஞர்கள் தமிழில் தோன்றினார்கள் என்பது ஒரு முக்கிய நிகழ்வு. இவர்கள் மிக ஊக்கத்தோடு பெண்ணடிமைத்தனத்திற்கு எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். ஏராளமான பெண் குரல்கள் இன்று கேட்கின்றன. ஆனால் எல்லா ஆண்களுமே பெண்களுக்கு எதிரிகள் போலச் சித்திரித்து எழுதுகிறார்கள். அதனால் புதிய சில சலனங்களைத்தான் இவர்களால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் வார்த்தைகளில் சொன்னால், “பெண் குரலின் பதிவுகளே இல்லாத தமிழ்ப் பாரம்பரியத்தில் சில சலனங்கள் தொடங்கியுள்ள சூழல் இது.”

பெண்கவிஞர் சல்மா ஒருமுறை கூறினார்: “தமிழில் எழுதும் பெண் படைப்பாளிகள் தொட வேண்டிய பரிமாணங்கள் எவ்வளவோ இருந்தாலும், தம் படைப்பின் எல்லைகளை முன்கூட்டியே திட்டமாக வரையறுத்துக்கொண்டு அதே இலக்குகளைத் திரும்பத்திரும்ப அடைந்து கொண்டிருப்பது படைப்பின் வீழ்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. அநேகப் பெண்கவிஞர்களின் கவிதைகள் கவிதையை அதன் பழக்கப்பட்டுப்போன சுற்றுப்பாதையிலிருந்து வெளிக்கொண்டு வரக்கூடியதாக இருப்பதில்லை.”

பெண்விடுதலை, பெண்ணியம் என்னும்போது, அண்மைக்காலத்தில் குடும்பச் சிதைப்பும், ஓரினப் புணர்ச்சியும் முதன்மைப்படுத்தப்படுகின்றன. சிறுபத்திரிகைகளில் இவை அதிகம் விவாதிக்கப்பட்டும், பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் பேசப்பட்டும் உள்ளன. பெண் மொழி, உடல் சார்ந்த , ஓரினப் புணர்ச்சி உறவுகள், குடும்ப உடைப்பு அல்லது சிதைப்பு, தாய்மை மறுப்பு போன்றவை அனைத்தும் மேற்கத்திய உயர் நடுத்தர வர்க்கக் கருத்தியலின் இறக்குமதிகள். இவற்றிற்கு நமது சூழலில் எந்த அர்த்தமும் இல்லை என்பது என் கருத்து. இயற்கையின் ஒத்திசைவுடன் தங்கள் உடலையும் இனம் கண்டு, உடலை, காமத்தை, பாலியல்பைப் போன்றவற்றையெல்லாம் கொண்டாடும் கவிதையியக்கத்தில் குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்த ராணி ஆகிய மூவரும் முக்கியமான பிரதிநிதித்துவக் குரல்களாகக் காணப்பட்டுள்ளனர். ஆனால் நமது பாரம்பரியம், மிக வலுவானது, சுமையானது, எழவிடாமல் அழுத்தக்கூடியது. நமது பாரம்பரியத்தை மீறுதல் எளிய காரியமல்ல.

ஆர். மீனாட்சி, சுகந்தி சுப்பிரமணியன், பொன்மணி, ஆண்டாள் பிரியதர்ஷினி, சுபத்ரா, சல்மா, வத்சலா, கிருஷாங்கினி, கனிமொழி, குட்டி ரேவதி, தாமரை, உமா மகேஸ்வரி, சுகிர்தராணி, வெண்ணிலா, வைகைச் செல்வி, மாலதி மைத்ரி, இளம் பிறை, விஜய பத்மா, திலகபாமா என எத்தனை எத்தனையோ பெண் கவிஞர்களின் குரல்கள் இன்று கேட்கின்றன. சங்ககாலத்திற்குப் பிறகு பெண்கவிஞர் இத்தனை பேரின் பெயர்களை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் கேள்விப்பட்டோம்.

வாழ்க்கையின் சில சிறு சம்பவங்கள் கூட, ஆண்களின் பார்வையில் முக்கியத்துவம் அற்றவையாக இருப்பவைகூட, பெண்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன என்பதை சுகந்தி சுப்பிரமணியன் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். எல்லையற்ற வெளியில், சுதந்திர உலகில் தாவித் திரிய விரும்பும் பெண்மனத்தின் வெளிப்பாடுகளாக அவரது கவிதைகள் உள்ளன. பெண்ணியக் கவிஞர்களுக்கு அவரது எழுத்துகள் நல்ல முன்னுதாரணமாக அமையக்கூடியவை. சல்மாவின் கவிதைகள் சிலவற்றிலும் தனிப்பட்ட வெளிப்பாடுகள் சிறப்பாக உள்ளன. ஆண்பெண் உறவுகளைப் பற்றிய அவநம்பிக்கையையும், அவற்றைச் சீர்படுத்த இயலாத நிலையையும் கவிதைகளில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். பெண் கவிதைகள் பொதுவான பிரச்சினைகளைப் பேசும்போதுதான் உயிர்பெறுகின்றன. தங்களைப் பற்றி எழுதும்போது செத்துவிடுகின்றன. உதாரணமாக எத்தனை எத்தனையோ கவிதைகளை எடுத்துக்காட்டலாம்.

இறுதியாகப் பார்க்கும்போது, ஆற்றலுடைய பெண்கவிதைகள் தமிழில் இன்னும் தோன்றவில்லை என்றேபடுகிறது. இப்போதிருக்கும் பெண்கவிஞர்கள் பலரும் ஒரு வித்தியாசமான, புதிய மொழிநடையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்னும் மோகத்தில் ஒரு அந்நியமான மொழிநடையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் படிக்கும் உணர்வே பெரும்பாலான பெண் கவிஞர்களின் கவிதைகளைப் படிக்கும்பொழுதும் ஏற்படுகிறது.

ஊடகங்களில்-குறிப்பாகத் திரைப்படம், தொலைக்காட்சி இரண்டிலும்-பெண்கள் மிக மோசமாக, போகப் பொருளாக மட்டுமே சித்திரிக்கப்படும் நிலை தொண்ணூறுகளில்தான் தொடங்கியது. தமிழ் ஊடகங்கள் என்றுமே பெண்களுக்குப் பெருமையளித்தது கிடையாது. ஆனால் இப்போதைய நிலை மிகமிக மோசமானது என்பதில் சற்றும் ஐயமில்லை. உண்மையில் பெண்ணிய இயக்கம் என்பது, தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு (ஜனரஞ்சகப் பத்திரிகைகள் உட்பட) எதிராகத்தான் உருவாக வேண்டும்.


இலக்கணத்தில் விளைந்த இலக்கியம்

ilakkanaththil vilandha ilakkiyam1பழங்காலத் தமிழில் இலக்கியப் பொருள் அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவற்றின் தன்மைகளை விளக்குவது பொருளிலக்கணம். இக்காலத்தின் கவிதையியல், கவிதை இலக்கியக் கொள்கை என்ற சொற்களுக்கு நேரான பழங்காலச் சொல் பொருளிலக்கணம். இப்பொருளிலக்கணத்தைத்தான் தொல்காப்பியப் பொருளதிகாரம் விரிவாகக் கூறுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணை இயல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல் ஆகிய ஐந்து இயல்களில் அகத்திணைப் பாக்களை இயற்றும் வழிமுறைகளைக் காணலாம்.

தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்திகளைச் சுருக்கியோ, விரித்தோ, சற்றே மாற்றியோ கூறுவதாக இறையனார் அகப்பொருள், நம்பியகப்பொருள், மாறன் அகப்பொருள் எனப் பிற்காலத்தில் பல தனி இலக்கண நூல்கள் எழுந்தன. இவை ஒவ்வொன்றும் தொல்காப்பியத்தின் அக இலக்கணக் கூற்றுகளை வரிசைப்படுத்திக் காட்டுகின்றன. களவு கற்பு என்ற இயல்களாகப் பகுத்து, அவற்றுள் கிளவிகளும் துறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் இந்த நூல்களில் சொல்லப்படும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு உதாரணச் செய்யுள் இயற்றவேண்டிய தேவை ஏற்பட்டது. இப்படி, அகப்பொருள் நூல்களில் காணப்படும் கூற்றுகளுக்குரிய உதாரணச் செய்யுட்களைத் தொகுத்தபோது அதுவே ஒரு தனி இலக்கிய வகையாக மாறிவிட்டது. இப்படித் தோன்றிய இலக்கியத்திற்குக் கோவை எனப் பெயரிட்டார்கள். பலவேறு உதாரணச் செய்யுட்கள் கோவையாக அமைக்கப்பட்டதனால் கோவை என்ற பெயர் பெற்றது.

“கல்லாடம் கற்றாரோடு சொல்லாடாதே” என்று ஒரு பழமொழி உண்டு. இந்தப் பழமொழியின் காரணமாக, கல்லாடம் என்பது ஒரு இலக்கண நூல் என்று இன்றும் நினைக்கிறார்கள். ஆனால் கல்லாடம் என்பதும் ஒரு அகப்பொருட் கோவை நூல் தான் என்பது பலருக்கும் இன்றுவரை தெரியாது. இம்மாதிரிப் பிற்காலத்தில் கோவை நூல்கள் பெருகின. முதன்முதலில் தோன்றியது பாண்டிக்கோவை என்னும் நூல்,

இலக்கணத்திலிருந்து பிறந்த இலக்கியம்:

ilakkanaththil vilandha ilakkiyam2தொல்காப்பியம் கூறும் அகப்பொருள் துறைகளை நாடகப் போக்குடன் முறையாக அமைத்து, தொல்காப்பியர் கூறும் விருந்து என்னும் வனப்பிற்கேற்பப் புதுவதாக உருவாக்கி அமைக்கப்பட்டது கோவை இலக்கியம் என்று இதற்கு இலக்கணம் கூறுவார்கள். பொதுவாக இலக்கியத்திலிருந்துதான் இலக்கணம் தோன்றும் என்பார்கள். இங்கோ இலக்கணத்திலிருந்து இலக்கியம் தோன்றியதாகச் சொல்லப்படுவது ஓர் ஆச்சரியம்தான். இறையனார் அகப்பொருளுக்கு இசைய இயற்றப்பட்டது பாண்டிக்கோவை. நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய அரசன்மேல் பாடப்பட்ட நூல் அது. 400க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டுள்ளது. நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலுக்கு ஏற்ப இயற்றப்பட்டது தஞ்சை வாணன் கோவை. இதில் 425 பாக்கள் உள்ளன.

சங்க இலக்கியங்களிலிருந்து தோன்றியதா?:

இலக்கணநூல்களிலிருந்து கோவை தோன்றியது என்பதற்கு மாறாக, சங்க அக இலக்கியங்களிலிருந்தே கோவை இலக்கியம் தோன்றியது என்றும் நாம் கொள்ளலாம்.

சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகையிலுள்ள அகநூல்களின் பாக்கள் ஏறத்தாழத் தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. குறுந்தொகை நற்றிணை அகநானூறு போன்ற அக இலக்கியங்களில் ஐந்திணை நெறிப்படிப் பாக்கள் அமைகின்றன. இவை யாவும் ஒரே கவிஞர் பாடியவை அல்ல. பலவேறு புலவர்கள் பல்வேறு காலங்களில் பாடிய தனித்தனிப் பாடல்கள். பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையைக் கூறிய இலக்கியம் என்பதால் ஒவ்வொரு பாட்டின் கூற்றும் ஒவ்வொரு வகையாக அமைகிறது. ஒரு பாட்டு, குறிஞ்சித் திணையில் தலைவன் தலைவியை நலம் பாராட்டுவதாக இருக்கலாம். அடுத்த பாட்டு, மருதத்திணையில் தலைவனுக்குத் தோழி வாயில் மறுப்பதாக இருக்கலாம். மூன்றாவது பாட்டோ, பாலைத்திணையில் தலைவன் தலைவியை நினைத்துப் புலம்புவதாக இருக்கலாம். இப்படிச் சங்க காலத்தில் ஒவ்வொரு பாட்டும் அந்தந்தக் கவிஞரின் மனநிலைக்கேற்ப, அவர் எடுத்துக் கொண்ட செய்திக்கேற்பப் பாடப்பட்டது.

பிற்காலத்தில் இந்தக் கூற்றுமுறைகளைத் தொகுத்து நாடகப்பாங்கில் வரிசைப்படுத்திக் காணும் போக்கு தோன்றியது. இதன் விளைவே கோவை இலக்கியம் என்று கூறலாம். அகப்பொருளுக்குரிய துறைகள் யாவும் நாடகப் பாங்கோடு முறையாகக் கோக்கப்பட்ட பொருண்மைச் சிறப்பால் கோவை என்னும் பெயரை இந்த இலக்கியவகை பெற்றுள்ளது என்று சொல்வார்கள்.

சங்க அக இலக்கியமும் கோவையும்:

அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற அகப்பாடல் தொகுப்பு நூல்கள் 400 பாக்களைக் கொண்டு அமைந்துள்ளன. இதனை ஒட்டியே கோவை என்ற இலக்கிய வகையும் 400 பாக்களைக் கொண்டதாக அமையவேண்டும் என்னும் வழக்கு அமைந்தது. இன்றுள்ள கோவை நூல்களில் திருக்கோவையார் ஒன்றுதான் சரியாக 400 பாக்களைக் கொண்டு அமைந்துள்ளது. பிற நூல்கள் ஏறத்தாழ இந்த எண்ணிக்கையை ஒட்டிச் செல்கின்றன.

சங்க இலக்கியத்திற்கும் கோவை இலக்கியத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

1. சங்க இலக்கிய அகப்பாக்களுக்குத் துறை கிடையாது. திணை உண்டு. அத்திணைக் குரிய கூற்றுகள் உண்டு. இந்தக் கூற்றுகளைத் துறையாக மாற்றிவிட்டது கோவை இலக்கியம்.

2. சங்க அகப்பாக்கள் ஆசிரியப்பாவில் அமைந்தவை. அகப்பொருட்கோவைச் செய்யுட் களோ கட்டளைக் கலித்துறை என்னும் நான்கடிப் பாவகையால் அமைந்தவை.

3. சங்க இலக்கியத்தில் தலைவன்-தலைவி போன்ற கவிமாந்தர் உண்டு. எந்தத் தலைவன் தலைவி பெயரும் கூறப்படுவது கிடையாது. ஆனால் கோவை இலக்கியத்தில் (புகழப்படுகின்ற) பாட்டுடைத் தலைவன் வேறு, கிளவித் தலைவன் வேறு.

பாட்டுடைத் தலைவன்-கிளவித் தலைவன் வேறுபாடு சங்ககாலத்திலேயே தோன்றி விட்டது. உதாரணமாக, பத்துப்பாட்டில் ஒன்றாகிய பட்டினப்பாலை. அதன் பாட் டுடைத் தலைவன் கரிகாற் சோழன். ஆனால் அந்தப் பாட்டிலேயே வரும் அகப்பொருளுக்குரிய தலைவன் வேறு. இவன் தன் தலைவியைப் பிரிந்துசெல்ல முடியாமல் தயங்குகிறான். இப்படிப்பட்ட பாடல் தலைவனைப் பிற்காலத்தில் கிளவித் தலைவன் என்றார்கள். பாட்டு எந்த அரசனைப் புகழ்ந்துபாட இயற்றப்பட்டதோ அவனைப் பாட்டுடைத் தலைவன் என்றார்கள்.

4. சில கோவை நூல்கள், சங்க இலக்கிய மரபைப் பின்பற்றினாலும், அதை மீறியும் செல்கின்றன. தஞ்சைவாணன் கோவையில் வரைவியல் என்ற பகுதியில் வரும் மீட்சி, தன்மனை வரைதல், உடன்போக்கு இடையீடு போன்றவற்றிற்கு உதாரணங்களைச் சங்க இலக்கியத்தில் காண்பது அரிது. தொல்காப்பியத்திலும் இவைகுறித்த செய்தியைக் காண இயலாது. இப்படிப் பழைய இலக்கண வரையறைகளைப் பெருக்கிக் காட்டுவதையும் கோவை நூல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

உதாரணமாகத் தஞ்சைவாணன் கோவையில் தன்மனைவரைதல் என்ற பகுதியில்,

தலைவியின் தாய், தன் மனையில் மணம் செய்துவைக்கவேண்டும் என்ற ஆவலைச் செவிலிக்கு உணர்த்துகிறாள்.

செவிலிக்குத் தோழி ஏற்கெனவே இருவரும் திருமணம் செய்துகொண்ட செய்தியைச் சொல்கிறாள்.

அதனைச் செவிலி நற்றாய்க்குச் சொல்கிறாள்.

நாங்கள் மணம் செய்துகொண்டதை உங்கள் சுற்றத்தார்க்குச் சொல் என்று தலைவன் தோழிக்குச் சொல்கிறான்.

நான் முன்னமே அதைச் சொல்லிவிட்டேன் என்று தோழி தலைவனுக்கு உரைக் கிறாள்.

இவைபோன்ற செய்திகள் சங்கப்பாக்களில் கிடையாது. இவையெல்லாம் சங்க இலக்கிய அல்லது தொல்காப்பியக் கூற்றுமுறைகளை எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் விரிவுசெய்துகொள்ளும் மிகைக் கற்பனைகளே,

5. கோவை நூல்கள், தங்கள் முன்னோடிகளாகிய சங்க இலக்கியங்களோடு ஒப்பிட இயலாதவைதான், ஒருநிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட காலத்தின் கவிதை வறட்சி யைக் காட்டுபவை. முன்சென்றோர் வளமான இலக்கியம் படைத்துவிட, பின்வந்தவர் கள் எதை எழுதுவது என அறியாமல், முன்சென்ற இலக்கியத்தைப் பட்டியலிடும் நிலையில் படைத்த நகல் இலக்கியமே கோவை. மேலும் இடைக்காலத்திற்கே உரிய தன்மையான கட்டளைக் கலித்துறை என்னும் கடினமான யாப்பில் படைத்தலும் இதில் காணப்படுகிறது.

கோவை நூலின் இலக்கணம் :

ilakkanaththil vilandha ilakkiyam3கோவை இலக்கியம் கட்டளைக் கலித்துறைச் செய்யுள் என்ற யாப்பில் இயற்றப்படும் என்பது மரபு. சில இலக்கண நூல்களில கலித்துறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலித்துறை வருவதோடு பிற பாக்களும் வரும் என முத்துவீரியம் என்ற இலக்கண நூல் கூறுகிறது. கோவை நூல்களில் பயின்றுவரும் பான்மை நோக்கிக் கட்டளைக் கலித்துறைக்குக் கோவைக் கலித்துறை என்றே பெயர்கொடுத்தார் வீரசோழிய உரைஆசிரியர் பெருந்தேவனார். பிற கலித்துறைகளைக் காப்பியக் கலித்துறை என்று அவர் கூறியுள்ளார். பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கணவிளக்கப் பாட்டியல், தொன்னூல் விளக்கப் பாட்டியல், முத்துவீரியப் பாட்டியல், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம் ஆகிய பத்து இலக்கண நூல்கள் கோவை இலக்கியத்தின் இலக்கணத்தைக் கூறுகின்றன. நிலம்-பொழுது என்னும் இருவகை முதற்பொருள், பதினான்கு கருப்பொருள்கள், புணர்தல் முதலிய பத்து உரிப்பொருள்கள் பொருந்திவர, கைக்கிளை முதலான களவு, கற்புத் துறைகளைப் பெற்றுவருவது கோவை என்று பன்னிருபாட்டியலில் விரிவாக இலக்கணம் சொல்லப்படுகிறது.

புறப்பொருட்கோவையும் பாடப்பெறும் என்று சுவாமிநாதம் கூறினாலும் அம்மாதிரி நூல்வகை இன்று இல்லை. பொருளிலக்கணத்தில் திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை எனப் பன்னிரண்டு உறுப்புகள் இருப்பதாகக் கூறுவார்கள். கோவை இலக்கியம் இவ்வுறுப்புகளைப் பெற்றுவரும். அகப்பொருள் துறைகள் வரையறுக்க இயலாதவை. ஒவ்வொரு கிளவிக்கும் இத்தனை துறைகள் என்று எண்ணி வரையறுக்க முற்பட்டன பிற்கால நூல்கள்.

தலைவனும் தலைவியும் தாமே ஒரு தனியிடத்தில் சந்தித்து தோழியின் துணைகொண்டு காதலின்பம் பெறும் களவொழுக்கம் முதலாக, தலைவன் ஊரார் அறியத் தலைவியை மணந்து விருந்தோம்பி மக்கட்செல்வம் பெற்று வாழும் கற்பொழுக்கம் ஈறாக உள்ள பொருண்மையைப் பல்வேறு துறைகளாகக் கதைப் பாங்கில் கூறுவது கோவை என்று நாம் சுருக்கமாகக் கூறலாம். தஞ்சைவாணன் கோவையில் 33 கிளவிகள் உள்ளன. திருக்கோவையாரில் 25 கிளவிகள் மட்டுமே உள்ளன.

திரைப்படச் செயற்கை:

சங்க இலக்கியங்கள் இயல்பான எடுத்துரைப்புகள். காரணம், எந்த எந்தக் கூற்றுகளை எந்தப் புலவர்கள் முதன்மையாகக் கருதினார்களோ அதைப் பாடினார்கள். இந்தக் கூற்றுகள் எல்லா தலைமக்கள் வாழ்க்கையிலும் கட்டாயம் நிகழவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை. எல்லாத் தலைவர்களும் காட்சி என்பதில் தொடங்கி, தோழியின் வாயிலாக மட்டுமே தலைவியைச் சந்தித்து, உடன்போக்கில் ஈடுபட்டு, பிறகு மணந்து, பிறகு பரத்தையருக்காகப் பிரிந்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரே தலைவன் தலைவியின் வாழ்க்கையில் இத்தனையும் நடப்பதாகத் தொகுத்துக் கூறும்போது அது செயற்கை ஆகிவிடுகிறது. இப்படிப்பட்ட செயற்கை இலக்கியம்தான் கோவை இலக்கியம்.

இன்றும்கூட எல்லா மனிதர்களும் காதல்கொள்ளவேண்டும் என்ற அவசிய மில்லை. காதல் கொண்டபின் வில்லனால் ஆபத்து நேரவேண்டும் என்ற அவசியம் இல்லை. கதாநாயகன் வீரதீரனாக அமைந்து வில்லனோடு மோதவேண்டிய அவசி யமும் எல்லார் வாழ்க்கையிலும் ஏற்படுவதில்லை. ஆனால் இவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்ததாக நமது திரைப்படங்கள் செயற்கையாகக் காட்டுவதுபோலப் பழங்காலக் கோவை நூல்களும் அகப்பொருள் துறைகள் யாவும் ஒருவன் வாழ்க்கையிலே அமைந்ததுபோலச் செயற்கையாகக் காட்டியுள்ளன.

கோவை நூல்களில் இறைவன் திருவருளைப் பேசும் திருக்கோவையார், சந்திர வாணன் என்ற தலைவன்மேல் இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்பவை புகழ்பெற்றவை.

திருக்கோவையார்:

ilakkanaththil vilandha ilakkiyam4சைவசமய குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் திருக்கோவையார் பாடினார் என்பர். எட்டாம் திருமுறையாகத் திருவாசகத்துடன் திருக்கோவை யாரும் சேர்க்கப்பட்டுள்ளது. உருக்கமான திருவாசகப் பாக்களைப் பாடிய திருவாதவூரர், திருக்கோவையார் போன்றதொரு செயற்கையான சிற்றிலக்கிய நூலை யும் எழுதியிருப்பார் என்பது பொருந்தாததாகத் தோன்றுகிறது. இறைவனே மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தைத் தம் திருக்கரத்தால் எழுதினார் என்று புராணக்கதை உண்டு. ‘பாவை பாடிய வாயாற் கோவை பாடுக’ என்று இறைவன் அருளிச்செய்தமையின் திருக்கோவையை மாணிக்கவாசகர் இயற்றினார் என்பர். இதை எழுதிக்கொண்டு இறைவன் மறைந்தபோது இவ்விரண்டு நூல்களுக்கும் பொருள் யாதெனப் பிறர் வினவ, மாணிக்கவாசகர் நடராசப் பெருமானைச் சுட்டிக்காட்டினார் என்றும் கூறுவர். இதனைக் குமர குருபரர், தமது சிதம்பர மும்மணிக்கோவையில்,

பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்

ஐந்திணை உறுப்பின் நாற்பொருள் பயக்கும்

காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப்

பொருளெனக் காட்டிய ஒருபெருஞ்செல்வ

என்று வருணிக்கின்றார்.

ஊழிக்காலத்தின் இறுதியில் எல்லா உலகங்களையும் இறைவன் அழித்தபிறகு அவனுக்குச் சலிப்பேற்படாமல் இருக்கப் படிக்கவேண்டியே கோவையைப் பாடப் பணித்தான் என்று இதனைச் சமத்காரமாகப் பேராசிரியர் சுந்தரனார் மனோன் மணீயத்தில் பாராட்டுகின்றார்.

அகப்பொருள் நூலாயினும், திருக்கோவையார் பேரின்பச் சார்பான நூல் என்றே உரைப்பர். இதனால்தான் இதற்கு உயர்வு குறிக்கும் ஆர் விகுதி கொடுத்து இந்நூல் வழங்கப்படுகிறது.

இந்நூலின் தொடக்கத்தில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட அதிகார வரலாறு என்ற பகுதியில், கிளவிப்பெயர்கள் 25ஐயும் கூறி, ‘‘அருள் வயிற் சிறந்த அகத்திணை மருங்கின் இருளறு நிகழ்ச்சி இவையென மொழிப’‘ என்றதாலும், பேராசிரியர் இதன் முதற்பாட்டு உரையில் ‘‘ஈசர் தில்லை என்றமையின் வீடுபேற்றின்பத்தைச் சுட்டினார்’‘ என்று கூறுவதாலும் இதனை ஞானநூல் எனவே கருதிவருவது புலனாகிறது. இதனை வற்புறுத்தற்பொருட்டு திருக்கோவையார் உண்மை என்ற நூலும் எழுதப்பட்டுள்ளது.

‘‘நாயகி பரம்பொருளாக, நாயகன் பக்குவ ஆன்மாவாக, தோழி திருவருளாக, தோழன் ஆன்மபோதமாக, நற்றாய் பரையாக, திரோதாயி செவிலித் தாயாக, மேலும் நாயகன் கூற்றெல்லாம் நாயகி கூற்றாகவும், நாயகி கூற்றெல்லாம் நாயகன் கூற்றாகவும் நிகழ்ந்துவரும். நாயகியைச் சிற்றம்பலம்போல வருணிக்கையால் நாயகி பரம்பொருளா யிற்று. பெறுவான் நாயகனும் பேறு நாயகியுமாக இரசமும் நாவும்போல இருத்தலானும், கொத்தும் துறையும், கருப்பொருளும் உரிப்பொருளும், இடமும் எல்லாம் அருளின்பம் எனக்கொள்க’‘ என்று சீர்காழித் தாண்டவராயர் இதன் பேரின்பச்சார்பினை விளக்குகிறார். இதற்குப் பேராசிரியர் எழுதிய உரை ஒன்று உள்ளது. பழைய உரை ஒன்றும் உள்ளது.

இந்நூலுக்குப் பாட்டுடைத் தலைவன் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமான். கிளவித்தலைவன் சிலம்பன், வெற்பன், விடலை, ஏந்தல், நாடன் என்றெல்லாம் பொதுப்பெயர்களினாலே பழைய மரபிற்கேற்பக் குறிக்கப்படுகிறான்.

ilakkanaththil vilandha ilakkiyam5திருக்கோவையார் ஆசிரியர் சங்க இலக்கிய மரபில் தோய்ந்தவர் என்பதில் ஐயமில்லை. சான்றாக, திருக்கோவையாரின் உலகியல்புரைத்தல் என்ற துறையைக் காண்போம். தலைவியும் தலைவனும் உடன்போக்கில் ஈடுபட்டனர். அதாவது பெற்றோர் திருமணம் செய்ய மாட்டார்கள் என்றெண்ணி இருவரும் வேற்று£ர் சென்றுவிட்டனர். அப்போது செவிலித்தாய் அவர்களைத் தேடிச் செல்கிறாள். ‘‘செவிலியது கவலைதீர மன்னிய உலகியல் முன்னி உரைத்தது’‘ என்பது இதற்குக் கொளு. இந்தப் பாட்டைக் காண்போம் (248).

                சுரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும் வெண்சங்கும் எங்கும்

                விரும்பினர் பாற்சென்று மெய்க்கு அணியாம், வியன் கங்கையென்னும்

                பெரும்புனல் சூடும் பிரான் சிவன் சிற்றம்பலமனைய

                கரும்பன மென்மொழியாரும் அந்நீர்மையர் காணுநர்க்கே.

வண்டுகள் சூழ்ந்து பறக்க நிற்கின்ற சந்தனமரமும், சகரராலே தோண்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற கடலில் பிறந்த முத்தும், வெள்ளிய சங்கும், தம்மை விரும்பி யவர்களிடம் சென்று அவர்களுடைய உடலுக்கு அலங்காரமாகின்றன. நலம்பெற்ற கங்கையின் பெருநீரைச் சூடியருளுகின்றவன் தலைவன், சிவனென்னும் நாமத்தை உடையவன், அவனுடைய திருச்சிற்றம்பலத்தை ஒத்துக் கரும்பை நிகர்த்த வார்த்தை யினை உடையவளும் ஆழமாக நினைக்கும்போது சிறந்த கற்பினை உடையவள். ஆதலால் நீ அவளைத் தேடிச் செல்லவேண்டா’‘

என்று செவிலிக்கு அறிவுரை கூறுவதாக இப்பாட்டு அமைகிறது.

இக்கருத்தை இதைவிடச் செம்மையான முறையில், பழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில் காணலாம். தலைவன் தலைவி உடன் சென்ற பின்னர், தேடிவரும் செவிலி முக்கோற் பகவர் எனப்படும் துறவியர்களைக் காண்கிறாள். அவர்களை வினவுகிறாள். அவர்கள் அவளுக்கு பதிலுரைக்கிறார்கள்.

ஆணெழில் அண்ணலொடு அருஞ்சுரம் முன்னிய

மாணிழை மடவரல் தாயிர் நீர் போறீர்;

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்?

நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும்?

தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை

யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?

சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

என ஆங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;

சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,

அறந்தலைப் பிரியா ஆறும் மற்று அதுவே. (9)

இதே சந்தனம், முத்து என்னும் உவமைகளே மேற்கண்ட திருக்கோவையாரில் ஆளப்படுகின்றன. திருக்கோவை பாடியவர் கலித்தொகைப் பாட்டில் வரும் யாழின் இசையை விட்டுவிட்டார். இரண்டு பாக்களையும் ஒப்பிடுவோர்க்குச் சங்கஇலக்கியக் கலிப்பாவின் சிறப்பு புலனாகும். திருக்கோவையில் சிவபெருமானின் புகழுரைக்கும் பாங்கு பிறவற்றைவிட மேம்பட்டு விடுகிறது. வியன்கங்கை என்னும் பெரும்புனல் (சிவபெருமானின் மனைவி என்ற முறையிலோ, அவன் தலையிலுள்ளது என்ற முறையிலோ) இடத்தைப் பிடித்துக்கொள்கிறது. உரையிலோ சகரர் தோண்டிய கடல் என்ற தேவையற்ற புராணக்கதை இடம்பெறுவதாகிறது.

கோவை நூல்கள் களவியலில் காட்சி எனப்படும் துறையில் தொடங்கி, கற்பியலில் பொருள்வயிற் பிரிதல் என்னும் துறையில் முற்றுப்பெறும். தலைவன் முதன்முதலில் தலைவியைக் காண்பது காட்சி எனப்படும் துறை. திருக்கோவையாரில் அது இவ்விதம் அமைகிறது:

                திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில்லைக்

                குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள் கொண்டோங்கு தெய்வ

                மருவளர் மாலையர் வல்லியின் ஒல்கி அனநடை வாய்ந்து

                உருவளர் காமன் தன் வென்றிக்கொடிபோன்று ஒளிர்கின்றதே.

துறைவிளக்கத்தைக் கூறுவதுபோல் வருகின்ற கொளு என்னும் பகுதியும் திருக் கோவையாரில் அமைந்துள்ளது. இதற்குக் கொளு-மதிவாணுதல் வளர்வஞ்சியைக் கதிர்வேலவன் கண்ணுற்றது என்பது. அதாவது, ‘‘பிறையை ஒத்து ஒளிசிறந்த நெற்றியினை உடைய இளைய வஞ்சிக்கொம்பை நிகரானவளை ஒளிசிறந்த வேலினை உடையவன் கண்டது’‘ என்று பழைய உரையாசிரியர் விளக்குவர். இப்பாட்டின் பொருள்:

“திருவளரும் தாமரைப்பூவினையும், அழகுவளரும் நீலப்பூவினையும், ஈசர் தில்லைவரைப்பின் கண் உண்டாகிய பூங்குமிழினது நிறம் வளரும் பூவினையும், கோங்கு அரும்புகளையும் செவ்விக் காந்தட்பூக்களையும் உறுப்பாகக் கொண்டு மேம்பட்ட தெய்வமணம் வளரும் மாலை ஒரு வல்லிபோல நுடங்கி, அன்னத்தின் நடைபோல நடைவாய்ந்து, வடிவு வளரும் காமனது வெற்றிக்கொடிபோன்று விளங்குகிறது, என்ன வியப்போ என்றவாறு”.

அதாவது, தாமரைப்பூ, நீலப்பூ, குமிழம்பூ, கோங்கம்பூ, காந்தட்பூ, ஆகியவை சேர்ந்து ஒரு மாலையாக அமைந்ததன்றி, அது ஒரு கொடிபோல அசைந்து அன்னநடை நடந்து வருகிறதே, என்று தலைவியின் தோற்றத்தைப் பார்த்துத் தலைவன் வியப்பதுபோல் அமைந்திருக்கிறது இந்தப்பாடல்.

இதற்குப் பழைய உரை, ‘‘அழகுமிக்க தாமரைப்பூவினையும், சிறப்புடைய நீலப் பூவையும், சிவனுடைய சிதம்பரத்தில் நிறமிகுந்து பொலிவினைஉடைத்தாகிய குமிழம்பூவையும் கோங்கு அரும்புகளையும் செவ்விக் காந்தட்பூக்களையும் இப்புட்பங்களை அவயவமாகக் கொண்டு (எங்ஙனமெனில், தாமரைப்பூவை முகமாகவும், செங்கழுநீர்ப்பூக்களைக் கண்களாகவும், குமிழமலரை நாசியாகவும், கோங்கரும்புகளை மார்புகளாகவும், செவ்விக்காந்தட் பூக்களைக் கரங்களாகவும், இப்படி அவயவமாகக் கொண்டு) உயர்ந்த தெய்வ வாசனை மிக்க மாலை ஒரு வல்லி சாதகக்கொடிபோல நுடங்கி அன்னத்தின் நடைபோல நடையும் வாய்ந்து வடிவு மிகுந்த மாரவேளின் வெற்றிக்கொடியை ஒத்து விளங்கா நின்றது என்ன அதிசயமே’‘ என வரும்.

திருக்கோவையாரின் ஒவ்வொரு பாட்டும் இறைவனைப் புகழ்வதையே நோக்க மாகக் கொண்டுள்ளது என்ற அளவில் ஒவ்வொரு பாட்டின் உட்பொருளும் சிறப்பாகத் திகழ்கிறது. இதற்கு இப்பாட்டும் சான்று. உருவகமாகவே பாட்டு முழுதும் அமைந்துள்ளது. அதற்கும் மேலாக இனிய தமிழில் அப்பாட்டுக்கு உரையெழுதும் உரையாசிரியர்களின் உரைநடை மிகச் சிறப்பான வடிவம் கொண்டுள்ளது.

இந்த நூலுக்குப் பேராசிரியர் உரை மிகச் சிறப்பானது. மேற்கண்ட இந்த முதற்பாட்டின் உரையிலேயே, திருவளர் தாமரை என்று தொடங்கும் தொடருக்கு உரையெழுதும்போது, அவர், ‘‘திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம். என்றது அழகு… கோயிலைத் திருக்கோயில் என்றும், கோயில் வாயிலைத் திருவாயில் என்றும், அலகைத் திருவலகு என்றும், பாதுகையைத் திருவடிநிலை என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன எல்லாம் திருமகளை நோக்கி எழுந்தன அல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே எழுந்தது. ஆதலானும் திருவென்பது அழகென்றே அறிக. அதனால் திருவென்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கமே.’‘ என்று அவர் உரையெழுதிச் செல்லும் முறை பாராட்டுக்குரியதாக அமைகிறது.

தஞ்சைவாணன் கோவை:

திருக்கோவையார் எழுதப்பட்டுப் பிறகு நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின் எழுந்தது தஞ்சைவாணன் கோவை. பொய்யாமொழிப்புலவர் என்பவரால் ஆக்கப் பட்டது. பொய்யாமொழிப் புலவருடைய கதை, ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜ பாகவதர் நடித்து சிவகவி என்னும் திரைப்படமாக வந்துள்ளது.

மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி.12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசர். இந்த மன்னனுக்கு அமைச்சனாகவும் படைத்தலைவனாகவும் விளங்கியவன் சந்திரவாணன் என்னும் தலைவன். பாண்டிநாட்டுத் தஞ்சாக்கூரில் பிறந்தவன் ஆதலின் தஞ்சைவாணன் என்ற பெயர் அவனுக்கு வழங்கியது. அவன் பெயரில் பொய்யாமொழிப்புலவர் இயற்றிய நூல்தான் தஞ்சைவாணன் கோவை. இதற்குச் சொக்கப்பநாவலர் என்னும் புலவர் சிறந்த உரையன்று எழுதியுள்ளார்.

அதன் முதற்பாட்டு-காட்சித் துறை பற்றியது-பின்வருமாறு:

                புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்

                கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின்

                அயலே பசும்பொற்கொடிநின்றதால் வெள்ளை அன்னம்செந்நெல்

                வயலே தடம்பொய்கைசூழ் தஞ்சைவாணன் மலையத்திலே.

அன்னப்புள், செந்நெல் செறிந்த வயலும், வாவியும் சூழ்ந்த தஞ்சைவாணன் பொதிய வெற்பில் ஒரு கற்பகத் தருவின் பக்கத்தில் ஒரு பசும்பொற்கொடி, புயலைத் தாங்கிப் பிறை யைத் தரித்துப் போர்செய்யும் வில்லுடன் கெண்டைமீன் பொருந்திய தாமரை மலர்ந்து என் கண்ணெதிரே நின்றது என்பது பாட்டின் உரை.

ஒவ்வொரு பாட்டிற்கும் அகப்பாட்டு உறுப்பு பன்னிரண்டும் பொருந்தி வரவேண்டும் என்று முன்னர் கூறப்பட்டது. இந்த முதற்பாட்டிற்குக் காலம்-இறந்தகாலம், பயன்-காட்சி வியப்பினால் உள்ளம் மகிழ்தல், முன்னம்-தலைவியைக் கண்டு தலைவன் வியந்து பொருளைக் கூறாது உவமையே கூறுதல். மெய்ப்பாடு-மருட்கை, எச்சம்-நெஞ்சம், பொருள்வகை-ஆற்றொழுக்கு, துறை-ஒவ்வோரிடங்களில் அரிதாய் வரும் என்று உரையாசிரியர் விளக்கியுள்ளார்.

கோவை நூல்கள் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகச் சில சான்றுகளைப் பார்த்தோம். திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை தவிர, பாண்டிக்கோவை, அம்பிகாபதி கோவை, திருவெங்கைக்கோவை, கோடீச்சுரக்கோவை எனப் பல கோவை நூல்கள் தமிழில் உள்ளன. திருக்கோவை யாரும் திருவெங்கைக்கோவையும் கோடீச்சுரக்கோவையும் இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டவை. அம்பிகாபதி கோவை யாரையும் பாட்டுடைத் தலைவனாகக் கொள்ளாது கோவையாகச் செல்லும் அகநிகழ்ச்சிகளை மட்டும் கூறுகிறது.

பிறகோவைகள் அனைத்துமே சிற்றரசர்களையும் வள்ளல்களையும் தலைவர் களாகக் கொண்டு பாடப்பட்டவை. அடிப்படைக் காரணம் சூழல்தான். நல்லதொரு சூழலின்றி நல்லதொரு இலக்கியம் வளர இயலாது. ஆதரிப்பதற்குப் பெரிய மன்னர்களேனும் வேண்டும், அதுவும்கூட முக்கியமல்ல. தமிழ்மொழி உணர்வு மக்கள் உள்ளத்தில் மேம்பட்டிருக்க வேண்டும். பாராட்டுதற்குத் தமிழ்ப்பேரரசர்களும் இல்லாத, வேற்றுமொழி அரசர்கள் ஆள்கின்ற தன்மையினால் தமிழை விரும்புவோரும் இல்லாத சூழலில், செயற்கை இலக்கியங்களைத் தவிர வேறு எவற்றை எதிர்பார்க்க முடியும்? இவையே அந்த இடைக்காலத்தின் பெருஞ்சாதனையாக உள்ளன.

இக்காலத்தில் இலக்கியக்கொள்கை முதலிய கொள்கைளும் அவற்றை ஒட்டிப் படைக்கப்படும் நூல்களும் இலக்கியமே என்று பின்நவீனத்துவக்காரர்கள் சொல்லு கின்றனர். இது ஒன்றும் புதிதல்ல, நாங்கள் பத்து நூற்றாண்டுகள் முன்பே அவ்வாறு செய்திருக்கிறோம் என்று கோவை பாடிய ஆசிரியர்கள் பெருமிதமடையலாம்.


அதிர்வுகள்

poornachandranஎன்னிடம் முதன்முதலாக பிஎச்.டி. பட்டத்துக்கு ஆய்வுசெய்தவர்களில் ஒருவர் திருமதி பகவத்கீதா. அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் (2007) ‘அதிர்வுகள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். அத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவுமே அநேகமாக நிகழ், தமிழ்நேயம் போன்ற சிற்றிதழ்களில் வெளிவந்தவை. அத் தொகுப்பிற்கென ஒரு விமரிசனத்தினை நான் அளிக்கவேண்டுமென்றும் தான் அதனை அத் தொகுப்பில் சேர்த்து வெளியிடுவதாகவும் அவர் கூறியிருந்தார். நான் அத்தொகுப்பிற்கென அளித்த சிறிய விமரிசனம்தான் இக்கட்டுரை. பொதுவாக நான் எவரது நூலுக்கும் முன்னுரை அளிப்பதில்லை. பெரும்பாலும் அவர்களும் கேட்பதில்லை, அல்லது கேட்டு வாங்கினாலும் வெளியிடுவதில்லை. கருத்தியல்கள் பொதுவாக ஒத்துப்போவதில்லை, என் எழுத்தில் காரம் சற்றே கூடுதலாக இருக்கிறது என எத்தனையோ காரணங்கள். பகவத்கீதாவின் விஷயத்திலும் அதுதான் நடந்தது. அவர் நூல் வெளிவந்தது. ஆனால் நான் தந்த என் முன்னுரையோ விமரிசனமோ இடம் பெறவில்லை. (என்றாலும் இன்றைய சூழலுக்கேற்ற சில கருத்துகள் அந்த விமரிசனத்தில் இடம் பெற்றிருந்ததால் அதனை இங்கு வெளியிட முனைகிறேன்.)

‘அதிர்வுகள்’ தொகுப்பில் திருமதி பகவத்கீதாவின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. சில பத்திரிகைகளிலும், சில ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றன. முதலில் நாம் எங்கு எழுதுகிறோம் என்பதைத் தீர்மானிக்கவேண்டும். ஏனென்றால் அதுதான் எழுத்தின் தலையெழுத்தை முதலில் தீர்மானிக்கப்போவது.

பகவத்கீதா எனது அன்புக்குரிய மாணவர். முதுகலைப் பட்டப்படிப்பிலும், பிறகு முனைவர் பட்ட ஆய்விலும். எனவே ஒரு விமரிசகன் என்ற முறையில் எனது பணி கடினமாகிறது. மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு அடிக்கடி சொல்லப்படும் கருத்து. ஆனால் ஒரு விமரிசகன் என்ற முறையில் எனது கருத்துகளைச் சொல்லியும் ஆகவேண்டும். விமரிசகர்களும் நல்லனவற்றை மட்டுமே கூறவேண்டும், குறைகளைச் சொல்லக்கூடாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கப்படுத்திப் பாராட்டவும் வேண்டும்-அதேசமயம் குறைகளையும் தீர்க்கமாகச் சொல்லியாக வேண்டும் என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்?.

கதைகளில் அழகியல் முக்கியம். அதைவிட அவை ஏற்படுத்தும் மனநிலை, கருத்தியல் சார்பும் முக்கியம். இந்தக் கதைகளின் பொதுவான கருத்தியல், ஏற்கப்பட்ட ஜனரஞ்சகக் கருத்துகள் என்ற தளத்தை தாண்டிச் செல்லவில்லை. கடவுள் என்ற கருத்தாக்கம் முதலாக, தாய்மை, கவித்துவம், எழுத்தாளர் தன்மை போன்றவை பற்றியெல்லாம் இதில் கதைகள் உள்ளன. இவை பற்றிப் பல புராணிகங்கள் (தொன்மங்கள், கட்டுக்கதைகள்) இன்றைய சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை மக்களிடம் என்ன விளைவுகளை உருவாக்குகின்றன, அவற்றை நாம் ஏற்கிறோமா அல்லது மறுக்கிறோமா என்பன அடிப்படையான பிரச்சினைகள்.

கடவுள் தனது சாயலில் மனிதனைப் படைத்தார் என்பது பொதுவாகச் சொல்லப்படும் விஷயம். (படைத்தார் என்பதிலேயே கடவுள் ஓர் ஆண் என்ற குறிப்பும் அடங்கியிருக்கிறது. கடவுள் ஏன் ஓர் ஆணாக இருக்கவேண்டும்? ஏன், மனித வடிவில்தான் இருக்கவேண்டும்?) மனிதன் தனது சாயலில் கடவுளைப் படைத்திருக் கிறான். அதனால்தான் கடவுளுக்கும் குடும்பம் கூத்தியார் பிள்ளைகுட்டி அவர்களுக்குள் போட்டி பொறாமை சண்டை எல்லாம் இருக்கிறது. நம் திரைப்படத்தில் கடவுளர்கள் எல்லாரும் வந்து கல்வியா, செல்வமா, வீரமா என்று சண்டை போடுகிறார்கள். கடவுளின் பிள்ளைகள் மாம்பழத்துக்குச் சண்டைபோடுகிறார்கள். (பாவம்!) தீயவர்களைக் கொல்ல வந்த பெண்கடவுள் அருமையாக ஒரு ஆபாச நடனம் ஆடிவிட்டுச் சூலத்தால் குத்துகிறார். ‘கடவுளுக்குக் குறை இருப்பதால் வணங்காமல் போகிறோம்’ (அதுபோலத் தாயையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வணங்கவேண்டும்) என்பதில்) என்று ஒரு கதையில் ஆசிரியர் சொல்கிறார். இதில் என்ன பெரிய தத்துவம் இருக்கிறது? கடவுளிடம் காணப்படும் குறைகள் எல்லாம் மனிதனின் குறைகள்தானே?

ஏற்கும் கருத்துகளை அப்படியே சொல்வதற்கு எழுத்தாளன் தேவையில்லை. எழுத்து நாம் ஏற்கும் விஷயங்களிலுள்ள உள்வயணங்களை-உட்குறிப்புகளை எடுத்துக்காட்டுவதன் மூலமாக ஓர் அதிர்ச்சியை நமக்குள் உருவாக்கவேண்டும். எழுத்தின் நோக்கம் அதுதான்.

ஒரு கதையில் சங்கராச்சாரியாரைக் கைதுசெய்ததைக் கண்டனம் செய்கிறார் பகவத்கீதா. நெற்றிக்கண்ணைக் கடவுளே திறந்தாலும் குற்றம்செய்திருந்தால் குற்றம் தான். அப்படியிருக்கும்போது சங்கராச்சாரியார் மட்டும் என்ன விதிவிலக்கு? சிவனே பிராமணர் கனவில் வந்து நந்தனை எரித்துத் தூய்மைப்படுத்திக் கொண்டுவரச் சொன்னாலும் குற்றம்தான், வாலியை இராமனே மறைந்துநின்று கொன்றாலும் குற்றம்தான். பெரியவர்கள் தங்கள் செயலால்தான் பெரியவர்களாக வேண்டுமே தவிர ‘நான் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவன்’ என்று தம்பட்டமடிப்பதன் மூலமாக அல்ல. இன்றும் செயலினால் கீழ்ப்பட்டு தண்டனையும்கூடப் பெற்றுவிட்ட சிலர், தங்களை தெய்வம் என்று தாங்களே பாராட்டிக்கொள்வதும், தாங்கள் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பிறரைப் போராடத் தூண்டுவதுமாக இருக்கிறார்கள் என்பது விசனத்துக்குரியது.

தமிழ்ச்சூழலில் அதிகமாகப் புராணிகப்படுத்தப்பட்டுள்ள இன்னொரு முக்கிய விஷயம் தாய்மை. எல்லாப் பாலூட்டிகளும் பத்துமாதங்களோ அல்லது அதற்கும் அதிகமாகவோ சுமந்துதான் பெறுகின்றன. உடலாசை உயிர்களின் இயல்பாக இருக்கிறது, அப்படித்தான் பிள்ளைபெறுவதும். இதில் என்ன பெருமை இருக்கிறது? நவீன உலகத்தில் மலம்கழிப்பதே கடினமாகிவிட்டபோது பிள்ளைபெறுவது மட்டும் இயல்பாகவா இருக்கும்? ஒரு பசுவோ ஆடோ இயற்கையாகக் குட்டிபோடுவது போன்ற விஷயத்தை நாம் செயற்கையால் ஊதிப் பெரிதாக்கி அதில் என்னவோ தியாகம் இருப்பதாகக் கட்டிவிட்ட கற்பனைதான் தாய்மை. அம்மா என்பது திரையுலகம் ஊதிப் பெருதாக்கிவிட்ட ஒரு கற்பனை விஷயம். “அம்மா என்றால் அன்பு”. ஒரு தாய் பத்துமாதம் சுமப்பதன் மூலம் தியாகம் செய்கிறாள் என்றால் கோடிக்கணக்கான பாலூட்டி விலங்குகளும் தினம்தினம் தியாகம்தான் செய்கின்றன.

அல்லது தாய்மை என்பது அன்புதான் என்றால், (ஆண்கள் எல்லாருமே அரக்கர்கள் என்று வைத்துக் கொண்டாலும்) உலகத்தில் சரிபாதி பெண்களாக இருக்கும்போது, உலகமே அன்புமயமாக இருக்கவேண்டுமல்லவா? ஏன் அவ்வாறு இல்லை? பெண்களின் அன்பும் சுயநலம் சார்ந்ததுதான். சுயநலம்சார்ந்த எதிலும் மேன்மையில்லை. ‘அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்’ என்றார் வள்ளுவர். அறத்திற்கு மட்டுமே அன்பு துணை செய்வதல்ல, மறத்திற்கும் (கொடுமைகளைச் செய்வதற்கும்) அதுதான் துணை. மருமகளை மாமியார் கொடுமைப் படுத்துவதற்கும் மகன்மீதுள்ள அன்பே காரணம். ஹிட்லரின் ஆஷ்விச்சில் யூதர்களைப் படுகொலை செய்ததற்கும் தன் இனத்தின்மேல் கொண்ட அன்பே காரணம். ஈழத்தில் தமிழர் களைப் படுகொலை செய்ததற்கும் இனத்தின்மீதும் மதத்தின்மீதும் உள்ள அன்பே காரணம். ஹிந்து ராஷ்டிரம் உருவாகவேண்டும் என்று முஸ்லிம்களைப் படுகொலை செய்வதற்கும் அதுவே துணை. ஒரு சாதி மலம்சுமக்கவேண்டும் என்று கட்டளை யிடவும் சாதியன்பே துணை. எல்லா பாசிசத்திற்கும் அடிப்படை ‘அன்பு’ தான். ‘தியாகம்’தான். இதுதான் இன்று கூர்மையாக, விமரிசனத்தோடு நோக்கப்பட வேண்டியது. அப்படியே ஏற்றுக்கொள்வது அல்ல.

கவிதை, கவிஞர் என்பவை பற்றியும் தமிழில் நிலவும் கருத்துகள் சரியானவை அல்ல. திரைப்படத்திற்குப் பாட்டுக்கட்டும் வியாபாரிகளைக் கவிஞர்கள் என்று நான் சொல்வதில்லை. கவிதை என்பது சிச்சுவேஷனுக்கு எழுதுவதும், மெட்டுக்குச் சொற்கற்களை வைத்து அடுக்குவதும் அல்ல. இது சின்னவயதில் பள்ளிகளில்-கல்லூரிகளில் கவிதைப் போட்டி நடத்தவேண்டுமானால் உதவலாம். கவிதை என்பது உள்ளத்தின் உண்மை யளியிலிருந்து பிறக்கவேண்டியது. ‘எந்த சிச்சுவேஷனுக்கும் எழுதத் தயார்’ என்பவன் ‘எதையும் விற்பேன்’ என்று சொல்லும் வியாபாரிதான். எந்தத் தலைப்பிலும் பேசத்தயாராகும் பட்டிமன்றக் காரன்தான். இதை உணர்ந்து எழுதியிருந்தால் கதையாக இருந்திருக்கும். இல்லை யென்றால் அது பாட்டுவியாபாரி களைக் கவியரசுகளாகப் பார்க்கும் ஜனரஞ்சகக் கருத்தாக்கத்திற்குத் துணைபோவ தாகவே அமைகிறது.

அதுபோலவே சைக்கியாட்ரி-ரிக்ரஷன் (வயதில் மூத்த நபரை 16 வயதுக்குக் குறைவாகக் கொண்டு செல்வது) என்பதெல்லாம் சினிமாத்தனமான கற்பனை. இன்றைய உளமருத்துவம் ஹிப்னாடிசத்தையெல்லாம் நம்புவதில்லை. அவையெல்லாம் பேராசைகாலஜி என்ற துறைக்குரியனவாக ஒதுக்கப்படுகின்றன.

எல்லாவற்றையும் ஒருவன் தானே அனுபவித்து உணர்ந்தால்தான் முடியும் என்பதும் சரியல்ல. ஒரு கதை அரவாணி ஒருவரின் துன்பத்தைப் புரிந்துகொள்ள ஒருவனோ அவனது மகனோ அரவாணியாக இருக்கவேண்டும் என்கிறது. அப்படித் தேவையில்லை. தீயில் கையைவைத்தால் சுடும் என்பதைக் குழந்தை அறிய சுயஅனு பவம் தேவையாகலாம். ஆனால் வளர்ந்த நிலையில் அப்படி அல்ல. அங்குதான் ஒத்துணர்வு (empathy)என்பது வருகிறது.

ஒத்துணர்வு இருப்பதால்தான் தன் வாழ்க்கையில் மிகத் தூய்மையானவனும் குற்றங்களைப் பற்றிக் கதை எழுத முடிகிறது. பெண்களைப் பற்றி ஆண்களும், ஆண்களைப் பற்றிப் பெண்களும் கதையெழுத முடிகிறது. சிலர் “தலித்துகளின் அனுபவங்கள் பிறருக்குப் புரிவதில்லை, அதனால் அவர்கள்தான் தங்கள் அனுபவங் களை எழுதவேண்டும்” என்பது போன்ற வாதங்களை முன்வைக்கிறார்கள். அப்படி யானால், முதலாளிகளைப் பற்றி முதலாளிகள்தான் கதை எழுதவேண்டும், குழந்தை களைப் பற்றிக் குழந்தைகள்தான் கதை எழுதவேண்டும், தொண்ணூறு வயது கிழவியைப் பற்றி அவள்தான் எழுதவேண்டும். வேறு வழியில்லை.

பிறகு இருக்கவே இருக்கிறது. இருமை எதிர்வுகளை வைத்துக் கதை உண்டாக்குவது. உதாரணமாக, எழுத்தில் எழுதுவது ஒன்று; அதைக் கடைப்பிடிக்காமல் வாழ்க்கையில் வேறுவிதமாக நடந்துகொள்வது என்பது ஒரு கதையில் காணப்படும் இருமை எதிர்வு. இம்மாதிரிதான் இருமை எதிர்வுகளை வைத்துக் ‘கதை பண்ணுவது’ பொதுவாக நிகழ்கிறது. இது அனுபவவீச்சை பாதிக்கக்கூடியது.

எழுத்தாளன் அபரிமிதமான ஒத்துணர்வு-‘எம்பதி’ உடையவன். அதாவது அவனது எழுத்துகள் பிறரது இடத்தில் தன்னை வைத்துப்பார்ப்பதால் உருவாகின்றன. எனவே எந்த ஒரு விஷயத்திற்குள்ளும் ‘புகுந்து’ பார்க்கவேண்டும்.

கடைசியாகப் பெண்கள்-ஆண்கள் பற்றிய இருமை நிலை. பல கதைகளில் இது கருப்பொருளாகி இருக்கிறது. நமது சமூகம் பெண்களை அடிமைப்படுத்துகிறது. உண்மைதான். ஆனால் அது ஆண்களையும் அடிமைப்படுத்தித் தான் வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் ‘ஆணியம்’. என்றைக்கு சங்கக் கவிஞன் ‘ஆடவனுக்கு வினைதான் உயிர், பெண்களுக்கு ஆண்கள்தான் உயிர்’ என்று சொன்னானோ, அன்றைக்கே ஆணியமும் பெண்ணியமும் உருவாக வழிசெய்து விட்டான். பெண்களுக்கு அடிமைத் தனம் இருப்பதுபோலவே ஒருவிதப் பாதுகாப்பும் இருக்கிறது. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு வேலையில்லாவிட்டாலும் திருமணம் செய்துவிடலாம். காப்பாற்றுவது கணவன் பொறுப்பு என்று சொல்லிவிடலாம். ஆனால் வேலையில்லாமல் ஓர் ஆண் திருமணம் செய்துகொள்ளமுடியுமா? இருபது வயது இளைஞர்கள் பலபேர் வேலை கிடைக்கவில்லை என்று வீட்டில் வசவு வாங்குவதனால் எவ்வளவு மனச்சோர்வு அடைகிறார்கள் (சிலர் தற்கொலையும்கூடச் செய்துகொள்கிறார்கள்) என்பது எனக்குத் தெரியும். இது ஆணின் தலைமேல் ஏற்றப்பட்டிருக்கும் அடிமைத்தனச் சுமையின் ஒருபகுதி.

பெண் எப்படிச் சமூகச்சூழ்நிலையின் கைதியாக இருக்கிறாளோ அப்படித்தான் ஆணும். எனவே உண்மையாகப் பெண்ணியம் சார்பாக நிற்பவர்கள், ஆணின் விடுதலைக்காகப் பாடுபடுபவர்களாகவும் இருக்கவேண்டும். எப்படி ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுபவர்கள், சாதிஒழிப்பு வாயிலாக ஒடுக்குபவர்களின் விடுதலைக்கும் காரணமாக இருக்கவேண்டுமோ அப்படி.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனரஞ்சகக் கருத்துகள்(doxa) என்பவற்றின் மாயையிலிருந்து பகவத்கீதா முதலில் விடுபடவேண்டும் என்பது எனது கருத்து. அப்படி யிருப்பின் அவரது எழுத்தின் கனமும் வேகமும் வலிமையும் கூடும்.

அடுத்ததாகக் கொஞ்சம் சொற்பிரயோகத்திலும் கவனம்தேவை. நானின், என்னின் போன்ற சொற்கள் இக்கதைகளில் மிகுதியாக வருகின்றன. இன் உருபு படர்க்கையோடுதான் சேரும் இயல்புடையது. இராமனின், சீதையின், வீட்டின், நாயின்-இவை எல்லாம் சரி. உன்னின், என்னின்-என்றால் இடிக்கிறது. எழுத்தாளர் களின் கவனம் சொற்களில் அதிகமும் தேவை.

கதைகள் வாழ்ககை அனுபவத்திலிருந்து பிறக்கவேண்டும் என்றால் அந்த அம்சம் இந்தக் கதைகளில் குறைவாகத்தான் காணப்படுகிறது. பொதுவாகத் தமிழாசிரியர்கள் கதை எழுதுவது சரிப்பட்டு வருவதில்லை. ஒரு காரணம், அவர்கள் சில ஒழுக்கமதிப்புகளைச்-சமூகக் கட்டுப்பாடுகளைக் காப்பாற்ற வேண்டியவர்கள். எனவே அவற்றிற்கப்பால் அவர்களது சிந்தனை செல்வதில்லை. இரண்டாவது, பெரும்பாலும் அவர்களது வாழ்க்கை அனுபவம் வகுப்பறைகள் சார்ந்தது. மூன்றாவது வகுப்பறைகளில் அவர்களது விரிவுரைகள். பழகிப்போன அந்தச் சொற்பெருக்கம், சொற்களைப் பொருளறிந்து ஆற்றலோடு கையாளும் தன்மையைக்குறைத்து நீர்த்துப்போக வைத்துவிடுகிறது.

இன்னும் ஆழமாகச் சிந்தித்து, ஆழமாக உணர்ந்து, ஆழமாகத் தனது அனுபவங்களில் மூழ்கி, பகவத்கீதாவின் எழுத்துகள் வெளிப்படவேண்டும். எழுத்துத் துறையில் எதிர்காலத்தில் அவர் இன்னும் ‘ஆழமாக வேர்விட’ எனது வாழ்த்துகள்.

(2007இல் என் மாணவர் ஒருவரின் கதைத்தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை.)


கலம்பக இலக்கியம்

tamililakkiyam1கலம்பக இலக்கியம்:

தமிழில் தலையாய இலக்கியம் சங்க இலக்கியம். அது தனிப்பாடல்களால் ஆனது. சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய நூல்களில் முதன்மையானவை காப்பியங்கள். இவற்றைத் தவிர சிற்றிலக்கியங்கள் என்னும் நூல்களும் இடைக் காலத்தில் அவ்வப்போது எழுந்தன. காலப்போக்கில் நூல்வகையில் ஏற்படும் மாற்றங்களை விருந்து என ஏற்றுக் கொள்கிறது சங்ககால இலக்கண நூலாகிய தொல்காப்பியம்.

குறைந்த பாடல் எண்ணிக்கையைக் கொண்டவற்றைப் பிரபந்தங்கள் அல்லது சிற்றிலக்கியங்கள் என்று பிற்காலத்தினர் வழங்கத் தொடங்கினர் ஆகலாம். காப்பியங்கள் பேரிலக்கியங்கள் ஆதலின் இவற்றிலிருந்து வேறுபடுத்தச் சிறிய அளவில் எழுந்த நூல்களைச் சிற்றிலக்கியங்கள் என்றனர் போலும். அல்லது காப்பியங்கள் ஒரு தலைவனின் முழு வாழ்க்கையைச் சொல்லுவது போல் அன்றி இவற்றின் நோக்கெல்லை (Scope) குறுகியது என்பதால் ஒருவேளை சிற்றிலக்கியங்கள் என்றனரோ?

96 வகைப் பிரபந்தங்கள் என்று இவற்றைப் பகுப்பது மரபு. பிரபந்தம் என்றால் நன்கு யாப்பினால் கட்டப்பட்ட வடிவம் என்று பொருள். சிற்றிலக்கியம், பிரபந்தம் இவற்றின் பொருள் வெவ்வேறு என்றாலும், ஒரேவித இலக்கியத் தொகுதியைக் குறிக்க இவை பயன்பட்டு வருகின்றன. கலம்பகம், உலா, தூது, பிள்ளைத் தமிழ் போன்ற பலவகையான நூல்கள் சிற்றிலக்கியங்களில் அடங்கும்.

பாட்டியல் நூல்களை ஆராய்ந்து அவற்றில் குறிப்பிடப்பட்ட சிற்றிலக்கிய நூல்கள் மொத்தம் 244 என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆனால் இவற்றில் பெயர்மட்டிலுமே தெரிந்தவை, மூல இலக்கியங்கள் கிடைக்காதவை பல. மேலும் பாட்டியல் நூல்கள் சுட்டிக்காட்டாத எத்தனையோ இலக்கிய வகைகள் இன்று நம் வழக்கில் உள்ளன. எனவே இன்று சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையை வரையறுப் பது எளிதன்று.

பலவேறு கலம்பகங்கள் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. முதன்முதலில் இயற்றப்பட்ட கலம்பகம், நந்திக்கலம்பகம். பின்னர் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி, திருஞான சம்பந்தர் மீது ஆளுடைய பிள்ளையார் கலம்பகம் இயற்றினார். பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்துப் புகழேந்திப் புலவர் கொற்றந்தைக் கலம்பகம் என ஒன்று இயற்றியுள்ளார். அதன் பின் மணவாள மாமுனிகள் திருவரங்கப் பெருமான்மீது கோயிற்கலம்பகம் இயற்றியுள்ளார். பின்னர் திரு எவ்வுட் கலம்பகம், திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் என்றெல்லாம் தோன்றின. ‘கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்’-அதாவது இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்பது பழங்காலக் கருத்து. அவர்கள், திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.

இதற்குப்பின் கலம்பகம் இயற்றிப் புகழ்பெற்றவர் குமரகுருபரர். காசிக் கலம்பகம், கயிலைக் கலம்பகம், மதுரைக்கலம்பகம் ஆகியவற்றை இவர் இயற்றியிருக்கிறார். இங்கிலாந்திலிருந்து தமிழகத்துக்கு வந்த டாக்டர் ஜி.யு. போப் அவர்களும் கலம்பகத்தின் சுவையினால் கவரப்பட்டு, தமிழ்ச்செய்யுட் கலம்பகம் என ஒன்று இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. இருபதாம் நூற்றாண்டிலும் பல கலம்பகங்கள் இயற்றப்பட்டுள்ளன. சிறப்பாக, மறையரசன் என்பார் இயற்றிய திரு.வி.க. கலம்பகத்தைக் குறிப்பிடலாம். முஸ்லீம் புலவர்களும் கலம்பகம் இயற்றியுள்ளனர். சான்றாக, சையத் மீரான் லெப்பை அண்ணாவியார் இயற்றிய மதீனாக் கலம்பகத்தைச் சான்றாகக் கூறலாம்.

பாட்டுடைத் தலைவன் பெயரில் கலம்பகம் இயற்றப்படுவது மரபு என்றாலும் பின்னால் ஊர்ப் பெயர்களை வைத்தே கலம்பகங்கள் இயற்றப்படலாயின. சான்றாகப், புதுவைக் கலம்பகம் என்ற பெயரில் இருபெயர்கள் உள்ளன.

பல்வேறு யாப்புகள், பல்வேறு பாடற்பொருள்கள் இவற்றால் பல்வேறு பாடற் சுவைகள் விளங்கப் பாடப்படுவது கலம்பகம். கலம் என்றால் பன்னிரண்டு, பகம் என்றால் ஆறு, ஆக பதினெட்டு உறுப்புகள் பெற்று வருவதால் கலம்பகம் என்ற பெயர் உண்டாயிற்று என்று சிலர் உரைப்பர். இவ் விளக்கம் பொருத்தமாக இல்லை. மாறாக, கலப்பு+அகம், அதாவது கலப்பகம் என்ற சொல்லே இடையிலுள்ள பகர ஒற்று மென்மைப்பட, கலம்பகம் என ஆயிற்று என்பது பொருத்தமாக இருக்கும். இப்போது கதம்பம் என வழங்கும் சொல்லே பழங்காலத்தில் கதம்பகம், கலம்பகம் என வழங்கிவந்தது என்று கூறுவோர் உண்டு.

கலம்பக நூல்களின் பாடல் எண்ணிக்கை நூதனமானது. வடமொழியாளரின் வருணப் பாகுபாட்டிற்கு ஏற்பப் பாடல் எண்ணிக்கை வகுக்கப்பெற்றுள்ளது. சான்றாகப், பன்னிரு பாட்டியல், தேவர்க்கு (இறைவனுக்கு) நூறும், முனிவர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும் ஆகப் பாடல்கள் பாடப்படுதல் வேண்டும், அமைச்சர்களுக்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்களுக்கு முப்பது என்று வரையறை அளிக்கிறது. இதனை இன்னும் வெளிப்படையாகவே பிரபந்த மரபியல்,

“நூறு தேவர், தொண்ணூற்றைந்து பார்ப்பார்க்கு,

அரசர் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபஃது,

ஐம்பான் வைசியர்க்கு, ஆறைந்து சூத்திரர்க்கு

என்ப இதன் இயல்புணர்ந்தோரே”

என்கிறது. ஆனால் கவிஞர்கள் இந்த எண்ணிக்கை அளவைச் சற்றும் பின்பற்றவில்லை. முதற்கலம்பகமான நந்திக் கலம்பகத்திலேயே நூற்றுக்கும் அதிகமான பாடல்கள் காணப்படுகின்றன.

கலம்பக நூல்களில் காலத்தால் மூத்தது மட்டுமல்ல, சுவையில் முதன்மையானதும் நந்திக்கலம்பகமே ஆகும். தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்மேல் பாடப்பட்ட நூல் இது. இதைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதுபற்றி ஒரு கதையும் வழங்கிவருகிறது.

மூன்றாம் நந்திவர்மன்மேல் பொறாமை கொண்ட அவனுடைய தம்பியே ஒரு கவிஞனாக வந்து அவன் மீது கலம்பகம் பாடினானாம். அந்நூலில் ஆங்காங்கு நச்சுச் சொற்களையும் தொடர்களையும் வைத்துத் தன்னைக் கொல்லப் பாடியிருக்கிறான் என்று நந்திவர்மனுக்குத் தெரிந்தும் தமிழ்ச் சுவையில் ஈடுபட்ட அவனால் அந்நூலைக் கேட்காமல் இருக்க இயலவில்லை. எனவே நூறு பந்தல்கள் இட்டு ஒவ்வொன்றிலும் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக அவன் கேட்டுக் கொண்டு வர ஒவ்வொரு பந்தலாகத் தீப்பற்றி எரிந்ததாம். கடைசிப் பாட்டை நந்திவர்மன் கேட்கும் போது பந்தலோடு சேர்ந்து அவனும் மாண்டான் என்று இக்கதை செல்கிறது. இது நந்திவர்மனுடைய அளவற்ற தமிழ்ப் பற்றினைக் காட்ட எழுந்த கதையாக இருக்கலாம்.

வேறு எந்தக் கலம்பகத்திலும் இல்லாத சில கூறுகள் இக்கதைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். சான்றாக, நந்திவர்மன் இறந்த பிறகு கவிஞன் பாடியதாக நந்திக் கலம்பகத்தில் ஒரு பாட்டு உள்ளது.

                வானுறுமதியைஅடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

                கானுறுபுலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள்

                தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம்

                யானும் என்கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயாபரனே.

என்பது அப்பாட்டு. ஒருவேளை நந்திவர்வன் இறந்தபிறகே நந்திக் கலம்பகம் இயற்றப் பட்டிருக்கலாம் என்பதற்கு இப்பாட்டு சான்றாக உள்ளது.

இப்பாட்டின் பொருள்: “உன் முகஅழகினை, நிலவு பெற்றுக்கொண்டது, உன் புகழின் பெருக்கம் கடலுக்குச் சென்றுவிட்டது, உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சென்றுவிட்டது, உன் கரங்கள் கற்பகமரத்திடம் சென்றுவிட்டன, உன்னிடமிருந்த திருமகள், திருமாலிடம் சென்று விட்டாள், நானும் என் வறுமையும் எங்கேசெல்வோம் இனி?” என்று கவிஞன் புலம்புகிறான். பாட்டுடைத் தலைவனே இறந்துவிட்டதாகக் கூறும் இப்பாட்டைக் கேட்டோர், இந்த நூல் நந்திவர்மன்மீது அறம் வைத்துப் பாடப்பட்டது என்ற கதையை உருவாக்கி யிருக்கலாம்.

இதற்கேற்பச் சில தொடரமைப்புகளும் நூல்முழுவதும் உள்ளன. கடவுள் வாழ்த்துப்பாட்டு, நந்தி விடையுடன் ‘மங்கல விசயம் நடப்ப அருளுக’ என முடிவடைகிறது. ‘மங்கலவிசயம் நடப்ப’ என்பதற்கு “இறந்து போவதாக” என்ற பொருள் உண்டு. மூன்றாவது பாட்டில் ‘நந்தி முதல்வனுக்குப் பழுது கண்டாய்’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. இன்னொரு பாட்டில் ‘இவளுக்கு அருளாது ஒழிகின்றது தொண்டை கொலோ’ என்ற தொடர் வருகின்றது. இன்னொன்றில் ‘நந்தி மதியிலி’ என வருகிறது. இன்னொரு பாட்டில் ‘பூவலயம் தன்னில் கரியாய் நின்ற மன்னா’ என்ற தொடர் இடம்பெறுகிறது. இவ்வாறு நூல்முழுவதும் ஆங்காங்கு சிலேடையாக இடம்பெறும் தொடர்கள் நந்திவர்மனை அழித்தன என்று சொல்வார் உண்டு. எனவே மேற்கண்ட கதைக்கு முற்றிலும் ஆதாரம் இல்லாமல் இல்லை. ஆனால் சொற்கள் ஒரு நல்ல மன்னனை அழித்துவிடுமா?

tamililakkiyam2‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்ற பழமொழி நெடுங்கால மாக வழக்கிலிருக்கிறது. இப்பழமொழி உருவாக்கிவிட்ட சம்பவமாகவும் மேற்கண்ட கதை இருக்கலாம். ‘மாண்ட’ என்ற சொல்லுக்கு ‘மாட்சிமிக்க’ ‘உயர்வு மிக்க’, ‘சிறப்புப் பெற்ற’ என்ற அர்த்தமும், ‘இறந்துபோன’ என்ற அர்த்தமும் உண்டு. ‘மாண்ட என் மனைவியடு மக்களும் நிரம்பினர்’ என்பது புறநானூற்றில் பிசிராந்தையார் வாக்கு. அதாவது என் மனைவி மிகச் சிறப்புடையவள். மக்களும் அறிவுடையவர் என்பது பொருள். அதுபோல ‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை’ என்றால் நந்திவர்மன் கலம்பகம் என்ற நூலினால் சிறப்புப் பெற்ற கதை என்று பொருள். ஆனால் மாண்ட என்பதற்கு இறந்துபோன என்ற ஒற்றைப்பொருள்கொண்டு நந்திவர்மன் கலம் பகத்தால் இறந்துபோனதாகக் கதைகட்டிவிட்டனர் பிற்காலத்தார்.

 நந்திக்கலம்பகத்தின் பின்னர் பல கலம்பகங்கள் தோன்றினும் இந்த முதற் கலம்பகத்தின் சிறப்பும் பொருள்நயமும் அழகும் இனிமையும் வேறெந்த நூலிலும் இல்லை. இந்நூலில் பல உறுப்புகள் உள்ளன. அவை பெரும்பாலும் காமச்சுவையை அடிப்படையாகக் கொண்டவை. மீதியுள்ள உறுப்புகள் நந்திவர்மன் வீரத்தைப் பாராட்டுபவை. இப்பாக்கள் யாவுமே மிகச் சிறப்பாக அமைந்து விட்டன. அதன் பின்னர் எழுதப்பட்ட பிற கலம்பகங்களில் அந்தந்த உறுப்பில் சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் நந்திக்கலம்பகத்தில் சொல்லப்பட்டவற்றின் மாற்று உருவங்களாகவே அமைந்து விட்டதால் அவை எடுபடாமல் போய்விட்டன என்பது முக்கியக் காரணம்.

கலம்பகத்தில் அமைய வேண்டிய உறுப்புகளை முதல் உறுப்புகள், துணை உறுப்புகள் என்று இருவகைப்படுத்துவர். கலம்பக உறுப்புகளைக் கூறும் பன்னிரு பாட்டியல் நூற்பாவை இங்கே காணலாம்.

                சொல்லிய கலம்பகம் சொல்லில் ஒருபோகு

                முதற்கண் வெண்பா கலித்துறை புயமே

                அம்மனை ஊசல் யமகம் களிமறம்

                சித்து காலம் மதங்கி வண்டே

                கொண்டல் மருள் சம்பிரதம் வெண்துறை

                தவசு வஞ்சித் துறையே இன்னிசை

                புறமேய் அகவல் விருத்தம் எனவரும்

                செய்யுட் கலந்துடன் எய்திய அந்தம்

                ஆதியாக வரும் என மொழிப.

நூலின் முதலில் ஒருபோகு என்னும் யாப்பும், அதனை அடுத்து வெண்பா ஒன்றும், அதன் பின்னர் கலித்துறை ஒன்றும் அமையவேண்டும். இவைதான் முதல் உறுப்புகள் அல்லது யாப்புறுப்புகள் எனப்படுபவை.

பிறகு துணை உறுப்புகள் அமைகின்றன. புயம், அம்மானை, ஊசல், யமகம் அல்லது மடக்கு, களி, மறம், சித்து, காலம், மதங்கி, வண்டு, கொண்டல் அல்லது மேகம், மருள், சம்பிரதம், வெண்துறை, தவம் வஞ்சித்துறை என இவை அமைய வேண்டும்.

பிறகு இன்னிசை அகவல், பல்வேறு விருத்தங்கள் எனப் பலவேறு வகையான யாப்புகளும் அமையுமாறு பாடவேண்டும். துணை உறுப்புகளைப் பார்க்கும்போது அவை பெரும்பாலும் செய்யுட் பொருள் குறித்தனவாக அமைகின்றன. இவற்றிற்கிடையில் வெண்துறை, வஞ்சித்துறை ஆகிய யாப்பு உறுப்புகள் வந்த காரணம் தெரியவில்லை. இவை அந்தாதியாகப் பலவேறு யாப்புகளில் பாடப்படும் என்பதே கலம்பகத்தின் இலக்கணம் என அறியலாம்.

பன்னிருபாட்டியல் துணை உறுப்புகளாகக் காட்டியுள்ளவை பதினான்கு. இவற்றுடன் தூது, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், சித்து, தென்றல், ஊர், அலர் போன்ற உறுப்புகளும் பல்வேறு பாட்டியல் நூல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பிற்காலத்தில் ஆற்றுப்படை, இடைச்சியார், கீரையார், வலைச்சியார், கொற்றியார், பிச்சியார், யோகினியார், சிலேடை, பள்ளு, பாத வகுப்பு, கேசாதிபாதம், வெறிவிலக்கல், மடல் ஆகிய உறுப்புகளும் பல்வேறு கலம்பக நூல்களில் இடம்பெற்றுள்ளன.

புயம் (புஜம்) என்பது பாட்டுடைத் தலைவனின் வீரம் மிக்க தோளின் ஆற்றலைப் பாடுகின்ற உறுப்பாகும்.

                புயம் நான்கு உடையானைப் பொன்அரங்கத்தானை

                அயனாம் திருவுந்தியானை-வியனாம்

                பரகதிக்குக் காதலாய்ப் பாடினேன் கண்டீர்

                நரகதிக்குக் காணாமல் நான்.

திருவரங்கக் கலம்பகத்தில் அரங்கநாதனின் புயத்தைப் பாடும் பாடல் இது.

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இதில் இருவர் பாடுவர். முதலில் ஒருத்தி ஒரு செய்தியைக் கூற, அடுத்தவள் அதில் ஒரு சந்தேகத்தைக் கிளப்ப, முதல் பெண் அந்த ஐயத்தைப் போக்குவதுபோல இந்த உறுப்பு அமையும்.

                தேனமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்

                ஆனவர்தாம் ஆண் பெண் அலி அலர்காண் அம்மானை

என்று பாடுகிறாள் ஒருத்தி. அதாவது திருவரங்கர், ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல என்கிறாள். அப்படியானால் அவர் ஜனகன் மகளை எவ்விதம் மணந்துகொண்டார் என்று கேட்கிறாள் இரண்டாவது பெண்.

                ஆனவர்தாம் ஆண்பெண் அலியலரே ஆமாகில்

                சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானை

என்று சந்தேகம் எழுப்புகிறாள். ஒரு சாபத்தினால்தான் அவ்வாறு நேர்ந்தது என்று விடையிறுக்கிறாள் முதல் பெண். அதாவது,

                தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால் அம்மானை

என்கிறாள். இங்கு சாபம் என்பதற்கு வில் என்ற பொருளும் இருப்பது சுவையைக் கூட்டுகிறது. இராமன் வில்லை முறித்து ஜானகியை மணந்தான் என்பதை நினைவூட்டுகிறது.

ஊசல் என்பது இக்காலத்தில் ஊஞ்சல் என வழங்கும் சொல். ஊஞ்சலாடும்போது பெண்கள் பாட்டுடைத் தலைவனைப் புகழ்வதாக அமைகிறது இந்த உறுப்பு.

மடக்கு என்பது சொல்லணிகளில் ஒன்று. ஒரு சொல் அல்லது தொடர் பல்வேறு அர்த்தங்களில் மீண்டும் மீண்டும் வருவது. சான்றாக,

                அரும்புன் னாகத் தடங் காவே-அவாவென் ஆகத் தடங்காவே

                அம்போருகக் கண் பொருந்தேனே-அழுநீர் உகக் கண் பொருந்தேனே

என்பது திருவரங்கக் கலம்பகத்தின் நீண்ட மடக்குப் பாடலின் முதலடி. இதில் முதற்பகுதியின் தடங்-காவே என்பது புன்னாகத்தின் குளிர்ந்த சோலையே என்று பொருள்படும். அதன் இரண்டாவது பகுதித் தொடரை, அவா என் ஆகத்து அடங்காவே எனப் பிரிக்கவேண்டும். அதாவது ஆசை என் இதயத்தில் அடங்கவில்லை என்கிறாள்.

மூன்றாவது பகுதியில் அம்போருகக் கண் பொரும் தேனே-அதாவது தாமரைமலரின் மையத்தில் தேனுக்குப் போராடும் வண்டே என்று பொருள் கொள்ளவேண்டும். நான்காவது பகுதியில் அழுகின்ற கண்ணீர் உகக்கண் பொருந்த (மூட) முடியவில்லை என்று சொல்கிறாள் தலைவி.

நந்திக்கலம்பகத்தில் மடக்குறுப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும்

தேரும் உடைத்தென்பர் சீறாத நாள் நந்தி சீறியபின்

ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும்

தேரும் உடைத்தென்பரே தெவ்வர் வாழும் செழும்பதியே.

நந்திவர்மன் படையெடுக்காமலிருந்த நாளிலும் பகைவரது நாட்டில் ஊரும் அரவமும் (மக்கள் ஆரவாரமும்) தாமரைக்காடும் உயர்வனமும் தேரும் இருந்தன. அதாவது வளமிக்க ஊர்களும், எங்கும் விழா ஒலியும், தாமரைக்காடு நிரம்பிய தடாகங்களும், உயர்ந்த வனங்களும், தேர்களும் இருந்தன.

நந்திவர்மன் சீறிப் படையெடுத்துப் பகைவர் நாட்டை அழித்தபின்பும் ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும் தேரும் இருக்கின்றன. ஆனால் இப்போது இருப்பவை, ஊரும் அரவங்கள்-வளைந்து செல்லும் பாம்புகள், தா மரைக் காடுகள்-தாவுகின்ற மான்கள் செல்லும் வளமற்ற பகுதிகள், உயர் வனங்கள்-நீர்நிலையற்ற வனப்பிரதேசங்கள், தேர்கள்-பேய்த்தேர் அல்லது கானல்நீர் சுழலும் பகுதிகள். சிலேடையை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் கவிஞர்.

இதனைத் தவிர சிலேடை என்ற அணி வருகின்ற உறுப்பும் ஒன்று உள்ளது.

இந்தப் புரவியில் இரவலர் உண்டென்பதெல்லாம்

அந்தக் குமுதமே அல்லவோ – நந்தி

தடங்கைப் பூபாலன் மேல் தண்கோவைபாடி

அடங்கப் பூபாலரானார்.

இங்கு இரவலர் என்ற சொல் மட்டும் சிலேடையாக அமைகிறது. இதனை ஒருசொல் லாக எடுத்துக்கொண்டால் யாசிப்பவர்கள் என்று பொருள்படும். இரவு+அலர் என்று பிரித்துக் கொண்டால் இரவில் மலருகின்ற அல்லி மலர் என்று பொருள்படும். நந்தி வர்மனின் நாட்டில் இரவில் மலரும் குமுதமலர்கள் அன்றி வேறு இரவலர்களே இல்லையாம்!

களி என்ற உறுப்பு குடிகாரர்கள் கள்ளின் சிறப்பினைப் புகழ்ந்துரைப்பது.

அடுத்ததாக, மறம். அரசன் ஒருவன் மறக்குடியைச் சார்ந்த பெண் ஒருத்தியை மணம்புரிய வேண்டித் தூது அனுப்புவான். அம்மகளின் தந்தை அரசனை இகழ்ந்தும் தன் குடியை உயர்த்தியும் கூறி, பெண்கொடுக்க மறுப்பான். இது மறம் என்னும் உறுப்பாகும்.

அம்பொன்று வில்லொடிதல் நாண்அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ

வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா

செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில் நந்திபதம் சேரார் ஆனைக்

கொம்பன்றோ நம்குடிலில் குறுங்காலும் நெடுவளையும் குனிந்துபாரே.

“என்னை வலிமையற்றவன் என்று நினைத்து மணம்பேசிவர அனுப்பினாரா உங்கள் அரசர்? என் வீட்டின் கால்கள், நெடுவளை ஆகியவற்றைப் பார். இவை தெள்ளாற் றில் நந்திமன்னனுடன் போரிட்டபோது நான் கொன்ற எதிரிகளின் யானைத் தந்தங் கள்” என்கிறான் பெண்ணின் தந்தை. புறநானூற்றில் மகண்மறுத்தல் எனக் காணப் படும் துறை இது.

அட்டமா சித்திகள் வல்ல சித்தர்கள் தங்கள் ஆற்றலைப் புகழ்ந்துரைப்பதாக வருவது சித்து என்ற உறுப்பு.

காலம் என்பதும் ஓர் உறுப்பு. இங்கு கார்காலத்தைக் குறிக்கும். தலைவன் தலைவியிடம் கார்காலத் தொடக்கத்தில் வருவதாகக் கூறிப் பிரிவான். அவன் குறித்த காலத்தில் வராததால் தலைவி படும் துன்பத்தை எடுத்துரைப்பது இது. நந்திக்கலம் பகத்தில் காலத்தின் துன்பத்தை எடுத்துரைக்கும் பாக்கள் மிகச் சிறப்பானவை. ஒரு தலைவி சொல்கிறாள்-

மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம்

                மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்

கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்

                கோகனக நகைமுல்லை முகை நகைக்கும் காலம்

செங்கைமுகில் அனையகொடைச் செம்பொன்பெய் மேகத்

                தியாகியெனும் நந்தியருள் சேராத காலம்

அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம்

                அவரொருவர் நாமொருவர் ஆன கொடுங்காலம்.

கார்காலத்தின் கவினைச் சொல்லிக் கொண்டே வந்தபின் தலைவி கூறும் இறுதியடிகள் நம் உள்ளத்தை எங்கோ கொண்டு செலுத்திவிடுகின்றன.

இசையிலும் நாட்டியத்திலும் திறனுள்ள பெண் மதங்கி எனப்படுவாள். இவள் சுழன்றாடும்போது ஒருவன் அவள் அழகைப் பாராட்டி மொழிவதாக வரும் உறுப்பு மதங்கி எனப்படும்.

வண்டு என்ற உறுப்பு, வண்டுவிடுதூது. தலைவனிடம் தலைவி வண்டினைத் தூதாக அனுப்புவாள்.

மேகம் என்பது மேகம்விடுதூது. தலைவனிடம் தலைவி மேகத்தைத் தூது விடுவது. தலைவியிடம் தலைவன் மேகத்தைத் தூதுவிடுவதாகவும் அமையலாம்.

                ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறுங்

                கூடுவருகுதென்று கூறுங்கோள் – நாடியே

                நந்திச் சீராமனுடை நல்நகரில் நன்னுதலைச்

                சந்திச் சீராமாகில் தான்.

இது தலைவியிடம் தலைவன் தூது விடுவது.

தலைவி ஒருத்தியைக் கண்டவன், அவள் அணங்கோ மானிடப் பெண்ணோ என ஐயுறுவதும், பிறகு மானிடப் பெண்ணே என்று முடிவுசெய்வதும், பிறகு அவளும் தன்னிடம் காதல் கொண்டதை அறிவதும் கைக்கிளை ஆகும். சில சமயங்களில் தன்னிடம் காதல்கொள்ளாத பெண்ணின் அழகைச் சொல்லி இன்புறுவதும் கைக்கிளையில் அமையும்.

இந்திரசாலம் புரிவோர் தங்கள் ஆற்றலைப் புகழ்ந்துரைப்பதாக வருவது சம்பிரதம் என்னும் உறுப்பு. திருவரங்கக் கலம்பகத்தில் சம்பிரத உறுப்பைச் சேர்ந்த இப்பாட்டு அழகாக அமைந்துள்ளது. அதன் தொடக்க அடிகள் இவை.

காணாத புதுமைபல காட்டுவன் கட்செவிகள் எட்டையும் எடுத்தாட்டுவன்

கடல்பருகுவன் பெரிய கனகவரையைச் சிறிய கடுகினில் அடைத்துவைப்பன்

வீணாரவாரம் மூதண்டமுற விளைவிப்பன் இரவுபகல் மாறாடுவன்

விண்ணையும் மறைப்பன் எழுமண்ணையும் எடுப்பனிவை விளையாடும் வித்தையன்றால்

நீங்கள் தவம் செய்து நொந்துபோகவேண்டாம், எங்கள் தலைவனை அடைந்தால் இதனினும் சிறப்பான பொருளை அடையலாம் என்று தவம் செய்வோர்க்குக் கூறுவதாக அமைவது தவம் என்னும் உறுப்பு.

தலைவனிடமிருந்து தூது வரும் பாணனைத் தலைவி இழித்துரைப்பதாக வருவது பாண் என்னும் உறுப்பு. நந்திக் கலம்பகத்தில் பாணனைத் தலைவி பழிப்பது நல்ல நகைச்சுவை.

                ஈட்டுபுகழ்நந்தி பாணநீ எங்கையர்தம்

                வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்

                பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி

                நாய் என்றாள் நீ என்றேன் நான்.

“பாணனே, நீ என் தங்கைகளாகிய பரத்தையர் வீட்டிலிருந்து நேற்றிரவு பாடினாய், அதைக் கேட்ட என் தாய் பேய் அழுகிறது என்றாள். வீட்டிலுள்ள பிறரோ நரி ஊளையிடுகிறது என்றார்கள். தோழி நாய் குரைக்கிறது என்றாள். நீதான் பாடுகிறாய் என்று நான்தான் சரியாகக் கண்டுபிடித்தேன்” என்கிறாள் தலைவி.

கையுறையாகத் தலைவன் தழையாடை கொண்டுவந்து தோழியிடம் தலைவியைக் காண வேண்டுவதும், தோழி அவனுக்காகத் தலைவியிடம் பரிந்து பேசுவதும் தழை என்னும் உறுப்பில் அமையும். சில சமயங்களில் தோழி கையுறை மறுப்பதாகவும் அமையும்.

பிரிவுத் துயர் ஆற்றாத தலைவி கடல், கழி, கானல், நிலவு முதலியவற்றை நோக்கி இரங்குவதாக அமைவது இரங்கல் என்னும் உறுப்பு. சான்றாக, நந்திக்கலம் பகத்தில் இரங்கும் தலைவி ஒருத்தி நிலவைப் பார்த்து எப்படி வேதனை உறுகிறாள் பாருங்கள்-

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்

                தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்

பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

                வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.

இந்தக் கவியின் ஈற்றடிகளில் தலைவியுடன் சேர்ந்து நாமும் நிலவின் கொடுமையை- அதன் வேகத்தை அனுபவிக்கிறோம். என்ன அற்புதமான சொற்கள்-“நீ பிறந்த ஊரில் பெண்களே இல்லையா? ஏன் உனக்கு இந்த வேகம்” என்று பழிக்கிறாள் தலைவி.

பாட்டுடைத் தலைவனின் ஊரைப் புகழ்ந்துரைப்பது ஊர் என்னும் உறுப்பு.

காதலினால் வாடும் தலைவி ஒருத்திக்குக் குறத்தி வந்து குறிகூறுவதாக அமைவது குறம்.

தலைவி ஒருத்தி தலைவனுக்கு அஃறிணைப் பொருள்களைத் தூதாக விடுப்பது தூது ஆகும்.

பொழுதுகண்டாய் அதிர்கின்றது போகநம் பொய்யற்கென்றும்

தொழுதுகொண்டேன் என்று சொல்லுகண்டாய் தொல்லை நூல்வரம்பு

முழுதுகண்டான் நந்தி மல்லையங்கானல் முதல்வனுக்குப்

பழுதுகண்டாய் இதைப் போய்ப் பகர்வாய் நிறைப் பைங்குருகே.

இப்பாட்டில் ஒரு பெண் குருகினைத் தூதாக விடுகின்றாள். (முதல்வனுக்குப் பழுது கண்டாய் என்ற நச்சுத் தொடர் இதில் இடம்பெறுகிறது.)

காதலினால் வாடும் பெண், தென்றல் தன்னைத் தீயாகச் சுடுவதாகக் கூறுவதும் அதனை இழித்துரைப்பதும் ஆக வரும் உறுப்பு தென்றல் என்பதாகும்.

இற்செறிக்கப்பட்ட (வீட்டில் சிறைவைக்கப்பட்ட) தலைவி ஊராரைப் பழிப்பது அலர் என்னும் உறுப்பாகும்.

புரவலன் ஒருவனிடம் பொருள்பெற்றுத் திரும்பும் இரவலன், இன்னொரு இரவலனுக்கு அவனிடம் வழிகாட்டி அனுப்புவதாகப் பாடுவது ஆற்றுப்படை.

இடைச்சியார் என்பது இடைக்குலப் பெண்ணொருத்தியின் பேரெழிலை ஒருவன் புகழ்ந்துரைப்பது. இவ்வாறே, கீரையார், வலைச்சியார், கொற்றியார், பிச்சியார், யோகினியார் என வரும் துறைகளும் அந்தந்தப் பெண்மீது காதல்கொண்ட ஒருவன் அவள்அவள் எழிலைப் புகழ்ந்துரைப்பதாக வருவதே ஆகும். கீரையார் என்பவள் கீரை விற்கும் பெண். வலைச்சியார் என்பவள் மீன்விற்கும் பெண். கொற்றியார் என்பவள் வைணவப் பெண்துறவி. பிச்சியார் என்பவள் சைவப் பெண்துறவி. யோகினி என்பவள் சூலப்பொறியை உடம்பில் தரித்துக் கையில் கபாலத்துடன் தவம் செய்யும் பெண்.

                உழவர்கள் வாழ்க்கையைக் கூறும் உறுப்பு பள்ளு ஆகும்.

                பாட்டுடைத் தலைவனின் திருவடிச் சிறப்பைப் பாடுவது பாதவகுப்பு என்னும் உறுப்பு.

                தலைமகனின் பேரெழிலைக் கேசம் தொடங்கிப் பாதம் வரை பாடுவது பாதாதிகேசம்.

தலைவி வாடியிருப்பதைக் கண்டு வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்யும் தாயின் அறியாமையையும், வேலனின் மடமையையும் நகையாடித் தோழி கூறுவது வெறி விலக்குதல் என்னும் துறை ஆகும்.

தலைவிக்கெனத் தான் மடலேறப்போவதாகத் தலைவன் சொல்லுவது மடல் எனப்படும்.

இவ்வுறுப்புகள் அனைத்தும் ஒவ்வொரு கலம்பக இலக்கியத்திலும் வரவேண்டும் என்ற அவசியமில்லை. இவற்றிற்கு யாப்பு வரையறையும் இல்லை. யாப்பு வரையறை இன்றி எந்த உறுப்பும் எந்தக் கலம்பக நூலிலும் வரலாம்.

கலம்பகநூல்களில் காணப்படும் உறுப்புகளை நாம் அகவுறுப்புகள், புறவுறுப்புகள் என வேறுவகையில் பார்க்க இயலும். ஒரு தலைவனோ அல்லது தலைவியோ காதல்கொண்டது போல அமைந்துள்ள பாக்கள் அகவுறுப்புகள் எனலாம். சான்றாக,

செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்

சந்தனமென்றாரோ தடவினார் – பைந்தமிழை

ஆய்கின்ற கோன் நந்தி ஆகம் தழுவாமல்

வேகின்ற பாவியேன் மெய்.

இது தலைவியின் இரங்கலைக் காட்டும் அகப்பாட்டு. யாரோ தலைவியின் உடலில், செந்தழலின் (தீயின்) சாற்றைச் சந்தனம் என்று பொய்யாகக் கூறித் தடவி விட்டார்களாம்!

திறையிடுமின் அன்றி மதில்விடுமின் உங்கள் செருவொழிய வெங்கண் முரசம்

அறைவிடுமின் இந்த அவனிதனில் எங்கும் அவனுடைய தொண்டையரசே

நிறைவிடுமின் நந்தி கழல்புகுமின் உங்கள் நெடுமுடிகள் வந்து நிகளத்

துறைவிடுமின் அன்றி உறைபதி அகன்று தொழுமின் அலதுய்தல் அரிதே.

இது நந்திவர்மனின் படைவீரன் ஒருவன் பகைவீரர்களைப் பார்த்துச் சொல்வதாக நாடகத்தன்மையுடன் அமைந்த புறப்பாடல். “திறைகொடுத்துவிடுங்கள், இல்லையென்றால் போரையாவது நிறுத்தி மதிலை விட்டுவிடுங்கள். முரசறைவதை விட்டுவிடுங்கள். ஏனென்றால் இந்த உலகமுழுவதும் நிகழ்வது நந்திவர்மனின் ஆட்சிதான். உங்கள் கர்வத்தைவிட்டு நந்திவர்மனைத் தொழுது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று சொல்கிறான் வீரன். இதில் கற்பனைச் சிறப்பு இல்லை எனினும் ஓசை நெஞ்சத்தை அள்ளுகிறது.

tamililakkiyam4நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் நந்திவர்மன். அதில் இடம் பெறும் தலைவியரும் நந்திவர்மனையே காதலிப்பதாகப் பாட முடிகிறது. எனினும் சில பாக்களில் பாடப்படும் அரசனையே (பாட்டுடைத் தலைவனையே) அந்த நூலில் காணப்படும் அகப்பாடல்களின் தலைவன் ஆக்க இயலுவதில்லை. எனவே கிளவித் தலைவன் என இன்னொரு தலைவனையும் அவனைக் காதலிக்கும் தலைவியையும் உருவாக்க நேர்கிறது. புறவுறுப்புகளில் நந்திவர்மனின் கொடை வீரம் பண்பு போன்றவற்றைக் கவிஞனே நேராகவோ பிறர் வாயிலான நாடகக் கூற்றாகவோ புகழவும் முடிகிறது.

திருவரங்கக் கலம்பகம் போன்ற பிற்காலக் கலம்பகங்களில், இறைவன் பாட்டுடைத் தலைவன் ஆகிவிடுகிறான். ஆளுடைய பிள்ளையார் கலம்பகத்தில் திருஞான சம்பந்தர் பாட்டுடைத் தலைவன் ஆகிறார். இங்கெல்லாம் பாட்டுடைத் தலைவனையும் புகழ்ந்தாக வேண்டும், கிளவித் தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவ தாகவும் பாடலியற்ற வேண்டும். திறமை அற்ற கவிஞர்கள் இருவேறு தலைவர்கள் இடம் பெறும்போது சரிவரப் பாடல் இயற்ற முடிவதில்லை.

tamililakkiyam3பிற சிற்றிலக்கியங்களைவிடக் கலம்பகம் இணையற்ற பல்சுவையும் நெகிழ்ச் சியும் கொண்டது. ஏனெனில் இதில் எந்த ஓர் உறுப்பு வரவும் தடையில்லை. எனவே தங்கள் கற்பனை வளத்திற்கேற்பக் கவிஞர்கள் பலவித உறுப்புகளையும் பலவித யாப்புகளில் சேர்த்துக்கொள்கின்றனர். இதனால் நூலின் சுவை கூடுகிறது. நந்திக் கலம்பகப் பாக்களின் சுவைக்கு ஈடு இணையில்லை. பின்வந்த கவிஞர்கள் பலர் நந்திக்கலம்பகத்தையே ஒரு முன்மாதிரியாக வைத்துக் கொண்டு போலி செய்பவர்கள் ஆகிவிட்டனர்.

இறுதியாக, இவை அனைத்தும் தங்கள் யாசகத்திற்காக-தாங்கள் பொருள் பெறுவதற்காக வேண்டிக்-கவிஞர்கள் அரசர்களைப் புகழும் நிலையில் பாடியனவே என்பதையும் நாம் மறக்க இயலவில்லை. தமிழின் கதி எக்காலத்திலும் இவ்வாறாகத் தான் இருக்கிறது. அன்றும் இன்றும் கவிஞர்களும் தமிழ்ப் படைப்பாளர்களும் ஆளுவோரைப் புகழ்ந்து பாடிப் பொருள் சேர்க்கும் அவல நிலையிலேயே உள்ளனர். ஒரு நிலவுடைமை (மன்னர் ஆட்சிக்கால)ச் சமூகத்தில் இவ்வாறுதான் இருக்கும்-இருப்பது இயல்பு. மக்களாட்சி நிகழும் சமூகத்திலும் இவ்வாறு இருப்பது நன்றல்ல. கலம்பகத்தின் சுவையை அனுபவிக்கும் நாம் மனத்தில் இவ்விதக் குறைகளையும் ஏற்றுக்கொண்டுதான் படிக்க வேண்டும். ஆனால் எங்களைப் போன்று நாட்டின் நிலை அறிந்த ‘இக்காலப் புலவர்’களும் வெளிப்படையாக, கண்ணுக்கு நேராகக் காணும் அரசியலையும் நாட்டுநிலையையும் பேச பயந்துகொண்டு, இம்மாதிரிப் பழைய இலக்கியங்களைப் பற்றியோ புதிய இலக்கியங்களைப் பற்றியோ பேசித்திரிய வேண்டியிருப்பது நம் நாட்டின் அவலநிலை. பேச்சுரிமை கொண்ட இக்காலத்திலேயே இப்படியிருக்கும்போது, அக்காலக் கவிஞர்களைப் பற்றிச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?