கற்க கசடற

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக
என்பது வள்ளுவர் அறிவுரை. மிக ஆழமான பொருள் இக்குறளில் அடங்கியிருக் கிறது. கற்க/ கசடறக் கற்க/ கற்பவை கற்க/ கற்றபின் அதற்குத் தக நிற்க என இதைக் கொண்டு கூட்டவேண்டும்.

கற்பது ஆரம்பநிலை. எனவே யாராக இருப்பினும் அவர்கள் கற்பதைத் தூண்டவேண்டும். ஆகவே “கற்க” என்றார்.
அடுத்தநிலை, பிழையின்றிக் கற்பது. பிழையோடு கற்றால் பயனில்லை. எந்தத் துறையாயினும் (கணிதம், அறிவியல், சமூகம், இலக்கியம்…) நாம் முன்னோர் எழுதியவற்றைத்தான் முதலில் கற்கிறோம். பிறகுதான் நம் சிந்தனை வருகிறது. எனவே கற்பனவற்றைப் பிழையறக் கற்க வேண்டும். கசடு என்பது பிழை என்பதை மட்டும் குறிப்பதல்ல, இன்னும் ஆழமான பொருளுடையது. “கசடறக் கற்க”.

அடுத்த நிலை “கற்பவை கற்க”. உலகில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் ஒருவன் கற்பது இயலாது. எழுதப்பட்ட அனைத்தும் கற்கத் தகுதி உள்ளனவும் அல்ல. எனவே கற்க வேண்டியநூ ல்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும்.

கடைசியாகக், கற்கவேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்றபின், அதற்கு ஏற்ப நடக்கவேண்டும். இல்லாவிட்டால் வெறும் ஏட்டுப்படிப்புதான். அதனால் தனக்கும் பயனிலை, உலகிற்கும் பயனில்லை.

பாரதியார் கூறியபடி, திருக்குறள் உலகினுக்கு அளிக்கப் பெற்ற செல்வமாக இருக்கட்டும். தமிழர்கள் அதை ஒருபோதும் மறக்கலாகாது.


விதி என்றால் என்ன?

விதி என்பது ஏதோ மேலிருந்து நமக்கு அளிக்கப்படுவது, அல்லது கடவுளால் தலையில் எழுதப்படுவது என்று பலபேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் பணக்காரனாக இருந்தால், அது அவன் தலைவிதி, நான் ஏழையாக இருந்தால் இது என் விதி என்கிறார்கள்.

ஆனால் நொந்தவர்கள் புலம்புவதற்குத்தான் விதி என்பது பயன்படுகிறதே ஒழிய, நிம்மதியாக இருப்பவர்களோ வசதியாக இருப்பவர்களோ அதைப் பயன்படுத்துவதில்லை. எவனும் “நான் வசதியாக இருப்பது என் விதி” என்று சொல்வதில்லை.

விதி என்றால் என்ன என்று அர்த்தப்படுத்தப் பலகாலமாக முயற்சி செய்தும் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இது நம் “விதி” போலும்! ஒருவேளை இப்படி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.

விதி என்றால் சட்டம். “நீ என்ன செய்கிறாயோ அதற்குத் தகுந்த பலனை அடைகிறாய்” என்பது விதி. இதைத்தான் இயற்பியலில் நியூட்டனின் மூன்றாம் விதியும் சொல்கிறது. ஒவ்வொரு செயலுக்கும், எப்போதும் சமமான எதிர்விளைவு இருக்கிறது என்கிறது. “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று நம் முன்னோர் சொன்னார்கள்.
இதுதான் ‘விதி’ போலும். ஓரளவு -ஓரளவுதான்! -தனிமனிதர்களுக்குப் பொருந்துகின்ற இவ்விதி, பெரும் மனிதக்குழுக்களுக்கு, நாடுகளுக்குப் பொருந்துமா என்று தெரியவில்லை.


எல்லாமே கொள்ளைதான்

“எல்லாமே வயித்துக்குத் தாண்டா” என்று பாடினான் ஒரு சினிமாப்  பாட்டுக்காரன். இன்று எல்லாமே நாங்கள் கொள்ளையடிப்பதற்குத்தான் என்கிறார்கள் வியாபாரிகள். கணினி மென்பொருள்கள் பரவியபோது தாங்களாகவே வைரசுகளையும், ட்ராஜன்களையும், வோம்களையும் உருவாக்கினார்கள். பிறகு அதற்கு ஆண்டிவைரஸ், ஆண்டிமால்வேர் என்று சொல்லிப் பணம் குவித்தார்கள். நோய்களை உருவாக்கினார்கள். பிறகு அவற்றுக்கு மருந்துகளை உருவாக்கி விற்கிறோம் என்று சொல்லிக் கொள்ளையடித்தார்கள்.

நம் ஊர் வியாரிகளும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. அரிசி சாப்பிட்டால் நீரிழிவு, கோதுமை மாவில் கலப்படம், மைதாமாவில் வேதிப்பொருள் என்று இன்றுவரை எல்லா இணைய தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பிரச்சாரம். மாற்று? கிராமப்புறங்களில் சாப்பிடுவதுபோல கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, சிறுதானியங்கள், பருப்புவகைகள் சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் சிறு தானிய மோகம். ஆனால் விலைதான் உச்சாணிக்கொம்பில். தினை 120 ரூபாய் கிலோ, கேழ்வரகு 100 ரூபாய் கிலோ, சாமை 110 ரூபாய் கிலோ, எல்லாம் பாலிஷ் செய்யப்பட்டவை (அரிசி போலத்தான்) பருப்புகள் எதுவும் 100ரூபாய்க்குக் குறைவில்லை. ஆனால் அரிசியே 50 ரூபாய்க்குக் கிடைக்கிறது. எந்த கிராமத்தானும் மலைவாழ்குடியினனும் கேழ்வரகை, தினையைக் கிலோ 100 ரூபாய்க்கு வாங்கிச் சாப்பிட முடியும்?


இயற்கையின் விந்தை

இயற்கையின் அனுபவங்கள் எல்லாம் முன்னரே இருந்தாலும், இன்று புதிதாகத் தோன்றுகின்றனவே அது எப்படி? இலட்சக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து காதலுணர்வு தொடர்ச்சியாக இருந்தாலும் இன்று புதிதாகக் காதலிப்பவன் தான்தான் அதை முதலில் செய்வது போன்ற உணர்வும் அனுபவமும் பெறுகின்றானே அது எப்படி? எவ்வளவு வியப்பான செய்தி இது! இதைத்தான் மாயத் தோற்றம் (இல்யூஷன்) என்றனர் போலும் முன்னோர்.


இன்றைய விளையாட்டு

“மெய்யான விளையாட்டுக்கும் நியாயம் என்பதற்கும் சம்பந்தமில்லை; வெறுப்பு, பொறாமை, தற்பெருமை, விதிகளை மதியாமை, வன்முறையைக் காண்பதில் இன்பம் ஆகியவற்றை அது கொண்டுள்ளது, சுருங்கச் சொன்னால் அது போர்தான்” என்று ஜியார்ஜ் ஆர்வெல் அறுபதாண்டுகளுக்கு முன்பு எழுதினார். இன்றைய விளையாட்டுகளைப் பார்க்கும்போது அது மிகவும் உண்மை என்று தோன்றுகிறது. அவர் சொல்லாமல் விட்டுவிட்ட ஒன்று, அது ஊழலோடும் முறையின்றிப் பணம் குவித்தலோடும் தொடர்பு கொண்டுள்ளது என்பதுதான்.


ஜனநாயகமா?

ஜனநாயக நாடு என்று நம்மை நாம் சொல்லிக்கொண்டாலும், நாம் ஜனநாயகப் பண்புகளை வளர்க்கவில்லை. நிலவுடைமைக்காலத்தில் உயர்சாதியினரையும் தலைவர்களையும் சாமீ என்று அழைக்கப்பழக்கப்படுத்தப்பட்டான் அன்றைய மனிதன். இன்று அவன் திரைப்பட நட்சத்திரங்களைத் தலை, தளபதி என்கிறான். சாதாரண வழக்கறிஞராக இருந்து நடுவராக உயரும் அரசு அதிகாரியை நீதி அரசர் என்கிறான். இது ஜனநாயகத்திற்கு எதிரான மனநிலை. இதை அடிப்படையிலிருந்து மாற்றவேண்டும்.


வாழ்க வையகம்

‘தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்பது வள்ளுவர் அக்காலத்தில் மனைவிக்கு வகுத்த இலக்கணம். இதைப் பெண்ணடிமைத்தனம் என்று சொல்வாரும் உண்டு. ஆனாலும் இந்தப் பழந்தமிழ் இலக்கணப்படி வாழ்பவர்கள் தமிழகத்தில் என்றும் உண்டு. அவர்களில் ஒருவ ரான என் மனைவிக்கு இந்தப்பகுதியை அர்ப்பணித்து, எங்கள் திருமண வாழ்க்கையின் நாற்பதாம் ஆண்டு தொடங்கும் இந் நன்னாளில் ‘தினம் ஒரு செய்தி’ என்னும் இப்பகுதியைத் தொடங்குகிறேன். வாழ்க வையகம்!