இது ஒரு அயல்நாட்டுக்கதை.
ஒரு பையன் ஒரு கடைக்குச் சென்றான். அங்கு தொலைபேசி வசதி இருந்தது. தொலைபேசியின் சில எண்களைத் தட்டிப் பேச ஆரம்பித்தான். பேசுபவன் சிறு பையன் ஆனதால் கடைக்காரர் அவன் என்ன பேசுகிறான் என்று கவனிக்கலானார்.
பையன்: அம்மா, உங்கள் தோட்டத்தில் புல்லை வெட்டி சீர்ப்படுத்தும் வேலையை எனக்குத் தருகிறீர்களா?
பெண் (அடுத்த முனையிலிருந்து): தம்பி, என்னிடம் அதற்கு ஆள் இருக்கிறது.
பையன்: அம்மா, இப்போது நீங்கள் அந்த ஆளுக்குத் தரும் கூலியைவிடக் குறைத்துக் கொடுங்கள். பாதி கொடுத்தாலும் போதும்.
பெண்: இப்போது வேலை செய்யும் பையனே நன்றாகச் செய்கிறான்.
பையன்: (விடாமுயற்சியோடு) உங்கள் தோட்டத்தின் நடைபாதை, பக்கத்திலுள்ள இடங்கள் எல்லாவற்றையும் நான் சுத்தம் செய்வேன் அம்மா. மற்றவீடுகளைவிட உங்கள் வீடு பார்க்க சுத்தமாக அழகாக இருக்கும்.
பெண்: இல்லைப்பா, வேண்டாம்.
பையன் தொலைபேசி ரிசீவரை வைத்தான். கடைக்காரரிடம் பணம் கொடுப்பதற்காக வந்தான். அவர் சொன்னார்: தம்பி, உன் விடாமுயற்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அதனால் நான் வேண்டுமானால் உனக்கு வேலை தருகிறேன்.
பையன்: வேண்டாம் சார்.
கடைக்காரர்: ஆனால் வேலை வேண்டும் என்று மன்றாடிக் கொண்டிருந்தாயே.
பையன்: இல்லை சார், என் வேலை எப்படி இருக்கிறது என்று செக் பண்ணிப் பார்த்தேன். நான் பேசிக்கொண்டிருந்தேனே, அந்தப் பெண்மணிக்குத் தோட்டவேலை செய்யும் பையன் நான்தான்.
Category: தினம்-ஒரு-செய்தி
ஒரு குறிப்பு
1981 முதலாக நான் தமிழ்ப்பொழில் தந்த தமிழ் ஆய்வு என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கென ஆய்வு செய்து வந்தேன். முனைவர் பட்டம் பெற்ற பிறகு அந்த ஆய்வேட்டினை வெளியிடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆய்வேட்டினை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினை அணுகியபோது அச்சமயத்தில் உடன்பாடான பதில் கிடைக்கவில்லை. எனவே ஆய்வேடு கிடப்பில் போடப்பட்டது. எனினும் அது பலருக்கும் வரலாற்று அளவிலான பயனளிக்கும் என்பதனால், அதற்கென எழுதிய கட்டுரைகளை இந்த என் இணைய தளத்தில் வெளியிடக் கருதியுள்ளேன். அதன் ஒரு பகுதியாகத் ‘தமிழ்ப் பொழிலில் கலைச்சொல்லாக்கம்’ என்ற கட்டுரை வெளியிடப்பெறுகிறது. தொடர்ந்து பிற கட்டுரைகளும் வெளியாகும். (கட்டுரைகள் எவ்வித வரிசைமுறைப்படியும் அமையவில்லை. அவ்வப்போது கிடைத்தனவற்றை வெளியிடுகிறேன்.)
தமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி
தமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி -மண்ணாசை
சங்கரராம் என்ற புனைபெயரை ஏற்றுக்கொண்ட டி.எல். நடேசன் என்பவர் எழுதிய நாவல் ‘மண்ணாசை’. திருச்சி மாவட்டத்துக்காரர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே ஆங்கிலத்தில் Love of Dust என்று ஒரு நாவல் எழுதினார். அதுதான் பிறகு தமிழில் அவராலேயே ‘மண்ணாசை’ என்று ஆக்கப்பட்டது (1940). அக்காலத்தில் ஆங்கிலத்தில் முதலில் எழுதிவிட்டுப் பிறகு தமிழிலும் எழுதிப்பார்ப்பது வழக்கமாக இருந்தது. கா. சி. வேங்கடரமணியும் இப்படிச் செய்தவர்தான். முதன்முதலில் எழுதப்பட்ட வட்டார நாவல் என்று இதைச் சொல்லலாம் (நாகம்மாளுக்கும் முன்னால்). தேசியப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட நாவல் என்பதும் இதன் சிறப்புகளில் ஒன்று. (அக்காலத்தில் வை.மு. கோதைநாயகி அம்மாள் தனக்கே உரிய குடும்ப-தேசியக் கலப்புக் கற்பனைக் கதைகளை எழுதிவந்தார். கல்கியும் எழுதத் தொடங்கியிருந்தார்.)
அந்தக் காலத்தில் உரையாடல் அமைப்பு வட்டாரவழக்கில் அமைவது புதுமையானது. திருச்சி மாவட்டத்தில் எந்த நெடுஞ்சாலையும் தொடர்வண்டியும் தொடாத வீரமங்கலம் என்ற கிராமம் இதன் கதைக்களம். வெங்கடாசலம் என்ற விவசாயி புதியவகைக் கடலைப் பயிர்செய்யக் கடன் வாங்குகிறான். தற்செயலாக ஏற்பட்ட தீவிபத்தில் இந்தப் பயிர் நாசமாகிவிடுகிறது. கடனைத் தீர்க்கமுடியாத நிலை. கொஞ்சம் நிலத்தை விற்றுக் கடனைத் தீர்க்குமாறு நண்பர்கள் வேங்கடாசலத்துக்குச் சொல்கின்றனர். வேங்கடாசலத்தின் மண்ணாசை இந்த யோசனையை ஏற்கத் தடைபோடுகிறது. இந்நிலையில் அவனுடைய வளர்ப்புமகன் வேலு மீது அநியாயமாகக் கொலைக் குற்றம் ஏற்படுகிறது. இந்த வழக்குக்கென அவன் தன் நிலத்தை விற்கவேண்டி வருகிறது. இறுதியில் மாயாண்டியின் மகன் தானே கொலைசெய்ததாக ஒப்புக் கொள்ள, அவன் மகளை வேலு மணக்கிறான். வேலுவின் சொந்தத் தகப்பன் பினாங்கில் சொத்துச் சேர்த்து அதை வெங்கடாசலத்திற்கும் வேலுவுக்கும் விட்டுவிட்டு இறந்த செய்தி வருகிறது. ஆனால் இங்கும் வாழ்நாள் முழுவதும் தொல்லை அனுபவித்த வேங்கடாசலம் இறந்துவிடுகிறான். சற்றே ஏறுமாறான திருப்பங்களும் தற்செயல் நிகழ்ச்சிகளும் கலந்த கதை.
என்றாலும், “தமிழ்நாட்டு கிராம வாழ்க்கையின் வரலாறு, தன் கொள்கைக்காக இறுதியளவும் போராடிய பழமையான குடியானவனின் வீரத்தை வருணிக்கும் காவியம், ஆற்றலும் ஆழமும் தெளிவும் ஓட்டமும் எழிலும் இனிமையும் ஆகிய இலக்கியப் பண்புகள் வாய்ந்த உன்னதமான சமூகநாவல்” என்று இதை மதிப்பிட்டுள்ளனர். இதில் “காவிரி ஆற்றங்கரை மாமரத்தின் மணம் வீசுகிறது. காற்றில் தொப்பு தொப்பு என்று விழும் தேங்காயின் ஒலி கேட்கிறது. அருவிகளின் இன்னிசை காதில் விழுகிறது. வடிகால்கரைமேல் கிடக்கிற ஈரக்களி பிசுக்குப் பிசுக்கென ஒட்டிக் கொள்கிறது. கிராமவாசிகளின் பேச்சுகள் உள்ளபடி காதில் விழுகின்றன” என்று பாராட்டுகிறார் பெ. நா. அப்புஸ்வாமி. பின்னாட்களில் உருவான மண்வாசனை நாவல்களுக்கு முன்னோடி இந்த நாவல்.
அசைவ அரசியல்
சில நாட்களுக்கு முன்னால் இந்துத்துவ அமைப்புகள் ஒருவாரத்துக்கு மாட்டுக்கறியோ பிற அசைவ உணவுகளோ உண்ணலாகாது, கடைகளை மூடவேண்டும் என்று வேண்டின. ஜைனத் திருவிழா ஒன்று செப்டம்பர் 14 முதல் 17 வரை நடைபெற்றது காரணமாம். இதையொட்டி, சில தொலைக்காட்சி சேனல்களில் தனிப்பட்ட உணவுப் பழக்கங்களையும் முறைகளையும் தடைசெய்யலாமா கூடாதா என்றெல்லாம் விவாதங்களும் நடந்தன.
மாட்டுக்கறி உண்பது கூடாது என்று 1976இலேயே குஜராத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. காரணம், இந்துத்துவ அமைப்புகள், வேதக் கலாச்சாரத்தில் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்றும், பசுவதை கூடாது என்றும் இருப்பதாகக் கட்டிய கட்டுக்கதைதான். அண்மையில் மாட்டுக்கறி சாப்பிட்டதாகச் சொல்லி முஸ்லிம்களைக் கொலைசெய்த செய்தி ஒன்றும் வெளிவந்துள்ளது.
ஆனால் உண்மை வேறு. ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள செய்திகளைக் காண்போம். ரிக்வேதத்தில் 1028 பாக்கள் உள்ளன. இவை பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
“வேதமக்கள் கால்நடைகளை யாகத்தில் பலியிட்டு அவற்றைச் சாப்பிட்டனர் என்றாலும் தங்கள் செல்வமாக அவற்றைக் கருதினர். நிச்சயமாகவே அவர்கள் காயடித்த எருதுகளின் மாமிசத்தை உண்டனர். முதலில் யாகத்துக்காகவும், பிறகு இப்போது மக்கள் பிக்மாக்(BigMac) எனப்படும் மாட்டுஇறைச்சிஉணவை (மெக்டொனால்டு கடைகளில் விற்கப்படும் ஹாம்பர்கர் வகை வேகஉணவு) எந்தக் காரணங்களுக்காக உண்கிறார்களோ அதே காரணங்களுக்காக-சுவைக்காகச் சாப்பிட்டனர். (குறிப்பு: இந்தியாவில் இப்போது பிக்மாக்குகள் ஆட்டிறைச்சியில் செய்யப்படுகின்றன).
அவர்கள் எருதுகளை யாகத்தில் பலியிட்டனர். (இந்திரன் இருபது எருதுகளின் அல்லது நூறு எருமைகளின் இறைச்சியைச் சாப்பிட்டு, சோமபானங்களை ஏரிஏரியாகக் குடித்தான்.) பசுக்களைப் பெரும்பாலும் பாலுக்காக வைத்துக் கொண்டனர். ஒரு பாட்டு பசுக்களைக் கொல்லக்கூடாது என்று சொல்கிறது (7.87.4), (அதாவது, ரிக்வேதம், ஏழாம் மண்டலம், 87ஆம் பாடல், வரி 4). ஆனால் மற்றொரு பாட்டு, திருமணக் காலத்தில் கட்டாயம் ஒரு பசு கொல்லப்பட வேண்டும் (10.85.13) என்கிறது. ஒரு பாட்டு (10.91.14), நன்கு வளர்க்கப்பட்ட ஆனால் கன்றுபோடாத பசுவை யாகத்துக்கான விலங்குகளின் பட்டியலில் சேர்க்கிறது. பிற பாடல்கள், தேவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அவியுணவாகப் பசுக்களைச் சொல்கின்றன, பிறகு அவற்றை மக்கள் உண்ணவேண்டும் என்று சொல்கின்றன. வழக்கமான உணவுகளாகிய பால், வெண்ணெய், காய்கறிகள், பழங்கள், கோதுமை, பார்லி இவற்றோடு, ஆடுகள், மாடுகள், செம்மறிகள் ஆகியவற்றின் இறைச்சியையும், கடைசி யாக சுராபானம் அல்லது மதுவைச் சிறப்பான சந்தர்ப்பங்களில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் மேற்கண்ட ரிக்வேதப் பாக்கள் சொல்கின்றன.
(ஆதாரம்: வெண்டி டோனிகர் எழுதிய ‘இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு’ (2009) என்னும் நூல், இயல் 5.)
வேதத்தில் இப்படியெல்லாம் இருக்கும்போது அதைத் தங்கள் மூலநூல் எனப் போற்றியவாறே அதற்கு எதிராகவும் எப்படி இவர்களால் நடந்துகொள்ள முடிகிறது? காந்தியைப் போற்றி காந்தி ஜெயந்தியைக் கொண்டாடிக்கொண்டே, உள்நாட்டு விவசாயத்தையும் வியாபாரத்தையும் அழித்து, (காந்தியின் கொள்கைகளுக்கு எதிராக) அமெரிக்க முதலீட்டுக்குக் கையேந்தும் அரசியல்வாதிகள்தானே இவர்களின் தலைவர்கள்? இவர்கள் வேறென்ன செய்வார்கள்?
கலைச்சொற்கள்
தமிழில் கலைச்சொற்கள் ஆக்கம் ஒருகாலத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அறுபதுகளின் தொடக்கம் அந்தக்காலம் என்று சொல்லலாம். தமிழ்வழிக் கல்வியைக் கல்லூரிகளில் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் முனைப்பாக இருந்த காலம் அது. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்களும், கோவையில் ஜி. ஆர். தாமோதரன் போன்ற ஆர்வம் கொண்ட தனி அறிஞர்களும் முயன்று கலைச்சொற்களை எல்லாத் துறைகளிலும் உருவாக்கினர். குறிப்பாகக் கலைக்கதிர் போன்ற இதழ்கள் இத்துறையில் ஆற்றிய தொண்டு பெரியது. அவையெல்லாம் இன்று எங்கே போயின, குறைந்தபட்சம் பொது(அரசு) நூலகங்களிலேனும் உள்ளனவா என்பது தெரியவில்லை. கன்னிமரா நூலகத்தில் ஒருவேளை காப்பாற்றப்பட்டு எங்கோ ஒரு மூலையில் இருக்கலாம்.
கலைச்சொற்கள் எல்லா மொழிகளிலும் ஒற்றைச் சொல்லாக அல்லது ஒருசொல் நீர்மையதாக அமைந்திருக்கும். இதற்கு விதிவிலக்குகள் குறைவு. பலசொற்களில் விளக்கவேண்டிய ஒரு அறிவியல் கருத்தை-அது திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட வேண்டியிருப்பதால், ஒற்றைச்சொல்லில் எடுத்துரைப்பது கலைச்சொல். கலைச்சொற்களில் முன்னொட்டுகள் பின்னொட்டுகள் இருப்பினும் அவை ஒரேசொல் தன்மையைப் பெறவேண்டும். சான்றாக, அட்மாஸ்பியர் என்ற சொல்லை நோக்கினால், அட்மா + ஸ்பியர் என்ற இரு சொற்களால் ஆகியிருந்தாலும் அது ஒரேசொல் போலவே தோற்றமளிக்கிறது. பெரும்பாலான ஆங்கிலக் கலைச்சொற்கள் இரு சொற்களால் ஆனவை என்றாலும் அவை ஒற்றைச்சொல் தன்மையைப் பெற்று விட்டன. சான்றாக, பயாலஜி என்பது பயோ + லஜி என்ற இரு சொற்கள் இணைந்தது என்றாலும் யாரும் அதைப் பிரித்துப் பார்ப்பதே இல்லை. மேலும் பயோ, லஜி ஆகியவை ஒட்டுகளின் தன்மையைப் பெற்றுவிட்டன.
தமிழில் அவ்வாறு ஒருசொல்நீர்மைத்தாகக் கலைச்சொற்கள் இல்லை என்பது வருந்தத் தக்கது. சான்றாக, சுற்றுச்சூழலியல் என்ற சொல், சுற்று, சூழல், இயல் என்ற மூன்று முழுச் சொற்கள் கொண்டதாக உள்ளது. ஆங்கிலத்தில் ஒரே சொல்லாக உள்ளதையும் தமிழில் இரண்டு அல்லது மூன்று சொற்கள் கொண்டே பெயர்க்கவேண்டியுள்ளது. gale என்ற ஆங்கில ஓரசைச்சொல்லைத் தமிழில் கடுங்காற்று என்று ஆக்குகிறோம். இது இரண்டுசொற்களைக் கொண்டு அமைகிறது. தமிழ்ப் பற்றாளர்கள் முதலில் கவனம் செலுத்தவேண்டிய பகுதி இதுதான்.
ஒருசொல்லாக அடிப்படைக் கலைச்சொல் அமைவதனால்தான் அதை வைத்துப் பிறகு முன்னொட்டும் பின்னொட்டும் சேர்த்து மேலும் பல கலைச் சொற்களை ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஆக்கமுடிகிறது. தமிழில் அவ்வாறு செய்ய இயலாமல் போகிறது. ஆண்டாலஜி என்ற ஒருசொல் நீர்மைத்தான ஆங்கிலச் சொல்லைத் தமிழில் இயல் + திட்ட + வாதம் என மூன்று சொற்கள் கொண்டதாக அமைக்க வேண்டி வருகிறது. அதனால் அதை விரிவுபடுத்த முடியாமல் போகிறது. ஆண்டலாஜிகல், ஆண்டலாஜிகலி என்றெல்லாம் ஆங்கிலத்தில் எளிதாக விரிவுபடும்போது, தமிழில் ஒவ்வொன்றிற்கும் ஒரு சொல்லைச் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே கலைச் சொல்லை ஆக்கும்போது ஒரேசொல்லாக ஆக்குங்கள்.
தமிழில் வினைச்சொற்களை மட்டுமே இதற்கு விதிவிலக்காக வைத்துக் கொள்ளலாம். சான்றாக, -ize என முடியும் ஆங்கில வினைச்சொற்களை இருசொல் கொண்டவையாக ஆக்கலாம். nationalize – தேசியமயமாக்கு, நாட்டுடைமையாக்கு என்பதுபோல. இவையும் மூன்று சொற்களாக உள்ளன. எனவே ‘தேசியமாக்கு’ என்று இரண்டே சொற்களில் கொண்டுவருவது நல்லது.
மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்
தமிழை நடைமுறையில் கையாள முனையும்போதும், தமிழில் பாடங்களைக் கற்பிக்கும்போதும் எழும் சிக்கல்களில் மொழிபெயர்ப்பதா ஒலிபெயர்ப்பதா என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த விஷயத்தில் தூயதமிழாளர்கள் குழப்பி விட்டவை பல. தமிழைப் பாதுகாக்கின்ற நோக்குதான் அவர்களிடம் இருக்கிறதே ஒழிய, அதன் வளர்ச்சி பற்றிய நோக்கு இல்லை. பயிருக்கு வேலியிட்டுப் பாதுகாத்தால் மட்டும் அது வளர்ந்துவிடுமா? அல்லது வளரும் பயிரை அப்படியே விட்டுவிட்டால் அது பாதுகாப்பாக இருந்துவிடுமா? பாதுகாப்பு வேறு வளர்ச்சி வேறு என்பது முதலில் தெளிவாக வேண்டும். முதலில் வளர்ச்சி, பிறகுதான் பாதுகாப்பு. வளர்ச்சியே இல்லாமல் பாதுகாப்பு எதற்கு? தமிழில் திராவிட இயக்கக் காலத்தில் உருவானவர்கள் எல்லாம் பாதுகாவலர்கள் தான். சான்றாக முத்தமிழ்க் “காவலர்” போன்ற அடைமொழிகளைப் பார்த்தாலே தெரியும்.
நடைமுறையில் புழங்கிவரும் பல சொற்களை அப்படியே தமிழில் ஏற்றுக்கொள்ளலாம். அதிகமாகப் புழங்காத சொற்களைத் தமிழ்ப்படுத்துவது போதுமானது. சான்றாக, பம்பு (pump) என்ற சொல்லை எதற்குக் கஷ்டப்பட்டு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கவேண்டும்? அதற்கு இவர் ஒன்று சொல்ல, அவர் ஒன்றுசொல்ல, நேரான சொல் கிடைப்பதே இல்லை. சிமெண்டு, பட்ஜெட் போன்ற சொற்களை ஒலிபெயர்த்தால் போதும். மொழிபெயர்ப்பு தேவையில்லை. தொடக்கத்தில் இருந்தே எந்தமாதிரிச் சொற்களை ஒலிபெயர்க்கலாம், எவற்றை மொழிபெயர்க்கலாம், எவற்றுக்கு மட்டும் கலைச்சொற்கள் தேவை என்ற தெளிவு இருந்திருந்தால் இன்று தமிழை எவ்வளவோ வளப்படுத்தி இருக்கலாம்.
சிலர் எந்தச் சொல்லையும் உருவாக்கிப் பயன்படுத்தினால் காலப்போக்கில் அது நின்றுவிடும், கொஞ்சம் காத்திருக்கவேண்டும் என்பார்கள். உதாரணமாக ‘பஸ்’ என்ற சொல்லுக்குப் ‘பேருந்து’ என்ற மொழிபெயர்ப்பு வந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டாயிற்று. ஆனாலும் நடைமுறையில், பேச்சுவழக்கில் இன்றும் பஸ் என்ற சொல்தான் புழங்குகிறதே ஒழிய பேருந்து என்ற சொல் பயன்பாட்டுக்கு வரவே இல்லை. ஆகவே இம்மாதிரி முயற்சிகளை வீண் என்றுதான் சொல்லவேண்டும்.
கல்வியும் தமிழும்
அறிவியல் தமிழைப் பற்றி இன்று பேசுவார் இல்லை. ஏதோ ஐந்தாண்டுகளுக்கு முன்பு சென்ற ஆட்சிக்காலத்தில் ஒரு செம்மொழித் தமிழ் மாநாடு நடத்தப்போய் அதில் அறிவியல் தமிழ் பற்றி ஒருமாதிரி பேசப்பட்டது. அதோடு அதற்கு முற்றுப் புள்ளியும் வைக்கப்பட்டுவிட்டது. இன்றோ தமிழில் அறிவியல் என்பது என்ன என்று விளங்காமலும், அது தேவையா என்று கேட்டுக்கொண்டும் அலைகிறார்கள் தமிழ்மக்கள்.
சிலநாட்களுக்கு முன்பு உலகத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேன்மக்களின் கல்விக்கழகங்களான நமது ஐஐடிக்கள் ஐஐஎம்கள் உட்பட எவற்றுக்கும் அதில் முதல் ஒரு நூற்றியிருபது தகுதிகள் வரைகூட இடமில்லை. பிற பல்கலைக்கழகங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
உயர்கல்வி இந்த லட்சணத்தில். இதில் வெளிநாட்டுத்தரகர்களுக்கு இதைத் தாரை வார்க்க முயற்சி நடக்கிறது-காட்ஸ் ஒப்பந்தம் போன்றவற்றின் மூலமாக.
இந்த உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தீனியளிக்கும் நமது பள்ளிகளின் நிலை என்ன? பழங்காலத்தில் எல்லாம் இன்ப மயம் என்று ஒரு பாட்டு. அதைப்போல இவற்றில் எல்லாம் துட்டு மயம் என்று சொல்லலாம். ஒவ்வொரு நகரத்திலும் இண்டர்நேஷனல் பள்ளிகள் இருக்கின்றனவே அவை எதைச் சாதித்திருக்கின்றன? சரி, அவையாவது தனியார் பள்ளிகள். சிபிஎஸ்இயின் தரம் என்ன? தமிழ்வழிக் கல்விதரும் பள்ளிக்கூடங்களே அற்றுப்போய், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று ஏராளமாக நடக்கின்றனவே அவற்றின் தரம் என்ன?
இவற்றின் தரமின்மைக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. முதலில் கல்வி ஒரு பெருத்த வியாபாரமாகப் போய்விட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். இரண்டாவது, சிந்தனைக்கு இடமளிக்கின்ற தாய் மொழிப்பாடத்திற்கும் தாய்மொழி வழிக்கல்விக்கும் இடமில்லாமலே போய்விட்டது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இங்கு இரண்டாவது விஷயத்தைப் பற்றி மட்டும் சில சொற்கள்.
தாய்மொழி வழிக் கற்றால்தான் சுய சிந்தனை வளரும், நல்ல அறிவியலாளர்கள் சிந்தனையாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள் தோன்றுவர் என்று நாம் கரடியாய்க் கத்தினாலும் இன்று தமிழ்நாட்டில் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. மாறாக, மெத்தப்படித்த என் நண்பர், ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர், கேட்டார்-“ஆங்கிலத்தையே நாம் தாய்மொழி ஆக்கிக்கொண்டால் போகிறது. எதற்குத் தமிழில் படிக்கவேண்டும்?” எந்த மொழியையும் இவர்கள் தாய்மொழியாக “ஆக்கிக்கொள்வார்கள்” போல் இருக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்தே ஆங்கிலத்தில் அதைச் சுற்றியிருப்பவர்கள் பேசத்தொடங்கிவிட்டால் ஆங்கிலம் அதற்குத் தாய்மொழியாகிவிடும் என்பது அவருடைய வாதம். இது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இப்படிச் செய்யக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் 0.1 சதவீதமாவது தேறுவார்களா?
இன்றைய அறிவு வளர்ச்சியின் வேகம் மிக அதிகம். அறிவு எட்டே ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது என்கிறார்கள் அறிவியலார்.
தமிழ்ச்சமூகம் இந்த அறிவு வளர்ச்சிக்கு எப்படித் தன்னை ஈடுகொடுத்துத் தன் தமிழ்மொழியில் அதனைப் பெற்றுத்தரப்போகிறது? எதிர்காலச் சந்ததிகளுக்கு எவ்விதம் அது வழிகாட்டப்போகிறது?
நம் அரசாங்கங்கள் கல்வியைத் தருவதற்கு பதில் சாராயத்தைத் தருகின்றன. எதை அரசாங்கம் நடத்தவேண்டும் எதை நடத்தக்கூடாது எவ்விதம் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற அறிவு சிறிதுமின்றி பணம் வோட்டு விளம்பரம் ஒன்றே குறி என்று மக்களுக்கு அல்வழியைக் காட்டுகின்றன அரசாங்கங்கள். இதற்குமேல் பதினான்காம் வயதுவரை இலவசக் கல்வி தருகிறோம், சட்டத்தில் அது சொல்லப்பட்டி ருக்கிறது என்றெல்லாம் பீற்றிக்கொள்வார்கள். உண்மையில் நடப்பது என்ன என்பது மக்களுக்குத் தெரியும்.
எனக்குப் பிடித்த நாவல்-நாகம்மாள்
அநேகமாக ஆர். ஷண்முகசுந்தரம் என்ற எழுத்தாளரை எல்லாரும் மறந்திருப்பார்கள். கொங்குநாட்டுக்காரர். 1942இல் நாகம்மாள் என்ற அவரது நாவல் வெளிவந்தது. இந்த நாவலில் முன்பு நம் கிராமங்களில் நடந்த பாகப்பிரிவினை, நிலத்தகராறு போன்றவை எப்படிக் குடும்ப வாழ்க்கையைச் சிதைக்கின்றன என்பது அருமையாகக் காட்டப்படுகிறது.
சிவிலியார் பாளையம் என்று ஒரு ஊர். அதில் நாகம்மாள் என்று ஒரு பெண். அவள்தான் கதைத்தலைவி. கணவன் கிடையாது. அவள் குடும்பத்தில் உள்ள பிறர்-அவளுடைய குழந்தை முத்தாயா; கணவனின் தம்பி சின்னப்பன்; அவன் மனைவி ராமாயி. தன் கணவனின் பாகத்தைச் சொத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாகம்மாள் நினைக்கிறாள். அது கூட்டுக்குடும்பக் காலம். அவளுடைய நினைப்புக்கு து£பம் போடுபவன் கெட்டியப்பன். பாகப்பிரிவினைச் சண்டை முற்றி, சின்னப்பன் கொலையில் முடிகிறது. நாகம்மாள் அதிர்ச்சியடைந்து நிற்கிறாள்.
ஒரு நல்ல யதார்த்த நாவல் இது. கொங்குநாட்டு கிராம மக்கள் வாழ்க்கையை உணர்ந்து அனுபவித்தவர் ஷண்முகசுந்தரம். கிராம மக்களின் வாழ்க்கை மையமே நிலம்தானே? எனவே அவர் படைப்புகளில் நிலம்தான் மையம். அறுவடை, சட்டி சுட்டது, பனித்துளி போன்ற நாவல்களிலும் இதே தன்மையைக் காணலாம். வலிந்து வர்க்கப்போராட்டத்தைத் திணிக்காமல், இயல்பான சமூக உறவுகளை வைத்து எழுதுகிறார். அநேகமாகத் தமிழில் யதார்த்தநாவல்களுக்கு நாகம்மாள் முன்னோடி என்று சொல்லலாம். இந்த நாவலின் பல நல்ல கூறுகளைப் பஞ்சும் பசியும், கரிசல், தாகம் போன்ற நாவல்கள் பின்பற்றுகின்றன. நடையில், உத்தியில், மண்ணின் மணத்தைக் காட்டுவதால் வட்டார நாவல்களுக்கு இது ஒரு முன்னோடி என்று சொல்லிவிட்டார்கள்.
பாத்திரப் படைப்பு விஷயத்தில் நாகம்மாள் நாவல் ஒரு புரட்சியே செய்திருக்கிறது. நாகம்மாள் கதாநாயகி, ஆனால் கதாநாயகிக்குரிய தன்மைகள் இல்லாதவள். விதவை. பணிவோ பயமோ அற்றவள். அதேசமயம் பாசம் மிகுந்த தாய். மைத்துனனிடம் மரியாதை உள்ளவள். இவளுடைய செயல்கள்தான் நாவ லின் அவலமுடிவுக்குக் காரணமாகின்றன. நல்ல பாத்திரப்படைப்பு.
பிரிவினை பற்றிய எண்ணத்தை மக்கள் மனதிலிருந்து அகற்ற கிராம சமூகத்தில் நடக்கும் ஒரு வீட்டு வாழ்க்கையை மையமாக வைத்து நாகம்மாளை எழுதினேன் என்று ஆசிரியரே குறிப்பிடுகிறார். நாட்டின் பிரிவினைக்கு வீட்டின் பாகப் பிரிவினையை ஒரு குறியீடாக அவர் காண்கிறார் என்பது தெளிவு. இதை ஒரு சிறிய இதிகாசம் என்று பாராட்டினார் தி. க. சிவசங்கரன். அவருடைய பல கூற்றுகள் போலவே இதையும் மிகைத்தன்மை கொண்டது என்றே வைத்துக்கொள்ளலாம். இருப்பினும் விமரிசன யதார்த்தப் பாணியைக் கையாள்வதில் தமிழ்நாவல்களுக்கு இது ஒரு முன்னோடி என்று கொள்வதில் தவறில்லை.
நாம் யார்?
சராசரி இந்து மனத்தில், மேற்கத்தியச் செல்வாக்கினால் கெடுக்கப்படாமல் இன்னும் நிறைந்திருக்கும் பரந்த மனப்பான்மை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, உண்மை, தியாகம், எல்லா உயிர்கள்மேலும் அன்பு செலுத்துதல் ஆகிய பண்புகள் இந்துக் கலாச்சாரத்தின் பெருமைக்குப் பெரிய சான்றாக அமைகின்றன…. இந்துஸ்தானத்திலுள்ள இந்துஅல்லாத மக்கள்….இந்த நாட்டில் தங்கள் சகிப்புத்தன்மை இன்மையையும், நன்றி யின்மையையும் கைவிடுவதோடன்றி…எதையும் உரிமையெனக் கேட்காமல், எந்த முன்னுரிமைகளும் இன்றி, சலுகைநடத்தையென எதனையும் பெறாமல்-ஒரு குடிமகனுடைய உரிமைகளைக்கூடக் கேட்காமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து நடந்துகொள்ள வேண்டும். -மாதவ சதாசிவ கோல்வால்கர் (1906-1973)
எனக்கு இந்துமதம் பற்றித் தெரியும் என்றால், அது எல்லாவற்றையும் உள்ளடக்கியது, என்றும் வளர்ந்து கொண்டிருப்பது, என்றும் எதற்கும் ஈடுகொடுக்கக்கூடியது. அது கற்பனைக்கும் யூகத்திற்கும் அறிவுக்கும் மிகச் சுதந்திரமான வாய்ப்பை அளிக்கிறது….இந்து மதத்தின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்ற பூசாரிகளைச் சுற்றி வளைத்திருக்கும் ஒரு பக்கச் சார்பு, மூடநம்பிக்கை ஆகிய உணர்ச்சிகளைத் தங்கத் தராசில் வைத்து எடைபோடவும் காத்திருக்கவும் இயலாது. -மகாத்மா காந்தி (1869-1948)
முன்னுரைப்பகுதி
“ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்” என்ற எனது முதல் மொழி பெயர்ப்பு நூலின் முன்னுரைப்பகுதி
பம்பாய் மாக்ஸ்முல்லர் பவனின் இயக்குநர், ஜோகிப் ப்யூலர் இந்
நூலின் ஆங்கிலப் பதிப்பிற்கு அளித்த புகுமுகம்
கிண்டர் செந்த்ரும் மூன்ஷென் (Kinder Centrum Munschen) என்பது மியூனிக் நகரிலுள்ள குழந்தைகள் மையம் ஆகும். அது குழந்தைகள் பற்றிய நோய் ஆய்வு மையங்களில் ஒன்று. இதன் மருத்துவர் பேராசிரியர் ஹெல் பிராய்க்கெ (குழந்தைகள் மையத்தின் இயக்குநர்)யின் மேற்பார்வையின்கீழ், மியூனிக் வளர்ச்சிமுறை நோய்காணல் (டயக்னாசிஸ்) என்னும் சிறப்பு நோய்காணல் முறையினை உருவாக்கியுள்ளனர். இந்நோய்காணல் முறையினை நடைமுறைப்படுத்தியதன் விளைவாகப் பெறப்பட்ட முக்கிய அனுபவங்களைக் கொண்டுள்ளது இந்த நூல்.
சமீப ஆண்டுகளில், கிண்டர் செந்த்ரும் மூன்ஷென், சர்வதேச அரங்கில் ஏற்புப் பெற்றுள்ளது. பேராசிரியர் ஹெல் பிராய்க்கெ இந்தியாவிலுள்ள குழந்தை மருததுவ நிபுணர்களுடன் தொடர்புள்ளவர். இதனால் பம்பாய் மாக்ஸ்முல்லர் நிறுவனம், கருத்தரங்குகள்-பயிலரங்குகள் வாயிலாகக் குழந்தைகள் பற்றிய ஆய்வு அனுபவங்களை இந்திய மருத்துவர்களும், மியூனிக் குழந்தைகள் மைய மருத்துவர்களும் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பைத் தந்தது. இக்கருத்தரங்குகள் முதலியன, பம்பாயில் உள்ள ஜே. ஜே. மருத்துவமனைக் குழு சார்ந்த குழந்தைகள் மருத்துவ நிலையத்திலும், உடலியல் மருந்துகள் மற்றும் மறுவாழ்வுக் கான நிறுவனத்திலும் நிகழ்த்தப்பட்டன. இந்தச் சோதனைத் திட்டங்களின்போது ஐரோப்பாவில் ஏற்கெனவே பயனுறக் கையாளப்பட்டு வரும் மியூனிக் வளர்ச்சி முறை நோய்காணல், இந்தியக் குழந்தைகளுக்கும் பயன்படுத்திப் பார்க்கப்பட்டுள்ளது. இந்த அறிமுகத் தொடர்பே, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான சிகிச்சை, குறிப்பாக இந்தியாவில் சிறப்பான அறிமுகம் பெற்றுள்ள மாண்டிசோரி முறை விளையாட்டுப் பொருள்களின் குணப்படுத்தல் (நோய்நீக்கல்) பயன்மீதான மருத்துவ நூல்கள், நிபுணர்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் பரிமாற்றத்துக்கு மிகவும் பயன்பட்டது.
இந்த ஒத்துழைப்பின் இன்னொரு விளைவுதான் ‘ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்’ என்ற இந்த நூலின் ஆங்கில ஆக்கம். இந்நு£ல் முதலில் ஜெர்மன் மொழியில் ஆக்கப்பட்டது. இந்தியக் குழந்தை மருத்துவர்களும், சமூகப்பணியாளர்களும், பெற்றோர்களும் இந்நூலில் மிகுந்த அக்கறை காட்டினர். ஆகவே பம்பாய் மாக்ஸ்முல்லர் பவன், இந்நு£லை ஆங்கிலப் படுத்தி வெளியிடும் முன்முயற்சியில ஈடுபட்டது. இல்லையெனில் இன்னும் சில ஆண்டுகள் கழித்து, வணிக நிறுவனங்கள் எவ்வாறேனும் இந்த முயற்சியில் ஈடுபட்டுத்தான் இருக்கும்.
இந்நூல, மருத்துவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மிகவும் குறிப்பாகக் குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு குழந்தையானது, உடல்சார்ந்த குறை இருப்பதனால் மட்டுமே பிரச்சினைக்குரிய விஷயமாவதில்லை. உடலியல் குறை மிகவும் காலம் தாழ்த்திக் கண்டுபிடிக்கப்படுவதனாலும், பிரச்சினை ஏற்படுகிறது. இவ்வாறு உடலியல் குறைகள் காலந்தாழ்த்திக் கண்டறியப்படுவதனால் ஏற்படும் மனத்தின் பாதிப்புகள், சமூகம் சார்ந்த வளர்ச்சி நலிவு ஆகியவற்றைப் பற்றிப் பேராசிரியர் ஹெல் பிராய்க்கெ விரிவாக ஆராய்ந்துள்ளார். இதில் தான் இந்த நு£லின் தவிர்க்கவியலாத முக்கியத்துவம் அமைந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் வளர்ச்சியினை எவ்வளவு எச்சரிக்கையாக கவனிக்கவேண்டும் என்பதை இந்த
நூல் எடுத்துக்காட்டுகிறது. இதற்கு இந்நூலிலுள்ள எளிமையான உதாரணங்களும், விளையாட்டுச் சோதனைகளும் உதவும். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியில் காணப்படும் பிறழ்வுகள் எளிதாகக் கண்டறியப்படும்.
இந்தியப் பெற்றோர்களுக்கு மிகத் தேவையான கருத்துகளை அறிமுகப்படுத்துவதில் முதல்நிலையே இந்த ஆங்கிலப் பதிப்பு என நாங்கள் நம்புகிறோம். இந்நூல் பிற இந்திய மொழிகளிலும் வெளிவருதல், இந்தப் பணிக்களத்தின் இந்தோ-ஜெர்மன் ஒத்துழைப்பிற்கான து£ண்டுகோலாக இருக்கும் எனவும் கருதுகிறோம்.