புதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்

புதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்

இந்த நூல் 2003இல் எழுதப்பட்டது. மாணவர்களுக்குப் பயன்படும்படியாக முழு நூலும் 15 பகுதிகளாக 2003ஆம் ஆண்டின் இலக்கியக் கட்டுரைப் பதிவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. படிக்கவிரும்புவோர் 2003ஆம் ஆண்டின் பதிவுகளில் சென்று படியுங்கள்.


புதிய, நிறைவுற்ற பணிகள்

என் புதிய, நிறைவுற்ற பணிகள் (மொழிபெயர்ப்புகள்)

வெண்டி டோனிகர் எழுதிய ‘இந்துக்கள்-ஒரு மாற்று வரலாறு’ என்ற நூலை (நியூ யார்க், பென்குவின் பிரஸ், 2009) மொழிபெயர்ப்புச் செய்து முடித்தேன். இதனைப் பொள்ளாச்சியில் எதிர் வெளியீடு என்ற நிறுவனத்தை வைத்திருக்கும் திரு.அனுஷ் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.

இதற்கு முன்னரே மூன்று மாதங்களுக்கு முன்பு மைசூரிலுள்ள சிஐஐஎல்-(இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனம்) என்பதற்காக வேண்டி முழுவதுமாகச் செம்மைசெய்து சமூகவியல் நூல் ஒன்றை மொழிபெயர்ப்புச் செய்துமுடித்துக் கொடுத்தேன். ஆனால் அது வெளிவரச் சற்றே காலதாமதமாகிறது.


சோகமும் சிரிப்பும்

ஒரு சொற்பொழிவாளர், சபையில் ஒரு நகைச்சுவைத் துணுக்கினைக் கூறினார். அது நன்றாகவே இருந்ததால், எல்லாரும் வெடித்துச் சிரித்தனர். ஒரு நிமிடத்திற்குப் பிறகு அதே நகைச்சுவைத் துணுக்கைக் கூறினார். இப்போது மரியாதைக்காகச் சிலர் மட்டும் சிரித்தனர். மீண்டும் மீண்டும் அதே நகைச்சுவைத் துணுக்கை ஓரிருமுறை சொன்னார்.
சபையில் யாருமே சிரிக்கவில்லை. இப்போது ஒரு புன்சிரிப்போடு அவர் கூறினார்: “ஒரே ஜோக்கை உங்களால் மறுபடி மறுபடி ரசிக்கவோ அதற்குச் சிரிக்கவோ முடியவில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஒரே விஷயத்திற்கு ஏன் மறுபடி மறுபடி கவலைப்பட்டு அழுகிறீர்கள்?”


கருப்பும் வெறுப்பும்

ஒரு விமானத்தில் வெள்ளைப் பெண்மணி ஒருவர்-ஏறத்தாழ வயது 50 இருக்கும்-அமர்ந்திருந்தார். அவர் பக்கத்தில் ஒரு கருப்பர். இதனால் கலவரமடைந்த அந்தப் பெண்மணி விமானப்பணிப்பெண்ணை அழைத்தார். “என்னை ஒரு கருப்பருக்குப் பக்கத்தில் அமர வைத்திருக்கிறீர்கள். இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க குழுவைச் சேர்ந்த ஒருவரின் பக்கத்தில் உட்கார எனக்கு விருப்பமில்லை. எனக்கு வேறு இடம் கொடுங்கள்” என்றார். “அமைதியாக இருங்கள், விமானத்தின் எல்லா இருக்கைகளும் பூர்த்தியாகி விட்டன. ஏதாவது இடம் கண்டுபிடிக்கமுடியுமா என்று பார்க்கிறேன்” என்றார் பணிப்பெண். சற்றுநேரம் கழித்து அவர் திரும்பி வந்தார். “நான் கேப்டனிடம் பேசினேன். அவரும் எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டன என்கிறார். சிக்கனப் (எகானமி) பிரிவில் வேறு இடம் இல்லை. ஆனாலும் முதல் வகுப்பில் ஓர் இடம் இருக்கிறது” என்றார். பெண்மணி எதையும் கூறுவதற்கு முன் அவரே தொடர்ந்தார்: “எகானமி வகுப்பிலிருந்து உயர்வகுப்பில் ஒருவரை அமர வைப்பது எங்கள் கம்பெனியில் வழக்கமில்லை. ஆனால் இம்மாதிரிச் சூழ்நிலையில்-வெறுப்பூட்டுகின்ற ஒருவரின் அருகில் மற்றொருவரை அமரச் செய்வது வெட்கக் கேடானது என்று கேப்டன் கருதுகிறார்” என்று கூறிவிட்டுப் பக்கத்தில் கருப்பரிடம் திரும்பி, “ஆகவே சார், உங்கள் கைப்பொருள்களை எடுததுக் கொள்ளுங்கள், உங்களுக்கு முதல்வகுப்பில் ஓர் இடம் காத்திருக்கிறது” என்றார். இதுவரை நடந்ததை அதிர்ச்சியுடன் கவனித்துக்கொண்டிருந்த பிற பயணிகள், இப்போது எழுந்து நின்று கைதட்டலாயினர்.


தக்காளித் தோட்டம்

ஓர் இத்தாலியக் கிழவர் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் வாழ்ந்துவந்தார். ஆண்டுக்கொருமுறை அவர் தன் தோட்டத்தில் தக்காளி பயிரிடுவது வழக்கம். ஆனால் தரை கெட்டியாக இருந்ததால் அவருடைய வேலை மிகவும் கஷ்டத்தைக் கொடுத்தது. அவருக்கு உதவி செய்வது அவருடைய மகன் வின்சென்ட். ஆனால் இப்போது அவன் சிறையில் இருந்தான்.
இந்தக் கிழவர் தன் நிலையைப் பற்றித் தன் மகனுக்கு எழுதினார்: “அன்புள்ள வின்சென்ட், என்னால் இந்த வருடம் தக்காளித் தோட்டம் வைக்க முடியாதென்று நினைக்கிறேன். எனக்கு வயதாகி விட்டது. அதனால் தோட்டப்பகுதி முழுவதையும் கொத்தமுடியவில்லை. நீ இருந்தால் நிச்சயம் வழக்கம்போலவே தோட்டத்தை உருவாக்குவாய். ஆனால் என்ன செய்வது? அன்புடன், உன் தந்தை.”
அதற்கு அவர் மகனுடைய பதில் வந்தது: “அப்பா, நீங்கள் நிலத்தைக் கொத்தவேண்டாம். அங்கேதான் உடல்கள் புதைக்கப் பட்டிருக்கின்றன.”
அடுத்தநாள் விடியற்காலை நான்கு மணிக்கு அமெரிக்க உளவு நிறுவனத்தினர் வந்து தோட்டப்பகுதி முழுவதையும் கொத்திப் பார்த்தனர். அவர்களுக்கு உடல் எதுவும் கிடைக்கவில்லை.
அதே நாளன்று அவர் மகனிடமிருந்து மற்றொரு கடிதம் கிழவருக்கு வந்தது. “அன்புள்ள அப்பா, இப்போது தோட்டத்தில் பயிரிட முடியும். பயிரிடுங்கள். நான் இருக்கும் நிலையில் இதைத்தான் என்னால் செய்ய முடிந்தது. அன்புடன், வின்சென்ட்.”


சில தகவல்கள்

2015க்குரியனவாக இரண்டு பணிகள் என்னைப் பொறுத்த அளவில் நிறைவேறின. ஒன்று, அருட்தந்தை கிஸ்பர்ட் என்பார் எழுதிய சமூகவியல் நூலை மொழிபெயர்த்தமை. மற்றது, தொல்காப்பியப் பொருள்கோள் பற்றிய சிறு நூல் ஒன்றை எழுதி முடித்தமை. பொருள்கோள் பற்றிய நூல் அடுத்த மாதம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியாக இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. சென்ற ஆண்டின் இடைப்பகுதியில் உலகத் தமிழ் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரின் சார்பாகப் பேராசிரியர் சதீஷ் இந்தத் தலைப்பில் என்னைப் பேச அழைத்தார். அப்போது ஏறத்தாழ இரண்டு மணிநேரம் பேசப் பட்ட குறிப்புகள்தான் இந்த நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.


முரண்பாடு

உலகில் வாழ்வதற்குப் பலவித வழிகள் உள்ளன. ஒருவனேகூட அந்தந்த சமயத்திற்கு ஏற்றாற்போல
வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பழமொழிகள் இந்த முரண்பட்ட தன்மையை நன்கு பிரதிபலிக்கின்றன. உதாரணத்திற்குச் சில ஆங்கிலப் பழமொழிகளைச் சுட்டிக்காட்டலாம்.

‘காத்திருப்பவர்களுக்குத்தான் நல்லவை யாவும் கிடைக்கின்றன’ என்பது ஒரு பழமொழி. All good things come to those who wait. இதேபோல் நிதானத்தை வலியுறுத்தி slow and steady wins the race என்ற பழமொழியும் இருக்கிறது. ஆனால் பாருங்கள், Time and tide wait for none என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. காத்திருப்பதா, உடனே செயலில் இறங்குவதா?

Wise men think alike என்று ஒரு பழமொழி. Fools seldom differ என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. ஆகமொத்தம், விவேகிகளோ, முட்டாள்களோ எல்லாரும் ஒரே மாதிரி யாகத்தான் சிந்திக்கிறார்கள் போலும்!

Do it well or not at all என்று ஒரு பழமொழி சொல்கிறது. எதையும் நன்றாகத்தான் செய்ய வேண்டும். இல்லையெனில் வேண்டாம். ஆனால் Half a loaf is better than none என்றும் ஒரு பழமொழி சொல்கிறதே?

சந்தேகம்தான் ஞானத்தின் தொடக்கம் என்பது ஒரு பழமொழி. Doubt is the beginning of wisdom. ஆனால் Faith will move mountains என்றும் ஒரு பழமொழி சொல்கிறது. நாம் எதைத் தேர்ந்தெடுப்பது, சந்தேகத்தையா, விசுவாசத்தையா?

இப்படிப்பட்ட பழமொழிகள் வாழ்க்கையின் முரண்பட்ட தன்மையை நாம் புரிந்து கொள்வதற்கு முதன்மையாகத் துணைசெய்கின்றன.


வேலை

ஒருவன் தனது வேலை பயங்கரமாக முக்கியமானது என்று நம்புவது அவனுக்கு நரம்பு மண்டலம் பிரேக்டவுன் ஆவதற்கான அறிகுறி. -பெர்ட்ரண்ட் ரஸல் (1872-1970)


பணிவு வேண்டாம்!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்த கோல்டா மேயர் (1898-ஃ978) ஒரு புகழ் பெற்ற பெண்மணி, ஆசிரியராக இருந்து தலைவராக உயர்ந்தவர். அவரைப் பார்க்க ஒருசமயம் ஒரு அமெரிக்க அரசியல் நிபுணர் வந்தார். மிகுந்த போலிப்பணிவு காட்டி நடந்துகொண்டார். அப்போது அவரைப் பார்த்துச் சொன்னார் கோல்டா மேயர்: “இவ்வளவு பணிவு வேண்டாம், இன்னும் அவ்வளவுக்கு நீங்கள் உயரவில்லை.”


காப்பியும் குவளையும்

பழைய மாணவர்களின் கூட்டம் ஒன்று கல்லூரியில் நடந்துகொண்டிருந்தது. அதற்குப் பொறுப்பேற்றிருந்த பேராசிரியர் மாணவர்களுக்குக் காப்பி கொடுக்குமாறு பணியாளர்களுக்குக் கூறினார். அவர் ஏற்பாட்டின்படி, ஒரு பெரிய குழாய்வைத்த டிரம்மில் காப்பி கொண்டுவரப்பட்டது. குவளைகள்தான் வெவ்வேறு மாதிரிகளில் இருந்தன. போர்சிலைன், பிளாஸ்டிக், கண்ணாடி, பளிங்கு, காகிதம் இப்படிப் பலவேறு பொருள்களால் செய்யப்பட்டவை. சில அழகாக இருந்தன, சில அலங்காரம் எதுவுமின்றி.
“நீங்களே காப்பி எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் பேராசிரியர்.
இப்போது எல்லார் கையிலும் குவளைகளில் காப்பி இருந்தது. பேராசிரியர் சொன்னார்:
“பார்த்தீர்களா! அழகாக இருந்த விலை உயர்ந்த கப்புகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டீர்கள். பிளெயினான, மலிவான குவளைகளை விட்டுவிட்டீர்கள். அவரவர்க்குத் தேவையான மிகச் சிறந்தததை எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் அங்கேதான் ஒரு சிறிய பிரச்சினை.
காப்பி எல்லாருக்கும் ஒன்றுதான், ஒரே தரத்தில், ஒரே சுவையில்தான் இருக்கிறது. குவளைகளால் காப்பியின் தரம் மாறிவிடப் போவதில்லை.
நீங்கள் எல்லாரும் விரும்பியது காப்பிதானே! குவளை இல்லையே! குடித்ததும் அதை வைத்துவிடப்போகிறீர்கள் அல்லது குப்பைக்கூடையில் போடப் போகிறீர்கள். ஆனால் பிரக்ஞைபூர்வமாக எல்லாரும் அழகான, நல்ல, விலைஉயர்ந்த குவளையையே தேர்ந்தெடுத்தீர்கள்.
உங்கள் வாழ்க்கைதான் காப்பி. உங்கள் வேலை, பணம், சமூகத்தில் உங்கள் அந்தஸ்து இவையெல்லாம் குவளைகள். வாழ்க்கையை வைத்திருக்கக்கூடிய பாத்திரங்கள் அவை. அவை நாம் வாழும் வாழ்க்கையை வரையறுக்கவோ, நமது வாழ்க்கையின் தரத்தினை மாற்றவோ போவதில்லை. சில சமயங்களில் குவளையிலேயே கவனத்தைச் செலுத்தி காப்பியின் சுவையை மறந்துபோய்விடுகிறார்கள் சிலர். அதுபோல ஆகிப்போய்விடலாகாது.”